என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2024 rewind"

    • தமிழ்நாடு அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.
    • வயநாடு நிலச்சரிவு சோகத்தால் கேரளாவில் ஓணம் கொண்டாட்டம் ரத்துசெய்யப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் ஜூலை 30-ம் தேதி பெய்த கனமழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    முண்டகை, சூரல்மலை, மேம்பாடி, அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை உள்ளிட்ட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்தப் பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தன.


    இந்த நிலச்சரிவால் கேரள மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாடும் கடும் துயரத்திற்கு உள்ளானது.

    வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்தன. தமிழ்நாடு அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.

    வயநாடு நிலச்சரிவு ஏற்படுத்திய சோகத்தால் கேரளாவில் ஓணம் கொண்டாட்டத்தை ரத்துசெய்து மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டி20 உலகக் கோப்பையுடன் ரோகித், விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் டி20யில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.
    • மற்றொரு இந்திய வீரரான தவான் அனைத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

    2024-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். சிலர் டி20 என ஒரு வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர்.

    அந்த வகையில் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த வீரர்கள் யார் என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

    டீன் எல்கர் 

    இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஓய்வு அறிவிப்பை தொடங்கிய வீரராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டீன் எல்கர் உள்ளார். அவர் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது அனைத்து விதமான போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர் தென் ஆப்பிரிக்கா அணிக்காக 86 டெஸ்ட், 8 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார். 86 போட்டியில் 14 சதம் 23 அரைசதம் விளாசியுள்ளார். இவர் தலைமையில் தென் ஆப்பிரிக்கா 18 போட்டிகளில் விளையாடி 9-ல் வெற்றியும் 8-ல் தோல்வியும் கண்டுள்ளது.

    டேவிட் வார்னர்


    அதே மாதத்தில் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதனை தொடர்ந்து டி20 உலகக் கோப்பை தொடருடன் டி20 போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார். ஒருநாள் தொடரில் இருந்து 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வை அறிவித்தார்.

    இவர் ஆஸ்திரேலியாவுக்காக 112 டெஸ்ட் போட்டி விளையாடி 8786 ரன்களும் 161 ஒருநாள் போட்டியில் விளையாடி 6932 ரன்களும் எடுத்துள்ளார். 2 வடிவத்திலும் சேர்த்து 48 சதம் விளாசியுள்ளார்.

    கிளாசன்


    ஜனவரி மாதத்தில் 3 வீரராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிளாசன் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார். இவர் 2019-ம் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய இவர் 4 டெஸ்ட்டில் மட்டுமே விளையாடி உள்ளார். ஒருநாள் மற்றும் டி20 தொடரில் கவனத்தை செலுத்தி அதிரடியாக விளையாடி வருகிறார்.

    நீல் வாக்னர்



    நியூசிலாந்து அணியை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர். இவரும் இந்த ஆண்டில் தனது ஓய்வை அறிவித்துள்ளார். இவர் 2012-ம் ஆண்டு டெஸ்ட்டில் அறிமுகமாகினார். 64 டெஸ்ட் போட்டியில் விளையாடிய இவர் 260 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2021-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை வென்ற அணியில் இவர் இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கொலின் மன்ரோ


    நியூசிலாந்து அணியின் தொடங்க வீரர் கொலின் மன்ரோ. இவர் கடந்த மே மாதம் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார். 2020-ம் ஆண்டு டி20 அணியில் இடம் பிடித்த இவர் 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் 57 ஒருநாள் போட்டி ஒரு டெஸ்ட்டில் நியூசிலாந்து அணிக்காக விளையாடி உள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற டி20 அணியில் இவர் இடம் பிடிக்காத நிலையில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார் என்பது குறிப்பிடதக்கது.

    தினேஷ் கார்த்திக்


    இந்திய அணியில் இடம் கிடைக்காமல் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வந்தவர் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக். இவர் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் 2022-ம் ஆண்டு இந்திய டி20 அணியில் இடம் பிடித்தார். அந்த தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லவில்லை.

    அதன்பிறகு 2024-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் தான் கடைசி என அறிவித்தார். இதனையடுத்து 2024 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார்.

    இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 94 ஒருநாள் போட்டி, 60 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தமாக ஒரு சதம் 17 அரை சதம் விளாசியுள்ளார்.

    கேதர் ஜாதவ்


    இந்த ஆண்டு ஜூன் மாதம் கேதர் ஜாதவ் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இவர் கடைசியாக 2020-ம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். 73 ஒருநாள் போட்டி, 9 டி20 போட்டியில் விளையாடியுள்ள இவர், 2 சதம், 6 அரை சதம் விளாசியுள்ளார். 2019 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இவர் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடதக்கது.

    விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா


    இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பேட்டர்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஆல் ரவுண்டரான ஜடேஜா ஆகியோர் 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையுடன் தங்களது ஓய்வு முடிவை அறிவித்தனர்.

    விராட் கோலி இந்திய அணிக்காக 125 டி20 போட்டிகளில் விளையாடி 1 சதம் 38 அரைசதம் விளாசியுள்ளார். ரோகித் சர்மா 159 டி20 போட்டிகளில் விளையாடி 5 சதம் 32 அரைசதம் விளாசியுள்ளார். ஜடேஜா 74 டி20 போட்டிகளில் விளையாடி 54 விக்கெட்டும் 515 ரன்களும் எடுத்துள்ளார்.

