பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடாகிறது தாய்லாந்து
- 2011-ம் ஆண்டு அந்நாடுகளுடன் தென்ஆப்பிரிக்கா நாடும் இணைந்தது.
- 8 நாடுகளும் முதல் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர் நாடுகளாகின்றன.
பாங்காக்,
பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து நாடும் இணைகிறது. இதன்படி, 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் அந்நாடு அமைப்பில் உறுப்பினர் அந்தஸ்து பெறுகிறது.
இதுபற்றி தாய்லாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், பிரிக்ஸ் அமைப்பின் 2024-ம் ஆண்டுக்கான தலைமையையேற்ற ரஷியா, கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 28-ந்தேதி வெளியிட்ட செய்தியில், 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிரிக்ஸ் நாடுகளில் ஒன்றாக தாய்லாந்தும் இணையும் என உறுதிப்படுத்தி இருந்தது என அமைச்சக செய்தி தெரிவிக்கின்றது.
இதனால், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர் நாடுகளுடனான பொருளாதார உறவுகளை மேம்படுத்த உதவும் வகையில் ஒத்துழைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சகம் தெரிவிக்கின்றது.
தாய்லாந்து நாட்டுடன் பெலாரஸ், பொலிவியா, இந்தோனேசியா, கஜகஸ்தான், கியூபா, உகாண்டா, மலேசியா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகளும் முதல் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர் நாடுகளாகின்றன.
பிரிக்ஸ் அமைப்பானது நாடுகளுக்கு இடையேயான கூட்டமைப்பை ஏற்படுத்தும் வகையில், 2006-ம் ஆண்டு ரஷியாவால் நிறுவப்பட்டது. இதில், ரஷியா, சீனா, இந்தியா மற்றும் பிரேசில் நாடுகள் உறுப்பினராக இருந்த நிலையில், 2011-ம் ஆண்டு அந்நாடுகளுடன் தென்ஆப்பிரிக்கா நாடும் இணைந்தது.
சுழற்சி முறையில் 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி ரஷியா இதன் தலைமையை ஏற்றது. 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அமைப்பின் உறுப்பினராக அதிகாரப்பூர்வ முறையில் இணைந்தன.