என் மலர்
செய்திகள்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வண்டலூர் உயிரியல் பூங்காவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
வண்டலூர் பூங்காவில் சாய்ந்த மரங்களுக்கு பதிலாக புதிதாக மரங்கள் நடப்பட்டு வருகிறது. மற்றும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. புலிகளை கண்டு ரசிக்க பிரத்யேக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
குடிமராத்து திட்டம் மூலம் நிலத்தடி நீரை சேமிக்க ஏரி குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் ஒத்துழைப்போடு 1511 ஏரிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உயர் கல்விக்கு ஆணையம் அமைப்பது மாநில அரசை பாதிக்கும் என்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் பிரச்சனை எழுப்புவார்கள்.
நமக்கு ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்து உள்ளோம்.
காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்புபடிதான் நாம் செயல்படுவோம். ஏனென்றால் 2 மாதத்துக்கு முன்பு கடுமையான குடிநீர் பிரச்சனை ஏற்பட்டபோது மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாமல் இருந்தது.
அப்போது குடிநீருக்காக 3 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகாவிடம் கேட்டோம். ஆனால் அவர்கள் தரவில்லை.
கேள்வி:- பாராளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க தயாராகி விட்டதா?
பதில்:- பாராளுமன்ற தேர்தல் வர இன்னும் ஒரு வருடம் உள்ளது. அடுத்த வருடம் மே மாதம்தான் வர உள்ளது. எங்களது பணியை நாங்கள் ஆரம்பித்து விட்டோம்.
மதுரையில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகளுடன் பேரணி நடத்தினோம். கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் 2 தொகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆயிரம் பேர் சைக்கிளில் சென்று அம்மா ஆட்சியின் சாதனைகளை எடுத்து சொல்லி வருகின்றனர்.
எனவே எங்களை பொறுத்தவரை மதுரையில் அன்றைய தினமே பிரசாரம் துவக்கப்பட்டு விட்டது.
பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக மற்ற மாநில முதல்- அமைச்சர்கள் எடுத்து கூறும் கருத்து நமது மாநிலத்துக்கு பொருந்தாது. ஏனென்றால் நமது மாநிலத்தை பொறுத்தவரை மத்திய அரசோடு இணக்கமாக உள்ளோம். நாம் யாருடனும் கூட்டு கிடையாது. நாம் யாருக்கும் எதிரியும் கிடையாது.
எனவே நம்முடைய மாநில மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும்போது நமது மாநில பிரச்சனைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றுதான் தேர்ந்தெடுத்து அனுப்பி உள்ளனர்.
தேர்தல் கூட்டணிக்கு இன்னும் ஆயுத்தபணியை எந்த கட்சியும் எடுக்கவில்லை. எனவே கூட்டணி பற்றி தேர்தல் காலத்தில்தான் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #ParliamentElections #ADMK #EdappadiPalaniswamy
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
எங்களுடன் லோக்சபா உறுப்பினர்கள் யாரும் இல்லை. எனவே மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது பயத்தினாலா என்று எனக்கு தெரியாது. சில மாதங்களிலேயே தற்போதைய லோக்சபா முடிகிறது.
அதிகபட்சம் அடுத்த ஏப்ரல், மே மாதங்களுக்குள் தேர்தல் நடக்கும். தேர்தலுக்குப் பிறகு தமிழக மக்களுக்கு போராடாத தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் தொகுதிக்குள்ளேயே செல்ல முடியாது.
மக்கள் ஆதரவோடு, மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கிற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தான் அடுத்த தேர்தலில் தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெறும்.
அதைத்தான் அரூரில் நடைபெற்ற கூட்டத்தில் 40 பாராளுமன்ற தொகுதி லட்சியம், அதில் 37 தொகுதி நிச்சயம் என்று சொன்னேன். மக்கள் விரும்பாத எந்தவொரு திட்டத்தையும், அம்மா வழியில் நாங்களும் தடை செய்வோம். உண்மையான வளர்ச்சியை கொண்டு வருவோம்.