    ஜேம்ஸ் ஆண்டர்சன்


    இங்கிலாந்து அணியின் மிகவும் வயதான வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன்(42). இவர் 2009-ல் டி20யிலும் 2015 ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்தார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வந்த இவர் இவர் இந்த ஆண்டு மே மாதம் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். டெஸ்ட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இவர் 3-வது இடத்தில் உள்ளார்.

    இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட்டில் 704 விக்கெட்டும் ஒருநாள் போட்டியில் 269 விக்கெட்டும் டி20 18 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.

    ஷிகர் தவான்


    இந்திய அணியின் தொடங்க வீரர் ஷிகர் தவான். இடதுகை பேட்டரான இவர் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அனைத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்தார்.

    இவர் 2013-ம் ஆண்டு இந்திய அணி ஐசிசி சாம்பியன் டிராபியை வெல்ல உதவினார். அந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் ஷிகர் தவான் ஆவார். இதுமட்டுமல்லாமல் 2014 ஆசிய கோப்பை, 2015 உலகக் கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடர்களில் இந்தியாவின் அதிக ரன்கள் குவித்த வீரர் ஷிகர் தவான்.

    இந்திய அணிக்காக 34 டெஸ்ட் (2315 ரன்கள்), 167 ஒருநாள் போட்டி (6793 ரன்கள்), 68 டி20 போட்டிகளில் (1759 ரன்கள்) விளையாடி உள்ளார். மொத்தமாக 24 சதம், 55 அரை சதம் விளாசியுள்ளார்.

    இவர் 2022-ம் ஆண்டு கடைசியாக இந்திய அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடதக்கது.

    டேவிட் மலான்


    ஐசிசி தரவரிசையின் முன்னாள் நம்பர் ஒன் டி20 பேட்டர் இங்கிலாந்து அணியை சேர்ந்த டேவிட் மலான். இவர் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அனைத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு அணிக்காக மூன்று வடிவிலான போட்டிகளிலும் சதம் அடித்த வீரர்களில் (ஜாஸ் பட்லர்) இவரும் ஒருவர். இவர் இங்கிலாந்து அணிக்காக மொத்தமாக 8 சதம், 32 அரை சதம் விளாசியுள்ளார்.

    மொயின் அலி


    இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி. இவர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். 37 வயதான அலி கடைசியாக வெற்றி பெற்ற இரண்டு ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்தார். 2019-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2022-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் முக்கியமான வீரராக இருந்தவர்.

    இவர் இங்கிலாந்து அணிக்காக மொத்தமாக 6678 ரன்கள் குவித்துள்ளார். இதில் 8 சதம் விளாசியுள்ளார். 366 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.

    ஷகிப் அல் ஹசன்


    வங்கதேச அணியின் முன்னாள் கேப்டனும் ஆல்ரவுண்டருமான ஷகிப் அல் ஹசன், டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் மட்டும் தொடர்ந்து விளையாடுவதாக தெரிவித்தார்.

    டி20-யில் 13 அரைசதம் உள்பட 2251 ரன்களும் 149 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட்டில் 4000 ரன்களும் 240 விக்கெட்டும் இவர் வீழ்த்தியுள்ளார்.

    மஹ்முதுல்லாஹ் 



    வங்கதேச அணியின் ஆல் ரவுண்டர் மஹ்முதுல்லாஹ். இவர் 2021-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடி வந்த இவர் இந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருடன் ஓய்வை அறிவித்தார். வங்கதேச அணியில் டி20 போட்டிகள் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இவர் 2-வது இடத்தில் உள்ளார். இவர் 141 டி20 போட்டிகளில் விளையாடி 2443 ரன்களும் 40 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டியில் இன்னும் ஓய்வை அறிவிக்காமல் உள்ளார்.

    மேத்யூ வேட்


    ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் மேத்யூ வேட். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2011-ல் அறிமுகமான வேட், ஆஸ்திரேலியாவுக்காக 36 டெஸ்ட், 97 ஒருநாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    டெஸ்டில் 1613 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 1867 ரன்களும், டி20-யில் 1202 ரன்களும் எடுத்துள்ளார். 2021-ல் ஆஸ்திரேலியாவின் முதல் ஐசிசி டி20 உலகக் கோப்பை பட்டத்தை வெல்ல இவர் முக்கிய பங்கு வகித்தார். அந்த தொடரின் அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தார் என்பது குறிப்பிடதக்கது.

    விருத்திமான் சகா


    இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் விருத்திமான் சகா நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2024-25 ரஞ்சி டிராபி சீசனின் முடிவில் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார்.

    சகா 2010 முதல் 2021 வரை 40 டெஸ்ட் மற்றும் ஒன்பது ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடினார். டெஸ்ட்டில் மூன்று சதங்களுடன் 1353 ரன்களை எடுத்தார். ஒருநாள் போட்டிகளில் அவர் பேட்டிங் செய்த ஐந்து போட்டிகளிலும் சேர்ந்து 41 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்தியாவுக்கான அவரது கடைசி போட்டி 2021-ல் நியூசிலாந்திற்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது.

