search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கள்ளச்சாராய சம்பவத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் வழக்குகளை சந்திக்க தயார்- அன்புமணி
    X

    கள்ளச்சாராய சம்பவத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் வழக்குகளை சந்திக்க தயார்- அன்புமணி

    • அ.தி.மு.க. நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். உங்களுக்குஒரே எதிரி தி.மு.க.தான்.
    • எவ்வளவு பணம் கொட்டப்பட்டாலும் விக்கிரவாண்டி மக்கள், நியாயத்தின் பக்கம் இருப்பார்கள்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து ராதாபுரத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர்பேசியதாவது:-

    நமக்கு சமூகநீதி கிடைக்க இத்தேர்தல் ஒரு வாய்ப்பு. பா.ம.க. வெற்றி பெற்றால் பின்தங்கிய சமுதாயம், தாழ்த்தப்பட்ட சமுதாயம் முன்னேறும், நமக்கு சமூகநீதி கிடைக்கும், அடுத்த மாதமே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், 10.5 சதவீத இடஒதுக்கீடும் கிடைக்கும், இது உறுதி. தமிழ்நாட்டின் வாழ்க்கை பிரச்சனை விக்கிரவாண்டி தொகுதி மக்களின் கையில் உள்ளது.

    மேடைக்கு மேடை நாங்கள்தான் சமூகநீதிக்கு சொந்தக்காரர்கள் என்று தி.மு.க.வினர் பேசுகின்றனர். ஆனால் சமூகநீதிக்கும், இன்றைய ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. 2019 இடைத்தேர்தலின்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், தி.மு.க.ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவோம் என்றார்.

    அந்த வாக்குறுதி என்னவாயிற்று? மத்திய அரசு, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால்தான் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை கொடுக்கமுடியும் என்கிறார். அப்படியென்றால் எதற்கு அரசாணை பிறப்பித்தீர்கள்?, உச்சநீதிமன்றத்தில் ஏன் மேல் முறையீடு செய்தீர்கள்? தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கொடுக்க எந்ததடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் சொல்லி 2 ஆண்டுகளாகிறது. ஆனால் நம்மை தி.மு.க. ஏமாற்றி வருகிறது. எங்களிடம் தரவுகள் இல்லை என்பதால் கொடுக்க முடியாது என்று ஸ்டாலின் கூறுகிறார்.

    ஆனால் எங்களிடம் தரவுகள் இருக்கிறது, 20 சதவீத விழுக்காட்டில் 10.5 சதவீதத்துக்கு மேல் வன்னியர்கள் இடம்பெறுகிறார்கள் என்று அமைச்சர் சிவசங்கர் கூறுகிறார். இது என்ன மோசடி, யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள்?

    கள்ளக்குறிச்சியில் நடந்த சாராயபலிகள் சம்பவம் வெட்கக்கேடானது. கடந்த 10 மாதங்களுக்கு முன்பு விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 22 பேர் சாராயம் குடித்து இறந்தனர். அதன் பிறகும் இந்த அரசு, பாடம் கற்றுக்கொள்ளவில்லை. இதற்கு ஆளும்கட்சியை சார்ந்த அரசியல்வாதிகள் தான் காரணம். அங்கிருக்கிற 2 எம்.எல்.ஏ.க்கள்தான் காரணம் என பள்ளி குழந்தைகள் கூட சொல்கிறார்கள். இவர்கள் நம்மீது வழக்கு போடுகிறார்கள், நாங்கள் சந்திக்க தயாராகத்தான் இருக்கிறோம், எங்களிடம் எல்லா ஆதாரங்களும் இருக்கிறது, தேவைப்பட்டால் ஒவ்வொன்றாகவெளியிடுவோம்.

    58 உயிர்கள் இறந்த பிறகுதான் கைது நடவடிக்கை, சாராய ஊறல் அழிப்பு நடவடிக்கை எடுக்கிறார்கள். அதனால்தான் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்கிறோம். சி.பி.ஐ. விசாரணை நடந்தால் தான் கடந்த 30 ஆண்டுகளாக யார், யார் சாராயம் விற்றார்கள், யாரெல்லாம் ஆதரவாக இருந்தார்கள் என்ற முழு விவரமும் தெரியும்.

    இந்த நேரத்தில் அ.தி.மு.க. நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். உங்களுக்குஒரே எதிரி தி.மு.க.தான். அதற்கு உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. நீங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் எங்களுக்கு ஆதரவு தாருங்கள். உங்களுடைய எதிரி, மக்களின் எதிரி, விவசாயிகளின் எதிரி, முக்கியமாக பெண்களின் எதிரி தி.மு.க., இதையெல்லாம் அனைவரும் சிந்தியுங்கள். தி.மு.க.விடம் பணம் மட்டும்தான் இருக்கிறது.

    நம்மிடம் மக்கள் சக்தி, நியாயம் இருக்கிறது. எவ்வளவு பணம் கொட்டப்பட்டாலும் விக்கிரவாண்டி மக்கள், நியாயத்தின் பக்கம் இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×