search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "108 Divya Desam"

    • உற்சவரான பெருமாள், பேண்ட்- சட்டை அணிந்து காட்சி தருகிறார்.
    • காலில் செருப்பும் அணிந்திருக்கிறார்.

    திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தில் மூலவரான ரெங்கமன்னார் சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்கிறார். தாயார் ஆண்டாள் என்ற திருநாமத்துடனும், கோதைநாச்சி என்ற பெயருடனும் அருள்பாலிக்கிறார். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இந்த ஆலயம் 90-வது தலமாக திகழ்கிறது.

    இவ்வாலயத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் ஆகிய மூவரும் ஒரே ஸ்தானத்தில் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டுமே. இங்குள்ள உற்சவரான பெருமாள், பேண்ட்- சட்டை அணிந்து காட்சி தருகிறார்.

    திருவில்லிபுத்தூரில் உள்ள ரெங்கமன்னார், வலது கையில் பெந்துகோல் (தற்காப்பு கோல்), இடது கையில் செங்கோல், இடுப்பில் உடைவாள் வைத்து ராஜகோலத்தில் இருக்கிறார். காலில் செருப்பும் அணிந்திருக்கிறார்.

    • 108 திவ்ய தேசங்களில் இது 81 வது திவ்ய தேசம்.
    • ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி சந்திர விமானத்தின் கீழ் காட்சி தருகிறார்.

    பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 81 வது திவ்ய தேசம். நவதிருப்பதிகளில் முதலாவதாகவும், நவகிரக ஸ்தலங்களில் சூரிய ஸ்தலமாகவும் இந்த ஸ்ரீ கள்ளபிரான் திருக்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி சந்திர விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். நான்கு புஜங்களுடன், கையில் தண்டத்துடன், ஆதி சேஷனைக் குடையாகக் மார்பில் மஹா லக்ஷ்மியுடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

    பிரகாரத்தில் வைகுந்தவல்லித் தாயார் சன்னதி உள்ளது. மேலும் நரசிம்மர் சன்னிதி, கோதண்ட ராமர் சன்னிதியும் உள்ளன. சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில், பௌர்ணமி நாளன்று, சூரியனின் கதிர்கள் பெருமாளின் பாதத்தில் படும்படி, இதற்கு ஏற்றாற் போல் சுவாமி சன்னதி எதிரிலுள்ள கொடி மரம், மேரு வடிவ பலிபீடம் தென்புறம் விலகியிருக்கிறது. இத்தலம் சூரிய தோஷ பரிகார ஸ்தலம் ஆகும். ஆதித்ய ஹ்ருதயம் சேவிக்க அருமையான பலன் உண்டு.

    தல வரலாறு:

    முன்பு ஒரு சமயம் சத்யலோகத்தில் பிரளயம் ஏற்பட்டது. அப்போது அயன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். அதையறிந்த கோமுகசுரன், அவரிடமிருந்து வேதங்களை அபகரித்து சென்றான். துயில் நீங்கி எழுந்த பிரம்மன் அதற்காக வருந்தி, அதனை அவனிடமிருந்து மீட்கும் பொருட்டு மகாவிஷ்ணுவைக் குறித்து தவம் செய்ய எண்ணி, தன் கையில் இருந்த தண்டத்தை ஒரு பிரம்மாச்சாரியாக மாற்றி "பூவுலகில் தாமிரபரணி நதிக்கரையில் தவம் புரிய ஒரு இடத்தை பார்த்து வா" என்று அனுப்பினார்.

    அவனும் நதியின் இரு கரையிலும் பார்த்து விட்டு இறுதியாக திருக்கோளுருக்கு அருகில் உள்ள ஜயந்திபுரிக்கு வந்தான். அங்கு ஒரு மோகினியைக் கண்டு மோகித்து அவளுடன் காலம் கழித்து நான்முகன் கட்டளையை மறந்தான்.

    இதையறிந்த சதுர்முகன் தன் கையிலிருந்த கெண்டியை ஓர் பெண்ணாக்கி " பெண்ணே! தவம் இயற்ற தாமிரபரணி நதிக்கரையில் ஒரு நல்ல இடம் பார்த்து வா" என்று அனுப்பினார். அவளும் வெகு நாள் பூவுலகில் சுற்றி சோலைகள் நிறைந்த இந்த பரமபாவனமான இடமே தவத்திற்குரியது என்று பிரம்மனிடம் தெரிவித்தாள்.

    பிரம்மனும் இங்குவந்து கடும் தவம் செய்ய, திருமால் அதற்கு இரங்கி சதுர்முகனுக்கு நேரில் காட்சி கொடுத்து, கோமுகாசுரனை முடித்து அவனிடமிருந்த வேதங்களை மீட்டு பிரம்மனிடம் அளித்தார்.

