search icon
என் மலர்tooltip icon

    ஜம்மு காஷ்மீர்

    • பூஞ்ச், ரஜோரி உள்ளிட்ட மாவட்டங்களில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு
    • 25.78 லட்சம் பேர் வாக்களிக்கிறார்கள்.

    ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக கடந்த வாரம் 24 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று 2-வது கட்டமாக 26 தொகுதிகளுக்கு நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 6 மாவட்டங்களை சேர்ந்த 25.78 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்து வருகிறார்கள்.

    • காஷ்மீர் மக்களுக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
    • பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் வெறுப்பை பரப்புவதிலேயே நம்பிக்கை வைத்திருக்கின்றன.

    காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் கடந்த 18-ந்தேதி முடிந்த நிலையில், 2-வது கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது.

    2-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. அந்த தொகுதிகளில் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரங்களை மேற்கொண்டனர். அந்தவகையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி பூஞ்ச் மாவட்டத்தின் சுரான்கோட் தொகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்று ஆசி அமைத்தால், ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும். குடும்ப தலைவர்களுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை, சுய உதவிக் குழுக்கள் மூலம் ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

    குடும்ப ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் ரூ.25 லட்சம் வரை மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் அமல்படுத்தப்படும். ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஆம்புலன்ஸ் மற்றும் மொபைல் கிளினிக் தொடங்கப்படும். காஷ்மீர் பண்டிட்களுக்கான மன்மோகன் சிங் திட்டம் முழுவதுமாக செயல்படுத்தப்படும். ஜம்மு காஷ்மீரில் காலியாக உள்ள 1 லட்சம் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதோடு, ஒவ்வொரு நபருக்கும் 11 கிலோ இலவச ரேஷன் வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகளை அளித்தார்.

    இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு மாநிலத்தின், மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக தரமிறக்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, புதிய மாநிலங்களாக உருவாக்கப்பட்டு இருப்பதை நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் எந்த மாநிலமும் இப்படி யூனியன் பிரதேசமாக தரமிறக்கப்படவில்லை. ஆனால் முதல் முறையாக காஷ்மீருக்கு அது நேர்ந்திருக்கிறது.

    எனவே காஷ்மீர் மக்களுக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம். அவர்கள் அதைச் செய்யத் தவறினால், நாங்கள் அதைச் செய்வோம்.

    சட்டசபை தேர்தலுக்கு முன்பே மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி விரும்பியது. ஆனால் அது நடக்கவில்லை. எனவே தேர்தலுக்குப்பிறகு இதற்காக மோடி அரசுக்கு நாங்கள் அழுத்தம் கொடுப்போம்.

    பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் வெறுப்பை பரப்புவதிலேயே நம்பிக்கை வைத்திருக்கின்றன. அதனால்தான் காஷ்மீரிலும், நாட்டிலும் அதை செய்கிறார்கள்.

    எல்லா இடத்திலும் அவர்கள் வெறுப்பை பரப்புகிறார்கள். நாடு முழுவதும் பா.ஜனதாவின் வெறுப்பு சந்தையில் நாங்கள் அன்புக்கடையை திறந்து வருகிறோம். இது ஒரு சித்தாந்தப்போர்.

    கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலும், மணிப்பூரிலிருந்து மகாராஷ்டிரா வரையிலும் பயணம் செய்து, வெறுப்பை விட அன்பே மட்டுமே உதவும் என்ற செய்தியை பரப்பினேன்.

    செல்லும் இடங்களில் எல்லாம் அவர்கள் பிரிவினை அரசியலை செய்கிறார்கள். அதைப்போலவே ரஜோரி-பூஞ்ச் பகுதியில குஜ்ஜார் மற்றும் பகரிகளை பிரித்தார்கள். ஆனால் அவர்களின் இந்த செயல்திட்டத்தை வெற்றிபெற விடமாட்டோம். எல்லாரையும் இணைத்து செயல்படுவோம். தேர்தலில் காங்கிரஸ், தேசிய மாநாடு வேட்பாளர்களை ஆதரித்து எங்களை வெற்றிபெறச்செய்யுங்கள். உங்களை கைவிடமாட்டோம். காஷ்மீர் மக்களுக்கு எது தேவையோ, அதற்காக பாராளுமன்றத்தில் உங்களின் குரலாக ஒலிப்பேன். எப்போதும் உங்களுடன் இருப்பேன்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    • ஜம்மு காஷ்மீரில் கடந்த 18-ந்தேதி நடைபெற்ற முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
    • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் ராகுல் காந்தி உரையாற்றினார்.

