என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழ்நாட்டில் சமய, சமுதாய நல்லிணக்கத்தை நிலை நிறுத்தவும், வெறுப்புக் குற்றங்களைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
- மாநாட்டில் பங்கேற்பது எப்படி உனது கடமையோ, அதேபோல், மாநாட்டுக்கு வரும்படி அழைக்க வேண்டியது எனது கடமை.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாடு என்பது கூடிக் கலைவதற்கான மாநாடு அல்ல. வன்னியர் சங்கத்தின் சார்பில் தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்ற போதிலும், வன்னியர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் சமூகநீதியை வென்றெடுப்பது தான் நமது நோக்கம் ஆகும். அந்த வழக்கத்தில் இருந்து விலகாமல் இந்த மாநாடும் அதே நோக்கத்திற்காகத் தான் நடத்தப்படுகிறது. மாநாட்டில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் சாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்; 69சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும், வன்னியர்களுக்கு மக்கள் தொகை, சமூக பின்தங்கிய நிலை அடிப்படையில் இட ஒதுக்கீடு, அனைத்து சமூகங்களுக்கும் மக்கள் தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு; அதற்கு வசதியாக இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும். தேசிய, மாநில அளவில் இடஒதுக்கீட்டு உச்சவரம்பை நீக்க வேண்டும்; கிரீமிலேயர் முறை கூடாது! அனைத்து சமூகங்களின் வளர்ச்சிக்காக நிதி அதிகாரத்துடன் தனித்தனி கார்ப்பரேஷன்கள் அமைக்க வேண்டும். தனியார் துறை, உயர்நீதித்துறையில் மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்!
உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வேண்டும். அனைத்து சமூகங்களின் வீழ்ச்சிக்கும், குற்றங்கள் பெருகவும் காரணமாக இருக்கும் மது, கஞ்சாவை ஒழித்து போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!
கல்வி, தனிநபர் வருமானம், மனிதவளக் குறியீடு போன்றவற்றில் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வட மாவட்டங்களின் முன்னேற்றத்திற்காக சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்!
தமிழ்நாட்டில் சமய, சமுதாய நல்லிணக்கத்தை நிலை நிறுத்தவும், வெறுப்புக் குற்றங்களைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
நான் விடுத்த அழைப்புகளை ஏற்று மாமல்லபுரத்தை நோக்கி அணிவகுக்க நீங்கள் அனைவரும் தயாராகி விட்டீர்கள் என்பதை நான் அறிவேன். ஆனாலும், மாநாட்டில் பங்கேற்பது எப்படி உனது கடமையோ, அதேபோல், மாநாட்டுக்கு வரும்படி அழைக்க வேண்டியது எனது கடமை. ஆகவே, மீண்டும் ஒருமுறை அழைக்கிறேன். 'பாட்டாளிப் படைகளே' அணிவகுக்கத் தயாராகுங்கள் மாமல்லபுரம் நோக்கி.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- கொங்கு பகுதியில் இனி தோட்டத்து பகுதியில் யாரும் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
- இதுவரை தமிழக அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.
கோவை:
கோவை பீளமேட்டில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தோட்டத்து வீடுகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு வெளியூர் செல்லும் நிலைமை தான் உள்ளது.
ஈரோடு சிவகிரியில் தோட்டத்து வீட்டில் வசித்த முதிய தம்பதியர் கொல்லப்பட்டு, நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பதட்டத்தை அளிக்கிறது. மேலும் இந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவர்களது வீட்டில் வளர்க்கப்பட்ட வளர்ப்பு நாயை விஷம் வைத்து கொன்றுள்ளனர்.
கடந்த ஆண்டு பல்லடத்திலும் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியது. அங்கும் கொலை சம்பவம் நடப்பதற்கு ஒருவாரம் முன்பு இங்கு நடந்ததை போன்று வளர்ப்பு நாயை விஷம் வைத்து கொன்றுள்ள அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
பல்லடம் மற்றும் சிவகிரி ஆகிய இடங்களில் நடந்த இந்த 2 சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டில் கொள்ளையர்கள் இருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது. எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது நாம் தமிழ்நாட்டில் தான் உள்ளோமா அல்லது வேறு எங்கேயாவது உள்ளோமா என்று தெரியவில்லை.
