என் மலர்
நீங்கள் தேடியது "Isha"
- ஈஷாவில் பொங்கல் விழா பாரம்பரிய முறையில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- களைகட்டிய நாட்டு மாடுகளின் கண்காட்சி மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள்.
கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகி முன்பு "பொங்கல் விழா" நேற்றும் இன்றும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் நாட்டு மாடுகளின் கண்காட்சி மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் பெரும் உற்சாகத்தோடு நடைபெற்றது.
ஈஷாவில் பொங்கல் விழா பாரம்பரிய முறையில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தாண்டு கொண்டாட்டங்கள் மண் பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்வோடு துவங்கியது. இதில் ஈஷாவை சுற்றியிருக்கும் பழங்குடி மக்கள், தன்னார்வலர்கள், ஆசிரமவாசிகள் என ஆயிரக்கணக்கானோர் இணைந்து பானைகளில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.
விவசாயத்தில் மிக முக்கிய பங்காற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஈஷாவில் பராமரிக்கப்படும் நாட்டு மாடுகளுக்கு சிறப்பான முறையில் வழிபாடுகள் செய்யப்பட்டன.
மேலும், அருகி வரும் நாட்டு மாடு இனங்களான காங்கேயம், ஓங்கோல், காங்கிரிஜ், உம்பளாச்சேரி, கிர் உள்ளிட்ட 23 வகையிலான நாட்டு மாடுகளின் கண்காட்சி நடைபெற்றது. ஈஷா கோசாலையில் 700-க்கும் அதிகமான பாரம்பரிய நாட்டு மாடுகள் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து, மாலையில் தூத்துக்குடி சகா கலைக் குழுவினரின் ஒயிலாட்டம், பறையாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட 7 வகையான தமிழர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இவ்விழா இரவு 7 மணியளவில் ஆதியோகி திவ்ய தரிசனத்துடன் நிறைவுப்பெற்றது.
பொங்கல் விடுமுறை நாட்களை முன்னிட்டு நேற்றும் இன்றும் லட்சக்கணக்கான மக்கள் ஈஷா யோக மையத்திற்கு வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஈஷா கிராமோத்சவத்தின் இறுதிப்போட்டிகள் கோவையில் இன்று நடைபெற்றன.
- ஐ.பி.எல்.லை விட பெரியது கிராமோத்சவம் என்றனர் சேவாக், வெங்கடேஷ் பிரசாத்
கோவை:
ஈஷா சார்பில் பாரதத்தின் மாபெரும் விளையாட்டு திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவத்தின் இறுதிப்போட்டிகள் சத்குரு முன்னிலையில் இன்று கோவையில் கோலாகலமாக நடைபெற்றது.
கோவை ஆதியோகி முன் நடைபெற்ற இறுதிப்போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், வெங்கடேஷ் பிரசாத், பாரா ஒலிம்பிக் வீரர்கள் மாரியப்பன் தங்கவேலு, துளசிமதி மற்றும் பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர்.
இந்த விழாவில் சத்குரு பேசியதாவது:
ஒரு காலத்தில் 100 சதவீத கல்வி பெற்றதாக இருந்த நாடு, விடுதலை பெறும்போது 93 சதவீதம் கல்வியறிவு இல்லாத நாடாக மாறி இருந்தது. இது வெறும் 300 ஆண்டுகளில் நடைபெற்றது.
ஆனால் கடந்த 75 வருடங்களில் நாம் மகத்தான பல விஷயங்களைச் செய்துள்ளோம். புத்திசாலித்தனம், உறுதி, திறமை போன்ற பல அம்சங்கள் நம் வாழ்க்கையில் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் நமக்காக செயல்பட வேண்டும் என்றால் நாம் புத்துணர்வாக, உற்சாகமாக இருக்க வேண்டும். நீங்கள் புத்துணர்வாக இல்லை என்றால் எவ்வளவு பணம், சொத்து, திறமை இருந்தாலும் உங்களால் எதையும் உருவாக்க முடியாது. அந்த வகையில் கிராமங்களில் புத்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கிராமோத்சவம் நடத்தப்படுகிறது.
எளிமையாக துவங்கப்பட்ட இந்த கிராமோத்சவம் 5 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்குபெறும் பெரிய விழாவாக இன்று மாறி உள்ளது. ஆனால் இது போதாது. ஈஷா கிராமோத்சவம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபெற வேண்டும் என தெரிவித்தார்.
இந்த விழாவில் கிரிக்கெட் வீரர் சேவாக் பேசியதாவது:
மனித நல்வாழ்விற்காக சத்குரு செய்து வரும் மகத்தான பணிக்கு என் வணக்கங்கள். கிராமோத்சவம் திருவிழாவின் நோக்கம், தீவிரம் அனைத்தையும் பார்க்க ஆனந்தமாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தி மகத்தான விளையாட்டுத் திருவிழாவாக இது நடந்து இருக்கிறது. இதற்கு சத்குருவிற்கு என் நன்றிகள். நீங்கள் வாழ்வதற்காக எதை செய்தாலும், விளையாட்டிற்காக தினமும் 10 - 15 நிமிடங்கள் செலவிடுங்கள்.
விளையாட்டு என்பது மகத்தான ஆசிரியர், அது குழுவாக இணைந்து செயல்படுவதை, எதிர்த்துப் போராடுவதை, இக்கட்டான சூழலில் இருந்து வெளியேறுவதை, தோல்வியிலிருந்து மீண்டு எழுவதை என வாழ்வின் பல அம்சங்களை நமக்கு கற்றுத் தருகிறது என கூறினார்.
பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் பேசுகையில், காஞ்சிபுரத்தில் இருந்து தினக்கூலிக்கு பிறந்த பெண்ணால் சாதிக்க முடியும் என்றால் உங்களாலும் சாதிக்க முடியும். பெண்கள் விளையாட்டில் சாதனை படைக்க சத்குரு ஊன்றுகோலாகத் திகழ்கிறார். நான் ஏராளமான சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றிருக்கிறேன். அந்த நேரத்தில் எல்லாம் எனக்கு எழுந்த மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர சத்குருவின் உத்வேக வார்த்தைகள் எனக்கு உதவியாக இருந்தது என்றார்.
கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் பேசுகையில், ஐ.பி.எல். போட்டிகளை ஒருங்கிணைப்பது கூட எளிதானது. இது போன்ற கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்துவதுதான் கடினமானது. இதனை செய்யும் ஈஷாவிற்கும் சத்குருவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
வாலிபால் இறுதிப்போட்டியில் கர்நாடக மாநிலம் பனகல் கிராமத்தைச் சேர்ந்த அலிப் ஸ்டார் அணி வென்று முதல் இடம் பிடித்தது. இரண்டாம் இடத்தை உடுப்பி மாவட்டம் பள்ளிகிராமத்தைச் சேர்ந்த பள்ளி பிரண்ட்ஸ் அணி பிடித்தது.
அதேபோல் பெண்களுக்கான த்ரோபால் இறுதிப்போட்டியில் கர்நாடக மாநிலம் மார்கோடு கிராமத்தைச் சேர்ந்த அணி வென்று முதல் இடத்தை பெற்றது. இரண்டாம் இடத்தை தமிழ்நாட்டில் இருந்து புள்ளாக்கவுண்டன் புதூர் கிராம அணி பிடித்தது
மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட வாலிபால் போட்டிகளை பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் துவங்கி வைத்தார். இதில் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். இதில் முதல் இடத்தை கோவை அணியும், இரண்டாம் இடத்தை கிருஷ்ணகிரி அணியும் வென்றன.
16-வது ஈஷா கிராமோத்சவ இறுதிப்போட்டியில் முதல் இடத்தை பிடித்த அணிகளுக்கு 5 லட்சமும், 2-ம் இடத்தைப் பிடித்த அணிகளுக்கு 3 லட்சமும், 3 மற்றும் 4-ம் இடத்தை பிடித்த அணிகளுக்கு தலா 1 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
முன்னதாக, ஈஷாவுடன் இணைந்து யுவா கபடி லீக் நடத்திய கபடி போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது.
அதேபோல், ஈஷாவுடன் இணைந்து கோயம்புத்தூர் கிரிக்கெட் அசோசியேஷன் நடத்திய சூப்பர் ஓவர் கிரிக்கெட் சேலஞ்ச் போட்டியில் 150 அணிகள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சேவாக் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் வழங்கப்பட்டது. சிலம்பம் போட்டிகளில் 500-க்கும் மேற்பட்டோர் வயது அடிப்படையில் 6 பிரிவுகளில் கலந்துகொண்டனர்.
இதனுடன் தென்னிந்திய மாநிலங்களின் பாரம்பரிய கலைகளைப் பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த வகையில் தமிழ்நாடு சார்பில் பறையாட்டம் மற்றும் தவில், நாதஸ்வரம் இசை நிகழ்ச்சிகளும், கர்நாடகா சார்பில் பிலி வேசா எனும் புலி நடனமும், தெலுங்கானா சார்பில் கோண்டு பழங்குடிகளின் குசாடி நடனமும், கேரளா சார்பில் செண்ட மேளம் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் பஞ்சரி மேளம், 1000 பேர் கலந்துகொண்ட வள்ளி கும்மி, 500 பேர் பங்கேற்ற ஒயிலாட்டம், 1,500 பேர் பங்கேற்ற கோலப் போட்டி ஆகிய நிகழ்ச்சிகளும் பிரம்மாண்டமாக நடைபெற்றன.
- ஆரத்தி குளிர்கால கதிர்திருப்ப (Winter Solstice) நாள் முன்னிட்டு ஈஷாவில் நேற்று விமரிசையாக நடைபெற்றது.
- 2017-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் குளிர்கால கதிர்திருப்ப நாளன்று ஈஷாவில் நடத்தப்பட்டு வருகிறது.
ஈஷா யோக மையத்தில் ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு "சப்தரிஷி ஆரத்தி" நேற்று (டிச.21) சிறப்பாக நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை மாவட்டம் சிவராமபுரத்தை சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் திருமடத்தை சேர்ந்த ஸ்ரீமதே வாயு சித்த ராமானுஞ்ஜதாச ஜீயர் சுவாமிகள் கலந்து கொண்டார்.
இந்த "சப்தரிஷி ஆரத்தி", சிவன் தன் ஏழு சீடர்களான சப்தரிஷிகளுக்கு, அவரது அருளை பெற கற்றுக்கொடுத்த சக்திவாய்ந்த ஆன்மீக செயல்முறை. இந்த ஆரத்தி குளிர்கால கதிர்திருப்ப (Winter Solstice) நாளை முன்னிட்டு ஈஷாவில் நேற்று விமரிசையாக நடைபெற்றது.
ஈஷா யோக மையம் குறித்து ஜீயர் சுவாமிகள் கூறியதாவது, "இந்த இடத்தில் சுவாமிகளை தரிசனம் செய்வது பெரும் பாக்கியம், அடியேன் பெருமாள் பக்தர், ஆனால் ஹரியும் ஹரனும் ஒன்று என்ற தத்துவத்தின் அடிப்படையில் இந்த சிவாலயத்திற்கு வந்திருக்கின்றோம்.
