உலகம்

சுவீடன் பிரதமர் மகதலேனா ஆண்டர்சன் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஆண்ட்ரியாஸ் நார்லனிடம் அளித்தபோது எடுத்த படம்.

சுவீடனில் ஆளுங்கட்சி மயிரிழையில் தோல்வி: எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சி அமைக்கிறது

Published On 2022-09-16 02:27 GMT   |   Update On 2022-09-16 02:27 GMT
  • சுவீடன் பாராளுமன்றத்துக்கு 11-ந்தேதி தேர்தல் நடந்தது.
  • மகதலேனா ஆண்டர்சன் சுவீடன் நாட்டின் முதல் பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாக்ஹோம் :

ஐரோப்பிய நாடுகளில் ஒன்று சுவீடன். அங்கு 349 இடங்களைக் கொண்டுள்ள நாடாளுமன்றத்துக்கு 11-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் பிரதமர் மகதலேனா ஆண்டர்சனின் சமூக ஜனநாயக கட்சிக்கும், எதிர்க்கட்சியான சுவீடன் ஜனநாயக கட்சி கூட்டணிக்கும் இடையே நீயா, நானா என்கிற அளவுக்கு பலத்த போட்டி நிலவியது.

இந்தத் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு நேற்று முன்தினம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியான பிரதமர் மகதலேனா ஆண்டர்சனின் சமூக ஜனநாயக கட்சி மயிரிழையில் தோல்வியைத் தழுவியது.

எதிர்க்கட்சியான சுவீடன் ஜனநாயக கட்சி தலைமையிலான 4 கட்சி கூட்டணி வெற்றி பெற்றது.

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கு 175 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி கூட்டணி 176 இடங்களில் வெற்றிவாகை சூடியது.

ஆளுங்கட்சி 173 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. எதிர்க்கட்சி 3 இடங்களை கூடுதலாகப்பெற்று ஆட்சி அமைக்கிறது.

இந்தத் தேர்தலில் தோல்வி அடைந்திருப்பதை பிரதமர் மகதலேனா ஆண்டர்சன் ஏற்றுக்கொண்டு விட்டார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், "நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு ஒன்றல்லது இரண்டு இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளன. இது ஒரு மெல்லிய பெரும்பான்மை. ஆனாலும் அது ஒரு பெரும்பான்மைதான" என தெரிவித்தார். அவர் நேற்று தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். அவர்தான் அந்த நாட்டின் முதல் பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல, அவரது கட்சி கடந்த 2014-ம் ஆண்டு முதல் அங்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்தது.

இந்த தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் அது 4 கட்சிகளின் பூரண ஆதரவைப் பெறவில்லை. இதனால் மிதவாதக்கட்சியின் தலைவர் உல்ப் கிறிஸ்டெர்சன் புதிய பிரதமர் ஆகிறார், அவர்தான் புதிய ஆட்சியை அமைப்பார் என ஸ்டாக்ஹோமிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி உல்ப் கிறிஸ்டெர்சன் கூறும்போது, "நான் புதிய அரசை அமைப்பேன். முழு சுவீடனுக்கும், அனைத்து குடிமக்களுக்குமான ஒரு புதிய, நிலையான, வலுவான அரசை உருவாக்குவதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்" என தெரிவித்தார்.

Similar News