பிரான்சில் கோர சம்பவம்- வீட்டில் தீப்பிடித்து 7 குழந்தைகளுடன் தாய் பலி
- வீட்டில் தீப்பற்றி எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
- தீ விபத்தில் தாயுடன் 7 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள சார்லி-சுர்-மார்னே நகரில் 2 மாடிகளை கொண்ட வீட்டில் ஒரு தம்பதி தங்களது குழந்தைகளுடன் வசித்து வந்தனர். அந்த தம்பதிக்கு 5 மகள்களும், 2 மகன்களும் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை அந்த தம்பதியும், குழந்தைகளும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது வீட்டில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ கண் இமைக்கும் நேரத்தில் வீடு முழுவதிலும் பரவியது.
வீட்டில் தீப்பற்றி எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் டஜன் கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அவர்கள் பலமணி நேரம் போராடி தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் தீயின் கோரப்பிடியில் சிக்கி 7 குழந்தைகளும், அவர்களின் தாயும் பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகளின் தந்தை மட்டும் தீக்காயங்களுடன் உயிர் தப்பினார்.
தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து உடனடியாக தெரியாத நிலையில், இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீ விபத்தில் தாயுடன் 7 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.