search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "#சோதனை"

    • போலீசாரை கண்டதும் காரை நிறுத்தி விட்டு காரில் இருந்தவர் தப்பி ஓடி தலைமறைவாகினர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடி தலைமறைவானர்வர்களை தேடி வருகின்றனர்.

    வெள்ளிச்சந்தை:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு புதிய தேசிய நெடுஞ்சாலை வழியாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பொருட்களை கடத்துவதாக பாலக்கோடு டி.எஸ்.பி. மனோகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் மகேந்திர மங்கலம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த இன்னோவா சொகுசு காரை போலீசார் நிறுத்த கூறினர். போலீசாரை கண்டதும் காரை நிறுத்தி விட்டு காரில் இருந்தவர் தப்பி ஓடி தலைமறைவாகினர்.

    போலீசார் காரை சோதனை செய்ததில் அதில் சுமார் 40 மூட்டைகளில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1 டன் குட்கா கடத்தி வந்தது தெரிய வந்தது.

    அதனை தொடர்ந்து 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை குட்கா மூட்டைகளுடன் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடி தலைமறைவானர்வர்களை தேடி வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை பார்வையிட்ட டி.எஸ்.பி மனோகரன் கூறுகையில் தொடர்ந்து குட்கா பொருட்கள் கடத்தல் குறித்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குட்கா கடத்துபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.

    • வெளியூர் மாணவர்கள் பெரும்பாலானோர் கல்லூரிகளில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்து படிக்கிறார்கள்.
    • சூலூர் பகுதியில் கடந்த வாரம் நடத்திய சோதனையின்போது போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு உள்ளூரைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    வெளியூர் மாணவர்கள் பெரும்பாலானோர் கல்லூரிகளில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்து படிக்கிறார்கள். மேலும் பலர் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளனர். தனியார் விடுதிகளிலும் ஏராளமானோர் தங்கி இருக்கிறார்கள்.

    இவ்வாறு தங்கியிருக்கும் மாணவர்கள் மத்தியில் தற்போது போதைப்பழக்கம் அதிகரித்துள்ளது. போதைக்கு அடிமையாகும் மாணவர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதன் காரணமாக கோவை போலீசார் மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகள், தங்கும் விடுதிகளில் அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறார்கள். சூலூர் பகுதியில் கடந்த வாரம் நடத்திய சோதனையின்போது போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    போதைப் பொருளை வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வந்து ஒரு கும்பல் மாணவர்கள் மத்தியில் சப்ளை செய்து வரும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் நடந்த சோதனையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளை ரெயிலில் கோவைக்கு கொண்டு வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்தநிலையில் செட்டிப்பாளையம் பகுதியில் தங்கியிருக்கும் மாணவர்களுடன், மாணவர்கள் அல்லாத சிலரும் தங்கியிருப்பதாகவும், அவர்கள் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து அவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி, 4 டி.எஸ்.பி, 6 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 450 தனிப்படை போலீசார் செட்டிபாளையம், மதுக்கரை, கே.கே. சாவடி பகுதிகளில் மாணவர்கள் தனியாக தங்கியுள்ள வீடுகள், அறைகள் மற்றும் விடுதிகள் ஆகிய இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அறைகளில் கஞ்சா, போதை மாத்திரை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்றும், அவர்கள் கல்லூரி மாணவர்கள் தானா? அவர்களது பெற்றோர் என்ன வேலை செய்கிறார்கள்? அவர்கள் வைத்துள்ள வாகனங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த பெட்டிகள், பைகளில் போலீசார் சோதனை செய்தனர்.

    தொடர்ந்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருவதால் போதைப்பொருள் எதுவும் சிக்கியதா என்ற விவரம் இன்று மாலை தெரியவரும்.