ஈஷாவிற்கு வந்து இருப்பது சொர்க்கத்தில் இருப்பது போன்று, அந்த சிவனின் பாதங்களில் இருப்பது போல் தான் அடியேனுக்கு இருக்கிறது. இங்கு நடக்கும் ஒவ்வொரு செயல்களும் தனிபட்ட நபரின் செயல்பாட்டில் நடப்பதல்ல. இறைவன் இந்த இடத்தில் இந்த காரியத்தை நடத்துவதற்காக சத்குருவை அனுப்பி ஏற்பாடுகளை செய்து வழி வகுத்து இருக்கிறான்.
இன்றைய காலகட்டத்தில் ஒரு குடும்பத்தில் இருக்கும் குழந்தைகள் கூட சொல்வதை சரியாக கேட்பதில்லை. அனைத்தும் ஒன்றே என்று இவ்வளவு பெரிய அமைப்பை உருவாக்கி இருப்பது தனிபட்ட ஒரு நபர் செய்யக் கூடியது இல்லை. இது இறைவனின் கட்டளை படி சத்குரு அவர்கள் செய்து வருகிறார்கள்.
இங்குள்ள பக்தர்கள் மிகவும் ஆத்மார்த்தமாக தொண்டு செய்கிறார்கள். இப்படி மனப்பூர்வமாக செய்வது மிகவும் சிறப்பானது. இங்கு ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் மிக அற்புதமாக நடைபெறுகிறது. மென்மேலும் இது சிறப்பாக நடைபெற வேண்டும் என்பது அடியேனின் ஆசை, இறைவன் நாராயணனும் இதற்கு உறுதுணையாக இருக்க பிரார்த்தனை செய்கிறேன்.
இங்குள்ள ஈஷா சமஸ்கிருதி பள்ளியில் தமிழ், சமஸ்கிருதம், நாட்டியம், இசை ஆகியன சொல்லி கொடுக்கப்படுகின்றன. இது வார்த்தைகளில் விவரிக்க முடியாத வகையில் சிறப்பாக நடைபெறுகிறது. இது அனைவராலும் முடியாத ஒன்று, தேவலோகத்தில் நடப்பது போல் இங்கு சத்குரு நினைப்பதை சிஷ்யர்கள் செய்கிறார்கள்.
சப்தரிஷி ஆரத்தியில் சிவாச்சாரியார்கள் செய்த பூஜை, அலங்காரம், ஆரத்தி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
அதனைத் தொடந்து நடைபெற்ற ஆதியோகி திவ்ய தரிசனத்தை எவ்வாறு விவரிப்பது என்று தெரியவில்லை, இது போல் முன்பு நாம் பார்த்தது இல்லை, இதுவே முதல் முறை. நான் ஒரு ஜீயர், இங்கு சிவன் முன்பு அமர வைத்து இருக்கிறாய், உன் திருவிளையாடல் தான் என்ன என்று இறைவனிடம் கேட்டுக் கொண்டு இருந்தேன். அந்த அளவிற்கு மிகவும் அற்புதமான ஆனந்தமான காட்சியை காணும் போது நம்மையே மறந்து மெய் சிலிர்த்து போய் விட்டேன்." எனக் கூறினார்.
இந்நிகழ்ச்சிக்காக, காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து 7 உபாசகர்கள் ஈஷாவிற்கு வருகை தந்தனர். அவர்கள் யோகேஷ்வர லிங்கத்தை சுற்றியமர்ந்து சந்தனம், புனித நீர், வில்வம், மலர்கள் போன்ற மங்கள பொருட்களால் லிங்கத்தை அலங்கரித்து ஆரத்தி செயல்முறையை துவங்கினர்.
அதனைத் தொடர்ந்து தனித்துவமான மந்திர உச்சாடனைகளுடன் அவர்கள் நிகழ்த்திய ஆரத்தி செயல்முறை அங்கு சக்திவாய்ந்த சூழலை உருவாக்கியது. மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த செயல்முறை இரவு 08:30 மணி வரை நடைபெற்றது. பிறகு ஆதியோகி திவ்ய தரிசனமும், சயன ஆரத்தியும் நடைபெற்றது.
முன்னதாக கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, அன்னூர் உள்ளிட்ட பகுதில் இருந்து நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் ஈஷாவிற்கு நேற்று வந்திருந்தனர். அவர்கள் சூர்ய குண்ட மண்டபத்தில் தேவாரப் பதிகங்களைப் பாடினர். அவர்களும் மாலை நடைபெற்ற சப்தரிஷி ஆரத்தியில் பங்கேற்றனர். கோவை பைரவ பீடத்தின் சுவாமிகள் கிருஷ்ணமூர்த்தி, வாசு ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சப்தரிஷி ஆரத்தி வாரணாசியில் இருக்கும் புகழ்பெற்ற 'காசி விஸ்வநாதர் கோவிலில்' ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதன் புனிதம் மாறாமல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தப்படியாக ஈஷாவில் ஆதியோகி முன்புள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு மட்டுமே இந்த சப்தரிஷி ஆரத்தி நடத்தப்படுவது குறிப்பிட்டதக்கது. இது கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் குளிர்கால கதிர்திருப்ப நாளன்று ஈஷாவில் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கோவையில் குவிந்தனர்.
- ஈஷா யோக மைய வளாகத்தில் 1,00,008 அகல் விளக்குகளை ஏற்றி இருந்தனர்.