    10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

    இதில் கடந்த 18-ந்தேதி நடைபெற்ற முதல் கட்ட சட்டசபை தேர்தலில் 24 தொகுதிகளில் 219 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் (25-ந்தேதி) 2-ம் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 26 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலில் மொத்தம் 239 பேர் களம் காண்கின்றனர்.

    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பேரணியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "பாஜக அரசு மக்களுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வருகிறது. எதிர்க்கட்சிகளான நாம் அவர்கள் முன் நிற்கிறோம். உடனடியாக U Turn எடுக்கிறார்கள். பிரதமர் மோடியை உளவியல் ரீதியாக உடைத்துள்ளோம்.

    இந்தியாவில், யூனியன் பிரதேசங்கள் மாநிலங்களாக தரம் உயர்த்தப்பட்டதை நாங்கள் பார்த்தோம், ஆனால் வரலாற்றில் முதல் முறையாக, ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக தரம் தாழ்த்தப்பட்டுள்ளது. உங்கள் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. எனவே, உங்கள் மாநிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எங்களின் முதன்மை கோரிக்கை.

    பாஜகவும் ஆர்எஸ்எஸ்-ம் நாடு முழுவதும் வெறுப்பு மற்றும் வன்முறை கலாச்சாரத்தை நிலைநிறுத்தி மக்களிடையே பிளவைத் தூண்டுகிறார்கள். அவர்களின் அரசியல் குரோதத்தில் வளர்கிறது.

    ஒரு பக்கம் (பாஜக) முரண்பாட்டை விதைப்பவர்கள் உள்ளனர், மறுபுறம் (இந்தியா கூட்டணி) அன்பை ஊக்குவிப்பவர்கள் உள்ளனர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மற்றும் மணிப்பூரிலிருந்து மகாராஷ்டிரா வரையிலான எங்கள் பயணம் வெறுப்பு யாருக்கும் பயனளிக்காது என்ற ஒரே ஒரு செய்தியை கொண்டு சென்றது" என்று தெரிவித்தார்.

    • தேர்தலில் மொத்தம் 239 பேர் களம் காண்கின்றனர்.
    • 4 முக்கிய தலைவர்கள் போட்டியிடுகின்றனர்.

    ஸ்ரீநகர்:

    10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.


    இதில் கடந்த 18-ந்தேதி நடைபெற்ற முதல் கட்ட சட்டசபை தேர்தலில் 24 தொகுதிகளில் 219 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் (25-ந்தேதி) 2-ம் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 26 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலில் மொத்தம் 239 பேர் களம் காண்கின்றனர்.

    2-ம் கட்ட தேர்தலில் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா, பாரதீய ஜனதா மாநில தலைவர் ரவீந்திர ரெய்னா மற்றும் அப்னி கட்சியின் அல்தாப் புகாரி ஆகிய 4 முக்கிய தலைவர்கள் போட்டியிடுகின்றனர்.

    2-வது கட்ட தேர்தல் களத்தில் அதிகபட்சமாக ஸ்ரீநகர் மாவட்டத்தில் 93 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பட்காம் மாவட்டத்தில் 46 பேர், ரஜோரியில் 34 பேர், பூஞ்ச் மாவட்டத்தில் 25 பேர், கந்தெர்பால் மாவட்டத்தில் 21 பேர், ரேசி மாவட்டத்தில் 20 பேர் போட்டியிடுகின்றனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்து மீட்கப்படும் வரை சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என முன்னாள் முதல்-முந்திரியும், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் அவர் இந்த தேர்தலில் கந்தெர்பால் மற்றும் புட்ஹால் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

    இதில் கந்தெர்பால் தொகுதியில் அதிகபட்சமாக 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். புட்ஹால் தொகுதியில் 4 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர்.


    அல்தாப் புஹாரி கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் அப்னி கட்சியை தொடங்கினார். அவர் ஸ்ரீநகரில் உள்ள சனாபோரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கராவுக்கும் இந்த தேர்தல் முக்கியமானது. அவர் ஸ்ரீநகரில் உள்ள சென்ட்ரல் ஷால்டெங் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    • நீங்கள் அடைத்து வைத்திருக்கும் சாலைகளை ஏன் திறந்துவிடக் கூடாது.
    • ஜம்மு காஷ்மீரில் வந்து பேசும்போது மட்டும் நாங்கள்[என்சிபி] காரணம் என்று கூறுகிறது.

