எதிரிகள் ஆத்திரமூட்டும் வகையில் செயல்பட்டால்.... ராணுவத்திற்கு கிம் ஜாங் உன் பிறப்பித்த உத்தரவு
- வடகொரிய ராணுவம் மேலும் மூன்று உளவு செயற்கைக்கோள்களை செலுத்த இருக்கிறது.
- அணுஆயுதங்களை மேலும் அதிக அளவில் தயாரிக்க இருக்கிறது என கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்கா கூட்டணிக்கு எதிராக பாதுகாப்பை வலுப்படுத்த சபதம் ஏற்றுள்ள வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், தூண்டப்பட்டால் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை முற்றிலும் அழித்துவிடுங்கள் என ராணுவத்திற்கு உத்தரவிட்டதாக, அந்நாட்டின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ஐந்து நாட்கள் ஆளுங்கட்சி கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது ராணுவம் மேலும் மூன்று உளவு செயற்கைக்கோள்களை செலுத்த இருக்கிறது. அணுஆயுதங்களை மேலும் அதிக அளவில் தயாரிக்க இருக்கிறது. இந்த வருடம் தாக்குதல் நடத்தும் டிரோன்களை உருவாக்க இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உடனான எதிர்கால ராஜதந்திர விவகாரத்தில் தன்னுடைய செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை கிம் ஜாங் உன் எடுக்க இருப்பதாக அமெரிக்கா- வடகொரிய மோதலை உற்று கவனிக்கும் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா, மற்ற விரோதப் படைகளின் மோதல் நகர்வுகளை சுட்டிக்காட்டியுள்ள அவர், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொக்கிஷமான வாளை கூர்மையாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். பொக்கிஷமான வாள் என அவர் குறிப்பிட்டது அணுஆயுதங்களை எனவும் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
வட கொரியாவிற்கு எதிரான ராணுவ மோதலையும் ஆத்திர மூட்டல்களையும் அவர்கள் தேர்வு செய்தால், ஒரு கணம் தயக்கமின்றி முற்றிலும் ஒழிப்பதற்கான அனைத்து கடினமான வகைகளையும் ஒன்று திரட்டி எதிர்கொள்ள வேண்டும் எனவும் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.