உலகம்

பாலஸ்தீன மக்களை காசாவில் இருந்து வெளியேற்றுவோம்.. டிரம்ப் பேச்சுக்கு அமெரிக்க செனட்டர் எதிர்ப்பு

Published On 2025-02-11 11:54 IST   |   Update On 2025-02-11 11:54:00 IST
  • பாலஸ்தீன மக்களை வெளியேற்றி காசாவை ரியல் எஸ்டேட் தளமாக உருவாக்குவோம் என்று டிரம்ப் பேசுகிறார்.
  • போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதியானது பாலஸ்தீன மக்களுக்காக மீண்டும் கட்டப்பட வேண்டும்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 15 மாதங்களுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,700 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 47,000 பேரும் கொல்லப்பட்டனர்.

போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.

இந்நிலையில் காசாவை அமெரிக்கா வாங்க உள்ளதாக டிரம்ப் தெரித்துள்ளார். இது தொடர்பாக பேசிய டிரம்ப், "காசாவை வாங்குவதற்கும் சொந்தமாக்குவதற்கும் நான் உறுதிபூண்டுள்ளேன். அதை ஒரு ரியல் எஸ்டேட் தளம் என்று எண்ணிக்கொள்ளுங்கள். எனவே அதை மாற்றியமைக்க வேண்டும். ஹமாஸ் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் .

அவர்கள் [காசா மக்கள்] காசாவுக்குத் திரும்ப விரும்பவில்லை. அவர்கள் காசாவுக்குத் திரும்புவதற்கு ஒரே காரணம் அவர்களிடம் மாற்று வழி இல்லை என்பதுதான். அவர்களுக்கு பாதுகாப்பான பகுதியில் ஒரு வீட்டைக் கொடுக்க முடிந்தால் அவர்கள் திரும்ப விரும்பமாட்டார்கள்" என்று டிரம்ப் தெரிவித்தார்.

இந்நிலையில், காசாவை ரியல் எஸ்டேட் தளம் ஆக்குவோம் என்று டிரம்ப் அமெரிக்க செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "47000-த்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 111,000 பாலஸ்தீன மக்கள் காயமடைந்துள்ளனர். வலுக்கட்டாயமாக பாலஸ்தீன மக்களை வெளியேற்றி காசாவை ரியல் எஸ்டேட் தளமாக உருவாக்குவோம் என்று டிரம்ப் பேசுகிறார்.

போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதியானது பாலஸ்தீன மக்களுக்காக மீண்டும் கட்டப்பட வேண்டும் மாறாக 'கோடீஸ்வர சுற்றுலாப் பயணிகளுக்காக' அல்ல" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News