உலகம்

தோலை சுட்டு தீக்காயம் இடும் வினோத சடங்கு.. தவளை விஷத்தால் துடிதுடித்து இறந்த இளம் நடிகை

Published On 2024-12-06 11:49 GMT   |   Update On 2024-12-06 11:49 GMT
  • அவர்களது உடலில் உள்ள தோலில் தீக்காயங்கள் ஏற்படுத்தப்படும்
  • மயக்கம், தலைச்சுற்றல், உதடுகள் மற்றும் முகம் வீங்கியிருக்கும்.

தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் பாரம்பரிய காம்போ [Kambo] மத சடங்கில் பங்கேற்ற 33 வயது நடிகை மார்செலா [Marcela Alcázar Rodríguez] தவளை விஷம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். உடலை தூய்மைப்படுத்துவதாக நம்பப்படும் இந்த சடங்கில் பங்கேற்ற அவர் கடுமையான வயிற்றுப்போக்கால் துடிதுடித்து இறந்துள்ளார்.

காம்போ சடங்கு

இந்த சடங்கில் பங்கேற்பவர்கள் ஒரு லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டும். அதன்பின் அவர்களது உடலில் உள்ள தோலில் சிறிய தீக்காயங்கள் ஏற்படுத்தப்படும். அதைத்தொடர்ந்து அந்த காயங்களின் மேல் குறிப்பிட்ட தவளை சளி தடவப்படும். இந்த சளி விஷத்தன்மை கொண்டதாக இருக்கும். இந்த சடங்கு நோய்களை அகற்றி உடலை தூய்மை செய்வதாக காம்போ வழக்கத்தின் நம்பிக்கை ஆகும்.

 

ஆனால் விஷத்தைக் கொண்டிருக்கும் சளி, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். வாந்தியைத் தூண்டும் இது சில சமயங்களில் வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்துகிறது. மற்ற அறிகுறிகளாக மயக்கம், தலைச்சுற்றல், உதடுகள் மற்றும் முகம் வீங்கியிருக்கும். பொதுவாக, அறிகுறிகள் கிட்டத்தட்ட அரை மணி நேரம் நீடிக்கும். இருப்பினும், இரத்த ஓட்டத்தில் விஷத்தின் தாக்கம் அதிகரிப்பது வலிப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்தும்.

மார்செலாவுக்கு என்ன ஆனது?

சடங்கு தொடங்கிய உடனேயே மார்செலாவுக்கு அசௌகர்யமும் அதைத் தொடர்ந்து கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது . இந்த அறிகுறிகள் பெரும்பாலும் தூய்மை படுத்தும் செயல்பாட்டின்போது உடலின் எதிர்ப்பு சக்தியால் ஏற்படுகிறது என்று கருதப்படுகின்றன.

மெக்சிகோவின் துராங்கோ Durango பகுதியில் உள்ள ஒரு அறையில் வைத்து இந்த சடங்கை செய்த சாமியார் [shaman] மார்செலாவை வயிற்றுப் போக்கை தாங்கிக்கொள்ளும்படி கூறியுள்ளார். ஆனால் அவரது நிலை கவலைக்கிடமான நிலையில் அங்கிருந்து சாமியார் தப்பியோடினார்.

 

தோழி ஒருவர் அவருக்கு உதவ வந்தபோதிலும் மார்செலா தவளை விஷத்தால் ஏற்பட்ட வயிற்றுப்போக்கு காரணமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அந்த சாமியாரை போலீசார் தேடி வருகின்றனர். துராங்கோ பகுதியை சேர்ந்த மார்செலா அப்பகுதியில் படமாக்கப்பட்ட பல்வேறு படங்களிலும், சீரீஸ்களிலும் நடித்துள்ளார். மார்செலா மறைவுக்கு துராங்கோ பிலிம் கில்ட் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News