2024 ரீவைண்ட்: இஸ்ரேலை அடித்த ஈரான் முதல் சிரியாவின் வெற்றி வரை - மத்திய கிழக்கில் மாறிய காட்சிகள்
- பெய்ரூட் பதுங்குகுழியில் இருந்த ஹிஸ்புல்லாவின் 32 வருடகால தலைவரான ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்
- க ஹவுதிகள் ஏவிய ஏவுகணைகளை தடுக்க அமெரிக்கா வழங்கிய தாட் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்தை முதல் முறையாக பயன்படுத்தியது.
இஸ்ரேல் - லெபனான் - ஹிஸ்புல்லா
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்து அண்டை நாடான லெபனானில் இருந்து ஹமாஸ் அமைப்பின் நட்பில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுதக்குழு எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வந்தது.
இதன் விளைவாக ஆண்டில் இடைப்பகுதி முதல் இஸ்ரேல் லெபனான் முழுவதும் பலகட்டங்களாக தாக்குதல் நடத்தி தாக்கி 3,500 பேர் வரை கொன்றது.தலைநகர் பெய்ரூட் கடும் தாக்குதலுக்கு உள்ளானது. லெபனான் மீதான இஸ்ரேலின் தரைப்படை ஆக்கிரமிப்பு மற்றும் குண்டுவீச்சுகளால் 1.4 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா மதிப்பிட்டுள்ளது.
பெய்ரூட் பதுங்குகுழியில் இருந்த ஹிஸ்புல்லாவின் 32 வருடகால தலைவரான ஹசன் நஸ்ரல்லா செப்டம்பர் இஸ்ரேல் குண்டுகளை வீசியபோது படுகொலை செய்யப்பட்டார்.
இதற்கு ஒரு வாரம் முன்னர் செப்டம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் மீது இஸ்ரேல் அதிநவீன தாக்குதல் ஒன்றை முன்னெடுத்தது. லெபனான் முழுவதிலும் ஹிஸ்புல்லா உறுப்பினர்களின் பேஜ்ர்கள் திடீரென வெடித்துச் சிதறின.
இதில் 35 பேர் வரை கொல்லப்பட்டனர். ஆயிரக்கனோர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து வாக்கிடாக்கிகள் உள்ளிட்ட தொலைத் தொடர்பு சாதனங்களும் வெடிக்கத் தொடங்கின. தாய்லாந்தில் வெடி மருந்து வைத்து தயாரிக்கப்பட்ட பேஜர்களை இஸ்ரேல் உளவுத்துறை ஹிஸ்புல்லாவுக்கு ஏமாற்றி விற்றது பின்னர் தெரியவந்தது.
தொடர்ந்து அக்டோபர் மற்றும் நவம்பரில் இஸ்ரேலின் தாக்குதல்கள் லெபனானில் தீவிரமடைந்த நிலையில் நவம்பர் இறுதியில் உலக நாடுகள் முயற்சியால் போர் நிறுத்தம் வந்தது. ஆனால் ஹிஸ்புல்லா இயக்கம் அதற்குள் பெரும் பாதிப்புக்கு உள்ளானது.
இஸ்ரேல் - ஈரான்
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்து மற்றொரு இஸ்லாமிய நாடான ஈரான் நேரடி தாக்குதல் மூலம் உலகை அசர வைத்தது.
இது மத்திய கிழக்கில் ஒரு முழு அளவிலான போர் ஏற்படும் அபாயத்தை உருவாக்கியது. ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா செப்டம்பர் 27 இல் கொல்லப்பட்டதற்கும், ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஜூலை 31 அன்று ஈரானில் சீர்த்திருத்த கட்சியை சேர்ந்த புதிய அதிபர் மசூத் பெசஸ்கியான் பதவியேற்பில் கலந்துகொள்ள வந்தபோது தெஹ்ரானில் அவரது தங்குமிடத்தில் வெடிகுண்டு தாக்குதல் மூலம் இஸ்ரேலால் கொல்லப்பட்டார்.
இவை அனைத்துக்கும் பதிலடியாக அக்டோபர் 1 ஆம் தேதி இஸ்ரேல் மீது சுமார் 200 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்கியது.
இதில் பெரிய பாதிப்புகள் இல்லாத போதிலும், ஒரு மத்திய கிழக்கு நாடு திருப்பி அடிப்பதை மேற்கு நாடுகள் கடுமையாக கண்டித்தன.
தொடர்ந்து சுமார் 25 நாட்கள் கழித்து அக்டோபர் 26 ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
ஈரானிய தலைநகர் தெஹ்ரானுக்கு அருகிலுள்ள இடங்களிலும், மேற்கு மாகாணமான இலாம் மற்றும் தென்மேற்கு குசெஸ்தானிலும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் 4 வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் ராணுவம் தெரிவித்தது. ஈரானின் முக்கிய அணு சக்தி தளத்தை அளித்ததாக இஸ்ரேல் பின்னர் தெரிவித்தது.
இஸ்ரேல் - ஏமன் - ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்து ஏமன் நாட்டில் இருந்து செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.
அரபு நாடுகளிலேயே ஏழ்மையான நாடான ஏமன் தலைநகர் சனா மற்றும் நாட்டின் வடக்கின் பெரும்பகுதியை ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்படுத்துகின்றனர்.
இவர்களுக்கும் தெற்கில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் இடையே 10 ஆண்டுகால உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. செங்கடலில் வரும் கப்பல்களைத் தாக்கி, உலகின் முக்கிய கடல்வழிப் பாதைகளில் அவர்களின் ஆதிக்கத்தால் அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் சரிக்குக்கப்பல்கள் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.
மேலும் ஹவுதிகள் இஸ்ரேல் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளனர். இதற்கு பதில் தாக்குதலாக ஏமனில் ஹவுதிக்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்கள் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
சமீபத்தில் சனா விமான நிலையத்தில் இஸ்ரேல் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உலக சுகாதர அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் நூலிழையில் உயிர்பிழைத்தார். முன்னதாக ஹவுதிகள் ஏவிய ஏவுகணைகளை தடுக்க அமெரிக்கா வழங்கிய தாட் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்தை முதல் முறையாக பயன்படுத்தியது.
சிரியாவின் உள்நாட்டு போர் வெற்றி
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சி நடந்து வந்தது. கடந்த 50 ஆண்டுகளாக அவரது குடும்பமே சிரியாவில் ஆட்சியில் இருந்தது.
இதற்கிடையே அதிபர் பஷர் அல் ஆசாத் நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார பிரச்சனைகள், சர்வாதிகாரப் போக்கு ஆகியவற்றை எதிர்த்து கடந்த 2011 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியது. ரஷியாவின் உதவியுடன் அப்போது தனது ஆட்சியை ஆசாத் காப்பற்றிக்கொண்டார்.
உலக சக்தியான ரஷியாவின் உதவியுடன் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டாலும் மக்கள் மத்தியில் அமைதியின்மை தொடரவே செய்தது. அதன் விளைவாக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) தலைமையில், பல கிளர்ச்சிப் குழுக்கள் கடந்த டிசம்பரில் ஒரே வாரத்தில் அலெப்போ, ஹமா, தாரா உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் கடைசியாக டிசம்பர் 8 ஆம் தேதி தலைநகர் டமாஸ்கஸ் ஐ கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளனர். அதிபர் ஆசாத் ரஷியாவுக்கு தப்பியோடினார்.