அமெரிக்காவில் இருந்து ஏழு மாதங்களுக்கு பிறகு இன்று (14/12/2024) தமிழ்நாடு திரும்பிய சத்குருவிற்கு, கோவை விமான நிலையம் முதல் ஈஷா யோக மையம் வரை வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்து நின்று பிரம்மாண்டமான வரவேற்பினை வழங்கினர்.
அமெரிக்காவில் இருக்கும் ஈஷா யோக மையத்திற்கு கடந்த மே மாதம் சென்ற சத்குரு ஏழு மாதங்களுக்குப் பிறகு இன்று தமிழ்நாடு திரும்பினார். அவரை வரவேற்பதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கோவையில் குவிந்தனர்.
சத்குரு மாலை 6 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு மட்டுமே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர். மேலும், சத்குருவுக்கு மக்கள் ஆரத்தி காட்டி வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து கோவை விமான நிலையத்தில இருந்து ஈஷா யோக மையம் வரை பல்வேறு இடங்களில் மக்கள் திரளாக அணிவகுத்து நின்று மலர்களை தூவியும், விளக்குகளை ஏந்தியும், மேள தாளத்துடன் சத்குருவை வரவேற்றனர்.
குறிப்பாக அவிநாசி சாலையில் உள்ள நாகர்கோவில் ஆர்ய பவன் உணவகத்தில் திரண்டு இருந்த மக்கள் அவரை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.
ரேஸ் கோர்ஸ் சாலையில் வள்ளி கும்மி நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காளம்பாளையம், மாதம்பட்டி, பூலுவப்பட்டி, ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம், செம்மேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ளூர் கிராம மக்கள் சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பினை வழங்கினர்.
ஈஷா யோக மையத்தின் நுழைவாயிலான மலைவாசலில், ஈஷாவை சுற்றியுள்ள பழங்குடி மக்கள் திரண்டு அவர்களின் பாரம்பரிய இசை, நடனம் மற்றும் வான வேடிக்கைகளுடன் கொண்டாட்டமாக சத்குருவை வரவேற்றனர்.
மேலும் ஆதியோகியில் 10,000-க்கும் அதிகமானோர் திரண்டு இருந்தனர். அவர்கள் சத்குருவை வரவேற்கும் பொருட்டு ஆதியோகி மற்றும் ஈஷா யோக மைய வளாகத்தில் 1,00,008 அகல் விளக்குகளை ஏற்றி இருந்தனர்.
ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் தேவாரம் பாடினர். மேலும் ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரமவாசிகள் பாரம்பரிய இசை மற்றும் நடனங்களுடன் சத்குருவை வரவேற்றனர். ஆதியோகி முன்பு திரண்டு இருந்த மக்கள் முன்பு சத்குரு உரையாற்றினார்.
- சென்னையில் நடைபெற்ற நபார்டு வங்கியின் 43-வது ஆண்டு விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இந்த விருது வழங்கினார்.
- ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலுடன் வெற்றிகரமாக இயங்கி வரும் FPO-க்கள்.
இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) சார்பில் டெல்லியில் கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற தேசிய அளவிலான விருது வழங்கும் விழாவில், கர்நாடகாவின் குடகு பகுதியில் இயங்கி வரும் 'பொன்னாடு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு' சந்தைகள் இணைப்பு பிரிவில் 'FPO எக்ஸலன்ஸ் விருது' வழங்கப்பட்டது.
அதே போல கோவை மாவட்டம் தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு நபார்டு வங்கியின் 2023 - 24ம் நிதியாண்டிற்கான சிறந்த FPO விருது வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் நபார்டு வங்கியின் ஆதரவில் சிறப்பாக செயல்படும் FPO-க்களில் ஒன்றாக இந்நிறுவனம் அங்கிகரிக்கப்பட்டு இவ்விருது வழங்கப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற நபார்டு வங்கியின் 43-வது ஆண்டு விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இந்த விருதினை வழங்கினார்.
இந்நிறுவனம் தென்னையை முதன்மை பயிராக கொண்டு, 750 விவசாயிகளோடு கோவை சுல்தான்பேட்டை பகுதியில் தொடங்கப்பட்டது.
மேலும் கர்நாடகா தும்கூரில் இயங்கி வரும் 'திப்தூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு' சிறந்த தரத்திலான உற்பத்தி மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல முறையில் பொருள்களை பேக் செய்து வழங்கி வருதற்கான விருதினை கர்நாடக மாநிலத்தின் 'வேளாண் உற்பத்தி பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி கழகம்( KAPPEC)' கடந்த நவம்பர் 8-ஆம் தேதி வழங்கி கவுரவித்தது.
வேளாண் செய்திகளை பிரத்யேகமாக வெளியிடும் 'க்ரிஷி ஜாக்ரன்' பத்திரிக்கையும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலும் (ICAR) இணைந்து நீலகிரி கூடலூர் பகுதியில் இயங்கி வரும் 'மலநாடு உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு' Millionaire Farmer of India (MFOI) என்கிற விருதினை வழங்கியுள்ளது.
மேலும் இதே MFOI விருது கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் இயங்கி வரும் 'வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும்' வழங்கப்பட்டது.
ஈஷாவின் வழிகாட்டுதலில் இயங்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPO) சிறு மற்றும் குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து, விவசாய விளை பொருட்களை சந்தைப்படுத்துதல், இடுபொருள் விலையை குறைத்தல், மதிப்பு கூட்டுதல், விலை நிர்ணயிக்கும் ஆற்றலை மேம்படுத்துதல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை வழங்கி நீடித்த உயர் வருமானம் மற்றும் நிகர லாபத்தை விவசாயிகள் பெற உதவுகிறது.