கொங்கு பகுதியில் இனி தோட்டத்து பகுதியில் யாரும் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விடுமுறைக்கு வந்த அனைவரையும் அவர்கள் ஊருக்கு அனுப்புகிறார்கள். இந்த சம்பவங்களில் தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
வங்காளதேசத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, பாகிஸ்தானை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அவர்களை கைது செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. ஆனால் இதுவரை தமிழக அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.
தி.மு.க அரசு எப்போதுமே, யார் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கிறார்களோ, அப்படி புகார் அளிப்பவர்களையே பிடித்து உள்ளே போடுவது தான் வாடிக்கை. அதுபோலத்தான் மதுரை ஆதீனம் விவகாரத்திலும் நடந்துள்ளது.
அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி அமைத்துள்ளதால் சிறுபான்மை ஓட்டுகள் பாதிக்கப்படாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து அவரிடம் நிருபர்கள், அ.தி.மு.க.-பாஜ.க கூட்டணியை வரவேற்று பேசிய அ.தி.மு.க நிர்வாகியை ஐக்கிய ஜமாத் அமைப்பு நீக்கியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு நயினார் நாகேந்திரன் பதிலளித்து பேசும்போது, ஜமாத் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து தான் பேச இயலாது. அனைவரும் பா.ஜ.க.விற்கு வாக்களிப்பார்கள் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து மாநகர் மாவட்ட அலுவலகத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்ட பா.ஜ.க தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், ஏ.பி.முருகானந்தம், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், கேசவவிநாயகம் உள்பட பலர் பங்கேற்றனர்.
- கடந்த 4-ந்தேதி அந்த இடத்தில் காங்கிரஸ் மாநாட்டை மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நடத்தினார்.
- அந்த இடத்தை காங்கிரசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள்.
சென்னை:
சென்னை தேனாம்பேட்டையில் காங்கிரசுக்கு சொந்தமான 200 கிரவுண்டு இடம் உள்ளது. அதில் 20 கிரவுண்டு இடத்தில் காமராஜர் அரங்கம் அமைந்து உள்ளது.
ஒரு பக்கத்தில் மறைந்த ஜி.கே. மூப்பனார் நினைவிடம் உள்ளது. அந்த இடத்தில் தான் மூப்பனார் உடல் தகனம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் அவரது நினைவுநாள் நிகழ்ச்சிக்கு ஏராளமான அரசியல் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் வந்து மரியாதை செலுத்துவது வழக்கம்.
சுமார் 160 கிரவுண்டு நிலம் காலியாக கிடந்தது. அந்த இடம் தனியாருக்கு கட்டிடம் கட்ட ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், அது காலாவதியாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி அந்த இடத்தில் காங்கிரஸ் மாநாட்டை மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நடத்தினார். மேலும் தனியார் பயன்படுத்திய பாதையை செங்கல் கட்டி காங்கிரசார் அடைத்து விட்டார்கள். தனியாரை உள்ளே நுழையவும் அனுமதிக்கவில்லை. அந்த இடத்தை காங்கிரசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள்.
காங்கிரஸ் கூட்டத்துக்கு வந்திருந்த அகில இந்திய காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு குழு தலைவர் தமிழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது 18 கிரவுண்ட் இடத்தில் அமைந்து உள்ள மூப்பனார் நினைவிடத்தை அகற்றி விட்டு காங்கிரஸ் சொத்துடன் இணைக்க வேண்டும் என்று சிலர் கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் மூப்பனார் நினைவிடமும் அகற்றப்படலாம் என்ற தகவல் பரவியது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெ ருந்தகையை தொடர்பு கொண்டு கேட்டபோது கூறியதாவது:-
அந்த மாதிரி எந்த திட்டமும் இல்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள் என்றார்.
- கழகப் பேச்சாளர்கள் அவரவருக்குரிய பாணியில் நல்ல முறையில் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும்.
- கழக நிர்வாகிகளையும் வாக்காளர்களையும் இணைக்கக்கூடிய வாட்ஸ்அப் குழுக்களில் ஒவ்வொருவரும் நிச்சயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.
