பெய்ரூட்டில் ரூ. 4200 கோடியுடன் ரகசிய பதுங்கு குழியை கண்டுபிடித்துள்ளோம்: இஸ்ரேல் ராணுவம்
- லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் நிதி இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்.
- முக்கியமான மருத்துவமனையின் கீழ் உள்ள ரகசிய பதுங்கு குழியில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி உள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் லெபனானில் தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. தற்போது ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு உதவி வரும் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட நிதி தொடர்பான நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில்தான் பெய்ரூட்டில் மிகப்பெரிய அளவில் நிதியை பதுக்கி வைத்திருந்த ரகசிய பதுங்கு குழியை கண்டுபிடித்துள்ளோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
அந்த பதுங்கு குழியில் பணம், தங்கம் என மொத்தமாக சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய பண மதிப்பில் சுமார் 4201 கோடி ரூபாய்) அளவிற்கு நிதி இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பினர் பணம் மற்றும் தங்கம் வைத்துள்ள பதுங்கு குழியில் தாக்குதல் நடத்தவில்லை. இது ஹசன் நசர்ல்லாவின் பதுங்கு குழியாகும். இது பெய்ரூட்டின் இதயம் எனக் சொல்லக்கூடிய முக்கியமான அல்-சஹல் மருத்துவமனையின் நேர் கீழாக உள்ளது. லெபனான் மறுகட்டமைப்பிற்காக இந்த பணம் உதலாம் என இஸ்ரேல் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு ஹிஸ்புல்லாவிற்கு தொடர்புடைய 30 இடங்களில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
கடந்த வருடம் இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்தது. காசா மீது போர் தொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இஸ்ரேல் வடக்குப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அவர்களை மீண்டும் அதே இடத்தில் குடியமர்த்துவதுதான் இலக்கு என இஸ்ரேல் அறிவித்து, ஹிஸ்புல்லாவிற்கு எதிராக அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது.