search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுக்கரை பகுதியில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளில் 450 போலீசார் அதிரடி சோதனை
    X

    மதுக்கரை பகுதியில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளில் 450 போலீசார் அதிரடி சோதனை

    • வெளியூர் மாணவர்கள் பெரும்பாலானோர் கல்லூரிகளில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்து படிக்கிறார்கள்.
    • சூலூர் பகுதியில் கடந்த வாரம் நடத்திய சோதனையின்போது போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு உள்ளூரைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    வெளியூர் மாணவர்கள் பெரும்பாலானோர் கல்லூரிகளில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்து படிக்கிறார்கள். மேலும் பலர் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளனர். தனியார் விடுதிகளிலும் ஏராளமானோர் தங்கி இருக்கிறார்கள்.

    இவ்வாறு தங்கியிருக்கும் மாணவர்கள் மத்தியில் தற்போது போதைப்பழக்கம் அதிகரித்துள்ளது. போதைக்கு அடிமையாகும் மாணவர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதன் காரணமாக கோவை போலீசார் மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகள், தங்கும் விடுதிகளில் அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறார்கள். சூலூர் பகுதியில் கடந்த வாரம் நடத்திய சோதனையின்போது போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    போதைப் பொருளை வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வந்து ஒரு கும்பல் மாணவர்கள் மத்தியில் சப்ளை செய்து வரும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் நடந்த சோதனையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளை ரெயிலில் கோவைக்கு கொண்டு வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்தநிலையில் செட்டிப்பாளையம் பகுதியில் தங்கியிருக்கும் மாணவர்களுடன், மாணவர்கள் அல்லாத சிலரும் தங்கியிருப்பதாகவும், அவர்கள் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து அவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி, 4 டி.எஸ்.பி, 6 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 450 தனிப்படை போலீசார் செட்டிபாளையம், மதுக்கரை, கே.கே. சாவடி பகுதிகளில் மாணவர்கள் தனியாக தங்கியுள்ள வீடுகள், அறைகள் மற்றும் விடுதிகள் ஆகிய இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அறைகளில் கஞ்சா, போதை மாத்திரை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்றும், அவர்கள் கல்லூரி மாணவர்கள் தானா? அவர்களது பெற்றோர் என்ன வேலை செய்கிறார்கள்? அவர்கள் வைத்துள்ள வாகனங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த பெட்டிகள், பைகளில் போலீசார் சோதனை செய்தனர்.

    தொடர்ந்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருவதால் போதைப்பொருள் எதுவும் சிக்கியதா என்ற விவரம் இன்று மாலை தெரியவரும்.

    இதில் மாணவர்கள் சிலர் நேரடியாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது. உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவர்கள் இவ்வாறு போதைப்பொருள்கள் விற்பனை செய்துள்ளனர். அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளனர். இவர்களின் பெற்றோர் சமூகத்தில் வசதி படைத்தவர்களாகவே உள்ளனர். பெற்றோர் கொடுக்கும் பணத்தை செலவு செய்து, போதைப்பொருளும் விற்று உல்லாசமாக இருந்துள்ளனர்.

    இந்த மாணவர்களை கண்டுபிடித்து இந்த நெட்வொர்க்கை உடைக்கவும் அவர்களை போதைப்பொருள் பிடியிலிருந்து மீட்கவும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    Next Story
    ×