செய்திகள்
பாகிஸ்தான்: நல்லெண்ண அடிப்படையில் 68 இந்திய மீனவர்கள் விடுதலை
பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 68 இந்திய மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என சிந்து மாகாண உள்துறை அதிகாரி நசீம் சித்திக் தெரிவித்துள்ளார்.
கராச்சி:
எல்லை தாண்டி மீன் பிடிக்க செல்லும் இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கப்பல் படையினரால் பிடிக்கப்பட்டு, அவர்கள் அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
இரு நாட்டு தூதரகங்கள் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி நல்லெண்ண அடிப்படையில் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவது வழக்கம்.
இந்நிலையில், பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 68 இந்திய மீனவர்கள் இன்று நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என சிந்து மாகாண உள்துறை அமைச்சக அதிகாரி நசீம் சித்திக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், இதற்கான உத்தரவு உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்டுள்ள மீனவர்கள் ரெயில் மூலம் லாகூருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அங்கிருந்து வாகா எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, கடந்த ஜூலை மாதம் 78 இந்திய மீனவர்கள்ளை பாகிஸ்தான் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.