சீனாவின் முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமின் காலமானார்
- 1993 முதல் 2003-ம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்தவர் ஜியாங் ஜெமின்.
- ஜியாங் ஜெமின், ஷாங்காய் நகரில் வசித்து வந்தார்.
பீஜிங் :
சீனாவில் கடந்த 1989 முதல் 2004-ம் ஆண்டு வரை ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளராகவும், 1993 முதல் 2003-ம் ஆண்டு வரை அந்த நாட்டின் அதிபராகவும் பதவி வகித்தவர் ஜியாங் ஜெமின். 1989-ம் ஆண்டு சீனாவை உலுக்கிய தியான்மென் போராட்டங்கள் ஒடுக்கப்பட்ட பின்னர் அதிகாரத்துக்கு வந்த ஜியாங் ஜெமின், உலக அரங்கில் வலிமையான நாடாக்கும் இலக்கு நோக்கி சீனாவை வழி நடத்தினார்.
அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஜியாங் ஜெமின், ஷாங்காய் நகரில் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். இந்த சூழலில் சமீபகாலமாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் 96 வயதான ஜியாங் ஜெமின் நேற்று காலமானதாக சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அவருக்கு அளிக்கப்பட்டு வந்த அனைத்து சிகிச்சைகளும் தோல்வியடைந்ததால் அவர் உயிரிழந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சீன அரசு நாடு முழுவதும் அரசு கட்டிடங்களில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவித்துள்ளது.
ஜியாங் ஜெமின், 1989-ல் ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை பொறுப்புக்கு வந்தபோதுசீனா பொருளாதார நவீன மயமாக்கலின் ஆரம்ப கட்டத்தில் இருந்தது. 2003-ல் அவர் அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற நேரத்தில், சீனா உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக இருந்ததும், அந்த நாடு வல்லரசு அந்தஸ்துக்கு முன்னேறியதும் குறிப்பிடத்தக்கது.