    சித்தார்த் கவுல்


    இந்திய பந்துவீச்சாளர் சித்தார்த் கவுல். 34 வயதான பஞ்சாப் கிரிக்கெட் வீரர், இந்தியாவிற்கு வெளியே உள்ள மற்ற லீக்குகளிலும், இந்தியாவில் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கான டி20 லீக்குகளிலும் விளையாடுவதற்கு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    கவுல் 2018 முதல் 2019 வரை இந்தியாவுக்காக மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டியில் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாத அவர் டி20-யில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    இவர்களை தவிர சௌரப் திவாரி (இந்தியா), வருண் ஆரோன் (இந்தியா), பரிந்தர் ஸ்ரான் (இந்தியா), சித்தார்த் கவுல் (இந்தியா), டேவிட் வைஸ் (தென்னாப்பிரிக்கா), சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் (நெதர்லாந்து), ஷானன் கேப்ரியல் (வெஸ்ட் இண்டீஸ்), வில் புகோவ்ஸ்கி (ஆஸ்திரேலியா), டி20-யில் மட்டும் பிரையன் மசாபா (உகாண்டா) ஆகிய வீரர்களும் இந்த ஆண்டில் ஓய்வை அறிவித்துள்ளனர்.

    • இந்த பட்டியலில் முதலிடத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி உள்ளது.
    • 10-வது இடத்தில் சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி தேடப்பட்டுள்ளது.

    2024-ம் ஆண்டில் கூகுளில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட போட்டிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூரு - சென்னை போட்டி இடம் பெற்றுள்ளது. இந்த போட்டி 9-ம் இடம் பிடித்துள்ளது. இந்த போட்டியில் சென்னை வீழ்த்தி பெங்களூரு அணி குவாலிபையர் சுற்றுக்கு தகுதி பெற்றது. 

    இந்த போட்டியின் முடிவில் பெங்களூரு அணி வெற்றியை அதிக நேரம் கொண்டாடியதால் கடுப்பான டோனி பெங்களூரு அணி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்றார். இது சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

    10-வது இடத்தில் சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி தேடப்பட்டுள்ளது.

    இந்த பட்டியலில் முதலிடத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி உள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இந்திய அணி, 4 போட்டிகளில் வென்று கம்பேக் கொடுத்து அசத்தியது.

    2004-ம் ஆண்டு அதிக தேடப்பட்ட கிரிக்கெட் போட்டிகள்:-

    1. இந்தியா vs இங்கிலாந்து

    2. இந்தியா vs பங்களாதேஷ்

    3. இந்தியா vs ஜிம்பாப்வே

    4. இலங்கை vs இந்தியா

    5. இந்தியா vs ஆப்கானிஸ்தான்

    6. இந்தியா vs தென் ஆப்பிரிக்கா

    7. இந்தியா vs பாகிஸ்தான்

    8. பாகிஸ்தான் vs இங்கிலாந்து

    9.ராயல் சேலஞ்சர்ஸ் vs சூப்பர் கிங்ஸ்

    10. சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

    • அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றது.
    • இந்தியர்கள் தேனிலவுக்கு செல்லும் முக்கிய சுற்றுலாத் தலமாக 'பாலி' உள்ளது.

    ஒவ்வொரு ஆண்டில் முடிவிலும் அந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 விஷயங்களை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் 2024ம் ஆண்டு கூகுளில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட சுற்றுலாத்தலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

     அதன்படி 2024ம் ஆண்டு கூகுளில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட சுற்றுலாத்தலங்களில் அஜர்பைஜான் முதலிடத்தில் உள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றது. இதனையடுத்து அஜித் ரசிகர்கள் அஜர்பைஜான் நாட்டை பற்றி அதிக அளவில் கூகுளில் தேடியுள்ளனர். அதன் விளைவாக அஜர்பைஜான் இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

    பாலி தீவு

    பாலி தீவு 

     இப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பிரபல சுற்றுலாத் தலமான 'பாலி' பிடித்துள்ளது. இந்தியர்கள் பலரும் தேனிலவுக்கு செல்லும் முக்கிய சுற்றுலாத் தலமாக 'பாலி' உள்ளது குறிப்பிடத்தக்கது.

    மணாலி

    மணாலி

     இந்த டாப் 10 பட்டியலில் மணாலி, ஜெய்ப்பூர், அயோத்தி, காஷ்மீர், தெற்கு கோவா உள்ளிட்ட 5 இந்திய சுற்றுலா தளங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியர்கள் அதிக அளவில் சுற்றுலா செல்லும் 'மணாலி' இப்பட்டியலில் 3-ம் இடம் பிடித்துள்ளது. ஜெய்ப்பூர் 5-ம் இடமும், அயோத்தி 8-ம் இடமும் காஷ்மீர் 9-ம் இடமும் தெற்கு கோவா 10-ம் இடமும் பிடித்துள்ளது.

    ஜெய்ப்பூர்

    ஜெய்ப்பூர்

     ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு அக்கோவிலை பார்க்க லட்சக்கணக்கான மக்கள் அயோத்திக்கு சென்று வருகின்றனர். அதன் விளைவாக இப்பட்டியலில் அயோத்தி இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ராமர் கோவில்

    ராமர் கோவில் 

     அஜர்பைஜான், பாலிக்கு அடுத்தபடியாக இப்பட்டியலில் கஜகஸ்தான், ஜார்ஜியா, மலேசியா உள்ளிட்ட 3 வெளிநாட்டு சுற்றுலா தளங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த டாப் 10 பட்டியலில் கஜகஸ்தான் 4-ம் இடமும் ஜார்ஜியா 6-ம் இடமும் மலேசியா 7-ம் இடமும் பிடித்துள்ளது.