சென்னை:
'தமிழ்நாடெங்கும் முழங்கட்டும் திராவிட மாடல் சாதனைகள்!' என்ற தலைப்பில் தி.மு.க. தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,
'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' எனப் பதவியேற்பு உறுதிமொழி ஏற்று, இந்த மே மாதம் 7-ஆம் நாளுடன் நான்காண்டுகள் நிறைவடைந்து, ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது உங்களில் ஒருவனான என் தலைமையிலான நமது திராவிட மாடல் அரசு. நம்பிக்கை வைத்து ஆட்சியை ஒப்படைத்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்குமான திட்டங்களை வழங்கிடும் நல்லாட்சியை வழங்கி வருகிறோம்.
2021-ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிச்சான்றிதழை நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தன் அண்ணன் அருகே நிரந்தர ஓய்வெடுக்கும் இடத்தில் காணிக்கையாக்கிவிட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "வாக்களித்த மக்களுக்கு மட்டுமின்றி, வாக்களிக்காத மக்களும் இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே! என்று நினைக்கக்கூடிய அளவிலான ஆட்சியை வழங்கிடுவோம்" என்று அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றும் வகையில் திராவிட மாடல் அரசு, 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற இலட்சியத்துடனான அனைவருக்குமான அரசாகத் திகழ்கிறது.
இந்தியாவின் பிற மாநிலங்களும் - கொள்கைரீதியாக நமக்கு என்றும் எதிரானவர்கள் ஆள்கின்ற மாநிலங்களும்கூட திராவிட மாடல் அரசின் திட்டங்களைப் பின்பற்றும் வகையில் முன்னோடியான அரசாக - முதன்மையான அரசாகத் தமிழ்நாட்டை இந்த நான்காண்டுகளில் உயர்த்தியிருக்கிறோம். நலன் தரும் திட்டங்கள் -நாடு போற்றும் சாதனைகளுடன் ஐந்தாவது ஆண்டில் திராவிட மாடல் அரசு பெருமிதத்துடன் அடியெடுத்து வைக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளும் இந்த நல்லாட்சி தொடரும் என்பதைத் தமிழ்நாட்டு மக்களின் மனநிலை காட்டுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் மக்களுக்காகப் பணியாற்றுகிற இயக்கம். தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன்பே பேரறிஞர் அண்ணா தலைமையில் நெசவாளர்களின் துயர் துடைத்த இயக்கம் இது. முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையில் புயல் - வெள்ள நிவாரண உதவிகளைச் செய்தது நம் கழகம். உங்களில் ஒருவனான என் தலைமையில் கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோது, கொரோனா பேரிடர் காலத்தில், 'ஒன்றிணைவோம் வா' என உடன்பிறப்புகள் ஒருங்கிணைந்து மக்களுக்கு உதவிகள் செய்தோம். 6 முறை ஆட்சி செய்யக் கிடைத்த வாய்ப்புகளில் தமிழ்நாட்டின் சமூக - பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்து, ஒவ்வொரு குடும்பமும் பயன் பெறும் வகையிலான திட்டங்களை நிறைவேற்றி, நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்தது கழக அரசு. ஏழாவது முறையாக 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியமைக்கப் போவதும் திராவிட முன்னேற்றக் கழகம்தான்.
மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை உறுதி செய்திடக் களத்தில் கடுமையாக உழைத்திட வேண்டும். அரசியல் எதிரிகளால் நமது ஆட்சியைக் குறை சொல்ல முடியாத காரணத்தால் அவதூறு சேற்றை வீசுகிறார்கள். ஈரைப் பேனாக்கி, பேனைப் பேயாகக் காட்ட நினைக்கிறார்கள். அதிகார அமைப்புகளை ஏவி அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இந்தப் பூச்சாண்டிகளுக்கு மிரள்வதற்கு அடிமைக் கட்சியல்ல, நம் தி.மு.க. இது சுயமரியாதை இயக்கம். தன்மானமும் தைரியமும் கொண்ட இயக்கம். தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கும் இயக்கம். இந்தியாவுக்கு வழிகாட்டும் இயக்கம்.