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் நல்ல தீர்ப்பு வரும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் என்னுடைய நல்ல நண்பர். இதுவரை நாங்கள் கூட்டணி பற்றி பேசவில்லை. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மக்கள் ஆதரவோடு இருக்கிறது என்பதை உணர்ந்து எங்களோடு எந்த இயக்கங்கள் வந்தாலும் அது மதச்சார்பற்ற இயக்கமாக இருந்தால் அவர்களுடன் நாங்கள் நிச்சயம் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறோம். நாங்கள் தி.மு.க. வுடன் கூட்டணி வைக்க முடியாது.
வருமான வரித்துறை நியாயமான நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன். எஸ்.பி.கே. நிறுவனத்தில் நடைபெறும் சோதனை இத்துடன் நிற்காது. இன்னும் தொடரும் என்றுதான் நினைக்கிறேன்.
8 வழிச்சாலைக்கு எனக்கு தெரிந்தவரை இன்னும் டெண்டர் வெளியிடப்படவில்லை. ஆட்சி போவதற்குள் ஏதாவது பார்த்து விடலாம் என்று எடப்பாடி பழனிசாமி பார்க்கிறார்.
என்னை மாமியார் வீட்டுக்கு போய் விடுவார் என்று சொன்னார். தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் மாமியார் வீட்டுக்கு போகும் நேரம் நெருங்கி விட்டது. எல்லோரும் தொடைநடுங்கி. வெளியில் வருவதற்கே பயந்து கொண்டு உள்ளார்கள்.
ஜெயலலிதா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றபோது உயிரோடு இருந்தார்கள் என்பதை பழனிசாமியே தற்போது ஒத்துக் கொள்கிறார். பிறகு எதற்காக விசாரணை ஆணையம். பன்னீர்செல்வம் கேட்டதற்காக மக்கள் வரிப் பணத்தில் விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறீர்களா? துரோகிகளின் 1½ ஆண்டு ஆட்சி காலத்திற்காக விசாரணை ஆணையம் நியாயமான முறையில் அமைக்கப்பட்டு தகிடுதத்தங்கள் அனைத்தும் வருங்காலத்தில் வெளிவரும்.
இவ்வாறு அவர் கூறினார். #Dhinakaran
ஈரோடு:
ஈரோடு சி.கே.கே. அறக்கட்டளை சார்பில் ஈரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் சி.கே.கே. அறக்கட்டளையின் 40- ஆண்டு இலக்கிய விழா நடந்தது.
விழாவில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
வெளி நாட்டில் வாழும் தமிழ் மக்கள் இலக்கிய சிந்தனையை நேசிக்கிறார்கள். அதே போல் நாமும் இலக்கியத்தை நேசிக்க வேண்டும்.
இன்று பெண்கள் பெரும் பாலானோர் டி.வி. சீரியல்களை நேசிப்பதால் அவர்களின் சிந்தனை அழிந்து வருகிறது. மக்கள் பிரதிநிதிகளை குற்றம் சொல்வதை விட பெரிய குற்றம் அவர்களுக்கு கண் மூடித்தனமாக ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கும் நம்ம தான் (பொதுமக்கள்) குற்றவாளிகள்.
இளைய தலைமுறையினர் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை கற்று கொள்ள வேண்டும். இதன் மூலம் பல நல்ல சிந்தனைகளை வளர்த்து கொள்ளலாம்.
இலக்கியம் தொடர்பான விழாக்கள் அவ்வப்போது நடத்தப்பட வேண்டும். அப்போது தமிழ் இலக்கியங்கள் பாதுகாக்கப்படும். இதன் மூலம் தமிழும், மனித நேயமும் வளரும்.
இவ்வாறு தமிழருவி மணியன் பேசினார். #Vote #TamilaruviManian
அரூர்:
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் போட்டியிடுவார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டி.டி.வி. தினகரன் அறிவித்து இருந்தார்.