    மலேசியா

    மலேசியா 

     2024ம் ஆண்டு கூகுளில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட சுற்றுலாத்தலங்கள்:

    1. அஜர்பைஜான்

    2. பாலி

    3. மணாலி

    4. கஜகஸ்தான்

    5. ஜெய்ப்பூர்

    6. ஜார்ஜியா

    7. மலேசியா

    8. அயோத்தி

    9. காஷ்மீர்

    10. தெற்கு கோவா

    • கூகுளில் இந்திய அளவில் அதிகமாக அர்த்தங்கள் தேடப்பட்ட வார்த்தைகளின் பட்டியலில் 'All Eyes on Rafah' முதலிடம்.
    • Stampede என்ற வார்த்தை இப்பட்டியலில் 7-ம் இடம் பிடித்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டில் முடிவிலும் அந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 விஷயங்களை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இந்தாண்டு கூகுளில் இந்திய அளவில் அதிகமாக அர்த்தங்கள் தேடப்பட்ட வார்த்தைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

    2024ம் ஆண்டில் கூகுளில் இந்திய அளவில் அதிகமாக அர்த்தங்கள் தேடப்பட்ட வார்த்தைகள்:

    1. All Eyes on Rafah

    2024ம் ஆண்டில் கூகுளில் இந்திய அளவில் அதிகமாக அர்த்தங்கள் தேடப்பட்ட வார்த்தைகளின் பட்டியலில் 'All Eyes on Rafah' முதலிடத்தை பெற்றுள்ளது. பாலஸ்தீன நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை கண்டிக்கும் விதமாக 'All Eyes on Rafah' என்ற இணையத்தில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

     2. Akaay

    இப்பட்டியலில் பிரபல கிரிக்கெட் வீரர் கோலி - அனுஷ்கா தம்பதியின் மகன் பெயரான Akaay 2ம் இடம் பிடித்துள்ளது. அகாய் என்ற பெயருக்கு அழிவில்லாதவன் என்று அர்த்தமாகும்.

     

    3. Cervical Cancer

    கர்ப்பப்பை புற்றுநோய் (Cervical Cancer) என்ற வார்த்தை இப்பட்டியலில் 3-ம் இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் பெண்கள் அதிக அளவில் இந்த புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

    4. Tawaif

    Tawaif என்ற வார்த்தை இப்பட்டியலில் 4-ம் இடம் பிடித்துள்ளது. பண்டைய காலத்தில் குறிப்பாக முகலாயர் ஆட்சி காலத்தில் மன்னர்கள் மற்றும் பணக்காரர்கள் முன்பு நடனமாடும் பெண்களை Tawaif என்று அழைப்பர்.

    5. Demure

    இப்பட்டியலில் Demure என்ற வார்த்தை 5-ம் இடம் பிடித்துள்ளது. இந்த வார்த்தைக்கு அமைதியான அடக்கமான பெண்கள் என்று அர்த்தமாகும்.

    6. Pookie

    Pookie என்ற வார்த்தை இப்பட்டியலில் 6-ம் இடம் பிடித்துள்ளது. தங்களுக்கு பிடித்தமான நபரை செல்லமாக அழைப்பதை Pookie என்று சொல்கிறார்கள்.

     7. Stampede

    Stampede என்ற வார்த்தை இப்பட்டியலில் 7-ம் இடம் பிடித்துள்ளது. இந்த வார்த்தையை நாம் அடிக்கடி ஆங்கில செய்திகளில் படித்திருப்போம். பெருமளவிலான மக்கள் ஒரே இடத்தை நோக்கி ஓடுவதை Stampede என்று குறிப்பிடுகிறார்கள். உ.பி. மாநிலம் ஹத்ராஸில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் பலர் உயிரிழந்ததை அடுத்து Stampede என்ற வார்த்தை இந்திய அளவில் ட்ரெண்டானது.

    8. Moye Moye

    Moye Moye என்ற வார்த்தை இப்பட்டியலில் 8-ம் இடம் பிடித்துள்ளது. இந்த வார்த்தையை பலரும் ரீல்ஸ்களில் கேட்டிருப்பீர்கள். இந்த வார்த்தைக்கு தனிமையில் அல்லது சோகத்தில் இருப்பது என்று அர்த்தமாகும்.

    9. Consecration

    Consecration என்ற வார்த்தை இப்பட்டியலில் 9-ம் இடம் பிடித்துள்ளது. ஒரு இடத்தையோ ஒரு செயலையோ இறைவனின் பெயரால் புனிதமாக்கும் செயலுக்கு Consecration என்று அர்த்தமாகும்.

     10. Good Friday

    Good Friday என்ற வார்த்தை இப்பட்டியலில் 10-ம் இடம் பிடித்துள்ளது. புனித வெள்ளி என்பது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த நாளாகும்.

    • பாலின சர்ச்சையில் சிக்கிய இமானே கெலிஃப் முதலிடத்தில் உள்ளார்.
    • 10-வது இடத்தில் மான்செஸ்டர் சிட்டியின் மிட்ஃபீல்டரான ரோட்ரி உள்ளார்.