மே 3-ஆம் நாள் நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, ''நாடு போற்றும் நான்காண்டு - தொடரட்டும் பல்லாண்டு' என்ற தலைப்பில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை 868 ஒன்றியங்கள், 224 பகுதிகள், 152 நகரங்கள் என 1244 இடங்களில் 186 இளம் பேச்சாளர்கள் உள்ளிட்ட 443 கழகப் பேச்சாளர்கள் பங்கேற்கும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்தப் பேச்சாளர்களுக்குக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா எம்.பி., அவர்கள் இன்று மாலை ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்குகிறார். சொல்லித் தீராத அளவுக்குச் சாதனைகள் நிறைந்திருப்பதால்தான் இத்தனை இடங்களில் பெருமிதத்துடன் நம்மால் பொதுக்கூட்டங்களை நடத்திட முடிகிறது.
2021 சட்டமன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த 505 வாக்குறுதிகளில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாத சாதனைத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு, மக்களுக்குப் பயனளித்து வருகின்றன. இன்னும் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளும் இருப்பதை நான் மறக்கவுமில்லை, மறுக்கவுமில்லை. அவற்றையும் நிறைவேற்றிட வேண்டும் என்பதில் உறுதியாகவே இருக்கிறேன். அதற்கு உடன்பிறப்புகளான நீங்கள் அனைவரும், உங்களில் ஒருவனான எனக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.
இனி ஓராண்டு காலம் நமக்குத் தேர்தல் பணிகளே முதன்மையானதாக இருக்கும். அதற்கான செயல்திட்டங்கள் என் தலைமையில் தலைமைக் கழகத்தால் வகுக்கப்பட்டு, மாவட்டக் கழகச் செயலாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நம் செயல்பாடுகள் அமைந்திட வேண்டும். கழகத்தின் பவள விழாப் பொதுக்குழு ஜூன் 1-ஆம் நாள் கூடல் மாநகராம் மதுரையில் நடைபெறவிருப்பதைக் கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் அறிவித்திருக்கிறார். அதில், தேர்தல் பணிகள் குறித்து இன்னும் விரிவான செயல்திட்டங்கள் முன்வைக்கப்படும்.
அதற்கு முன்னதாக, தமிழ்நாட்டில் 1,244 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் சொற்பொழிவாளர்கள் நான்காண்டு கால திராவிட மாடல் அரசின் ஆட்சியின் சாதனைகளையும்; அதனால் மக்கள் பெற்றுள்ள பயன்களையும் ஒவ்வொரு இடத்திலும் எடுத்துரைக்க வேண்டும். இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணத் திட்டம், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் போன்ற முத்திரைத் திட்டங்களால் மக்கள் பெற்றுள்ள நன்மைகளைப் புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைப்பது அவசியமாகும். நீண்ட நேரம் உரையாற்ற வேண்டிய கட்டாயமில்லை. எளிமையாக – இனிமையாக – சுருக்கமாக – கேட்பவரைக் கவர்கின்ற வகையில் எடுத்துரைத்தாலே திராவிட மாடல் அரசின் திட்டத்தால் பயன் பெற்றுள்ள தமிழ்நாட்டு மக்கள் அதனைப் புரிந்துகொள்வார்கள்.
கழகப் பேச்சாளர்கள் அவரவருக்குரிய பாணியில் நல்ல முறையில் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும். நம்மை எதிர்ப்பவர்கள் தங்கள் மேடைகளில் பொய்யாக – மோசமாக – ஆபாசமாக - அருவருப்பாகப் பேசினாலும், நமது பேச்சாளர்கள் கண்ணியக்குறைவான சொற்களைப் பயன்படுத்திடக் கூடாது என்பதை அறிவுறுத்தலாகவும் கட்டளையாகவும் தெரிவிக்கிறேன். ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளில் சொன்னதைச் செய்தது மட்டுமின்றி, சொல்லாததையும் செய்து காட்டியிருக்கிறோம். அவற்றை எடுத்துச் சொன்னாலே போதும். குறைகுடங்கள் கூத்தாடுவது போல, நிறைகுடமான நாம் இருந்திட வேண்டியதில்லை.
