செய்திகள்

திருப்பதி பிரம்மோற்சவ விழா 23-ந்தேதி தொடங்குகிறது

Published On 2017-09-14 12:31 IST   |   Update On 2017-09-14 12:31:00 IST
திருப்பதி பிரம்மோற்சவ விழா 23-ந் தேதி தொடங்குகிறது. 16 வாகனங்களில் ஏழுமலையான் வீதிஉலாவும், ரூ.8 கோடியில் உருவான சர்வபூபால வாகனம் வெள்ளோட்டமும் நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 23-ந் தேதி பிரம்மோற்சவ விழா தொடங்குவதையொட்டி அக்டோபர் 1ந் தேதி வரை மொத்தம் 16 வாகனங்களில் மலையப்பசாமி மாடவீதிகளில் பவனி வருகிறார். இதனையொட்டி ரூ.8 கோடியில் உருவான சர்வபூபால வாகனம் வெள்ளோட்டம் விடப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான்கோவிலில் பிரம்மோற்சவ விழா வருகிற 23-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை நடக்கிறது. இதனையொட்டி செப்டம்பர் 19-ந் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனமும், 22-ந் தேதி அங்குரார்ப்பணமும் நடக்கிறது. அதனை தொடர்ந்து 23-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையும், இரவு 9 மணி முதல் 11 மணி வரையும் மொத்தம் 16 வாகனங்களில் மலையப்பசாமி மாடவீதிகளில் உலா வருகிறார்.

23-ந் தேதி மாலை துவாஜரோகணம் எனும் கொடியேற்றத்தை தொடர்ந்து இரவு 9 மணி முதல் 11 மணி வரை பெரியசே‌ஷ வாகன வீதி உலா நடக்கிறது. 24-ந் தேதி காலை 9 மணிக்கு சின்னசே‌ஷ வாகனத்திலும், இரவு 9 மணிக்கு அம்ச வாகனத்திலும், 25-ந் தேதி காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும், 26-ந் தேதி காலை 9 மணிக்கு கல்ப விருட்ச வாகனத்திலும், இரவு 9 மணிக்கு சர்வபூபால வாகனத்திலும் வீதிஉலா நடக்கிறது.

27-ந் தேதி காலை மோகினி அவதாரத்திலும், இரவு 7.30 மணிக்கு கருடவாகனத்திலும் மலையப்பசாமி வீதி உலா வருகிறார். கருடசேவை எனப்படும் கருடவாகன வீதி உலாவின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

28-ந் தேதி காலை அனுமந்த வாகனத்திலும், மாலை 5 மணிக்கு ஸ்வர்ண ரதோட்சவத்திலும், இரவு 9 மணிக்கு கஜவாகன வீதி உலாவும் நடக்கிறது.

29-ந் தேதி காலை 9 மணிக்கு சூரியபிரபை வாகனத்திலும், இரவு சந்திரபிரபை வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. அக்டோபர் 1-ந் தேதி காலை 6 மணிக்கு சக்ரஸ்நானம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு துவாஜரோகனம் நடக்கிறது.

பிரம்மோற்சவ விழாவையொட்டி சர்வபூபால வாகனம் ரூ.8 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.8.89 கோடியில் தங்க தகடுகள் பதிக்கப்பட்டு ஜொலிக்கிறது.

மொத்தம் 1,020 கிலோ எடையுள்ள சர்வபூபால வாகன வெள்ளோட்டம் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து பிரம்மோற்சவ ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

Similar News