search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து
    X

    அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து

    • கெமிக்கல் பேரல்களும் வெடித்து சுமார் 20 அடி உயரத்திற்கு தீ பிழம்பு ஏற்பட்டது.
    • தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் தொழிற்பேட்டை, 2-வது பிரதான சாலையில் தனியார் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. பல்வேறு வகையான பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் காயின்கள், பத்திரிகை அச்சடிக்கும் பிரிண்டிங் மை, மற்றும் பேப்பர் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது.சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமையான நேற்று தொழிற்சாலைக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் நள்ளிரவு 11 மணி அளவில் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவி பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. இதனை கண்ட அருகே உள்ள தொழிற்சாலையில் இருந்தவர்கள் உடனடியாக அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்ததும் அம்பத்தூர், ஜெ.ஜெ.நகர், அண்ணாநகர், ஆவடி, வில்லிவாக்கம் உள்ளிட்ட 12 தீயணைப்பு நிலையங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். தொழிற்சாலை மற்றும் சேமிப்பு கிடங்கு முழுவதும் பற்றி எரிந்ததால் தீயணைப்பு வீரர்களால் உள்ளே செல்ல முடிய வில்லை. அங்கிருந்த பேப்பர், மை, பிளாஸ்டிக் பொருட்கள் என அனைத்தும் தீப்பற்றி பயங்கரமாக எரியத்தொடங்கியது. மேலும் கெமிக்கல் பேரல்களும் வெடித்து சுமார் 20 அடி உயரத்திற்கு தீ பிழம்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து கூடுதலாக 40-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளும் அங்கு வரவழைக்கப்பட்டன. நள்ளிரவில் பற்றிய தீயை சுமார் 6 மணி நேரம் போராடி அதிகாலை 5 மணிக்கு முழுவதும் கட்டுப்படுத்தினர். தீவிபத்து காரணமாக அம்பத்தூர் தொழிற்பேட்டையை சுற்றி உள்ள பகுதியில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் அடுத்தடுத்து உள்ள மற்ற தொழிற்சாலைகளில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. மேலும் நேற்று தொழிற்சாலைக்கு விடுமுறை நாள் என்பதால் தொழிலாளர்கள் யாரும் இல்லை. இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. கடந்த 2007-ம் ஆண்டும் இதே தொழிற்சாலையில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×