பல வேலைச் சூழல்களுக்கிடையதான் பொதுக்கூட்டங்களில் பேசப்படுவதைப் பொதுமக்கள் உற்று கவனிக்கிறார்கள். அவர்களின் மனதில் பதியக்கூடிய வகையில், நிமிட நேரத்தில் செய்தியின் சாரத்தைச் சொல்லக்கூடிய ஆற்றல் மிக்கவர்களாக நம் சொற்பொழிவாளர்கள் இருந்திடுவது அவசியம். பொதுக்கூட்டங்களுக்குக் கழகத்தின் பாக முகவர்களும், பூத் கமிட்டி உறுப்பினர்களும் கட்டாயம் வருகின்ற வரையில் மாவட்ட – ஒன்றிய -நகர - பகுதிக் கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அவர்கள்தான் சொற்பொழிவாளர்களின் கருத்துகளை ஒவ்வொரு வாக்காளரிடமும் கொண்டு சேர்க்கக் கூடியவர்கள்.
பொதுக்கூட்டங்கள் என்பவை தேர்தல் களத்திற்கு உத்வேகம் தரக்கூடியவை. அத்துடன், இன்றைய தலைமுறையினர் அதிகம் விரும்புகின்ற - அவர்களின் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாகவே ஆகிவிட்ட சமூக வலைத்தளங்களிலும் பாக முகவர்களும், பூத் கமிட்டி உறுப்பினர்களும், கழகத்தின் மற்ற நிர்வாகிகளும் முனைப்புடன் செயல்பட வேண்டும். கழக நிர்வாகிகளையும் வாக்காளர்களையும் இணைக்கக்கூடிய வாட்ஸ்அப் குழுக்களில் ஒவ்வொருவரும் நிச்சயம் இடம்பெற்றிருக்க வேண்டும். தலைமைக் கழகம் சார்பிலும், கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி சார்பிலும் மற்ற அணிகளை ஒருங்கிணைத்தும் அனுப்பப்படும் செய்திகளை அவரவர் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர வேண்டும். கழக அரசின் சாதனைகளும் அதன் பயன்களும் ஒவ்வொரு வாக்காளரிடமும் போய்ச் சேர வேண்டும்.
ஒரு மணி நேரப் பேச்சைவிட, ஒரு நிமிட - அரை நிமிடக் காணொலிகள், ரீல்ஸ்கள்தான் இலட்சக்கணக்கானவர்களிடம் உடனடியாகப் போய்ச் சேர்கின்றன. முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டையொட்டி தலைமைக் கழகத்தால் வழங்கப்பட்ட பொறுப்பினை ஏற்று, கழக இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதிலிருந்து தேர்வு பெற்றுள்ள இளம்பேச்சாளர்கள் பலருடைய உரைகளை ஒரு நிமிடக் காணொலியாகப் பார்க்கிறேன். அவர்களின் ஆர்வத்தை, உத்வேகத்தை, கொள்கையுணர்வைக் கண்டு மகிழ்கிறேன். கழக நிர்வாகிகளும், பாக முகவர்களும், பூத் கமிட்டி உறுப்பினர்களும் இத்தகைய உரைகளைக் கேட்டு அவற்றைப் பகிர்வதுடன், அவரவர் பகுதிகளில் நிறைவேற்றப்பட்டுள்ள திராவிட மாடல் அரசின் திட்டங்களையும், அதனால் மக்கள் பெற்றுள்ள பயன்களையும் சமூக வலைத்தளங்கள் - வாட்ஸ்அப் குழுக்கள் வாயிலாக வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துத் தமிழ்நாட்டுக்கு துரோகமிழைப்பவர்களும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளும் தி.மு.க.வை வீழ்த்திவிட முடியாதா எனத் தொடர் தோல்வியின் ஆற்றாமையில் தவிக்கிறார்கள். அவர்களின் மனக்கணக்கு தப்புக்கணக்காகவே முடியும் என்பதைச் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் போடுகிற கணக்கு தீர்மானிக்கும். நாம் மக்களிடம் செல்வோம். அவர்களுக்காகக் கழக அரசு செய்ததைச் சொல்வோம். தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அவற்றை எடுத்துரைப்போம். கழக சொற்பொழிவாளர்களின் கருத்துகளை உள்வாங்கி, கழக அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீடாகச் சென்று முழங்கிடுவோம்!
