காசாவில் சீர்குலைந்த வீடுகளை சீரமைக்க 2040 வரை ஆகும்: ஐ.நா. சொல்கிறது
- காசாவின் வடக்குப்பதியில் உள்ள இடங்களை இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி சீர்குலைத்துள்ளது.
- இஸ்ரேல் தாக்குதல் காரணமாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த இடத்தில் இருந்து இடம் பெயர்ந்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தியது. காசா முனையின் வடக்குப் பகுதியை முற்றிலுமாக சீர்குலைத்துள்ளது. தெற்கு காசாவிலும் வான் தாக்குதல் நடத்தி வருகிறது. தரை தாக்குதலுக்கும் தயாராகி வருகிறது.
காசாவில் மொத்தம் 23 லட்சம் மக்கள் உள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் சொந்த இடத்தை விட்டு வெளியேறி முகாம்களில் வசித்து வருகின்றனர்.
தற்போது முகாம்களில் வசித்து வரும் பாலஸ்தீன மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க ஐ.நா. முயற்சி மேற்கொண்டு வருகிறது. மனிதாபிமான உதவிகள் கிடைக்க இஸ்ரேல் உதவ வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா, ஐ.நா. உள்ளிட்டவைகளின் வலியுறுத்தலின்படி நேற்று, இஸ்ரேல் வடக்கு காசாவிற்கான ஒரு எல்லையை திறந்துள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் சீர்குலைந்துள்ள வீடுகளை சீரமைப்பதற்கு 2040 வரை ஆகும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீரென இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
அதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியது. ஏழு மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ரஃபா நகரைத் தவிர மற்ற நகரங்கள் ஏறக்குறைய சீர்குலைக்கப்பட்டுள்ளனர். இதில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன பொதுமக்கள கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.