தற்போது தருமபுரி, அரூர் உள்பட 3 தொகுதி வேட்பாளர்களை தினகரன் அறிவித்து உள்ளார். இது குறித்து அவர் தருமபுரி மாவட்டம், அரூரில் நிரூபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில், வரும் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமையை ஏற்கும் தி.மு.க. தவிர, மதசார்பற்ற எந்த கட்சியும் எங்களின் கூட்டனிக்கு வரலாம். தமிழகத்தில் நல்லாட்சி மலர, நாங்கள் அனைத்து கட்சியினரையும் வரவேற்கிறோம்.
தமிழகத்தில் எப்போது சட்டசபை தேர்தல் வந்தாலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தருமபுரி சட்டசபை தொகுதியில் டி.கே.ராஜேந்திரன், பாப்பிரெட்டிப்பட்டியில் பி.பழனியப்பன், அரூர் (தனி)தொகுதியில் ஆர்.ஆர்.முருகன் ஆகியோர் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படும்.
மேட்டூர் அணையை தூர்வாரும் பணிகளை முன்கூட்டியே தொடங்கியிருக்க வேண்டும். தற்போது அணைக்கு நீர்வரத்து இருப்பதால் தூர்வாரும் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால் மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகள் குறையும், இதேபோல் தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளையும் அரசு தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழை காலங்களில் மழைநீரை சேமிக்க அரசு விரைவான நடவடிக்கை எடுத்து விவசாயப் பணிகளை மேம்படுத்த வேண்டும். தமிழகத்தில் வருமான வரி சோதனை தொடர்ந்து நடைபெறும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Dhinakaran #Assemblyelection
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் சமீபகாலமாக தொடர்ந்து நடைபெறும் வருமான வரித்துறை சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மனு அளித்தார். அவருடன், துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நாங்கள் அளித்த கோரிக்கை மனுவை மத்திய உள்துறைக்கு அனுப்புவதாக ஆளுநர் உறுதி அளித்தார். ஆளுநர் நடவடிக்கை எடுக்கத் தவறினால், நீதிமன்றத்தை நாடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #MKStalin #Governor #ITRaid
கோவை:
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்சில் உள்ள நடை பயிற்சி சாலையில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் நடை பயிற்சி சாலை நவீன படுத்தப்பட உள்ளது. இங்கு பொதுமக்களின் வசதிக்காக திறந்த வெளி கலையரங்கம், கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதி, குழந்தைகளுக்கான விளையாட்டு திடல்கள், உடற்பயிற்சி கூடங்கள் நவீன முறையில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மக்களிடம் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் வசதிகள் செய்து கொடுக்கப்படும். நடை பயிற்சி சாலையில் மழைநீர் சேகரிப்பு திட்டமும் செயல்படுத்தப்படும். திட்டத்தை வேகமாக செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் நிருபர்கள் அ.தி.மு.க. அரசு வருமான வரி சோதனைக்கு பயந்து பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இது தமிழகத்துக்கு செய்த துரோகம் என ஸ்டாலின் கூறி உள்ளாரே என கேட்டதற்கு வருமான வரித்துறை சோதனை வழக்கமான நிகழ்வு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. அரசு முழுமையாக 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு முன்பு கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக செயல்பட்ட போது அ.தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தை முடக்கி உரிமையை மீட்டு எடுத்தனர்.
எம்.பி.க்கள் இல்லாத தி.மு.க.வின் ஸ்டாலின் இது குறித்து பேசுவதற்கான அவசியம் என்ன என புரியவில்லை. மத்தியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கம் வகித்த தி.மு.க. தமிழர்களின் நலனுக்காகவோ, ஈழத்தமிழர்களின் நலனுக்காகவோ என்ன நடவடிக்கை எடுத்தது? என்றார்.