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- கல்லூரி வளாகத்திற்குள் வைத்தே கார் டிரைவரை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வண்டலூர்:
வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே பிரபல தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு கீரப்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது27) என்பவர் கார் டிரைவராக வேலைபார்த்து வந்தார். நேற்று இரவு அவர் கல்லூரி வளாகத்தில் தங்கி இருந்தார்.
இன்று அதிகாலை கல்லூரி வளாகத்திற்குள் புகுந்த மர்மநபர்கள் திடீரென கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மணிகண்டனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர்.
இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் கிளாம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று உடனடியாக தெரியவில்லை.
கல்லூரி வளாகத்திற்குள் வைத்தே கார் டிரைவரை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- வருகிற 9-ந்தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடைபெற்றது.
இந்த தேர்வினை 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் எழுதினார்கள். 3 லட்சத்து 88 ஆயிரம் மாணவர்களும் 4 லட்சத்து 24 ஆயிரம் மாணவிகளும், தனித் தேர்வர்கள் 18 ஆயிரம் பேரும், சிறைவாசிகள் 145 பேரும் எழுதினார்கள்.
விடைத்தாள்கள் கடந்த ஏப்ரல் மாதம் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன. மாணவர்கள் நலன் பாதிக்கப்படாத வகையில் விடைத்தாள்களை கவனமாக திருத்தவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மதிப்பெண் விவரங்களை டேட்டா என்ட்ரியில் பதிவு செய்யும்போது பிழைகள் இல்லாமல் பதிவேற்றம் செய்யவும் ஊழியர்களுக்கு தேர்வுத்துறை கூறி இருந்தது.
அதன் அடிப்படையில் அனைத்து பணிகளும் நிறைவுற்று தேர்வு முடிவினை அறிவிப்பதற்கு அரசு தேர்வு துறை தயாராக இருந்தது. பிளஸ்-2 தேர்வு முடிவு மே 9-ந்தேதி வெளியிடப்படும் என்று கல்வித்துறை அட்டவணைப்படி தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு ஒருநாள் முன்னதாக 8-ந்தேதி தேர்வு முடிவுகளை அறிவிக்க அரசு முடிவு செய்தது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்து அனுமதி கேட்டார். நாளை மறுநாள் 8-ந்தேதி (வியாழக்கிழமை) தேர்வு முடிவுகளை வெளியிட முதலமைச்சர் அனுமதி வழங்கி உள்ளார்.
அதனைத் தொடர்ந்து பிளஸ்-2 தேர்வு முடிவு 8-ந்தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு தேர்வு துறை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
பிளஸ்-2 தேர்வு முடிவுகளை 8-ந்தேதி காலை 9 மணிக்கு கிண்டி அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.
தேர்வு முடிவுகளை https/results.digilocker.gov.in மற்றும் www.tnresults.nic.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.
மாணவ-மாணவிகள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள முடியும். இது தவிர மாணவர்களின் செல்போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் முடிவுகள் அனுப்பப்படும்.
- 500-க்கும் மேற்பட்ட குளங்களில் வண்டல் மண் தற்பொழுது எடுக்கப்பட்டு வருகிறது.
- லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. திருவட்டார் அருகே அருவிக்கரை மணக்குன்று சிற்றாறு பட்டணம் கால்வாய் பாயும் இடத்தில் உள்ள பெரும்குளத்தில் மண் எடுக்க அதே பகுதியை சேர்ந்த ராமையன் என்பவர் விண்ணப்பித்திருந்தார்.
ராமையனுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இலவச அனுமதி சீட்டு பெறுவதற்கு ராமையன் ஒப்பந்ததாரரான பிரைட்டை அனுப்பி வைத்தார்.
