உலகம்

(கோப்பு படம்)

அச்சுறுத்தும் கொரோனா- சீனாவிற்கு பயணத்தை தவிர்க்குமாறு பிரான்ஸ் வலியுறுத்தல்

Published On 2022-12-31 03:45 IST   |   Update On 2022-12-31 03:45:00 IST
  • சீன பயணிகளுக்கு பிரான்ஸ் விமான நிலையங்களில் பிசிஆர் சோதனை நடத்தப்படுவதாக தகவல்.
  • சீன பயணிகள் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் என ஸ்பெயின் அரசு அறிவிப்பு

உருமாறிய புதிய வகை கொரோனாவான பி.எப்.-7 சீனாவில் மிக வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. இதையடுத்து இந்தியா, இத்தாலி, தென்கொரியா, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளும் சீன பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனையை நடத்த உத்தரவிட்டுள்ளன. சீனாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு பிரெஞ்சு மக்களை பிரான்ஸ் அரசு வலியுறுத்தி உள்ளது. சீனாவிலிருந்து பிரான்ஸ் செல்லும் விமானங்களில் பயணிப்போர் முக கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய கொரோனா வைரஸ் மாறுபாடுகளை அடையாளம் காண சீன பயணிகளுக்கு விமான நிலையங்களில் பிசிஆர் சோதனை நடத்தப்படுவதாக பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


முன்னதாக, ஸ்பெயின் அரசும் சீனாவிலிருந்து வரும் அனைத்து விமானப் பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி சான்றிதழ்களை கட்டாயமாக்கி உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு சுகாதார அமைச்சர் கரோலினா டேரியாஸ், சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து ஐரோப்பிய நாடுகளிலும் இதேபோன்ற தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க ஸ்பெயின் அழுத்தம் கொடுக்கும் என்றார்.

Tags:    

Similar News