செய்திகள்
வடபழனி முருகன் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி நடந்த சங்காபிஷேக பூஜை

வடபழனி முருகன் கோவிலில் சங்காபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

Published On 2019-12-03 10:50 IST   |   Update On 2019-12-03 10:50:00 IST
கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் நடந்த 108 சங்காபிஷேக பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கார்த்திகை மாதத்தில் திங்கட்கிழமைகளில் சிவன் கோவில் சென்று சிவபெருமானை தரிசிப்பது மிகுந்த பலனைத் தரும் என்பது ஐதீகம். இந்த நாளில், சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை செய்து வணங்கினால், மனோபலத்தையும் தெளிவையும் பெறலாம். திங்கட்கிழமையை சோமவாரம் என்பார்கள். சிவபெருமானுக்கு ஸ்ரீசோமநாதர் என்ற பெயரும் உள்ளது.

‘திங்கள்’ என்றால் சந்திரன். சிவனாரின் தலையில் சந்திரனையும், கங்கையையும் சூடியிருப்பார். கார்த்திகை சோமவார விரதத்தின் சிறப்பைச் சிவபெருமானே பார்வதி தேவிக்குச் சொல்லி இருக்கிறார். இந்த விரதத்தைப் போன்று வேறு எந்த விரதத்திலும் சிவபெருமான் திருப்தி அடைய மாட்டார் என்பது ஐதீகம்.

அந்தவகையில் வடபழனி முருகன் கோவிலில் அருள்பாலித்து வரும் சொக்கநாதருக்கு கார்த்திகை சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நேற்று மாலை 4.30 மணி அளவில் நடந்தது. இதற்காக சொக்கநாதர் சன்னதி அருகில் உள்ள அருணகிரிநாதர் மண்டபத்தில் கலசங்களுடன் 108 சங்குகளில் புனித நீர் நிரப்பி கங்கையாக பாவித்து மலர் தூவி பூஜைகள் நடந்தது.

பின்னர் சொக்கநாதருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், துணைக் கமிஷனர் சித்ரா தேவி ஆகியோர் செய்து இருந்தனர்.

இதுகுறித்து கோவில் குருக்கள் கூறியதாவது:-

சங்காபிஷேகத்தில் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தால் வாழ்வில் இழந்ததை பெறலாம். அத்துடன் தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாகும். 12 மாதங்களில் கார்த்திகை மாத சோம வாரம் மிகச் சிறப்பானது. இந்த தினங்களில் சிவபெருமானை வழிபட்டு விரதம் இருந்தால் பெருமான் மிகவும் மகிழ்ந்து, திருப்தியடைந்து வேண்டும் வரம் எல்லாம் தந்திடுவார் என்பது முன்னோர் வாக்கு. பக்தர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்து செல்வம், நற்கதி, குழந்தைப் பேறு ஆகியவற்றைப் பெற்று மகிழ்ந்து உள்ளனர். ஆண்டு தோறும் கார்த்திகை சோமவாரத்தில் வடபழனி முருகன் கோவிலில் சங்காபிஷேகம் வெகு சிறப்பாக நடந்து வருகிறது.

இவ்வாறு குருக்கள் கூறினார்கள்.

Similar News