செய்திகள்
முஹம்மது மிர்முஹம்மதி

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஈரான் பெருந்தலைவரின் ஆலோசகர் மரணம் - பலி 67 ஆனது

Published On 2020-03-02 18:23 IST   |   Update On 2020-03-02 18:23:00 IST
ஈரான் நாட்டின் முதுபெரும் அரசியல்தலைவர் அயாத்துல்லா அலி கமேனி-யின் ஆலோசகர் கொடிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று உயிரிழந்தார்.
டெஹ்ரான்:

சீனாவில் உள்ள ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், ஆசியா கண்டத்தை கடந்து, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளை அச்சுறுத்தி வருவதுடன் உலகின் 50-க்கும் அதிமான நாடுகளுக்கு படுவேகமாகப் பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.
 
இந்நிலையில், எண்ணெய் வளம்மிக்க ஈரான் நாட்டில் 978 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளர் கியானோவ்ஷ் ஜஹான்போவ்ர் நேற்று தெரிவித்திருந்தார்.

நாடு முழுவதும் பரவலாக சமீபத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இவர்களில் 385 பேர் புதிய நோயாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்ட அவர் நேற்றுவரை இந்நோயின் பாதிப்பால் 54 பேர் பலியானதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி கொரோனா வைரஸ் பாதிப்பால் 66 பேர் உயிரிழந்ததாக ஈரான் அரசின் வானொலி தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஈரான் நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவரும் 1981 முதல் 1989-ம் ஆண்டுவரை அந்நாட்டு அதிபராக பதவி வகித்தவருமான அயாத்துல்லா அலி கமேனியின் பிரதான ஆலோசனை குழுவில் இடம்பெற்றிருந்த முஹம்மது மிர்முஹம்மதி(71) என்பவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு, வடக்கு டெஹ்ரானில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.



மிர்முஹம்மதி சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் உயிரிழந்ததாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இவரைத்தவிர ஈரான் நாட்டின் பெண் துணை அதிபர் மசோவ்மே எப்தெகார் உள்பட பல அரசு உயரதிகாரிகளும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி, சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 1500-ஐ கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News