உக்ரைன்- ரஷியா இடையே உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட்டு பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும்: டிரம்ப்
- உக்ரைன்- ரஷியா இடையில் உடனடியாக போர் நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும்.
- 4 லட்சம் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ள நிலையில் உக்ரைன அதிபர் ஜெலன்ஸ்கி போர் நிறுத்தத்தை எதிர்பார்க்கிறார்.
உக்ரைன்- ரஷியா இடையிலான போர் ஆயிரம் நாட்களை கடந்துள்ளது. ரஷியாவுக்கு உக்ரைனால் ஈடுகொடுக்க முடியாது. ஆனால் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி வழங்கியதால் உக்ரைன் ரஷியாவுக்கு எதிரான போரிட்டு வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். தனது வெற்றி உரையில் நாங்கள் போரை விரும்பவில்லை எனக் கூறியிருந்தார். இதனால் உக்ரைன்- ரஷியா இடையிலான போர் முடிவடைய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் உக்ரைன்- ரஷியா இடையிலான போர் உடனடியாக நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் என டொனால்டு டிரம்ப் விரும்புகிறார்.
இது தொடர்பாக டொனால்டு டிரம்ப் கூறுகையில் "உக்ரைன்- ரஷியா இடையில் உடனடியாக போர் நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும். தேவையில்லாமல் ஏராளமான உயிர்கள் வீணாகி வருகிறது. ஏராளமான குடும்பங்கள் சீரழிந்துள்ளது. இது இப்படியே சென்று கொண்டிருந்தால் மிகவும் பெரியதாகி மோசமானதாகிவிடும். ரஷிய அதிபர் புதினுக்கு இது நன்றாக தெரியும். அவர் செயல்பட வேண்டிய நேரம் இது. சீனா உதவி செய்ய முடியும். உலகம் காத்துக் கொண்டிருக்கிறது.
4 லட்சம் ராணுவ வீரர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் உக்ரைன் நாட்டின் போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்தை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். ஜெலென்ஸ்கியும் உக்ரைனும் ஒரு ஒப்பந்தம் செய்து பைத்தியக்காரத்தனத்தை நிறுத்த விரும்புகிறார்கள். அவர்கள் அபத்தமான முறையில் 4,00,000 வீரர்களையும் (உயிரிழப்பு மற்றும் காயம்) இன்னும் பல பொதுமக்களையும் இழந்துள்ளனர்.
புதுப்பிக்கப்பட்ட நாட்டர்டாம் தேவாலயம் திறப்பு விழாவின்போது டொனால்டு டிரம்ப் உடன் ஜெலன்ஸ்கி பேசினார். அதனைத் தொடர்ந்து டிரம்ப் மேற்கண்டவாறு சமூக வலைத்ளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், நேட்டோ அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் பாதுகாப்பு செலவிற்கான பணத்தை முறையான விகிதத்தில் வழங்கவில்லை என்றால் நேட்டோவில் இருந்து வெளியேறுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனத் தெரிவித்தார்.