    இதில் மாணவர்கள் சிலர் நேரடியாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது. உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவர்கள் இவ்வாறு போதைப்பொருள்கள் விற்பனை செய்துள்ளனர். அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளனர். இவர்களின் பெற்றோர் சமூகத்தில் வசதி படைத்தவர்களாகவே உள்ளனர். பெற்றோர் கொடுக்கும் பணத்தை செலவு செய்து, போதைப்பொருளும் விற்று உல்லாசமாக இருந்துள்ளனர்.

    இந்த மாணவர்களை கண்டுபிடித்து இந்த நெட்வொர்க்கை உடைக்கவும் அவர்களை போதைப்பொருள் பிடியிலிருந்து மீட்கவும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • காற்றில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மை, வாயுக்களின் தரம் அறியும் இயந்திரம் கொண்டு சோதனை.
    • பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு கூட்டத்திற்கு அழைக்காததால் அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை திருவொற்றியூர் கிராமத்தெருவில் தனியாருக்கு சொந்தமான விக்டரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளி கட்டிடத்தின் 3-வது தளத்தில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். அதற்கு எதிர் தளத்தில் ஆய்வுக்கூடமும் உள்ளது.

    கடந்த மாதம் 26-ந் தேதி இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் வகுப்பறையில் இருந்த 45 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை எரிச்சல் ஏற்பட்டது. சில மாணவிகள் வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    இதனால் கடந்த 1 வாரமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளியில் உள்ள ஆய்வுக்கூடத்தை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால் தற்போது வரை ஆய்வுக்கூடத்தில் ரசாயன வாயுகசிவு ஏற்பட்டுள்ளதை கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

    தீபாவளி விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. ஆனால் ரசாயன வாயுகசிவு குறித்து மாவட்ட கல்வி துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறையிடமிருந்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் ஏதும் கூறவில்லை என்று கூறி பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் பள்ளியை முற்றுகையிட்டு பள்ளி நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது திடீரென்று 9 மாணவிகள் மயக்கம் அடைந்தனர். மீண்டும் பள்ளியில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதால் மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் அலறி அடித்துக்கொண்டு தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றனர். மயக்கம் ஏற்பட்ட மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் எல்லையம்மன் கோவில் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர், தாசில்தார் சகாயராணி, திருவொற்றியூர் மண்டல அதிகாரி புருஷோத்தமன், மருத்துவத்துறை அதிகாரிகள் உடனடியாக பள்ளிக்கு வந்தனர். மாநகராட்சி வடக்கு வட்டாரத் துணை கமிஷனர் ரவிகட்டா தேஜா அதிகாரிகளுடன் பள்ளியை ஆய்வு செய்தனர்.

    இந்நிலையில் தனியார் பள்ளியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர்ந்து இன்று 3-வது நாளாக சோதனை நடத்தினர்.

    காற்றில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மை, வாயுக்களின் தரம் அறியும் இயந்திரம் கொண்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சோதனை நடத்தினர்.

    இதற்கிடையே, சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை, பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு கூட்டத்திற்கு அழைக்காததால் அவர்கள் நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் பிரபு, சண்முக பிரபு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு.
    • அடுக்குமாடி குடியிருப்புக்கான அனுமதி வழங்க சுமார் ரூ. 27 கோடி லஞ்சம் பெற்றதாகவும் புகார்.

    சென்னை எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.

    சிஎம்டிஏ அலுவலகத்தில் 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், சிஎம்டிஏ அலுவலகத்திலும் சோதனை நடத்தப்படுகிறது.

    அமைச்சர் வைத்திலிங்கம் கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர்.

    அவர், அமைச்சர் பதவியில் இருந்தபோது 1058% வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், தாம்பரத்துக்கு அருகே உள்ள பெருங்களத்தூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கான அனுமதி வழங்க சுமார் ரூ. 27 கோடி லஞ்சம் பெற்றதாகவும் புகார் எழுந்தது.

    அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் பிரபு, சண்முக பிரபு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில், லஞ்சம் பெற்ற பணத்தை சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபடுத்தியதாகக் கூறி, வைத்திலிங்கத்துக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நகராட்சி அலுவலத்தில் உள்ள பல்வேறு துறைகளில் சோதனை நடத்தப்பட்டது.
    • சோதனையின் போது ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.

    விழுப்புரம்:

    விழுப்புரம் சென்னை சாலையில் நகராட்சி அலுவலகம் செயல்ப்பட்டு வருகிறது. இங்குள்ள ஊழியர்கள், லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி தலைமையில் போலீசார் இன்று காலை 11.50 மணிக்கு ஜீப்பில் அங்கு சென்றனர்.

    அவர்கள் நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர். நகராட்சி அலுவலத்தில் உள்ள பல்வேறு துறைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை முடிவில் தான் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்பது தெரியவரும்.

    • அ.தி.மு.க. பகுதி செயலாளர் மூர்த்தி 5-வது குற்றவாளியாகவும், அவரது மனைவி சுதா 6-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • அரசு அதிகாரிகள் சூழ்ச்சி செய்து பட்டா மாறுதல் உள்ளிட்ட குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வேளச்சேரி:

    அ.தி.மு.க. வேளச்சேரி பகுதி செயலாளராக இருப்பவர் எம்.ஏ.மூர்த்தி, வேளச்சேரி ஆண்டாள் நகர் விரிவாக்கம் 3-வது தெருவில் வசித்துவரும் இவரும், அவரது மனைவி சுதாவும், 1200 சதுர அடி மதிப்பிலான அரசு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு தமிழக அரசின் வருவாய் துறை கட்டுப்பாட்டில் இருந்த 1200 சதுர அடி நிலத்தை 600 சதுர அடியாக இரண்டாக பிரித்து தாசில்தார் நில அளவையாளர், சர்வேயர் ஆகியோரது துணையுடன் நில அபகரிப்பு நடைபெற்றது தெரிய வந்தது.

    இது தொடர்பாக கோர்ட்டு உத்தரவின் பேரில் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மூர்த்தி, அவரது மனைவி உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் வேளச்சேரி தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்த சிறப்பு தாசில்தாரான மணிசேகர் முதலாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அதே அலுவலகத்தில் சர்வே துணை ஆய்வாளராக பணிபுரிந்த லோகநாதன் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இவர் கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்தவர். 3-வது குற்றவாளியாக துணை ஆய்வாளராக பணிபுரிந்த சந்தோஷ் குமார் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. மேலும் வேளச்சேரி தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வரைவாளராக பணிரிபுரிந்த பெண் அதிகாரியான ஸ்ரீதேவி மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. இவர் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    அ.தி.மு.க. பகுதி செயலாளர் மூர்த்தி 5-வது குற்றவாளியாகவும், அவரது மனைவி சுதா 6-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலமானது அரசால் கையகப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு இருந்த நிலமாகும். அந்த இடத்தை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள் நில அபகரிப்புக்கு துணை போய் இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து இருக்கிறார்கள்.