ஆய்வின் போது கலெக்டர் ஹரிஹரன், மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன், போலீஸ் கமிஷனர் பெரியய்யா, மாநகராட்சி துணை கமிஷனர் காந்திமதி,எம்.எல்.ஏ.,க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் அர்ச்சுணன், மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். #ministerspvelumani #admk
முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழக கவர்னரிடம், தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், வெற்றிவேல், தங்க தமிழச்செல்வன் உள்பட 18 பேர் கடந்த ஆண்டு மனு கொடுத்தனர்.
இதையடுத்து இந்த 18 பேரையும் தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால், தகுதி நீக்கம் செய்து கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 18ந்தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 18 பேரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாசரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கடந்த 14ந் தேதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
இதையடுத்து இந்த வழக்கை கடந்த 4 ந்தேதி விசாரணைக்கு எடுத்த நீதிபதி சத்தியநாராயணன், 23-ந்தேதி முதல் தினந்தோறும் 5 நாட்கள் விசாரிக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி இந்த வழக்கை நாளை முதல் நீதிபதி விசாரிக்க உள்ளார். முதல் நாள் 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வக்கீல் ராமன் வாதம் செய்ய உள்ளார். #18MLAs #MLAsDisqualification
சென்னை:
தி.மு.க. கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“பா.ஜ.க.வின் மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும்” என்ற நிபந்தனையுடன் புதுச்சேரி பட்ஜெட்டிற்கு அம்மா நில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது.
குறிப்பாக துணை நிலை ஆளுனர் “மூன்று பாரதிய ஜனதா கட்சி நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஏழரை லட்சம் புதுச்சேரி மக்களின் நலனை புறக்கணிக்கும் வகையில் நிதி மசோதாவை நிறைவேற்றவிடாமல் இத்தனை நாட்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்தார்” என்பதும், “இப்போது ஒப்புதல் அளிக்கும் போது கூட புதுச்சேரி சட்டமன்றத்திற்கே நிபந்தனை விதிப்பதும்” மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றத்தின் கண்ணியத்தை முற்றிலும் சீர்குலைக்கும் மிக மோசமான அரசியல் சட்ட விரோதச் செயலாகும்.
பாரதிய ஜனதா கட்சியில் உள்ள அதுவும் மூன்று பேரின் தனிமனித நலனுக்காக, புதுச்சேரிவாழ் ஏழரை லட்சம் மக்களின் பொது நலனை முடக்கி வைத்த துணை நிலை ஆளுநர் அந்தப் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதி இருக்கிறதா என்பதை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு மதிப்பீடு செய்ய வேண்டும்.
இதுபோன்று திட்டமிட்டு உருவாக்கிய “நிதி நெருக்கடி”க்குப் பிறகு, “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும்” என்று புதுச்சேரி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
புதுச்சேரி மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும் எதிரொலித்திருக்கிறது. “புதுச்சேரி மக்களின் நலனுக்காகவே பாடுபடுகிறேன்” என்று இதுவரை பேசி வந்த துணை நிலை ஆளுநரும், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசும், “புதுச்சேரி மக்களின் திட்டங்களுக்கும், மாநில வளர்ச்சிக்கும் தேவையான” நிதி மசோதாவை பா.ஜ.க.வின் குறுகிய அரசியல் லாபத்திற்காக போட்டி போட்டுக்கொண்டு வேண்டுமென்றே தாமதம் செய்திருப்பது மக்களாட்சியின் மாண்பைச் சிதைக்கும் செயலாக அமைந்திருக்கிறது.
“புதுச்சேரியின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் வளர்ச்சித் திட்டங்கள் அதிகாரக் குழப்பங்களுக்கு இடையில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவும் உடனடியாக மாநில அந்தஸ்து வழங்கிட வேண்டும் என்றும், அது வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சரின் அதிகாரங்களில் குறுக்கிட்டுப் பிரவேசிப்பதை நிறுத்திக் கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு கண்டிப்பான அறிவுறுத்தல் வழங்கிடவேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MKStalin #PondicherryGovernor
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கந்தன் சாவடியில் தனியாரால் கட்டப்பட்டு வந்த கட்டடம் கட்டும் பணியின் போது, எதிர்பாராத விதமாக 21.7.2018 அன்று சாரம் சரிந்து விழுந்ததில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர் என்ற செய்தி அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.