மேலும் ஈஷாவின் FPO-க்களில் உறுப்பினர்களாக இருக்கும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக இலவச அதிநவீன மண் பரிசோதனை ஆய்வகம் கோவையில் செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் மத்தியில் அதிக அளவிலான உர பயன்பாட்டை குறைத்து, மண்ணிற்கு தேவையான உரத்தினை மட்டும் சரியாக தேர்வு செய்து பயன்படுத்தும் நோக்கிலும், படிப்படியாக மண் வளத்தை கூட்டி இயற்கை விவசாயத்தை நோக்கி அவர்களை நகர்த்த உதவும் வகையில் இந்த ஆய்வகம் செயல்பட்டு வருகிறது.
- ஈஷா யோக மையத்தில் நடக்கும் பல விஷயங்களை 2 நாட்களாக நேரில் கண்டோம்.
- யோகம், கல்வி, மரம் வளர்ப்பு, நாட்டு மாடுகள் வளர்ப்பு என பல சேவைகளை ஈஷா செய்து வருகிறது.
ஈஷா யோக மையத்திற்கு வருகை தந்த தவத்திரு தருமபுரம் ஆதீனம் அவர்கள், 'யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை' என்று துவங்கும் திருமூலர் திருமந்திரத்தில் கூறியுள்ள நான்கு நெறிகளும் ஈஷாவில் கடைப்பிடிக்கப்படுகிறது என பாராட்டினார்.
தருமபுரம் ஆதீன மடத்தின் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கோவை ஈஷா யோக மையத்திற்கு நேற்றும் இன்றும் வருகை தந்தார். தியானலிங்கம் முன்பாக ஈஷா பிரம்மச்சாரிகளும், தன்னார்வலர்களும் ஆதீனத்தை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். அப்போது, ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளி மாணவர்களின் தேவாரப் பாடல்களை அவர் ஆர்வத்துடன் கேட்டு ரசித்தார்.
பின்னர் அவர் தியானலிங்கத்தில் நடைபெற்ற நாத ஆராதனையில் பங்கேற்றார். முன்னதாக, சூர்ய குண்டம், நாகா சந்நிதி, லிங்கபைரவி சந்நிதி ஆகிய இடங்களில் தரிசனம் செய்தார். மேலும், ஆதியோகி திவ்ய தரிசனத்தையும் நேரில் கண்டு ரசித்தார். ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளியையும், கோசாலையும் அவர் பார்வையிட்டார்.
ஈஷாவிற்கு முதல்முறையாக வருகை தந்த ஆதீனம் அவருடைய அனுபவத்தை பகிர்ந்தார்.
அப்போது அவர், "ஈஷா யோக மையத்தில் நடக்கும் பல விஷயங்களை 2 நாட்களாக நேரில் கண்டோம்.
"யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே" என்று திருமூலர் கூறிய 4 நெறிகளும் ஈஷாவில் கடைப்பிடிக்கப்படுகிறது.
திருமூலர், தாயுமானவர், பதஞ்சலி முனிவர் வரிசையில் நம்முடைய தருமை ஆதீனமும் யோக கலையை பயிற்றுவிக்கும் சேவையை செய்து வருகிறது. இக்கலையானது நம் சைவ சித்தாந்த மரபில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என 4 நிலைகளாக சொல்லப்படுகிறது. அத்தகைய மிகவும் அற்புதமான யோக கலையை சத்குரு அவர்கள் உலகம் முழுவதும் பயிற்றுவித்து வருவது பாராட்டுக்குரியது.
அதேபோல், நம்முடைய மரபில் சிவபெருமானும் மரமும் ஒன்று. சிவ பெருமான் விஷத்தை தான் சாப்பிட்டுவிட்டு, அன்பர்களுக்கும் தேவர்களுக்கும் அமிர்தத்தை வழங்கினார். அதேபோல் மரங்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு தரும் கார்பன் டை ஆக்ஸைடை உண்டுவிட்டு, மற்ற உயிர்களுக்கு உயிர் வாழ ஆக்சிஜைனை வழங்குகின்றன.
அந்த வகையில், மரங்கள் வளர்க்கும் சேவையை சத்குருவும் ஈஷா யோக மையமும் மிகச்சிறப்பாக செய்து வருகின்றனர். நம்முடைய தருமை ஆதீனத்தின் மணிவிழாவை முன்னிட்டு ஈஷா யோக மையம், தருமை ஆதீனம் மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து 60,000 மரக்கன்றுகள் நடும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதுதவிர, நூற்றுக்கணக்கான நாட்டு பசுக்களை பராமரிக்கும் மிகப்பெரிய தொண்டையும் ஈஷா செய்து வருவதை நேரில் பார்த்து மகிழ்ந்தோம். ஈஷா சம்ஸ்கிருதி பள்ளியில் படிக்கும் சிறு குழந்தைகளும் திருமுறைகளையும், தேவாரப் பாடல்களையும் மிக அழகாக பண்ணோடு பாடியது ஆச்சரியமாக இருந்தது.