    2024 முடிவடைந்து புதிய ஆண்டு (2025) விரைவில் பிறக்க உள்ள நிலையில், 2024-ம் ஆண்டு உலகில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் 2 இந்திய விளையாட்டு வீரர்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளனர். குறிப்பாக அவர்கள் கிரிக்கெட் வீரர்கள் ஆவர்.

    இந்த பட்டியலில் முதல் வீரராக பாலின சர்ச்சையில் சிக்கிய அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனையான இமானே கெலிஃப் என்பவர் உள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில், சீன வீராங்கனை யாங்க் லியூவை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தினார். 

    2-வது இடத்தில் முன்னாள் உலக 'ஹெவிவெயிட்' சாம்பியனான மைக் டைசன் உள்ளார். இவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தொழில்முறை குத்துச்சண்டை போட்டிக்கு திரும்பினார். ஆனால் அந்த போட்டியில் தோல்வியை தழுவினார். போட்டிக்கு முன்னர் எதிராளியை கண்ணத்தில் அறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    3-வது இடத்தில் ஸ்பெயின் அணியின் இளம் வீரர் லமின் யமால் உள்ளார். 17 வயதில் கோல் அடித்த வீரர் என்ற பீலேவின் சாதனையை யமால் முறியடித்தார். இவர் கோல் அடித்து கொண்டாடிய போது ரசிகர்களால் இனவெறி தாக்குதல் நடத்தினர். யுரோ கோப்பையை வென்ற அணியில் இவர் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    4-வது இடத்தில் அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோன் பைல்ஸ் உள்ளார். இவர் பாரிஸ் ஒலிம்பிக் பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் 'புளோர்' பிரிவு பைனலில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். 

    இதன்மூலம் ஒலிம்பிக் அரங்கில் சிமோன் பைல்ஸ் வென்ற 11-வது பதக்கம் இதுவாகும். இதுவரை 7 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் வென்றுள்ளார்.

    5-வது இடத்தில் மைக்கெல் டைசன் உடன் குத்துச்சண்டையில் மோதிய ஜேக் பால் (27) உள்ளார். இவர் அமெரிக்காவை சேர்ந்த 'யூடியூப்' பிரபலம் ஆவார். இவர் கடந்த 2013 முதல் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வருகிறார்.

    இதுவரை விளையாடிய 11 போட்டியில், 10ல் வெற்றி பெற்றார். இதில் 7 முறை 'நாக்-அவுட்' முறையில் வெற்றி கண்டார். மைக் டைசனுக்கு எதிரான போட்டியில் ஜேக்பால் 79-73 என்ற புள்ளிக் கணக்கில் டைசனை வீழ்த்தினார்.

    6-வது இடத்தில் ஸ்பெயினின் கால்பந்து வீரர் நிகோ வில்லியம்ஸ் உள்ளார். இவர் லமைன் யமலுடன் இணைந்து, யூரோ 2024-ல் சிறப்பான ஆட்டக்காரர்களில் ஒருவராக இருந்தார்.

    ஜெர்மனியில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றபோது, இறுதிப் போட்டியில் ஸ்பெயினுக்கு வில்லியம்ஸ் முக்கியமான கோல்களை அடித்தார்.

    7-வது இடத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா உள்ளார். ரோகித் சர்மா , விராட் கோலி மற்றும் எம்எஸ் டோனி போன்ற முக்கிய கிரிக்கெட் வீரர்கள் இருந்த போதிலும் அதிகம் தேடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரராக ஹர்திக் பாண்டியா உள்ளார்.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ரோகித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக மாற்றியதற்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டபோது நட்சத்திர ஆல்ரவுண்டராக கவனத்தை ஈர்த்தார்.

    8-வது இடத்தில் அமெரிக்க கோல்ப் வீரர் ஸ்காட்டி ஷெஃப்லர் உள்ளார். இவர் 2024-ம் ஆண்டு உலகின் அதிக ஊதியம் பெறும் கோல்ஃப் வீரர்களில் முதலிடத்தில் இருந்தார்.பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் கோல்ஃப் தனிநபர் ஸ்ட்ரோக் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றார்.

     9-வது இடத்தில் இந்திய ஆல்-ரவுண்டர் ஷஷாங்க் சிங் உள்ளார். இவர் 2024-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒரு சிறந்த நட்சத்திரமாக உருவெடுத்தார். ஆரம்பத்தில் பஞ்சாப் கிங்ஸ் பெயர் குழப்பத்தில் அவரை ஏலத்தில் எடுத்தது. இந்த சர்ச்சைகள் மற்றும் விமர்சகர்களை தனது பேட்டிங்கின் மூலம் வாயடைக்க வைத்தார்.


    அவரது பஞ்சாப் அணியின் மிகவும் மதிப்புமிக்க வீரர்களில் ஒருவராக மாற்றியது. ஐபிஎல்லில் அவர் முக்கியத்துவம் பெறுவது அந்த ஆண்டின் மிகவும் ஆச்சரியமான கதைகளில் ஒன்றாகும்.

    10-வது இடத்தில் மான்செஸ்டர் சிட்டியின் மிட்ஃபீல்டரான ரோட்ரி உள்ளார். 2024-ம் ஆண்டுக்கான பலோன் டி'ஓர் விருதை வென்றார், இது கால்பந்து உலகில் விவாதத்தையும் சர்ச்சையையும் தூண்டியது. ரியல் மாட்ரிட்டின் வினிசியஸ் ஜூனியர் இந்த மரியாதைக்கு தகுதியானவர் என்று பலர் கூறினர். இதனால் ரியல் மாட்ரிட் பலோன் டி'ஓர் விழாவை புறக்கணித்தது.