அப்போது பிரைட்டிடம் பொதுப்பணி துறை ஊழியர் ரசல்ராஜ் இலவச அனுமதி சீட்டு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரைட் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சால்வன்துரை, இன்ஸ்பெக்டர் சிவசங்கரி தலைமையிலான போலீசார் பிரைட்டிடம் ரசாயன பவுடர் தடவி பணத்தை கொடுத்து அனுப்பினார்கள். ரசல்ராஜிடம் பணம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை கையும் களவுமாக மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட ரசல்ராஜை லஞ்ச ஒழிப்பு போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
பின்னர் அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ரசல்ராஜ் கைது செய்யப்பட்டு ஜெயில் அடைக்கப்பட்டதையடுத்து அவர் மீது துறை வாரியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அவரை சஸ்பெண்டு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட குளங்களில் வண்டல் மண் தற்பொழுது எடுக்கப்பட்டு வருகிறது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- தொட்டபெட்டா மலைசிகரத்திற்கு வார நாட்களில் தினமும் 3 ஆயிரம் பேரும், விடுமுறை நாட்களில் 7 ஆயிரம் பேரும் வருகின்றனர்.
- மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் யானை வந்தது பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஊட்டி:
தமிழ்நாட்டில் கடல் மட்டத்தில் இருந்து 2,637 மீட்டர் உயரத்தில் மிக உயர்ந்த மலைச்சிகரமாக நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா மலைசிகரம் விளங்குகிறது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் செயல்பட்டு வரும் இந்த சுற்றுலா தலத்துக்கு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
அங்குள்ள தொலைநோக்கி மூலம் ஊட்டி நகரம், ஏரி, கேத்தி பள்ளத்தாக்கு, குன்னூர் நகரம், அவலாஞ்சி அணை, மாநில எல்லை பகுதிகளை கண்டு ரசிக்கலாம்.
இந்த மலைசிகரத்தில் இருந்து பசுமை தவிழும் அடர்ந்த காடுகள், ஊட்டி நகரின் அழகை பார்வையிடலாம்.
தொட்டபெட்டா மலைசிகரத்திற்கு வார நாட்களில் தினமும் 3 ஆயிரம் பேரும், விடுமுறை நாட்களில் 7 ஆயிரம் பேரும் வருகின்றனர்.
நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை தொட்டபெட்டா காட்சி முனைக்கு வந்தது. யானை வந்ததை பார்த்ததும் அங்கு நின்றிருந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியாகினர்.
இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனச்சரகர் சசிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
உடனடியாக அங்கிருந்த சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினர். கடைக்காரர்களையும் கடைகளை பூட்டி விட்டு வீடுகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதனை தொடர்ந்து கடைகளும் மூடப்பட்டன.
பின்னர் அங்கு சுற்றிய யானையை அங்கிருந்து விரட்டி விட்டனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் யானை வந்தது பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
வனத்துறையினர் கூறும்போது, கடந்த சில நாட்களாக குன்னூர் பகுதியில் காட்டு யானை சுற்றி திரிந்தது. அந்த யானை தான் வழிதவறி வந்திருக்கலாம் என தெரிவித்தனர்.
இதுகுறித்து அங்கு கடை வைத்திருப்பவர்கள் கூறியதாவது:-
10 ஆண்டுகாலமாக இந்த பகுதியில் வியாபாரம் செய்து வருகிறோம். இதுவரை காட்டு யானை வந்தது இல்லை. முதல்முறையாக இந்த பகுதிக்கு காட்டு யானை வந்துள்ளது.
காட்டு யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விடும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே தொட்டபெட்டா மலைசிகர பகுதியில் காட்டு யானை நடமாட்டம் இருப்பதால், இன்று ஒருநாள் மட்டும் சுற்றுலா பயணிகள் இங்கு வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறையை கழிக்க வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதேபோல் நெலாக்கோ ட்டை பகுதியிலும் காட்டு யானை புகுந்தது.
அந்த யானை அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை தாக்கியதுடன், வீடுகளையும் சேதப்படுத்தியது. அப்போது அங்கு வாலிபர் ஒருவர் வந்தார்.