அகத்திய முனிவர் தோற்றுவித்த அருகி வரும் களரி என்னும் பாரம்பரிய தற்காப்பு கலையையும் இம்மாணவர்கள் சிறப்பாக கற்று தேர்ந்து வருகிறார்கள். களரி உள்ளிட்ட தற்காப்பு கலைகள் முனிவர்களால் அருளப்பட்டவை. அதற்கான முழுமையான பயிற்சிக் களத்தையும் ஈஷா வழங்குகிறது. கராத்தே போன்ற சில நவீன முறைகளை நோக்கியே அனைவரும் செல்லும்போது நம் பாரம்பரியமான தற்காப்பு கலைகளை ஈஷா பேணி வருகிறது.
திருவெண்காட்டில் உள்ள சூர்ய குண்டத்திலும், சோம குண்டத்திலும் கண்ணகி நீராடி விட்டு வழிபாடு நடத்தியதாக சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், ஈஷாவிலும் சூர்ய குண்டம், சந்திர குண்டம் என 2 குளங்களில் ஆண்களும், பெண்களும் புனித நீராடிவிட்டு தியானலிங்கம் மற்றும் லிங்கபைரவியை வணங்கி வழிப்படுகின்றனர்.
இப்படி, யோகம், கல்வி, மரம் வளர்ப்பு, நாட்டு மாடுகள் வளர்ப்பு என பல சேவைகளை ஈஷா செய்து வருகிறது. வாழ்க சத்குருவின் தொண்டு, வளர்க அவரின் பணிகள்." என மனதார வாழ்த்தி விடைப்பெற்றார்.
மேலும் ஈஷாவின் பணிகளுக்கு திருமுறைகள் சிறுபஞ்ச மூலம் போன்ற பற்பல நூல்களில் இருந்து மேற்கோள்காட்டி ஒப்பிட்டு ஆசி நல்கினார்.
மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும் ஆதியோகி ரத யாத்திரையையும் ஆதீனம் அவர்கள் இன்று ஆரத்தி காட்டி வழிப்பட்டு தொடங்கி வைத்தார்.
- ஈஷா சார்பில் ஆண்டுதோறும் கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
- திருச்சியில் நடைபெற்ற வாலிபால் போட்டிகளை அமைச்சர் KN நேரு துவக்கி வைத்தார்.
ஈஷா சார்பில் நடைபெறும் 'பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவத்தை' முன்னிட்டு, மண்டல அளவிலான போட்டிகள் தமிழகத்தில் மொத்தம் 6 இடங்களில் நடைபெற்றது. திருச்சியில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களை மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் KN நேரு அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
ஈஷா சார்பில் ஆண்டுதோறும் கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்தாண்டிற்கான முதற்கட்ட கிளஸ்டர் அளவிலான போட்டிகள் கடந்த நவம்பர் மாத வார இறுதி நாட்களில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான வாலிபால் போட்டிகளும், பெண்களுக்கான த்ரோபால் போட்டிகளும் நடத்தப்பட்டன.
அந்த வகையில் முதல் கட்ட கிளஸ்டர் அளவிலான போட்டிகள் 5 தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் ஒரு யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் நடைபெற்றது. 162 இடங்களில் நடைபெற்ற முதற்கட்டப் போட்டிகளில் 5,000 அணிகள் மற்றும் 43,144 வீரர் வீராங்கணைகளும் பங்கேற்றனர். இதில் 10,311 பேர் கிராமங்களில் வசிக்கும் குடும்ப பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளஸ்டர் அளவில் தேர்வான அணிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, மதுரை, வேலூர் ஆகிய 6 இடங்களில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் மொத்தம் 136 அணிகளும், ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கணைகளும் கலந்து கொண்டனர்.
இதில் திருச்சி அண்ணா மைதானத்தில் நடைபெற்ற வாலிபால் போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் KN நேரு அவர்கள் வாழ்த்து தெரிவித்து துவக்கி வைத்தார். இதில் சின்னத்திரை நகைச்சுவை கலைஞர்களான KPY பாலா, வினோத் மற்றும் விக்னேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று கிராமத்து விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருநெல்வேலியில் நடைபெற்ற போட்டிகளை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் துவங்கி வைத்தார். இதில் பிரபல நகைச்சுவை நடிகர் புகழ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அதே போல் கோவையில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பு விருந்தினராக பிரபல சின்னத்திரை தொகுப்பாளரும், நடிகருமான ரக்ஷன் பங்கேற்றார்.
வேலூரில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளை வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி துணைத் தலைவர் செல்வம் துவக்கி வைத்தார். இதில் சின்னத்திரை கலைஞர் ஈரோடு மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் மதுரையில் வெற்றி பெற்ற அணிகளுக்கு உதவி ஆணையர் திரு. ராஜேஷ்வரன் பரிசுகள் வழங்கினார். அதோடு சேலத்தில் நடைபெற்ற போட்டிகளில் முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.
இந்த விளையாட்டுப் போட்டிகளுடன் சிலம்பம், வள்ளி கும்மி, படுகர் நடனம், மயிலாட்டம், மாடு ஆட்டம், அறுவடை ஒயிலாட்டம், பறையாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும், அனைவருக்கும் இலவச யோக வகுப்புகளும், பார்வையாளர்களுக்கான கேளிக்கை விளையாட்டுகளும் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மண்டல அளவில் நடைபெற்ற போட்டிகளில் தேர்வான அணிகள் கோவையில் ஆதியோகி முன்பு டிசம்பர் 28-ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் தென்னிந்திய அளவிலான இறுதிப் போட்டிகளில் பங்கேற்க உள்ளன.
கிராம மக்களின் வாழ்வியலில் விளையாட்டு போட்டிகள் மூலம் புத்துணர்வு மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரவும், விளையாட்டை கிராம மக்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாக மாற்றவும் கிராமோத்சவ திருவிழாவை ஈஷா ஆண்டுதோறும் நடத்துகிறது.
விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதால் கிராமப்புற இளைஞர்கள் போதை பழக்கங்களுக்கு அடிமையாவதில் இருந்து விடுபடுகின்றனர், மேலும் கிராமங்களில் சாதி, மத, இன வேறுபாடுகளைத் தாண்டி மக்கள் ஒன்றிணையும் வாய்ப்பு மேம்படுகிறது. குறிப்பாக கிராமப்புற பெண்கள் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு விளையாடுவது இல்லை, இந்த நிலையை மாற்றி அவர்களும் விளையாடுவதற்கான களத்தை கிராமோத்சவ விழா அமைத்து தருகிறது.
- இந்தியா வாழை உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கிறது.
- 37 மில்லியன் டன் உற்பத்தி செய்கிறோம்.
'ஈஷா மண் காப்போம்' இயக்கம் சார்பில் 'வாழ வைக்கும் வாழை' எனும் பிரம்மாண்ட பயிற்சி கருத்தரங்கு திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ஸ்காட் கல்லூரியில் நடைப்பெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ICAR-NRCB இயக்குனர் செல்வராஜன், "சத்குரு உலகமெங்கும் பயணித்து, மண் காப்போம், மண் நமது உயிர் என ஐ.நா அமைப்புகள் மற்றும் பல்வேறு உலக நாடுகளில் மண் வளம் காக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்" என பாராட்டினார்.
இத்திருவிழாவின் நோக்கம் குறித்து மண் காப்போம் இயக்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஶ்ரீமுகா பேசுகையில், "திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாழை விவசாயம் பிரதானமாக இருக்கிறது. பல விவசாயிகள் வாழை விவசாயம் என்பது வாழை சாகுபடியோடு நின்று விடுவதாக நினைக்கிறார்கள்.
ஆனால் வாழையில் அதன் அனைத்து பாகங்களையும் மதிப்பு கூட்ட முடியும். இவ்வாறு மதிப்பு கூட்டுவதன் மூலம் சிறு விவசாயிகள் கூட தொழில் முனைவோர்கள் ஆக முடியும். எனவே அது குறித்த உத்திகளை, தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு விளக்கும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது" என பேசினார்.
இவ்விழாவில் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் செல்வராஜன் பேசுகையில், "ஈஷாவால் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தோடு பங்கேற்கின்றனர். இது போன்ற விவசாயிகளை ஒருங்கிணைத்து பயிற்சி கருத்தரங்குகளை நடத்துவதற்கு ஈஷாவிற்கு நன்றி.
இந்தியா வாழை உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கிறது. நாம் 10 லட்சம் ஹெக்டேர் வாழை சாகுபடி செய்து 37 மில்லியன் டன் உற்பத்தி செய்கிறோம். ஆனால் 3 லட்சம் டன் மட்டுமே ஏற்றுமதி செய்கிறோம்.
மேலும் ஒரு ஏக்கர் பூவன் வாழை தண்டிலிருந்து 20,000 லிட்டர் ஜூஸ் எடுக்கலாம். 200 மில்லி ஜூஸை ரூ.25 விற்கிறோம். 20,000 லிட்டரில் 25 லட்சம் வரை வருமானம் எடுக்க முடியும் இது 6 மாதம் வரை கெட்டுப்போகாது.
மேலும் சிறுநீரக கல்லை குறைக்க இந்த ஜூஸ் உதவுகிறது. இது போல வாழை பூ, வாழை காய் என அனைத்தையும் மதிப்பு கூட்டலாம்" எனப் பேசினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய முன்னோடி விவசாயி திருமதி. சியாமளா குணசேகரன், 'எந்தவொரு தொழில் செய்பவரும் தான் உற்பத்தி செய்வதை குறைந்த விலைக்கு விற்பதில்லை.
ஆனால் விவாசயிகள் மட்டுமே தங்கள் கண் முன்பே தங்கள் உற்பத்தியை குறைந்த விலைக்கு விற்கும் சூழல் உள்ளது. இதிலிருந்து வெளி வர வேண்டும் என நினைத்தேன்.
வாழை சார் பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய தொடங்கினேன். நம் தோட்டத்தில் பணம் கொட்டிக் கிடக்கிறது. பண்ணையில் கிடைக்கும் அருகம்புல் எடுத்து ஜூஸ் போட்டு கொடுத்தால் காசு, குப்பை மேனியை சோப் செய்து கொடுத்தால் காசு, ஒரு காலத்தில் என் தோட்டத்தில் தேங்காய் மரங்களை வெறும் ரூ.5000-த்திற்கு குத்தகை கொடுத்தேன். ஆனால் இப்போது ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் எடுத்து ஒரு கிலோ சோப் செய்கிறோம் அதை ரூ.800-க்கு கொடுக்கிறோம்.' எனப் பேசினார்.
மேலும் வாழை சார் தொழில் முனைவோர்களான எஸ்.கே. பாபு, ராஜா, அஜிதன், ஜமின் பிரபு மற்றும் முன்னோடி விவசாயி சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் இவர்களோடு திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகளான கற்பகம், சுரேஷ்குமார், ஜெயபாஸ்கரன் மற்றும் ஜி. பிரபு ஆகியோர் பங்கேற்று தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் சேவைகள், அரசு திட்டங்கள், வாழை ரகங்கள், அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள், மதிப்புகூட்டப்பட்ட பொருட்களுக்கு வாழை சார் ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை குறித்து பேசினர்.
