உலகம்

2024-ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

Published On 2024-10-07 10:20 GMT   |   Update On 2024-10-07 10:20 GMT
  • மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ரோஸ், கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிப்பு
  • மைக்ரோ RNA கண்டுபிடிப்பு தொடர்பாக விருது அளிக்கப்பட்டுள்ளது.

சுவீடன் நாட்டு தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள சோல்னா (Solna) எனும் பகுதியில் உள்ளது 'கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட்' எனப்படும் புகழ்பெற்ற மருத்துவ கல்வி நிறுவனம்.

இக்கல்வி நிறுவனத்தின் 50 பேராசியர்களை கொண்ட 'நோபல் அசெம்பிளி' (Nobel Assembly) எனும் குழு ஒவ்வொரு வருடமும் மருத்துவ துறையில் மனித இனத்திற்கு பலனளிக்கும் வகையில் கண்டுபிடிப்புகளை செய்த நிபுணர்களுக்கு நோபல் பரிசு எனப்படும் உலகப்புகழ் வாய்ந்த விருதிற்கு தகுதியானவர்களை தேர்வு செய்கிறது.

2024ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ரோஸ், கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோ RNA கண்டுபிடித்ததற்காகவும் டிரான்ஸ்கிரிப்ஷனுக்குப் பிறகு மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியதற்காகவும் இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரினங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செயல்படுகின்றன என்பதை விளக்குவதற்கு இவர்கள் இருவரின் கண்டுபிடிப்பும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று நோபல் பரிசு கமிட்டி தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு, கொரோனா தடுப்பூசி தயாரிக்க உதவிய கட்டாலின் கரிக்கோ மற்றும் ட்ரூ வைஸ்மேன் ஆகிய இருவருக்கும் இணைந்து வழங்கப்பட்டது.

மருத்துவத்திற்காக நோபல் பரிசு இதுவரை மொத்தம் 227 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 13 பெண்கள் மட்டுமே மருத்துவத்திற்காக நோபல் பரிசை பெற்றுள்ளனர். நோபல் பரிசு தொகை இந்திய மதிப்பில் சுமார் ரூ.8.3 கோடியாகும்.

விஞ்ஞானி ஆல்பிரட் நோபலின் நினைவாக இந்த பரிசு வருடம் தோறும் வழங்கப்படுகிறது. நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10 அன்று வெற்றியாளர்கள் தங்களின் விருதுகளைப் பெறுவார்கள்.

இந்த வாரத்தில் இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News