புதுச்சேரி

ஆரோ புட் நிறுவனத்தை தே.மு.தி.க. தொழிற்சங்க நிர்வாகிகள் முற்றுகையிட்ட காட்சி.

தே.மு.தி.க. தொழிற்சங்கத்தினர் முற்றுகை

Published On 2023-02-15 09:07 GMT   |   Update On 2023-02-15 09:07 GMT
  • தே.மு.தி.க. தொழிற்சங்க நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.
  • ஆரோ புட் நிறுவன வாசலில் அமர்ந்து நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

புதுச்சேரி:

திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு அருகே ஆரோ புட் நிறுவனத்தை முற்றுகையிட்டு தே.மு.தி.க. தொழிற்சங்க நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு அருகே புளிச்சப்பள்ளம் பகுதியில் ஆரோ புட் நிறுவனம் உள்ளது.

இந்த நிறுவனத்தில் 150 நிரந்தர ஊழியர்கள், 450 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனத்தில் பல்வேறு கட்சியினுடைய தொழிற்சங்கங்கள் இயங்கி வருகிறது.

தே.மு.தி.க. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இங்கு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வரும் தே.மு.தி.க. தொழிற்சங்க நிர்வாகிகளை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையாக பி.எஃப். பணத்தை பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தே.மு.தி.க. தொழிற்சங்கத்தை சேர்ந்த 12 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கடலூர் தொழிலாளர் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் நிறுவனம் அதனை ஏற்காமல் மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில் ஆரோ புட் நிறுவனம் தே.மு.தி.க. தொழிற்சங்க நிர்வாகி ஜெய்சங்கரை வேறு துறைக்கு மாற்றிய நிலையில் இதனை கண்டித்தும், தே.மு.தி.க. தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு ஆதரவாக நிர்வாகி வக்கீல் ராதா கிருஷ்ணன் தலைமையில், பூத்துறை அருள் உள்ளிட்ட பலர் ஆரோ புட் நிறுவன வாசலில் அமர்ந்து நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

சம்பவ இடத்திற்கு வந்த வானூர் போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தொடர்ந்து தே.மு.தி.க. தொழிற்சங்க நிர்வாகிகள் ஆரோபுட் நிறுவன வாசலில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News