    அரசு அதிகாரிகள் சூழ்ச்சி செய்து பட்டா மாறுதல் உள்ளிட்ட குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாறுதல் நடவடிக்கைகளை 3 மணி நேரத்திற்குள் அரசு அதிகாரி முடித்து கொடுத்து அதற்கு லஞ்சம் பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் மூர்த்தியும், அவரது மனைவியும் அரசு நிலத்தை சட்ட விரோதமாக அபகரிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் செயல்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    இதையடுத்து வேளச்சேரியில் உள்ள மூர்த்தியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இன்னொரு இடத்திலும் சோதனை நடைபெற்றது. இதே போன்று மேற்கு மாம்பலம், கோவை உள்பட 5 இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • சீசன் கால பழங்கள் கேரளாவில் இருந்து குற்றாலத்திற்கு இறக்குமதி.
    • இரவிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    செங்கோட்டை:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் கடந்த மாதம் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் அண்டை மாநில சோதனை சாவடிகளிலும் சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் சோதனை சாவடி மையம் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் பணியாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    இதனால் கேரளாவில் இருந்து வரும் நபர்கள் முறையான சோதனைக்கு பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் தற்போது அரியவகை பழங்களான ரம்பூடான், மங்குஸ்தான் உள்ளிட்ட சீசன் கால பழங்கள் கேரளாவில் இருந்து குற்றாலத்திற்கு இறக்குமதி செய்யப்படுவதால் சோதனை சாவடியில் வைத்து அவற்றை சுகாதாரத்துறையினர் சோதனைக்கு உட்படுத்துகின்றனர். அதன்பின்னரே அதனை குற்றாலத்திற்கு கொண்டு செல்ல அனுமதிக்கின்றனர்.

    அந்த பழங்களில் வவ்வால்கள் கடித்து சேதமாகி இருந்தால், அதனை அப்படியே வாகனத்தில் கேரளாவுக்கு மீண்டும் திருப்பி அனுப்பும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இரவிலும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • சுற்றுலாப் பயணிகளின் பைகளிளும் சோதனை.
    • போதை வஸ்து பொருட்கள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் நகர்ப்பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளை புறக்கணித்து விட்டு பூம்பாறை, மன்னவனூர், கூக்கால், கிளாவரை உள்ளிட்ட மேல்மலை கிராமங்களுக்கு படையெடுக்கின்றனர்.

    இந்த கிராமங்களில் மலைமுகடுகளின் அருகில் மண் வீடு, ஏ பிரேம் ஹவுஸ், டூம் ஹவுஸ், டெண்ட் கூடாரங்கள் உள்ளிட்டவைகளில் ஆபத்தான முறையில் தங்கி வருகின்றனர். இங்கு போதை வஸ்து பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.

    இதனையடுத்து கொடைக்கானல் கோட்டாட்சியர் சிவராமன் தலைமையில், போலீசார், சுற்றுலாத்துறை, ஊரக உள்ளாட்சித்துறை அதிகாரிகள் இணைந்து தனியார் தங்கும் விடுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

    கூக்கால் மலைக்கிராமத்தில் மலை முகடுகளின் அருகில் உள்ள அரசு வருவாய் நிலத்தில் 4-க்கும் மேற்பட்ட மண் வீடுகள் அமைத்து சுற்றுலாப்பயணிகளுக்கு தங்கும் அறைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே இங்கு நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா பொட்டலங்கள், போதை காளான்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்த மண் வீட்டில் இருந்த சுற்றுலாப் பயணிகளின் பைகளும் சோதனை செய்யப்பட்டது.

    மேலும் மண் வீட்டினை ஆபத்தான முறையில் தங்கும் விடுதியாக நடத்தி வந்த கூக்கால் கிராமத்தை சேர்ந்த தனராஜை கைது செய்து மண் வீடு அறைகளை பூட்டினர்.

    மேலும் பூம்பாறை கிராமத்தில் விவசாய தோட்டத்தில் எந்த வித அனுமதியில்லாமல் இயங்கி வந்த ஏ பிரேம் ஹவுஸ்களும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெறும்.

    எந்த வித அனுமதி இல்லாமல் இயங்கும் தனியார் விடுதிகளும், டெண்ட் கூடாரம், டூம் ஹவுஸ் உள்ளிட்டவைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சோதனையில் 10-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

    • நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • லட்டு தரமும், சுவையும் குறைந்து உள்ளதாக பக்தர்கள் புகார்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிப்பதற்காக நெய் வழங்க 5 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கி உள்ளது. லட்டு தரமும், சுவையும் குறைந்து உள்ளதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ் லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரத்தை பரிசோதிப்பதற்காக 5 நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெய்யை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தார்.