இந்தத் தகவல் கிடைக்கப் பெற்றவுடன், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்டெடுத்து, அவர்களுக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர், பேரிடர் மேலாண்மை ஆணையர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, மருத்துவத் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டேன்.
எனது உத்தரவின் பேரில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டெடுக்க ஏதுவாக, 7 தீயணைப்பு வாகனங்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
மீட்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில், 6 ஆம்புலன்ஸ் வாகனங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இடிபாடுகளில் சிக்கியிருந்த கட்டுமானத் தொழிலாளர்களை மீட்டெடுக்கும் பணியிலும்; காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கும் பணியிலும், மாவட்ட நிர்வாகம், தேசிய பேரிடர் மீட்பு குழு, மாநில பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சென்னை மாநகர காவல் துறை, மருத்துவத் துறை, நெடுங்சாலைகள் துறை, பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறை ஆகியவற்றைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் தேவையான உபகரணங்களுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பப்லு உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் வேதனை அடைந்தேன்.
இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பப்லு குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இடிபாடுகளில் சிக்கி, காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும் மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த பப்லு குடும்பத்திற்கு ரூ.5லட்சம் தொழிலாளர் நல வாரியத்திலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இச் சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNCM #EdappadiPalaniswami
தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை கடந்த 6 மாதமாக மத்திய அரசிடம் வலியுறுத்தினோம். அதில் எந்தெந்த பொருட்களுக்கு வரிகள் குறைக்க வேண்டும் என்று ஆலோசனைகள் நடத்தப்பட்டு சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. வரி வசூலிப்பதில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. இதனால் தமிழக மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அமித் ஷா ஆலோசனையின் பேரில் மதுரையில் இன்று பா.ஜ.க. மகளிர் மாநாடு நடத்தப்படுகிறது. இதில் சென்னை முதல் குமரி வரையிலான நிர்வாகிகள், மகளிர் அணியினர் திரளாக கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டால் பா.ஜ.க.வின் பலம் உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
டி.டி.வி. தினகரன் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரமாட்டோம் என்று கூறியிருக்கிறாரே? என்று கேட்டதற்கு, தமிழகத்தில் தேர்தல் வரும் நேரத்தில் கூட்டணி பற்றி தெரிவிக்கப்படும். பா.ஜ.க. ஊழலற்ற ஆட்சியை தருவது என்ற கொள்கையுடைய கட்சியாகும். எங்கள் கூட்டணிக்கு யாரையும் இதுவரை அழைக்கவில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்தார். #BJP #TamilisaiSoundararajan
சென்னை:
நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளாட்சி பணிகளுக்காக மத்திய அரசு குறிப்பிட்ட தொகையை உதவியாக வழங்கி வருகிறது.
அடிப்படை நிதி உதவி, செயல்பாட்டு நிதி உதவி என்று 2 பிரிவாக இந்த நிதி வழங்கப்படும். அடிப்படை நிதி ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவுக்கு ஒதுக்கீடாக தரப்படும். செயல்பாட்டு நிதி என்பது முந்தைய ஆண்டில் செயல்பட்ட விதத்தை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் வழங்கப்படும்.
ஆனால், உள்ளாட்சி தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருந்தால் தான் இந்த நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பது 14-வது நிதி கமிஷனின் விதிகள் ஆகும்.
ஆனால், தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளாக பஞ்சாயத்து தேர்தல் நடத்தவில்லை. எனவே, தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய பஞ்சாயத்து நிதியை மத்திய அரசு தற்போது நிறுத்தி வைத்துள்ளது.