    ஜம்மு காஷ்மீர் தேர்தல் 

    சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர் கடந்த 2019 ஆம் பாஜக அரசால் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இதற்கு பிறகு தற்போது ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 24 தொகுதிகளுக்குக் கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் அடுத்தகட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    பயங்கரவாதம் - அரசியல் 

    இந்த தேர்தலில் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் [என்சிபி] காங்கிரஸ் கூட்டணி வைத்து களமிறங்கியுள்ளது. சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பது, மாநில அந்தஸ்து பெறுவது உள்ளிட்ட வாக்குறுதிகளுடம் களமிறங்கியுள்ள என்சிபி - காங்கிரஸ் கூட்டணியை தனியாக களம் காணும் பாஜக, பயங்கரவாதம், பாகிஸ்தான் தொடர்பு உள்ளிட்ட விமரிசனங்களால் தாக்கி வருகிறது. காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு என்சிபி தான் காரணம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியிருந்த நிலையில் அதற்கு உமர் அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார்.

     

    ஒரு முடிவுக்கு வாங்க 

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு யார் மீது குற்றம் சுமத்துவது என்பது குறித்து அமித்ஷா முதலில் தெளிவான முடிவுக்கு வர வேண்டும். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் பேசும்போது காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாதத்துக்குப் பாகிஸ்தான் தான் காரணம் என்று பாஜக பேசி வருகிறது. அதுவே ஜம்மு காஷ்மீரில் வந்து பேசும்போது மட்டும் நாங்கள்[என்சிபி] காரணம் என்று கூறுகிறது.

    பயங்கரவாதத்துக்கு நாங்கள் தான் காரணம் என்று பாஜக உண்மையிலேயே நம்பினால் ஏன் பாகிஸ்தானுடன் பேச கூடாது. நீங்கள் அடைத்து வைத்திருக்கும் சாலைகளை ஏன் திறந்துவிடக் கூடாது. ஏனெனில் பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்குக் காரணம் இல்லை என்று நீங்கள் நம்புகிறீர்கள் அல்லவா..

    பாஜகவால் காஷ்மீர் மக்கள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இளைஞர்களை காரணமின்றி கைதி செய்து காஷ்மீருக்கு வெளியில் உள்ள சிறைகளில் பாஜக அடைத்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக [ராகுல்] காந்தி குடும்பம், [மெகபூபா] முப்தி குடும்பம், [உமர்] அப்துல்லா குடும்பம் ஆகிய மூவரின் கையில் காஷ்மீர் சிக்கியுள்ளது என்று அமித் ஷா பேசியது குறிப்பிடத்தக்கது.

    • 24 மணிநேரமும் இந்திய வீரர்கள் தீவிர கண்காணிப்பு
    • இரவு நேரத்தில் பறப்பது மிகவும் சவாலான பணி.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவும் தீவிரவாதிகளை ஒடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய எல்லையில் ராணுவம் உஷார்படுத்தப்பட்டு உள்ளது.

    24 மணிநேரமும் இந்திய வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காஷ்மீரின் லடாக் பனி மலைப் பகுதியில் இந்திய ராணுவ முகாம் உள்ளது. இங்கு செல்வதற்கு இலகு ரக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    ராணுவத்துக்காக இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் (எச்.ஏ.எல்.) துருவ் என்ற அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டரை தயாரித்தது. இந்த ஹெலிகாப்டர் மூலம் ராணுவத்தினர் இரவு நேரத்தில் லடாக் பனிமலைப் பகுதிக்கு செல்கின்றனர்.

    இதுகுறித்து சீத்தல் ரக ஹெலிகாப்டரின் பைலட் கூறியதாவது:-

    "ஹெலிகாப்டரில் பகல் நேரத்தில் பறப்பதை விட இரவு நேரத்தில் பறப்பது மிகவும் சவாலான பணி. சூரியன் மறைந்து இருண்டு விட்டால், தொலைவில் உள்ளவை எதுவும் தெரியாது. அதனால் இரவில் பறக்கும்போது, ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்டிருக்கும் உபகரணங்களைத் தான் நாம் அதிகம் சார்ந்திருக்க வேண்டும்.