    திண்டுக்கல்லை சேர்ந்த ஒப்பந்த நிறுவனம் வழங்கும் நெய்யில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் நிறுவனம் 8.50 லட்சம் கிலோ நெய் வழங்க ஒப்பந்தம் பெற்று இருந்தது. இதுவரை 68 ஆயிரம் கிலோ நெய் வழங்கி உள்ளது.

    அதில் 20 ஆயிரம் கிலோ நெய் தரமற்றது என திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. தரமற்ற நெய்யை வினியோகம் செய்த திண்டுக்கல் நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அண்ணாசாலை, புஸ்சிவீதி, காந்தி வீதி, சுப்பையாசாலை பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனையிட்டனர்.
    • தமிழக எல்லை பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து ரவுடிகளை ஒடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி ரவுடி திருவேங்கடம், புதுக்கோட்டையில் பிரபல ரவுடி துரை, ஆகியோரை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

    போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பயந்து தமிழகத்தை சேர்ந்த ரவுடிகள் பிற மாநிலங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். புதுச்சேரியிலும் தமிழகத்தை சேர்ந்த ரவுடிகள் பதுங்கி உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுவை போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா உத்தரவின் பேரில் புதுவையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அண்ணாசாலை, புஸ்சிவீதி, காந்தி வீதி, சுப்பையாசாலை பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனையிட்டனர்.

    இதே போல் அரியாங்குப்பத்தில் உள்ள தங்கும் விடுதிகளிலும் போலீசார் திடீர் சோதனை செய்தனர்.


    மேலும் தங்கும் விடுதிக்கு வருபவர்கள் விவரங்களை நிச்சயம் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களிடம் ஏதேனும் ஒரு அடையாள அட்டை நகலை கேட்டு பெற்றிருக்க வேண்டும் எனவும் ஓட்டல் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    சந்தேகத்திற்கு இடமளிக்கும்வகையில் யாரும் வந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கோ, காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் தமிழக எல்லை பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்களை சோதனை செய்த பின்னரே புதுச்சேரிக்கு அனுதிக்கின்றனர்.

    திண்டிவனம் சாலையில் கோரிமேட்டிலும், கிழக்கு கடற்கரை சாலையில் கனக செட்டிக்குளத்திலும், கடலூர் சாலையில் முள்ளோடையிலும், விழுப்புரம் சாலையில் மதகடிப்பட்டிலும் மற்றும் தமிழக எல்லையில் இருந்து வரும் உள்புற சாலைகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • மொத்தம் 8 வேட்பாளர்கள் தங்களது தொகுதியில் இவிஎம் இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதால் அவற்றை சோதிக்க வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்
    • சோதனையை மேற்கொள்வதற்கான வழிகாட்டு நேரிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்படும் இவிஎம் மின்னணு இயந்திரங்களின் மீதான நம்பகத்தன்மை குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகின்றன. மக்களவைத் தேர்தலில் மின்னணு இயந்திரங்களை ஒழித்து வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கலும் செய்யப்பட்டது.

    இவிஎம் இயந்திரங்களில் முறைகேடு நடப்பது நிரூபிக்கப்படாததால் இந்த மனுவை கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அதற்கு பதிலாக தேர்தலில் இரண்டாம் மூன்றாம் இடம் பிடித்து தோல்வியைத் தழுவும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் பணம் செலுத்தி விண்ணப்பித்து இவிஎம் இயந்திரங்களை சோதனையிடலாம் என்று தெரிவித்திருந்தது.

