டிராகனும் யானையும் நடனமாட வேண்டும்.. அமெரிக்காவின் வர்த்தக போரை எதிர்க்க இந்தியாவுக்கு சீனா அழைப்பு
- விரோதத்தை அதிகரிப்பதை விட கூட்டாளிகளாக இணைந்து செயல்படுவது நல்லது.
- பரஸ்பர ஒத்துழைப்பு இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களை வலுப்படுத்தும் என்று அவர் விளக்கினார்.
சீன இறக்குமதிகள் மீதான வரிகளை அமெரிக்கா 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக இரட்டிப்பாக்கியது. இதற்கு பதிலடியாக அமெரிக்க இறக்குமதிக்கும் சீனா வரி விதித்துள்ளது.
இதனால் சர்வதேச அளவில் வர்த்தக போர் மூலம் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி பேசியுள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய வாங் யி, டிராகன் (சீனா) மற்றும் யானையை (இந்தியா) சேர்ந்து நடனமாட வைப்பது மட்டுமே சரியான தேர்வு. புது டெல்லியும் பெய்ஜிங்கும் விரோதத்தை அதிகரிப்பதை விட கூட்டாளிகளாக இணைந்து செயல்படுவது நல்லது. பரஸ்பர ஒத்துழைப்பு இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களை வலுப்படுத்தும்.
ஆசியாவின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகள் கைகோர்த்தால், சர்வதேச உறவுகளின் ஜனநாயகமயமாக்கல், உலகளாவிய தெற்கு நாடுகளின் வளர்ச்சிக்கான பிரகாசமான எதிர்காலம் இருக்கும். இந்தியாவும் சீனாவும் கூட்டாளிகளாக ஒருவருக்கொருவர் வெற்றிபெற ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.