வெள்ளை மாளிகை மீது கார் மோதி விபத்து- ஓட்டுனர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை
- வெள்ளை மாளிகைக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை.
- சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஓட்டுனரை மீட்க முயன்றனர்.
அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையின் வெளிப்புற வாயில் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில், ஓட்டுனர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "நேற்று இரவு 10:30 மணியளவில் அதிவேகமாக வந்த கார் வெள்ளை மாளிகை வளாகத்தின் வெளிப்புற சுவற்றில் மோதியது. இதனால், வெள்ளை மாளிகைக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஓட்டுனரை மீட்க முயன்றனர். ஆனால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது.
ரகசிய சேவை, கொலம்பியா மாவட்டத்தின் காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறைகளுடன் இணைந்து, இந்த அபாயகரமான விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ரகசிய சேவையின் செய்தித் தொடர்பாளர் அந்தோனி குக்லீல்மி தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்தில் வெள்ளை மாளிகை வளாகத்தின் வெளிப்புற வாயிலில் வாகனம் மோதிய சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.