இதை பார்த்த யானை, வாலிபரை துரத்த ஆரம்பித்தது. யானையிடம் இருந்து தப்பிக்க அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடினார். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,200-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து புதிய உச்சத்தில் விற்கப்படுவதால் தங்கம் எட்டாக்கனியாகி விடுமோ என்று மக்கள் கவலை அடைந்துள்ளனர். திருமணம், சுப நிகழ்ச்சிக்காக தங்கம் வாங்க நினைப்பவர்களும் செய்வதறியாது தவிக்கின்றனர்.
இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,200-க்கும் கிராமுக்கு ரூ.20 உயர்நது ஒரு கிராம் ரூ.8,775-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 250 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,025-க்கும் சவரனுக்கு 2,000 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,200-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் உயர்நது ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், கிலோவுக்கு மூவாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
05-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,200
04-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040
03-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040
02-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040
01-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
05-05-2025- ஒரு கிராம் ரூ.108
04-05-2025- ஒரு கிராம் ரூ.108
03-05-2025- ஒரு கிராம் ரூ.108
02-05-2025- ஒரு கிராம் ரூ.109
01-05-2025- ஒரு கிராம் ரூ.109
ஒகேனக்கல்:
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் நேற்று வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் அதிகரித்து வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.
- சராசரி அரசியல்வாதியை போல் திருமாவளவனை கணக்கு போடாதீர்கள்.
- 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெல்ல வேண்டும்.
வணிகர் தினத்தையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணி சார்பில் தேர்தல் அங்கீகார வெற்றி விழா சென்னை கோயம்பேட்டில் நேற்று நடந்தது.
விழாவுக்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கிப் பேசியதாவது:-
நாங்கள் எப்போதும் வெறும் கையால் முழம் போட மாட்டோம். எத்தனை நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தலைவர்கள் வந்தாலும் எங்களுடைய களம் முற்றிலும் வேறானது. ஏ.சி. அறைக்குள் உட்கார்ந்துகொண்டு நாங்கள் அரசியல் செய்வதில்லை. சாதியவாதிகளோடும், மதவாதிகளோடும் எந்தச் சூழலிலும் கைகோர்க்க மாட்டோம். இதை வெளிப்படையாக அறிவிக்கிறோம். சராசரி அரசியல்வாதியை போல் திருமாவளவனை கணக்கு போடாதீர்கள்.
அது எந்த காலத்திலும் நடக்காது. நுழையக்கூடாது என்றால் நுழைவோம், நடக்கக்கூடாது என்றால் நடப்போம், பேசக்கூடாது என்றால் பேசுவோம், கூட்டம் போடக்கூடாது என்றால் மாநாடே நடத்துவோம். மதச்சார்பின்மையை பாதுகாக்க திருச்சியில் 31-ந்தேதி மாபெரும் பேரணியை நடத்துகிறோம்.
அ.தி.மு.க., விஜய், பா.ஜ.க. என எந்த பக்கத்தில் வேண்டுமானாலும் நாம் கதவுகளை திறந்து வைக்கலாம். ஆனால், அவ்வாறு எந்த கதவையும் திறந்துவைக்கவில்லை. என்னுடைய 2 எம்.பி.யை அமித்ஷாவும், மோடியும் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்களா?.
டெல்லியில் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருவர் என்னுடன் பேசினார். பா.ஜ.க.விற்கு அழைத்தார். பிரதமரிடம் நேரில் பேசலாம் என்றார். அவரிடம் அதெல்லாம் வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டு திரும்பி விட்டேன்.
மதசார்பற்ற கூட்டணியில் இடம்பெறுகிறோம் என்பதில் உறுதியாக இருக்கிறேன். 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெல்ல வேண்டும். மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்பதைவிட சனாதன சக்திகள் எந்த சூழலிலும் வலிமை பெற்றுவிடக்கூடாது. பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நாங்கள் வீழ்த்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவர்களுக்கு நீச்சல் தெரியாததால் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் தவறி விழுந்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சந்தியாவந்தனம் செய்யும் போது மாணவர்கள் 3 பேரும் படிக்கட்டில் இருந்து தவறி குளத்தில் விழுந்துள்ளனர். மாணவர்களுக்கு நீச்சல் தெரியாததால் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
சேலையூர் மடத்தில் பயின்றுவந்த ஹரிஹரன், வெங்கடரமணன், வீரராகவன் ஆகியோர் உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.