உலகம்

சட்டவிரோத சொத்து குவிப்பு- ராஜபக்சேவின் மகன் கைது

Published On 2025-01-25 11:00 IST   |   Update On 2025-01-25 11:02:00 IST
  • யோஷித ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்த போது அந்நாட்டின் கடற்படை அதிகாரியாக பணியாற்றினார்.
  • குற்றப்புலனாய்வு அலுவலகத்தில் குற்றச்சாட்டு தொடர்பாக யோஷித ராஜபக்சே விசாரணைக்கு ஆஜராகி இருந்தார்.

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே. பிரதமராகவும் இருந்துள்ளார். இவருக்கு நமல், ரோஹிதா, யோஷிதா ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் யோஷித ராஜபக்சேவை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவரை சட்டவிரோத சொத்து குவிப்பு புகார் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். பெலியத்த என்ற பகுதியில் வைத்து யோஷிதாவை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து போலீஸ் செய்தி தொடர்பாளர் புத்திக மனதுங்க கூறும்போது, "சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் யோஷித ராஜபக்சே, குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்" என்றார். ஏற்கனவே சொத்து குவிப்பு புகார் தொடர்பாக யோஷித ராஜபக்சேவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது சொத்து விவரங்கள் பற்றி கேள்வி கேட்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் அதிபராக கோத்தபய ராஜபக்சே, பிரதமராக மகிந்த ராஜபக்சே இருந்தபோது பொருளாதார நெருக்கடி காரணமாக மிகப்பெரிய அளவில் மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால் அவர்கள் பதவியில் இருந்து விலகினார்கள். அதன்பின் இடைக்கால அரசு அமைந்தது.

பின்னர் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மெல்ல மீண்டது. சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் திசாநாயகே அபார வெற்றி பெற்று பதவியேற்றார்.

தேர்தலில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். ராஜபக்சே குடும்பத்தினர் மீதான செல்வாக்கு மோசமாக சரிந்துள்ளது. இந்த நிலையில் யோஷித ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News