    சர்ச்சைகள் இருந்தபோதிலும், ரோட்ரியின் அருமையான விளையாட்டு , இந்த சீசனில் அவர் செயல்ப்பட்ட விதம் அவரை பலோன் டி'ஓர் வெற்றியாளராக அவரது சாதனை கவனத்தை ஈர்த்தது.

    • ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுக்குப் பிறகு சட்டசபை தேர்தல் நடந்தது.
    • அங்கு இந்தியா கூட்டணி ஆட்சியை பிடித்து அசத்தியது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 10 ஆண்டுக்குப் பிறகு சட்டசபை தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சி, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை ஒரு அணியாகவும், பா.ஜ.க. மற்றொரு அணியாகவும், கடந்த தேர்தலின்போது பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்ற மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி தனித்தும் களம் கண்டது.


    ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. முதல்கட்ட தேர்தல் செப்டம்பர் 18-ம் தேதியும், 2-வது கட்ட தேர்தல் செப்டம்பர் 25-ம் தேதியும் நடைபெற்றது. 3-வது கட்ட தேர்தல் அக்டோபர் 1-ம் தேதி நடைபெற்றது.

    ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலைவருமான உமர் அப்துல்லா பட்காம், கந்தர்பால் ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.

    ஜம்முவில் பெரும்பான்மையாக இந்துக்கள் வாழ்வதால் அவர்களின் வாக்குகள் சிந்தாமல், சிதறாமல் அப்படியே பா.ஜ.க.வுக்கு விழுந்தது. மொத்தமுள்ள 43 தொகுதிகளில் 29 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 8 இடங்களிலும், இதர கட்சிகள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றன.


    இதேபோல, முஸ்லிம்கள் அதிகமாக வாழும் காஷ்மீர் பகுதியில் பா.ஜ.க. ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. மொத்தமுள்ள 47 தொகுதிகளில் தேசிய மாநாடு கட்சி பெரும்பான்மை இடங்களைப் பெற்றது. இந்தியா கூட்டணி 41 இடங்களில் வெற்றிபெற்றது.

    ஆக, மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாடு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு இடத்திலும், பா.ஜ.க. 29 இடங்களிலும், மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி 3 இடங்களிலும், ஆம் ஆத்மி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.

    காஷ்மீரைப் பொறுத்த அளவில் தேசிய மாநாடு கட்சிக்குத்தான் பெரிய வெற்றியாகும்.

    ஜம்மு காஷ்மீரில் கிட்டத்தட்ட 10 ஆண்டுக்கு பிறகு மிகச்சிறப்பான முறையில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது உலகளவிலும், தேசிய அளவிலும் அதிக கவனம் பெற்றது.

    • பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் ஹீரமண்டி இந்தி வெப் சீரிஸ் முதலிடம் பிடித்துள்ளது.
    • மிர்சாபூர் சீசன் 3 இப்பட்டியலில் 4-ம் இடம் பிடித்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டில் முடிவிலும் அந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 விஷயங்களை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இந்தாண்டு பாகிஸ்தான் நாட்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

     ஆச்சரியப்படும் வகையில் இந்த டாப் 10 பட்டியலில் 8 இந்திய திரைப்படங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் இடம்பிடித்துள்ளது. இந்திய சினிமாக்களை பாகிஸ்தான் மக்கள் அதிக அளவில் விரும்புகின்றனர் என்பதையே இது காட்டுகிறது.

     இந்த டாப் 10 பட்டியலில் ஹீரமண்டி இந்தி வெப் சீரிஸ் முதலிடம் பிடித்துள்ளது. பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இப்படத்தை இயக்கியுள்ளார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட இந்தியாவில் சுதந்திரம் பெற, ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய லாகூரில் இருக்கும் ஹீரமண்டியின் தவைஃப்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்களை மையப்படுத்தி இந்த சீரிஸ் எடுக்கப்பட்டுள்ளது. ஆடல், பாடல் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களை தவைஃப்கள் என்று கூறுவார்கள்.

    பாகிஸ்தானின் தலைநகரான லாகூரில் இந்த வெப் சீரிஸின் கதை நடப்பதால் பாகிஸ்தான் மக்கள் இதனை அதிக அளவில் தேடியுள்ளனர்.

     இந்த டாப் 10 பட்டியலில் 5 பாலிவுட் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் '12-த் பெயில்' திரைப்படம் 2-ம் இடத்தையும் ரன்பீர் கபூரின் 'அனிமல்' திரைப்படம் 3-ம் இடத்தையும் ஷ்ரத்தா கபூரின் 'ஸ்ட்ரீ 2' திரைப்படம் 5-ம் இடத்தையும் 'பூல் பூலையா 3' திரைப்படம் 7-ம் இடத்தையும் ஷாருக்கானின் 'டங்கி' திரைப்படம் 8-ம் இடத்தையும் பிடித்துள்ளது.

    ஹீரமண்டி இந்தி வெப் சீரிசை தொடர்ந்து மிர்சாபூர் சீசன் 3 இப்பட்டியலில் 4-ம் இடம் பிடித்துள்ளது. இந்தி பிக் பாஸ் 17 ஆவது சீசன் 9-ம் இடத்தையும் பிடித்துள்ளது.