    இரவு நேரத்தில் பயணம் செய்வதற்கு முன் பலவித மான விளக்கங்கள் அளிக் கப்படும். செல்ல வேண்டிய இடம், வானிலை குறித்து விளக்கம் அளிக்கப்படும். அதன்பின்பே இரவு நேர பயணத்தை தொடர்வோம்" என்றார்.

    தொழில்நுட்ப மேற்பார்வையாளர் மேஜர் ஆயுஷ் தேவிஜ்யால் கூறுகையில், "இரவு நேர பயணத்துக்கு முன்பாக, ஹெலிகாப்டரின் அனைத்து பாகங்களின் செயல்பாடுகளையும் சரிபார்க்க வேண்டும்.

    ஹெலிகாப்டரின் என்ஜினை இயக்கி சோதனை செய்தபின், என்ஜின் அதிகாரி பறந்து செல்வதற்கு ஒப்புதல் அளிப்பார். மீட்பு பணி, இரவு நேர கண்காணிப்புக்கு இந்த இலகு ரக ஹெலிகாப்டர்கள் தான் பயன் உள்ளதாக இருக்கும்" என்றார்.

    • நவாஸ் செஷரீப் ஐ கட்டித் தழுவி பிரியாணி சாப்பிட்டு மகிழ பாகிஸ்தான் சென்றது யார் என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
    • பாஜக இந்தியாவை காதலிப்பதாகக் கூறலாம். ஆனால் பாஜகவுக்கும் பாகிஸ்தானுக்கும் தான் திருமணம் ஆகியுள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடந்து வரும் சூழலில் காங்கிரஸ் -என்சிபி கூட்டணியைப் பாகிஸ்தானோடு தொடர்புப்படுத்தி பாஜக விமர்சித்து வருகிறது. சட்டப்பிரிவு 370 விவகாரத்தில் காங்கிரஸ்-என்சிபி மற்றும் பாகிஸ்தான் ஒரே பக்கத்தில்தான் உள்ளது என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கூறிய கருத்தை வைத்து காங்கிரசை தேச விரோத சக்தி என்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பிரச்சாரத்தின்போது விமர்சித்திருந்தனர்.

    இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பாஜவின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, முன்னாள் பிரதமர் நவாஸ் செஷரீப் ஐ கட்டித் தழுவி பிரியாணி சாப்பிட்டு மகிழ பாகிஸ்தான் சென்றது யார் என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

    காஷ்மீரில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய கார்கே, காங்கிரஸ் குறித்து பிரதமர் மோடியும் அமித்ஷாவும் சொல்கின்ற அனைத்துமே சுத்த பொய்கள். மக்களை திசை திருப்புவதற்காக இந்த பொய்களை அவர்கள் கூறுகின்றனர். நாங்கள் ஒருபோதும் பிரியாணி சாப்பிடவோ, அவரை[ நவாஸ் செஷரீப் -ஐ] கட்டித் தழுவவோ செல்லவில்லை. பாஜக இந்தியாவை காதலிப்பதாகக் கூறலாம். ஆனால் பாஜகவுக்கும் பாகிஸ்தானுக்கும் தான் திருமணம் ஆகியுள்ளது.

    காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் அதிகரித்து வரும் வேலையில் காஷ்மீர் அமைதியாக இருப்பதாகவும் வளர்ச்சி அடைத்துள்ளதாகவும் மோடி கூறி வருகிறார். மத்தியில் ஆட்சியில் உள்ள போதும் இன்னும் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கொடுக்காதது ஏன்?

    பாஜகவை தேர்தலில் ஓரம்கட்டவே காங்கிரஸ் - என்.சி.பி கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. எங்களின் முதன்மையான நோக்கம் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கச் செய்வதே என்று பேசியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மோடி பாகிஸ்தான் சென்று அப்போதைய பிரதமர் நவாஸ் செஷரீப்- ஐ சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

    • 36 வீரர்களுடன் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
    • விபத்தில், 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புத்காமில் உள்ள பள்ளத்தாக்கில் இன்று பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில், பேருந்தில் பயணித்த எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) ராணுவ வீரர்கள் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பணிக்காக வாடகைக்கு எடுக்கப்பட்ட பேருந்தில் 36 ராணுவ வீரர்கள் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, புத்காம் மாவட்டத்தில் உள்ள வட்டர்ஹாலின் ப்ரெல் அருகே உள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விழுந்துள்ளது.