கடந்த ஆண்டு 2-வது தவணையாக அடிப்படை நிதியாக ரூ.1390 கோடியும் செயல்பாட்டு நிதியாக ரூ. 560 கோடியும் தர வேண்டும். ஆனால், உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் இதுவரை அந்த பணத்தை தரவில்லை.
அதேபோல் இந்த ஆண்டுக்கான முதல் தவணை ரூ.1608 கோடி தர வேண்டும். அதில், ரூ. 758 கோடி மட்டும் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக அ.தி.மு.க. எம்.பி. செந்தில்நாதன் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதையடுத்து பதில் அளித்த மத்திய மந்திரி நரேந்திரசிங் தோமர் ரூ. 758 கோடி மட்டும் ஒதுக்கீடு செய்திருப்பதாக கூறினார்.
இதன்படி பார்த்தால் கடந்த ஆண்டு 2-வது தவணை தொகையில் ரூ. 1950 கோடியும், இந்த ஆண்டு முதல் தவணையில் ரூ.850 கோடியும் வரவேண்டி உள்ளது. கிட்டத்தட்ட ரூ. 3 ஆயிரம் கோடி அளவுக்கு பணம் வரவேண்டியது நிறுத்தப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் 14-வது நிதி கமிஷன் விதிகள்படி இந்த பணத்தை அனுப்ப முடியாத நிலை உருவாகி இருப்பதாக மத்திய மந்திரி நரேந்திரசிங் தோமர் கூறினார்.
உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் இந்த நிதியை பெறுவதற்கான வேறு வழியே இல்லை என்றும் மாநில அதிகாரிகளும் தெரிவித்தனர்.
சமீபத்தில் மத்திய பஞ்சாயத்துராஜ் மந்திரி புருஷோத்தம் ரூபலாவை சந்தித்த தமிழக அமைச்சர் வேலுமணியும், தமிழகத்துக்கு பஞ்சாயத்து நிதி ஒதுக்காதது குறித்து புகார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கு நிதி ஒதுக்காவிட்டால் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கட்சிகளுக்கு பாராளுமன்ற தேர்தலில் கெட்ட பெயர் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தை தங்களுக்கு சாதகமாக திசை திருப்ப வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது, பேசிய அ.தி.மு.க. பாராளுமன்ற தலைவர் வேணுகோபாலும் இதை சுட்டிக்காட்டி பேசி உடனடியாக நிதியை தர வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார்.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் நிரூபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற பொதுத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் ஒன்றாக வரும் என்று உறுதியாக நம்புகிறோம். சட்டமன்றம் வாரியாகவும் பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறோம். உறுப்பினர் சேர்க்கை தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதிகமான தொகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்கள் சேர்ந்திருக்கிறார்கள்.
ஆகஸ்ட்15-ந்தேதிக்குள் முழுமையாக உறுப்பினர் சேர்க்கை நிறைவேறிவிடும். 2 கோடிக்கு மேலாக உறுப்பினர்கள் சேர்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இப்பொழுது பாராளுமன்றத் தேர்தல் நிச்சயம் வரும். அதற்காக 6 மண்டல பொறுப்பாளர்கள், பாண்டிச்சேரி உள்பட 40 பாராளுமன்ற தொகுதிக்கும் பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறோம்.
எடப்பாடி தொகுதி மட்டுமல்ல; 234 தொகுதிகளிலும் சிறப்பு கவனம் செலுத்துவோம். அதிலும் துரோகிகள் பட்டியலில் முக்கியமான 10 பேருக்கு மேல் இருக்கிறார்கள்.
ஜனநாயக முறைப்படி அவர்களை படுதோல்வி அடைய செய்ய வேண்டும் என்பதற்காக கடுமையான முயற்சியில் இருக்கிறோம். 10 தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். எடப்பாடி தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்களோடு யாரும் கிடையாது. நண்பர்களாக வந்து பார்த்து செல்கின்றனர். யார் மாற்றி ஓட்டு போட்டார்கள் என்பது எனக்கு தெரியாது.
