செய்திகள்

ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட துக்கதினம்: ஜப்பானில் இன்று அனுசரிக்கப்பட்டது

Published On 2017-08-06 15:33 IST   |   Update On 2017-08-06 15:33:00 IST
இரண்டாம் உலகப் போரின்போது 1945-ம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு வீசப்பட்ட 72-ம் ஆண்டு துக்கதினம் இன்று ஜப்பானில் அனுசரிக்கப்பட்டது.
டோக்கியோ:

இரண்டாம் உலகப் போரின்போது, உலகின் முதல் அணுகுண்டாக கருதப்படும் 'லிட்டில் பாய்' குண்டை ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்கா 6-8-1945 அன்று வீசியது.

இரும்பைக் கூட உருக வைக்கும் 4000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் குண்டு வீசப்பட்ட இடத்தின் அருகிலிருந்த அத்தனையும் பஸ்பமாகின. சுமார், ஒரு லட்சத்து நாற்பதாயிரம் மக்கள் இதில் கொல்லப்பட்டனர். இதற்கு அடுத்த அணுகுண்டு ஜப்பானின் துறைமுக நகரமான நாகசாகியில் ஆகஸ்ட் 9, 1945 அன்று வீசப்பட்டு, எழுபதாயிரம் பேரை பலி வாங்கியது. இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15, 1945 அன்று ஜப்பான் சரணடைந்தது.

இந்நிலையில், இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வர காரணமாக அமைந்த ஜப்பானின் முக்கிய நகரமான ஹிரோஷிமா மீது அமெரிக்கா குண்டு வீசிய 72-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.



அணுகுண்டு வீசப்பட்டு பேரழிவை சந்தித்த ஹிரோஷிமா நகரில் உள்ள அமைதிப் பூங்காவில் நடைபெற்ற மவுன அஞ்சலி நிகழ்ச்சியில் ஜப்பானின் பிரதமர் ஷின்ஸோ அபே உட்பட பல வெளிநாட்டு பிரமுகர்கள் பங்கேற்றனர்.



இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, ‘அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லாத புதிய உலகம் உருவாக வேண்டும். இதற்காக அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்.

கைவசம் அணு ஆயுதங்களை இருப்பு வைத்திருக்காத நாடுகளும், இருப்பில் வைத்துள்ள நாடுகளும் ஒன்றிணைந்து சர்வதேச அளவில் அணு ஆயுதங்களை ஒழிக்கும் இயக்கத்துக்கு தலைமை தாங்க ஜப்பான் தயாராக உள்ளது’ என்று குறிப்பிட்டார்.

Similar News