    பிறகு, உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    • தேசியவாத காங்கிரஸ், பிடிபி ஆகிய மூன்று குடும்பங்களும் சேர்ந்து பல ஆண்டுகளாக இங்குள்ள மக்களுக்கு காயங்களை ஏற்படுத்தியது.
    • தேர்தல் ஆதாயத்துக்காக பிரதமர் மோடி என்சிபியை விமர்சிக்கிறார் என்று மெகபூபா விமர்சித்துள்ளார்

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. செப்டம்பர் 18 முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1-ந்தேதிகளில் அடுத்தகட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளது.

    இதற்கிடையே நேற்றைய தினம் பிரதமர் மோடி காஷ்மீரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பிடிபி ஆகிய மூன்று குடும்பங்களும் சேர்ந்து பல ஆண்டுகளாக இங்குள்ள மக்களுக்கு காயங்களை ஏற்படுத்தியது. பாஜகவின் சின்னமான தாமரைக்கு அடுத்துள்ள பட்டனை அழுத்துவது இந்தக் கட்சிகளின் அரசியல் சூரிய அஸ்தமனத்தை உறுதி செய்யும் என்றார்.

    மேலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வரும் விசயத்தில் நாங்களும் (பாகிஸ்தான்) தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகியவை ஒரே பக்கம்" என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பாகிஸ்தான் காங்கிரஸ் -என்சிபி கூட்டணியை ஒப்பிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    இந்நிலையில் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடும் மக்கள் ஜனநாயக கட்சியின்[பிடிபி] தலைவரும் முன்னாள் காஷ்மீர் முதல்வருமான மெகபூபா முப்தி தேர்தல் ஆதாயத்துக்காக பிரதமர் மோடி என்சிபியை விமர்சிக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக இன்று அவர் கூறியதாவது, ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதற்கு முக்கிய பங்காற்றிய ஷேக் குடும்பத்துக்கு [அபத்துல்லா குடும்பத்துக்கு] மோடி நன்றி தெரிவிக்க வேண்டும். குறிப்பாக ஷேக் அப்துல்லாவின் முயற்சியினால் தான் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது என்று தெரிவித்துள்ளார்.

    • நாங்கள் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இல்லை.
    • அவர்கள் அவர்களுடைய நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கட்டும்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு நீக்கியது. இதற்கு அம்மாநில கட்சியான பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சி கடுமையாக எதிர்த்தது. தற்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டப் பிறகு முதன்முறையாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சட்டப்பிரிவு 370ஐ கொண்டு வருவோம் என காங்கிரஸ் கட்சியும் சொல்லி வருகிறது. தேசிய மாநாடு கட்சியும் கூறி வருகிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிஃப் "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வரும் விசயத்தில் நாங்களும் (பாகிஸ்தான்) தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகியவை ஒரே பக்கம்" எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில்தான் தேசிய மாநாடு கட்சியின் துணைத் தலைவரான உமர் அப்துல்லா பாகிஸ்தானுக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு? என கேள்வி எழுப்பி எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறியதாவது:-

    எங்களோடு பாகிஸ்தானுக்கு என்ன தொடர்பு? நாங்கள் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இல்லை. அவர்களுடைய நாடு குறித்து அவர்கள் அக்கறை கொள்ளட்டும். நம்முடைய தேர்தல் அல்லது நம்முடைய தேர்தல் குறித்து கருத்து தெரிவிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் அவர்கள் தலையிட வேண்டும் என நான் நினைக்கவில்லை. அவர்கள் அவர்களுடைய நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கட்டும். நாம் நம்முடைய ஜனநாயகத்தில் பங்கேற்று வருகிறோம்.

    இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்தார்.

    இது தொடர்பாக பரூக் அப்துல்லா கூறுகையில் "பாகிஸ்தான் என்ன சொன்னது? என்பது குறித்து எனக்குத் தெரியாது. நான் இந்திய குடிமகன்" என்றார்.

    பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்று தேசிய மாநாடு- காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாகிஸ்தான் ஆகியவரை சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வருவதில் ஒரே பக்கமாக இருக்கிறதா? எனக் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு கவாஜா ஆசிஃப் "உண்மையிலேயே, எங்களுடைய கோரிக்கை கூட அதுதான்... தேசிய மாநாடு கட்சி- காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 370-ஐ சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வருவது சாத்தியம். தற்போது தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் மிக முக்கியத்துவம் உள்ளது. இந்த விசயத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் உத்வேகம் அடைந்துள்ளனர். தேசிய மாநாடு கட்சி ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக நான் நம்புகிறேன். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதை தேர்தல் பிரச்சனையாக ஆக்கிவிட்டார்கள்" எனக் கூறியிருந்தார்.

