செய்திகள்

தென்கொரியாவில் ஊழல் வழக்கில் அதிபரிடம் விரைவில் விசாரணை

Published On 2016-11-21 02:27 IST   |   Update On 2016-11-21 02:27:00 IST
தென்கொரியாவில் ஊழல் வழக்கில் அதிபர், பார்க் ஹியுன் ஹையிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என தலைமை அரசு வக்கீல் கூறினார்
சியோல்:

தென்கொரியாவில் அதிபராக உள்ள பார்க் ஹியுன் ஹை, தன் நீண்ட கால தோழியான சோய் சூன் சில்லை அரசியலில் மறைமுக செல்வாக்கு செலுத்த அனுமதித்தார்; இதனால் அந்தப் பெண் பலன் அடைந்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் காரணமாக பார்க் ஹியுன் ஹை, அதிபர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று அங்கு தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தோழியின் ஊழலில் அதிபர் பார்க் ஹியுன் ஹைக்கு குறிப்பிடத்தக்க அளவில் தொடர்பு உள்ளது என்று அந்த நாட்டின் அரசு வக்கீல்கள் அறிவித்துள்ளனர்.

இதுபற்றி தலைமை அரசு வக்கீல் லீ யெங் ரையோல் கூறுகையில், “தோழியின் ஊழல் சதியில் அதிபர் பார்க் ஹியுன் ஹைக்கு தொடர்பு இருந்துள்ளது. ஆனால் அவர் மீது வழக்கு தொடர்வதில் விலக்கு உரிமை உள்ளது” என்றார்.

அதே நேரத்தில் பார்க் ஹியுன் ஹையிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என அவர் கூறினார். இந்த ஊழல் வழக்கில், விசாரணை நடத்துவதற்கு ஒரு சிறப்பு வக்கீலை நியமிக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்து சட்டம் இயற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News