     இந்த டாப் 10 பட்டியலில் 'இஷ்க் முர்ஷித்' என்ற 'கபி மெயின் கபி தும்' ஆகிய பாகிஸ்தான் நாட்டை 2 டிவி ஷோக்கள் இடம்பெற்றுள்ளது.

    2024ம் ஆண்டு கூகுளில் பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள், வெப் சீரிஸ், ரியாலிட்டி ஷோக்கள்:

    1. ஹீரமண்டி

    2. 12-த் பெயில்

    3. அனிமல்

    4. மிர்சாபூர் சீசன் 3

    5, ஸ்ட்ரீ 2

    6. இஷ்க் முர்ஷித் (பாகிஸ்தான் தொடர்)

    7. பூல் பூலையா 3

    8. டங்கி

    9. இந்தி பிக் பாஸ் சீசன் 17

    10. கபி மெயின் கபி தும் (பாகிஸ்தான் தொடர்)

    • 2024-ம் ஆண்டில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
    • அது மட்டுமே கிரிக்கெட் ரசிகர்களுக்கு 2024-ல் நடந்த மகிழ்ச்சியான சம்பவம் ஆகும்.

    2024-ம் ஆண்டில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. அது மட்டுமே கிரிக்கெட் ரசிகர்களுக்கு 2024-ல் நடந்த மகிழ்ச்சியான சம்பவம் ஆகும்.

    டி20 உலகக் கோப்பையை வென்ற அதே நாளில் ரோகித், விராட் கோலி, ஜடேஜா ஆகிய 3 பேரும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். வெற்றி பெற்ற கையோடு அவர்கள் மூவரும் ஓய்வை அறிவித்தது கிரிக்கெட் ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.

    இதனை தொடர்ந்து இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றது. கவுதம் கம்பீர் புதிய தலைமை பயிற்சியாளராக அந்த தொடரில் இருந்து பொறுப்பேற்றார். ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். அந்த ஒருநாள் தொடரை இந்தியா 0-2 (3) என்ற கணக்கில் தோல்வியடைந்தது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது.

    இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி 27 வருடங்களுக்கு பின் இருதரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. மேலும் 2024-ம் ஆண்டில் ஒரு ஒருநாள் போட்டியில் கூட இந்தியா வெற்றி பெறவில்லை என்ற மோசமான சாதனையையும் படைத்துள்ளது. 2024-ம் ஆண்டில் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணி 2024-ல் ஒரு ஒருநாள் போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. 1979-க்குப் பிறகு இந்தியா ஒரு ஒருநாள் போட்டியில் கூட வெற்றி பெறாதது இதுவே முதல்முறை மற்றும் ஒட்டுமொத்தமாக மூன்றாவது முறையாகும்.

    இந்த தொடரை தொடர்ந்து நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்தத் தொடரை இந்தியா 3-0 என வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நியூசிலாந்து 3-0 என இந்தியாவை ஒயிட் வாஷ் செய்து அதிர்ச்சி அளித்தது.

    முந்தைய ஒருநாள் தொடரில் இலங்கையிடம் வீழ்ந்த இந்தியா, டெஸ்ட்டில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்து மோசமான சாதனை படைத்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் தொடரை இழந்தது மட்டுமல்லாமல், முதல் முறையாக ஒயிட் வாஷ் ஆகி மோசமான சாதனையை ரோகித் தலைமையிலான இந்திய அணி படைத்தது.

    • மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக பாண்ட்யா நியமிக்கப்பட்டது ரசிகர்களிடையே எதிர்ப்பை கிளப்பியது.
    • ஹர்திக் பாண்ட்யா இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

    மும்பை:

    2024-ம் ஆண்டு ஹர்திக் பாண்ட்யாவால் மறக்க முடியாத ஒரு ஆண்டாக இருக்கும். இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்த ஆண்டு ஹர்திக் பாண்ட்யா மிகவும் சிறப்பாக செயல்பட்டார். 2024 டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்ட்யா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார். இந்த ஆண்டின் துவக்கத்தில் அவர் பலராலும் வெறுக்கப்பட முக்கிய காரணம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி தான்.

    2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா கேப்டன் பதவியை ஏற்றார். அதனால் பெரும்பாலான ரசிகர்கள் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக விமர்சனத்தை முன் வைத்து வந்தனர்.

    இந்த நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் முதன்முறையாக ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி படுமோசமான தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை மட்டுமே பிடித்தது.

    ஆனால், அடுத்து நடந்த 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்ட்யா ஆல் ரவுண்டராக மிகச் சிறப்பாக செயல்பட்டார். அந்தத் தொடரில் அவர் எட்டு போட்டிகளில் 144 ரன்கள் எடுத்ததோடு, 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதன்மூலம் 2024 டி20 உலகக் கோப்பையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பெற்று இருந்தார். 

    உலகக் கோப்பை முடிந்த உடன் ஹர்திக் பாண்ட்யா இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில், அவருக்கு அடுத்ததாக இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.


    ஆனால், அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில் ஹர்திக் பாண்ட்யாவும், அவரது முன்னாள் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.


    இப்படியாக 2024-ம் ஆண்டில் உலகக் கோப்பை வென்று இருந்தாலும், தனிப்பட்ட முறையில் பல மோசமான நிகழ்வுகளையும், ஏமாற்றங்களையும், சோகங்களையும் ஹர்திக் பாண்ட்யா எதிர்கொண்டார்.

    • பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா 29 பதக்கங்கள் வென்றது.
    • டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 22 பதக்கங்கள் வென்ற நிலையில் பாரிஸில் ஏழு பதக்கங்கள் அதிகம்.

    பாரிஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 6 பதக்கங்கள் மட்டுமே வென்றது. டோக்கியோவில் ஒரு தங்கத்துடன் 7 பதக்கம் வென்ற நிலையில், பாரிஸில் ஒரு வெள்ளியுடன் 6 பதக்கமாக குறைந்தது.

    அதேவேளையில் பாரா ஒலிம்பிக்கில் டோக்கியோவில் பெற்ற பதக்கங்களை விட ஏழு பதக்கங்கள் அதிகமாக பெற்று 29 பதக்கங்கள் வென்றது. அத்துடன் புள்ளிகள் பட்டியலில் 18-வது இடத்தை பிடித்தது.

    அவானி லெகானா, மோனா அகர்வால் ஆகியோர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் முறையே தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்றனர். லெகானா அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் முதல் நாள் தங்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

    மணிஷ் நர்வால் ஆண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டர் (எஸ்.ஹெச்.1) பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    பெண்களுக்கான 100மீ T35 பிரிவில் பிரீத்தி பால் வெண்கல பதக்கம் வென்றார். பின்னர் 200 மீட்டர் போட்டியிலும் வெண்கபல பதக்கம் வென்றார்.

    5-வது நாளில் மட்டும் 8 பதக்கம் வென்றது இந்தியா. இந்த 8-ல் ஐந்து பதக்கங்கள் பேட்மிண்டனில் வந்தது. நிதிஷ் குமார் தங்கம் வென்றார். சுஹாஸ் யதிராஜ், துலசி முருகேசன் வெள்ளி வென்றனர்.

    ஈட்டி எறிதலில் சுமித் அன்டில் தங்கப்பதக்கம் வென்றார். ஹர்விந்தர் சிங் வில்வித்தை போட்டியில் தங்கம் வென்று, சாதனைப் படைத்தார். வில்வித்தையில் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆண்களுக்கான கிளப் த்ரோ F51 பிரிவில் தரம்பிர் நைன் மற்றும் பிரனவ் சூர்மா முறை தங்கம், வெள்ளி வென்றனர்.

    ஜூடோவில் ஆண்களுக்கான 60 கிலோ J1 பிரிவில் கபில் பர்மார் வெண்கல பதக்கம் வென்றார். ஜூடோவில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.

    தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். ஈட்டி எறிதல் போட்டியில் நவ்தீப் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். பின்னர் ஈரான் வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட வெள்ளி தங்க பதக்கம் ஆனது. இதனால் இந்தியா 29 பதக்கங்கள் வென்றது.

    • ஸ்பெயின் அரையிறுதியில் பிரான்ஸை வீழ்த்தியது.
    • இங்கிலாந்து நெதர்லாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான மிகப்பெரிய கால்பந்து தொடரான யூரோ 2024 ஜெர்மனியில் நடைபெற்றது. இதில் 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவில் உள்ள அணிகளும், அதேபிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளும், 3-வது இடம் பிடித்த முதல் நான்கு அணிகளும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும்.

    அதில் இருந்து 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும் அந்த வகையில் காலிறுதியில் சுவிட்சர்லாந்து அணியை (1-1) பெனால்டி சூட் அவுட்டில் இங்கிலாந்து வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

    துருக்கியை 2-1 என வீழ்த்தி நெதர்லாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.

    ஜெர்மனியை 2-1 என ஸ்பெயின் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

    போர்ச்சுக்கலை (0-0) பெனால்டி சூட்அவுட்டில் 5-3 என பிரான்ஸ் வீழ்த்தி காலிறுதிக்க முன்னேறியது.

    முதல் அரையிறுதியில் இங்கிலாந்து- நெதர்லாந்து- இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 2-1 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    ஸ்பெயின்- பிரான்ஸ் இடையிலான போட்டியில் ஸ்பெயின் 2-1 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

     ஜூலை 15-ந்தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின்- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் ஸ்பெயின் வீரர்கள் ஆக்ரோசமாக விளையாடினர். இதனால் ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்தில் (ஆட்டத்தின் 47-வது நிமிடம்) ஸ்பெயின் முதல் கோலை பதிவு செய்தது. நிக்கோ வில்லியம்ஸ் இந்த கோலை பதிவு செய்தார்.

    பின்னர் நீண்ட நேரம் இரு அணிகளால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் இங்கிலாந்து பதில் கோல் அடித்தது. அந்த அணியின் கோலே பால்மேர் கோல் அடிக்க போட்டி 1-1 என சமன் ஆனது.

    ஆனால் ஸ்பெயின் வீரர் மிகெல் ஒயர்சபால் 86-வது நிமிடத்தில் கோல் அடிக்க ஸ்பெயின் 2-1 என முன்னிலை பெற்றது. அதன்பின் இங்கிலாந்து அணியை கோல் அடிக்கவிடாமல் தடுக்க, 2-1 என இங்கிலாந்தை வீழ்த்தி யூரோம் 2024 சாம்பியன் பட்டத்தை வென்றது.

    ×