    • வருகிற 25-ந்தேதி 2-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
    • 26 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1-ந்தேதிகளில் ஓட்டுப்பதிவு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.

    அடுத்தக்கட்டமாக வருகிற 25-ந்தேதி 2-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக அந்த 26 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.

    பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இதனால், பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஏற்கனவே ஜம்மு பிராந்தியத்தில் பிரசாரம் செய்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) பிரதமர் மோடி 2-வது முறையாக காஷ்மீர் சென்றுள்ளார்.

    பிரதமர் மோடி முதலில் ஸ்ரீநகரில் நடக்கும் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பின்னர், கத்ரா நகரில் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தத் தேர்தல் ஜம்மு-காஷ்மீரின் எதிர்காலத்தைத் தேர்ந்தெடுப்பதற்கானது. இந்தத் தேர்தல் 'புதிய ஜம்மு-காஷ்மீரை' புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வதற்காகும்.

    காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பிடிபி ஆகிய மூன்று குடும்பங்களும் சேர்ந்து பல ஆண்டுகளாக இங்குள்ள மக்களுக்கு காயங்களை ஏற்படுத்தியது. பாஜகவின் சின்னமான தாமரைக்கு அடுத்துள்ள பட்டனை அழுத்துவதன் மூலம் இந்தக் கட்சிகளின் அரசியல் சூரிய அஸ்தமனத்தை உறுதி செய்யும்.

    அது பாஜகதான். இது உங்கள் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து, பல தசாப்தங்களாக பிராந்தியத்துடனான பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காஷ்மீர் தேர்தலில் வழக்கம்போல அதிகளவு சுயேட்சைகள் களத்தில் உள்ளன.
    • ஸ்ரீநகர் கூட்டம் முடிந்த பிறகு பிரதமர் மோடி கத்ரா நகருக்கு செல்கிறார்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1-ந்தேதிகளில் ஓட்டுப்பதிவு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 24 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இந்த 24 தொகுதிகளில் மொத்தம் 219 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

    நேற்று காலை முதலில் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு பிறகு விறுவிறுப்பு அடைந்தது. மாலை 6 மணி வரை வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்தனர். மொத்தம் 61.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் அங்கு வாக்குப்பதிவு அதிகரித்து இருப்பது அரசியல் கட்சிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. காஷ்மீரில் 25 ஆண்டுகளுக்கு பிறகு 60 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகி உள்ளது.

    அடுத்தக்கட்டமாக வருகிற 25-ந்தேதி 2-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அன்று 26 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெறும். இதற்காக அந்த 26 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.

    காஷ்மீர் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி உமர்அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியுடன் போட்டியிடுகிறது. மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.

    காஷ்மீர் தேர்தலில் வழக்கம்போல அதிகளவு சுயேட்சைகள் களத்தில் உள்ளன. இதனால் வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்ற பாரதிய ஜனதா தீவிரமாகி உள்ளது.

    பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஏற்கனவே ஜம்மு பிராந்தியத்தில் பிரசாரம் செய்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) பிரதமர் மோடி 2-வது முறையாக காஷ்மீர் சென்றுள்ளார்.

    பிரதமர் மோடி முதலில் ஸ்ரீநகரில் நடக்கும் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளார். அந்த கூட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் ஸ்ரீநகரில் வரலாறு காணாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பிரதமர் மோடி ஸ்ரீநகரில் இன்று முதன் முறையாக பிரசாரம் செய்வது குறிப்பிடத்தக்கது. பாரதிய ஜனதா அரசின் சாதனைகளை அவர் வாக்காளர்களிடம் விளக்கி கூறி ஓட்டு வேட்டையாடி வருகிறார்.

    ஸ்ரீநகர் கூட்டம் முடிந்த பிறகு பிரதமர் மோடி கத்ரா நகருக்கு செல்கிறார். அங்கு பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    அதன்பிறகு அங்குள்ள வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்கிறார். அதன்பிறகு டெல்லி திரும்ப திட்டமிட்டுள்ளார்.

    ×