    பிரம்மனும் "அகல் விசும்பும் நிலனும் இருளார் வினைகெட செங்கோல் நடாத்துவீர்" எப்படி வைகுந்தத்திலிருந்து இங்கு எழுந்தருளி சேவை சாதித்தீரோ அவ்வண்ணமே இங்கு எப்பொழுதும் சேவை சாதித்து அடியார்களின் "செடியாய வல்வினைகளை தீர்த்து அருள் புரிய வேண்டும்" இத்திருப்பதியும் ஸ்ரீ வைகுண்டம் என்ற திருநாமத்துடன் விளங்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய, பெருமாளும் அவ்வாறே இங்கு கோயில் கொண்டார்.

    பிரம்மனும் தனது கெண்டியால் தாமிரபரணி தீர்த்தத்தை எடுத்து பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்ததாலும், நதிக்கரையில் கலசத்தை ஸ்தாபித்ததாலும், இத்தீர்த்தம் " கலச தீர்த்தம்" என்று வழங்கப்படுகின்றது. பிரம்மன் வைகுண்ட நாதருக்கு சைத்ர உற்சவம் நடத்தி பின் சத்திய லோகம் சென்றார்.

    இத்தலத்தில் காலதூஷகன் என்ற கள்வன் ஒருவன் இருந்தான். அவன் திருடச்செல்லும் போது வைகுந்த நாதரிடம், தேவா! நான் எவ்விடத்தில் திருடச்சென்றாலும் ஒருவரும் அறியாவண்ணம் திருடிவர வேண்டும்.

    அவ்வாறு திருடிய பணத்தில் பாதியை உமக்கு காணிக்கையாகத் தருவேன் என்று வணங்கிச் செல்வான். குறுகிய காலத்தில் ஏராளமான செல்வத்தை கொள்ளை அடித்தான், தான் கூறியது போலவே அதில் பாதியை பெருமாளுக்கு காணிக்கையாக்கி வந்தான்.

    ஒரு நாள் அரசன் அரண்மனையில் திருடும் போது அவனது சில சகாக்கள் அரச சேவகர்களிடம் மாட்டிக்கொண்டனர். அவர்கள் அரச தண்டனைக்கு பயந்து காலதூஷகனை காட்டிக்கொடுத்து விடுவதாக கூற அவனும் பகவானை சரணடைந்து துதி செய்ய, கருணைக் கடலான கார்முகில் வண்ணரும் வயது முதிர்ந்த வேடத்தில் வந்து அப்பா நீ அஞ்ச வேண்டாம் தஞ்சமென்றவரை ஆதரிப்பது என் கடமை என்றார்.

    பிறகு பகவான் கால்தூஷகனாக வடிவெடுத்து அரண்மனைக்கு செல்ல வழியில் திருடர்கள் இவரை நோக்கி இவனே எங்கள் தலைவன் என்று கூற சேவகர்கள் அவரை அரண்மனைக்கு அழைத்து சென்று அரசன் முன்னர் நிறுத்தினர்.

    மன்னனும் நீ யார்? நீ இருப்பது எவ்விடம்? எதற்காக அரண்மனையில் புகுந்து கொள்ளையடித்தாய்? என்று வினவினான். அது கண்ட வைகுந்தநாதனாக இருந்து சோரநாதனான, காலதூஷகனான பெருமாள் அரசே! என் பெயர் கள்ளர் பிரான், ஸ்ரீவைகுண்டம் எனது இருப்பிடம், என் பிழைப்புக்காக உன் பணம் முழுவதையும் திருடினேன். உன் குற்றத்தை நீ தெரிந்து கொள்ளவில்லை பணத்திற்கு பங்காளிகள் நால்வர். அவர்கள் தர்மம், அக்னி, திருடன், ராஜா. இவற்றில் முந்தியது தருமம், தருமம் செய்யப்படாத செல்வம் கள்வனாகிய என்னால் அபகரிக்கப்பட்டது. எனவே இனி தர்மம் செய்வாய் என்றார்.

    அது கேட்ட அரசனும் சிங்காதனத்தில் இருந்து எழுந்து நமக்கு நற்புத்தி புகட்டியவர் பகவானே என்று தீர்மானித்து வைகுந்த நாதா! கள்ளர் பிரானே! இன்று முதல் தாங்கள் சோரநாதன் (கள்ளர் பிரான்) என்ற திருநாமத்துடன் எழுந்தருளியிருத்தல் வேண்டும் என்று விண்ணப்பித்தான். அது முதல் உற்சவர் கள்ளர்பிரான் என்று வழிபடப்படுகின்றார்.

    சித்திரை பெருந்திருவிழாவின் போது நம்மாழ்வார், பொலிந்து நின்ற பெருமாளுடன் ஸ்ரீவைகுண்டம் எழுந்தருளுவார். பெருமாளை மங்களாசாசனம் செய்தபின் அன்ன வாகனத்தில் எழுந்தருளும் சடகோபருக்கு கள்ளபிரான், பொலிந்து நின்ற பிரான், வரகுண மங்கை எம் இடர் கடிவான், திருப்புளிங்குடி காய்சினவேந்தன் ஆகிய நான்கு பெருமாள்களும் கருட வாகனத்தில் சேவை சாதிக்கின்றனர்.

    ×