தென் கொரியாவில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான விமானம்- 179 பேர் உயிரிழப்பு
- விமானத்தில் 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேர் பயணம் செய்தனர்.
- விமானத்தின் சக்கரத்தை வெளியில் கொண்டு வருவதற்கான லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை.
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து நேற்று இரவு தென்கொரியாவுக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
தென்கொரியாவில் உள்ள விமான நிறுவனமான ஜெரு ஏர் பிளைட் விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-800 என்ற அந்த விமானத்தில் 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேர் பயணம் செய்தனர்.
அந்த விமானம் இன்று அதிகாலை தென் கொரியாவின் தெற்கு பகுதியில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கி கொண்டிருந்தது. அப்போது அந்த விமானம் மீது மிகப்பெரிய பறவை ஒன்று மோதியதாக தெரிகிறது. இதன் காரணமாக விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
அதை விமானி சரி செய்ய போராடிய நிலையில் விமானம் முவான் விமான நிலையத்தை நெருங்கியது. அந்த சமயத்தில் விமானத்தின் என்ஜினில் இருந்து புகை வந்தது. இதனால் விமானத்தை உடனடியாக தரை இறக்க விமானி முயற்சிகளில் ஈடுபட்டார்.
விமானத்தை தரையிறக்க விமானி ஏற்பாடு செய்தபோது விமானத்தின் சக்கரத்தை வெளியில் கொண்டு வருவதற்கான லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை. இதனால் விமானி மேலும் தவிப்புக்குள்ளானார். அந்த விமானத்தில் அதிகளவு எரிபொருள் இருந்தது.
எனவே எரிபொருளை காலி செய்துவிட்டு மெல்ல பத்திரமாக விமானத்தை தரை இறக்கி விடலாம் என்று விமானிகள் முடிவு செய்தனர். இதையடுத்து விமானம் முவான் சர்வதேச விமான நிலையத்தின் மேலே சுற்றி சுற்றி வந்து வானில் 5 முறை வட்ட மடித்தது.
இதற்கிடையில் சக்கரத்தை வெளியில் கொண்டு வருவதற்கான லேண்டிங் கியரை விமானிகள் தொடர்ந்து இயக்கி பார்த்தனர். ஆனால் துரதிருஷ்டவசமாக லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை. எனவே எரிபொருள் தீரும் வரை விமானத்தை வானில் வட்டமிட்டபடி இருந்தனர்.
விமானத்தின் எரிபொருள் அனைத்தும் தீர்ந்து விட்டது என்பதை உறுதி செய்ததும் முவான் விமான நிலையத்தில் விமானத்தை பெல்லி லேண்டிங் முறை யில் தரை இறக்க முடிவு செய்தனர்.
அதன்படி, விமானம் ஓடுபாதையில் சறுக்கியபடி தரை இறக்கப்பட்டது. ஆனால் பெல்லி லேண்டிங் முறைக்கு பயன் கிடைக்கவில்லை.
ஓடு பாதையில் சறுக்கிய படி சென்ற விமானம் ஒரு பக்கமாக இழுத்தபடி சென்றது. அதை விமானிகளால் கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது. இதன் காரணமாக தரையில் சறுக்கியபடி சென்ற விமானம் அங்கிருந்த விமான நிலைய சுற்று சுவரில் பயங்கரமாக மோதியது.
அடுத்த வினாடி அந்த விமானம் பயங்கரமாக வெடித்து சிதறியது. விமானம் முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. பயணிகள் அனைவரும் விமானத்துக்குள் சிக்கி அலறினார்கள்.
முன்னதாக விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரிந்ததும் முவான் விமான நிலையத்தில் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் உஷார் படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர். விமானம் சுவரில் மோதி வெடித்து தீப்பிடித்ததை பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக விமானத்தில் பிடித்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
32 வண்டிகளில் சென்று தீயணைப்பு பணிகளை மேற்கொண்டனர். இதற்கிடையே மீட்பு குழுவினரும் பயணிகளை மீட்கும் முயற்சிகளில் இறங்கினார்கள். ஆனால் விமானம் தொடர்ந்து பயங்கர சத்தத்துடன் வெடித்துக் கொண்டிருந்ததால் விமானத்தின் அருகே செல்ல முடியாத நிலை இருந்தது.
முதலில் அந்த விமானத்தில் 28 பேர் பலியானதாக தகவல் வெளியானது. பிறகு 40, 62, 85 என்று பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருந்தது. 10 மணி அளவில் 2 பேரை மட்டுமே பலத்த காயங்களுடன் மீட்க முடிந்தது. இதனால் 179 பேர் இந்த கோர விபத்தில் பலியானதாக அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.
விமான விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விபத்துக்குள்ளான விமானம் 15 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்தது. விபத்தில் விமானம் முற்றிலும் எரிந்து நாசமானது. பலியானவர்களின் உடல்கள் கருகி உள்ளதால் அவர்களை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்கும் பணி நடந்தது. கருப்பு பெட்டி மீட்கப்பட்ட பின் விபத்துக்கான முழுவிவரம் தெரியவரும்.
விபத்துக்கு ஜெரு விமான நிறுவனம் இரங்கல் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் கூறும்போது, பலியானவர்கள் குடும்பங்களிடம் மன்னிப்புக் கோருகிறோம். இந்த சம்பவத்திற்கு முழுப் பொறுப்பையும் உணர்கிறோம். வழக்கமான சோதனைகளை செய்தபின் விமானத்தில் எந்திரக் கோளாறுகள் எதுவும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்த அரசாங்க விசாரணைகளின் முடிவுகளுக்காக காத்திருக்கி றோம் என்று தெரி வித்துள்ளது.
விமானம் ஓடு பாதையில் சறுக்கியபடியே சென்று சுவரில் மோதி வெடித்து தீப்பிடித்த வீடியோ காட்சி கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கடந்த 25-ந்தேதி கஜ கஸ்தான் நாட்டின் அக்தாவ் நகரில் விமானம் அவசரமாக தரையிறங்கும்போது வெடித்து சிதறியதில் 38 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.