ஜெலன்ஸ்கியின் முகத்துக்கு நேராக டிரம்ப் உண்மையை போட்டுடைத்து விட்டார் - ரஷியா
- நன்றியில்லாத நபரின் கன்னத்தில் அறையப்பட்டிருக்கிறது.
- உக்ரைனுக்கு அமெரிக்காவின் ராணுவ உதவிகள் நிறுத்தப்பட வேண்டும்
உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுக்கு மேல் போர் நடந்துவருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்கா வந்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார். உக்ரைனில் உள்ள கனிமங்களை அமெரிக்காவை பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்த சந்திப்பு நடத்தப்பட்டது.
இந்த சந்திப்பில் பத்திரிக்கையாளர் முன்னிலையில் இருதலைவர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இருவரும் பதிலுக்கு பதில் பேசி கொண்டே இருந்தனர். இதில் ஜெலன்ஸ்கி மீது டிரம்ப் பல குற்றச்சாட்டுகளை கூறினார்.
டிரம்ப் கூறும்போது, "நீங்கள் பெரிய சிக்கலில் இருக்கிறீர்கள். இதில் நீங்கள் வெற்றி பெற போவதில்லை. நீங்கள் லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள். 3-ம் உலகப் போரோடு விளையாடுகிறீர்கள். நீங்கள் செய்வது நாட்டிற்கு மிகவும் அவமரியாதையானது.
உங்களிடம் போதுமான ராணுவம் இல்லை. உங்களுக்காக 350 பில்லியன் டாலர்களை அமெரிக்கா செலவு செய்தது. உங்கள் வீரர்கள் அமெரிக்க போர் கருவிகளை வைத்தே சண்டையிட்டார்கள். இல்லையென்றால் போர் 2 வாரத்தில் முடிந்திருக்கும். நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும். ஆனால் எங்கள் நாட்டிற்கு அவமரியாதையை காட்டுகிறீர்கள். உங்களால் போரில் வெற்றி பெற முடியாது என்று எனக்கு தெரியும்.
நீங்கள் இப்படி நடந்து கொண்டால் அமைதி ஒப்பந்தத்தை மிகவும் கடினமாக்கும் என்று நான் பயப்படுகிறேன். நீங்கள் தனியாக செல்ல எந்த வாய்ப்பும் உங்களிடம் இல்லை. மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். உங்களிடம் வீரர்கள் குறைவாக உள்ளனர். ஆனால் நீங்கள் எனக்கு போர் நிறுத்தம் வேண்டாம். நான் தொடர்ந்து போராட விரும்புகிறேன்' என்று எங்களிடம் கூறுகிறீர்கள்.
உயிர்கள் இழக்கப்படாமல் இருக்க போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். ஆனால் நீங்கள் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை. நான் புதினுடன் இணையவில்லை., நான் யாருடனும் இணைய வில்லை. நான் அமெரிக்காவுடன் இணைந்திருக்கிறேன். நீங்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள் அல்லது நாங்கள் வெளியேறி விடுவோம்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஜெலன்ஸ்கி - டிரம்ப் சந்திப்பு குறித்து பேசிய ரஷிய பாதுகாப்பு கவுன்சில் துணைத்தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ், "நடந்தது மிக நல்ல விஷயம், முதன் முதலில் ஜெலன்ஸ்கியின் முகத்துக்கு நேராக டிரம்ப் உண்மையை போட்டுடைத்து விட்டார். நன்றியில்லாத நபரின் கன்னத்தில் அறையப்பட்டிருக்கிறது, ஆனால் இது போதாது. உக்ரைனுக்கு அமெரிக்காவின் ராணுவ உதவிகள் நிறுத்தப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.