உலகம்

காசாவில் இஸ்ரேல் தாக்குதல் - 8 குழந்தைகள் உட்பட 17 பேர் பலி.. அமைதிப் பேச்சுவார்த்தையில் இழுபறி

Published On 2024-08-18 02:03 GMT   |   Update On 2024-08-18 02:40 GMT
  • 8 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட 17 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
  • இதுவரை இல்லாத அளவுக்கு போர் நிறுத்தத்துக்கு மிகவும் நெருக்கத்தில் வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

தூக்கத்தில் பிரிந்த உயிர்கள் 

பாலஸ்தீன நாட்டின் மத்திய காசாவில் உள்ள ஸவாடியா Zawayda பகுதியில் நேற்று இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் 8 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட 17 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் டஜன் கணக்கான மக்கள் படுகாயமடைந்துள்ளனர் . உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

நேற்று இரவு அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இஸ்ரேலின் 3 மிசைல்கள் அந்த வீட்டின் மீது ஏவப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் தூக்கத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கு அருகில் ஹமாஸ் செயல்பாடு இருந்ததாகக் கூறி இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும் மத்திய காசாவில் உள்ள மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் நிர்ப்பந்தித்து வருகிறது.

 

அமைதிப் பேச்சுவார்த்தை 

இதற்கிடையில் கத்தார் நாட்டில் உள்ள தோகாவில் அமெரிக்கா மற்றும் எகிப்து முன்னிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்துவந்த போர் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் பரிமாற்ற பேசுவார்த்தை நேற்று முன் தினம் [வெள்ளிக்கிழமை] தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பேச்சுவார்த்தையின்போது முன்மொழியப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டகாக தெரிகிறது. ஒப்பந்தத்தில் உள்ள சில அம்சங்களை ஹமாஸ் ஏற்க மறுத்துள்ளது.

வெற்றியா? தோல்வியா? 

ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு போர் நிறுத்தத்துக்கு மிகவும் நெருக்கத்தில் வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மத்தியஸ்தர்களின் முயற்சியைப் பாராட்டுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை தாங்கள் நிராகரிக்கிறோம் என்றும், போர் நிறுத்தம் வெற்றி அடையவுள்ளது போன்ற பொய் பிம்பம் கட்டமைக்கப்படுவதாகவும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

 

மத்திய காசா- தெற்கு லெபனான் தாக்குதல்கள் 

தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள பேச்சுவார்த்தை மீண்டும் அடுத்த வாரத்தில் தொடங்க உள்ள நிலையில் காசாவில் நேற்று இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. நேற்றைய தினம் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News