உலகம்

சிரியா: விமானத்தில் தப்பிய அதிபர் ஆசாத் கொல்லப்பட்டாரா?.. ரஷியா - அமெரிக்கா சொல்வது என்ன?

Published On 2024-12-08 16:07 GMT   |   Update On 2024-12-08 16:07 GMT
  • சிரியாவின் கடலோரப் பகுதியை நோக்கிச் சென்ற விமானம் திடீரென யு-டர்ன் செய்துள்ளது
  • ஆட்சி கவிழ்ப்பு மீண்டும் ஐஎஸ்ஐஎஸ் ஆதிக்கத்துக்கு வழிவகுக்கும் என ஜேக் சல்லிவன் தெரிவித்தார்.

வெற்றி பெற்ற உள்நாட்டு போர்

2011 இல் ஒடுக்கப்பட்ட உள்நாட்டு போர் ஒரு வாரத்திற்கு முன் மீண்டும் புத்துயிர் பெற்றது. வடக்கு அலெப்போவை கடந்த வாரம் சனிக்கிழமை கிளர்ச்சியர்கள் கைப்பற்றினர். ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) தலைமையில், பல கிளர்ச்சிப் குழுக்கள் நடத்திய தாக்குதல்களில் அசாத்தின் படைகள் திணறியதால் ஹமா, தாரா, ஹோம்ஸ் ஆகிய நகரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வீழ்ந்தன. கடைசியாக இன்று தலைநகர் டமாஸ்கஸ் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

 

ஆசாத்துக்கு ஆதரவாக செயல்படும் ரஷியாவின் கடற்படை விமான தளங்கள் அமைத்துள்ள கடலோர பகுதிகளுடன் டமாஸ்கஸ் தொடர்பை கிளர்ச்சியாளர்கள் துண்டித்துள்ளனர். அதிபர் ஆசாத் நாட்டை விட்டு விமானம் மூலம் தப்பியோடியதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

கொல்லப்பட்டாரா அசாத்? 

கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் கடந்த வாரம் தொடங்கியதில் இருந்து அசாத் பொதுவில் தோன்றவில்லை. சிரிய தலைவரின் மனைவி அஸ்மா மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளும் எங்கு உள்ளார்கள் என்று தெரியவில்லை. இரண்டு மூத்த இராணுவ அதிகாரிகள், அசாத் டமாஸ்கஸில் இருந்து ஒரு விமானத்தில் ஏறி, ஒரு அறியப்படாத இடத்திற்குச் சென்றதாகக் கூறியுள்ளனர்

கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸைக் கைப்பற்றியதாகக் கூறப்படும் நேரத்தில், சிரியன் ஏர் விமானம் நகரின் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது என்று விமான கண்காணிப்பு சேவையான Flightradar24 தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் சிரியாவின் கடலோரப் பகுதியை நோக்கிச் சென்ற விமானம் திடீரென யு-டர்ன் செய்து எதிர் திசையில் பறந்து ரேடாரில் இருந்து மறைந்தது.

 

அதிபர் சென்ற விமானம் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற ஊகங்கள் கிளம்பியுள்ளன. ரேடாரில் இருந்து மறைய ஒருவேளை டிரான்ஸ்பாண்டர் அணைக்கப்பட்டிருக்கலாம் அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ரஷியா மற்றும் ஈரானுக்கு நெருக்கமாக இருந்த ஆசாத் மாஸ்கோ அல்லது தெஹ்ரானுக்கு சென்றிருக்கலாம் என்று ஒரு தரப்பு கூறுகிறது. இதற்கிடையே சிரியாவின் பிரதமர் முகமது காசி அல்-ஜலாலியை கிளர்ச்சி அமைப்பு ஹோட்டலில் சிறைவித்துள்ளது. பிரதமர் அலுவலகத்திலிருந்து ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலுக்கு அவர் அழைத்துச் செல்லப்படும் வீடியோ ஒன்று இதை உறுதிப்படுத்துகிறது.

 

ரஷியா சொல்வது என்ன? 

சிரியாவின் அதிபர் பஷர் அல்-அசாத், அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து, பதவியை விட்டு விலகியுள்ளார் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அசாத் இப்போது எங்கே இருக்கிறார் என்று அமைச்சகம் கூறவில்லை.

அவர் வெளியேறுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ரஷியா பங்கேற்கவில்லை என்றும் சிரியாவில் உள்ள ரஷ்யாவின் ராணுவ தளங்கள் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தற்போது அவர்களுக்கு கடுமையான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் மாஸ்கோ சிரியாவின் கிளர்ச்சிக் குழுக்களுடனும் தொடர்பில் இருப்பதாகவும், வன்முறையை கைவிடுமாறும் அனைத்து தரப்பினரையும் ரஷிய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

 

அமெரிக்கா சொல்வது என்ன?

இதுதொடர்பாக தனது சமூக வலைதளத்தில் எழுதியுள்ள அமெரிக்க அதிபராக பதவி ஏற்கும் டொனல்டு டிரம்ப், சிரியாவில் குழப்பம், ஆனால் அது எங்கள் நண்பன் அல்ல. அமெரிக்கா இதில் எதுவும் செய்யக்கூடாது. இது எங்கள் சண்டை அல்ல. நடப்பது நடக்கட்டும் [LET IT PLAY] என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே சிரியாவில் நடப்பதை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. சிரியாவில் நடந்துள்ள இந்த ஆட்சி கவிழ்ப்பு அங்கு மீண்டும் ஐஎஸ்ஐஎஸ் [பயங்கரவாதிகள் அமைப்பின்] ஆதிக்கம் அதிகரிக்க வழிவகுக்கலாம் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News