வடக்கு காசாவில் கடைசி மருத்துவமனையையும் இழுத்து மூடிய இஸ்ரேல்.. 240 மருத்துவ ஊழியர்கள் சிறைபிடிப்பு
- மருத்துவமனையின் அருகாமையில் விமானத் தாக்குதல்களில் மருத்துவ ஊழியர்கள் உட்பட 50 பேர் பலியாகினர்.
- ஆபத்தான நிலையில் இருந்த 15 நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர்
காசா மீது இஸ்ரேல் கடந்த 14 மாதங்களாக நடத்தி வரும் தாக்குதலில் 46 ஆயிரதுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளர். லட்சக்கணக்கில் மக்கள் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்களும் போதுமான மருத்துவ உதவிகள் இல்லாமல் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் வடக்கு காசாவில் உள்ள கடைசி பெரிய மருத்துவமனையை இஸ்ரேலிய படையினர் மூடியுளளனர்.
வடக்கு காசாவின் பெய்ட் லாஹியா பகுதியில் செயல்பட்டு வந்த கமால் அத்வான் மருத்துவமனையில் நேற்று [சனிக்கிழமை] புகுந்த இஸ்ரேலிய படையினர் நோயாளிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றி சுமார் 240 மருத்துவ ஊழியர்களை சிறைபிடித்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஹுஸாம் அபு சஃபியாவை இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் (IDF) சிறைபிடித்து அழைத்துச் சென்றுள்ளனர். அவர் ஒரு ஹமாஸ் பயங்கரவாதி என்று இஸ்ரேலிய படை குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதையும் வழங்கவில்லை.
நேற்று முன்தினம் [வெள்ளிக்கிழமை] மருத்துவமனையின் அருகாமையில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் மருத்துவ ஊழியர்கள் உட்பட 50 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையை ஹமாஸ் பயங்கரவாதிகளின் கோட்டை எனக் கூறியுள்ள இஸ்ரேலிய படை, மருத்துவ ஊழியர்களில் டாக்டர் அபு சஃபியாவும் ஒரு ஹமாஸ் பயங்கரவாத செயல்பாட்டாளராகவும், ஹமாஸ் இன்ஜினியரிங் மற்றும் டேங்க் எதிர்ப்பு ஏவுகணை செயல்பாடுகளில் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் கூறியுள்ளது.
ஆபத்தான நிலையில் இருந்த 15 நோயாளிகள், 50 பராமரிப்பாளர்கள் மற்றும் 20 சுகாதாரப் பணியாளர்கள் அருகிலுள்ள இந்தோனேசியன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. மேலும் அந்த பகுதியின் கடைசி பெரிய சுகாதார வசதி சேவையும் தற்போது இல்லை என்று கவலை தெரிவித்துள்ளது.
மருத்துவமனை அமைந்துள்ள வடக்கு காசாவின் பெய்ட் லாஹியா நகரம், அக்டோபர் மாதம் முதல் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.
இவ்ஸ்த்ரேலிய படை வெளியிட்டுள்ள அறிக்கையில் பயங்கரவாதிகள் கமல் அத்வான் மருத்துவமனையை ஜபாலியாவில் அதன் இராணுவ நடவடிக்கைகளுக்கான கட்டளை மையமாகப் பயன்படுத்துவதை உளவுத்துறை கண்டுபிடித்துள்ளதாகவும் நேற்று [சனிக்கிழமை] 240 போராளிகளைக் கைது செய்ததாகவும் கூறியுள்ளது.