search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cons"

    • உடலுக்கு தேவையான புரதத்துக்கும் தயிர் அவசியமானது.
    • உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பது பற்றி பார்ப்போம்.

    உண்ணும் உணவில் தயிர் தவிர்க்கமுடியாத அங்கமாக இருக்கிறது. தயிரை ருசிக்க ஆர்வம் காண்பிக்காதவர்கள் கூட ரைத்தா, லஸ்சி, பச்சடி வடிவில் உட்கொள்கிறார்கள். தயிரில் புரோபயாடிக்குகள் நிறைவாக உள்ளன. அதில் இருக்கும் நன்மை தரும் பாக்டீரியாக்கள் குடல் ஆரோக்கியத்தையும், செரிமானத்தையும் மேம்படுத்தும். எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும், உடலுக்கு தேவையான புரதத்துக்கும் தயிர் அவசியமானது.

    தயிரை எப்போது சாப்பிடுவது சரியானது என்ற குழப்பம் பலரிடம் இருக்கிறது. அதனை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் அவரவர் உடல் நலனை பொறுத்து உண்ணும் நேரத்தை தீர்மானிப்பது நல்லது.

    குறிப்பாக சளி, இருமல், சுவாச கோளாறுகள் சார்ந்த பிரச்சினை இருப்பவர்கள் தயிர் உண்ணும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். எந்தெந்த நேரத்தில் தயிர் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பது பற்றி பார்ப்போம்.

    காலை: சுகாதார வல்லுனர்கள், ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி, காலையில் தயிர் சாப்பிட்டுவிட்டு அன்றைய நாளை தொடங்குவது வளர்சிதை மாற்றத்தை தூண்டும். தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் செரிமானத்தை சீராக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

    பழங்கள் அல்லது முழு தானியங்களுடன் தயிர் கலந்து காலை உணவாக உட்கொள்வது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் அளிக்கும். அன்றைய நாள் முழுவதையும் திருப்தியுடன் உணரவைக்கும்.

    மதியம்: மதிய உணவில் அவசியமாக தயிரை சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் மதியம் தயிர் சாப்பிடுவது அன்றைய நாளில் இழந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை நிரப்ப உதவும்.

    பொதுவாக மதிய வேளை நெருங்கும்போது நமது உடலில் ஆற்றலின் அளவு குறைய தொடங்கும். சாப்பாட்டுடன் தயிர் சாப்பிடும்போது ஊட்டச்சத்து இழப்பை ஈடு செய்துவிடும்.

    அத்துடன் திடீர் பசியை போக்க உதவும். அதனால் மாலை வேளையில் நொறுக்குத்தீனிகளை அதிகம் சாப்பிட தோன்றாது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பேணுவதற்கும் தயிர் வித்திடும்.

    இரவு: ஆயுர்வேத வல்லுனர்களின் கூற்றுப்படி இரவு உணவுடனோ அல்லது இரவு உணவை சாப்பிட்டு முடித்த பிறகோ தயிர் சாப்பிடுவது ஊட்டச்சத்துக்களை சீராக பராமரிக்க உதவும். குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் செய்யும்.

    அதேவேளையில் சளி, சுவாசம் சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் இரவில் தயிரை தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் தயிருடன் அன்றைய நாளை நிறைவு செய்வது செரிமானத்திற்கு நன்மை சேர்க்கும்.

    கால்சியம், புரத தேவைகளை ஈடு செய்யும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படச் செய்யும்.

    ×