வரி விதிப்பை ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்த டிரம்ப்.. கனடாவும் ஒத்திவைப்பதாக அறிவிப்பு
- வரி விதிப்பதை ஒத்திவைப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- கனடா நாட்டின் நிதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கும் நடைமுறையை அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார். வர்த்தக போர் ஏற்படும் அபாயம் இருப்பதை தொடர்ந்து கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதை ஒத்திவைப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை தொடர்ந்து கனடாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நடைமுறையை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 2-ம் தேதி வரை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படாது என கனடா நாட்டின் நிதித்துறை அமைச்சர் டொமினிக் லி பிளாங்க் தெரிவித்துள்ளார்.
2020 அமெரிக்கா - மெக்சிகோ - கனடா ஒப்பந்தத்தை ஏற்று கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படாது. எனினும், இது ஒருமாத காலத்திற்கு மட்டும் தான் அமலில் இருக்கும்.
முன்னதாக ஆட்டோமொபைல் துறையில் முன்னணி நிறுவனங்களான ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் நிறுவனங்களின் மூத்த தலைவர்களை சந்தித்த அதிபர் டிரம்ப் தற்போது வரி விதிப்பை ஒத்திவைக்கும் முடிவை எடுத்துள்ளார்.