    அதன்படி நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் சமீபத்திய சட்டமன்ற தேர்தலில் இரண்டாம் மூன்றாம் இடம் பிடித்து தோல்வியடைந்த பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பலவேறு காட்சிகளை சேர்ந்த மொத்தம் 8 வேட்பாளர்கள் தங்களது தொகுதியில் இவிஎம் இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதால் அவற்றை சோதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில் இந்த சோதனையை மேற்கொள்வதற்கான வழிகாட்டு நேரிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி வேட்பாளர்கள் தங்களின் தொகுதியில் வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட எந்த இவிஎம் இயந்திரங்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதை அவர்களே தேர்ந்தெடுக்கலாம். எந்த இயந்திரத்தை சோதிக்க வேண்டும் என்ற வேட்பளர்களின் முடிவில் அதிகாரிகளின் தலையீடு இருக்காது.

    தேர்தெடுக்கப்பட்ட இவிஎம் இயந்திரங்களை பயன்படுத்தி அதிகபட்சமாக 1400 வாக்குகள் செலுத்தி மாதிரி வாக்குப்பதிவு நடத்தி அவை சரியாக இயங்குகிறதா என்று என்று சோதிக்கலாம். அதிகப்பாடசாமாக வேட்பாளர்கள் தங்களின் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட 5 சதவீத இயந்திரங்களை சோதிக்க முடியும்.

    இவிஎம் இயந்திரமானது பேலட் யூனிட், கண்ட்ரோல் யூனிட் [விவிபேட்] யூனிட்டை உள்ளடிக்கியது. இந்த யூனிட்களை வெவ்வேறு இயந்திரங்களில் இடைமாற்றியும் [ஒரு இவிஎம் இயந்திரத்தில் உள்ள பேலட் யூனிட்டையும் மற்றொரு இயந்திரத்தில் உள்ள விவிபேட் யூனிட்டையும்] இணைத்து சோதித்து பார்க்கலாம்.

    ஆனால் ஒரு தொகுதியில் மொத்தம் 5 சதவீத இயந்திரங்களை சோதிக்க முடியும் என்ற நிலையில் ஒரு வாக்குச்சாவடியில் ஒரு இவிஎம் இயந்திரத்தை மட்டுமே சோதிக்க முடியும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளின் படி  விரைவில் மாதிரி வாக்கெடுப்பு நடத்தி இவிஎம் இயந்திரங்கள் சோதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    • 160 நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரியவந்தது.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து மலேசியா செல்லும் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர், சுற்றுலாப் பயணிகள் விசாவில் மலேசியா செல்வதற்காக வந்தார். அவரின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தபோது அவர் வைத்திருந்த இரண்டு அட்டைப்பெட்டிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதில் சமையலுக்கு தேவையான அரிசி, பருப்பு வகைகள் இருப்பதாக கூறினார்.

    ஆனால் அந்த அட்டைப்பெட்டிகள் லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள் அட்டைப்பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் உயிருடன் 160 நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரியவந்தது.

    இதை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள், அந்தப் பயணியை கைது செய்தனர். மேலும் அட்டை பெட்டிகளில் இருந்த நட்சத்திர ஆமைகளையும் பறிமுதல் செய்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    சுங்க அதிகாரிகள் அந்த பயணியின், மலேசியா பயணத்தை ரத்து செய்தனர். விசாரணையில் இந்த நட்சத்திர ஆமைகளை, ஆந்திர மாநிலம் சதுப்பு நிலப்பகுதியில் இருந்து கொண்டு வருவதாகவும், இந்த நட்சத்திர ஆமைகளுக்கு இங்கு ரூ.50 முதல் ரூ. 100 வரையில் விலை ஆனால் மலேசியா நாட்டில் இந்த நட்சத்திர ஆமைகள் ரூ.5 ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்குவார்கள் என்று தெரிவித்தார்.

    மேலும் அங்குள்ள வீடுகளில் நட்சத்திர ஆமைகள் வளர்க்கப்படுகின்றன. நட்சத்திர விடுதிகளில், இறைச்சி மற்றும் சூப்புக்காகவும், மருத்துவ குணமுடைய நட்சத்திர ஆமைகளை, மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுத்துவதால் கடும் கிராக்கி இருப்பதாக தெரிவித்தார்.

    பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    ×