உலகம்

பணய கைதிகளை மொத்தமாக ரிலீஸ் பண்ணனும்.. எல்லாம் கைமீறி போகும் - ஹமாஸ்க்கு கெடு விதித்த டிரம்ப்

Published On 2025-02-11 14:28 IST   |   Update On 2025-02-11 14:30:00 IST
  • பாலஸ்தீனியர்களுக்குத் காசாவுக்குள் திரும்பிச் செல்லும் உரிமை இல்லை
  • எதிர்காலத்திற்கான சிறந்த ரியல் எஸ்டேட் தளம் என்று காசாவை அவர் வர்ணித்தார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 15 மாதங்களுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் கடந்த ஜனவரி 19 இல் முடிவுக்கு வந்தது. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,700 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 47,000 பேரும் கொல்லப்பட்டனர்.

போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை வரும் சனிக்கிழமைக்குள் விடுவிக்கவில்லை என்றால் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஏற்க்கனவே காசாவை வாங்கி அமெரிக்காவுக்கு சொந்தமாக்குவேன் என்று டிரம்ப் கூறியிருந்தார். காசா அமெரிக்கா கட்டுப்பாட்டில் வந்த பிறகு அங்கிருக்கும் 20 லட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களுக்குத் காசாவுக்குள் திரும்பிச் செல்லும் உரிமை இல்லை என்றும் டிரம்ப் பரபரப்பை கிளப்பினார். எதிர்காலத்திற்கான சிறந்த ரியல் எஸ்டேட் தளம் என்று காசாவை அவர் வர்ணித்தார்.

சனிகிழமைக்குள் அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றால் போர்நிறுத்தத்தை ரத்து செய்ய நேரிடும் என்று தெரிவித்தார். இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டது என்றும் அதனால் அடுத்த கட்ட பயண கைதிகள் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் ஹமாஸ் அறிவித்ததை அடுத்து டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.

டிரம்ப் பேசியதாவது, என்னைப் பொறுத்தவரை, சனிக்கிழமை மதியம் 12 மணிக்குள் அனைத்து பணயக்கைதிகளும் திருப்பி அனுப்பப்படாவிட்டால் போர் நிறுத்தத்தை ரத்து ரத்து செய்யச் சொல்வேன். சிறிது சிறிதாக அல்ல, இரண்டு, மூன்று என்று அல்ல, மொத்தமாக அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். இல்லையெனில் எல்லாம் கைமீறி போகும். நான் என்ன சொல்கிறேன் என்பதை ஹமாஸ் பிறகு தெரிந்துகொள்ளும் என்று கூறினார்.

அமெரிக்கா காசாவை கையகப்படுத்தும் திட்டத்தின் கீழ் பாலஸ்தீனியர்களை ஏற்றுக்கொள்ள மறுத்தால், நட்பு நாடுகளான ஜோர்டான் மற்றும் எகிப்துக்கு பில்லியன் கணக்கான டாலர் அமெரிக்க நிதியுதவியை நிறுத்துவதாகவும் டிரம்ப் அச்சறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News