கடந்த வருடம் 2015 பிப்ரவரி 15-ந்தேதி அன்று பொதுச்செயலாளர் சசிகலா சிறைச்சாலைக்கு சென்றார். அதன் பிறகு அப்பொழுது 4 அமைச்சர்கள் சசிகலாவை பார்க்க என்னுடன் பெங்களூர் வந்தார்கள்.
அமைச்சர் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, காமராஜ் ஆகியோர் வந்தார்கள். அப்பொழுது பிப்ரவரி 24-ந்தேதி பிரதமர் கோயம்புத்தூர் வந்தார். ஈசா பவுண்டேசன் நிகழ்ச்சிக்காக வந்தார். அதற்கு முன்பாக நான் வரவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
எதனால் வரவில்லை என்று கேட்டேன். ராமலிங்கம் என்பவர் கைதாகியிருக்கிறார். எனது மகன் மிதுன் சகலை. அவர்கள் சேகர்ரெட்டி விஷயத்தில் கைதாகியிருக்கிறார்கள். எந்நேரமும் எனக்கு ஆபத்து இருக்கலாம். அதனால் வரவில்லை என்றார் பழனிசாமி.
இதுபோன்ற ஆபத்தில் இருப்பவர் எதற்கு முதல்- அமைச்சர் பதவிக்கு ஒத்துக் கொண்டீர்கள்? வேண்டாம் என்றால் பிரச்சினையே இல்லாத ஒருவரை நியமித் திருக்கலாமே என்றேன்.
நான் முதல்-அமைச்சராக நினைத்திருந்தால் செப்டம்பர் 21-ந்தேதி 2001-ம் ஆண்டு அம்மா உச்சநீதிமன்றத் தீர்ப்பினால் பதவியில் அமர முடியாமல் போனபோது அம்மாவிடமும், சசிகலாவிடமும் கேட்டு நான் முதல்- அமைச்சராகி இருக்கலாம். 2017, பிப்ரவரி 14 அன்று நான் நினைத்திருந்தால் சசிகலாவிடம் சொல்லி முதல்- அமைச்சராகி இருக்கலாம்.
இப்பொழுதும் நான் குறுக்கு வழியில் வர விரும்பவில்லை. இந்த துரோக ஆட்சி, மக்கள் விரோத ஆட்சி, அம்மாவின் ஆட்சி என்று பொய்களை சொல்லிக் கொண்டு, அம்மாவின் பாதையிலிருந்து விலகி மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு பச்சைக்கொடி காட்டுபவர்கள், தாங்களும், தங்கள் குடும்பமும் வாழ்ந்தால் போதும், சம்பந்தி குடும்பம் வாழ்ந்தால் போதும் என்று இருப்பவர்கள் ஆட்சியை விட்டு போக வேண்டும்.
இந்தியாவில் அடுத்த ஆட்சி யார் அமைப்பதாக இருந்தாலும், யாருக்கும் அறுதிப்பெரும்பான்மை இருக்காது. எந்த ஆட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டில் இருந்து மக்கள் ஆதரவோடு, 40 பாராளுமன்றத் தொகுதிகளில் நிச்சயம் 37 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம்.
அதில் எங்களோடு கூட்டணி எல்லாம் வரும். எங்களோடு நிறைய பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எங்களோடு ஒத்தக் கருத்துடையவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையை ஏற்று வருபவர்களோடு கூட்டணி வைப்போம்.
37 பாராளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம். அடுத்த பிரதமரை தமிழக மக்கள்தான் தீர்மானிப்பார்கள். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தான் முன்னின்று செய்யும்.
தி.மு.க.வோடும், பா.ஜ.க. வோடும் கூட்டணி கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #EdappadiPalaniswami