இந்த கருத்தரங்கின் முக்கிய நிகழ்வுகளாக வாழையில் மதிப்பு கூட்டப்பட்ட 50-க்கும் மேற்பட்ட உணவு பொருட்கள் மற்றும் வாழை நாரால் ஆன 150-க்கும் மேற்பட்ட கைவினை பொருட்கள் விற்பனைக்கும் கண்காட்சிக்கும் வைக்கப்பட்டன.
மேலும் இயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்பட்ட சிறுதானிய திண்பண்டங்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டது.
வாழை விவசாயிகளுக்கும் வாழை சார் தொழில் முனைவோர்களுக்கும் 'சிறந்த வாழை விவசாயி' விருதுகள் வழங்கப்பட்டன.
'ஈஷா மண் காப்போம்' இயக்கம் கடந்த 15 வருடங்களாக நம் மண்ணின் வளத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து விவசாய பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.
இவ்வியக்கம் மூலம் இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 13-ஆவது இன்சைட் நிகழ்ச்சி நேற்று தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- ஒவ்வொரு தலைவர்களும் புதுமையான அணுகுமுறைகள், ஆய்வு மற்றும் அச்சமின்மை என்ற கலாச்சாரத்தை உருவாக்கினர்.
சத்குரு அகாடமி சார்பில் "இன்சைட்" எனும் தொழில் முனைவோர்களுக்கான பிரத்யேக நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
ஈஷாவில் இன்சைட் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நான்கு நாட்கள் நடைபெறுகிறது. அந்த வகையில் இந்தாண்டு 13-ஆவது இன்சைட் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.
இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய இஸ்ரோ தலைவர் டாக்டர் சோம்நாத்," இஸ்ரோவின் வளர்ச்சி பயணம் மற்றும் வெற்றிக்கான மக்களை உருவாக்குதல்" எனும் தலைப்பில் பேசினார்.
அப்போது, இந்தியாவின் முதன்மை விண்வெளி ஆராய்ச்சி மையத்தை தலைமை தாங்கிய புகழ்பெற்ற தலைவர்களின் பங்களிப்பு குறித்து அவர் பேசுகையில், "இஸ்ரோவை தலைமை தாங்கிய ஒவ்வொரு தலைவர்களும் புதுமையான அணுகுமுறைகள், ஆய்வு மற்றும் அச்சமின்மை என்ற கலாச்சாரத்தை உருவாக்கினர். இது கால்களுக்கு கடிவாளமிடும் மிகக்குறைவான பட்ஜெட்டுகளில் கூட மகத்தான விண்வெளி பயணங்களை சாத்தியப்படுத்தும் ஊக்கத்தையும், உந்துதலையும் பல குழுக்களுக்கு அளித்தது" என்றார்.
தொடர்ந்து, இஸ்ரோவின் மிகப் பிரபலமான தலைவர்களில் ஒருவரும், முன்னாள் இந்திய குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் அவர்கள் குறித்து அவர் பேசுகையில், "ராக்கெட்டுகளை உருவாக்கிய அனைத்து மனிதர்களின் உருவாக்கத்தில் அவர் பணிபுரிந்தார். மனிதர்களிடம் சிறந்த சக்தி உள்ளது அதனைக் கொண்டு உங்களுக்கு என்ன வேண்டுமோ அதனை நீங்கள் உருவாக்கி விட முடியும் என்று அவர் நம்பினார்" எனக் கூறினார்.
மேலும், இஸ்ரோவிற்கான பொருளாதாரத்தை திரட்டுவதில் இருந்த சிரமங்கள், விண்வெளி ஆராய்ச்சி மூலம் பொது மக்களுக்கு கிடைக்கும் நலன்களை விளக்கி அரசியல் அமைப்புகளின் நம்பிக்கையை பெற்றது முதல் இன்று உலகிலேயே அதிகப் புகழும், மதிப்பும் பெற்ற விண்வெளி ஆய்வு மையங்களில் ஒன்றாக வளர்ந்திருக்கும் இன்றைய நிலை வரை, இஸ்ரோவின் பரிணாம வளர்ச்சி குறித்தும் அவர் பேசினார்.
முன்னதாக இன்சைட் நிகழ்ச்சியில் ஆன்லைன் வாயிலாக கலந்து கொண்ட சத்குரு அவர்கள் பேசுகையில், "நம் பாரதம் முன்பு உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடாக இருந்தது. ஆனால் கடந்த 250 ஆண்டுகால ஆக்கிரமிப்பு, நம்மை நம்பிக்கையற்ற வெறும் கிளார்க் பணிகளை தேடும் மக்களாக மாற்றி உள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்த தலைமுறை அந்த மனநிலையை கைவிட்டு வருகிறது. நம் நாட்டில் உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் அதாவது 100 மில்லியனுக்கும் அதிகமான தொழில்முனைவோர்கள் உள்ளனர். தற்போதைய தேவை நம் நாட்டின் தொழில்கள் விரிவடைய வேண்டும். இதற்காக தான் இன்சைட் நிகழ்ச்சி" எனக் கூறினார்.
இந்தாண்டு இன்சைட் நிகழ்ச்சியில் 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் பங்கேற்றுள்ளனர். டைடன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சி.கே. வெங்கட்ராமன், வெல்ஸ்பன் லிவிங் லிமிடட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஶ்ரீமதி தீபாளி, டியூப் இன்வெஸ்மென்ட்ஸ் ஆப் இந்தியா (TII) நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவரும், சோழமண்டலம் இன்வெஸ்மென்ட் நிறுவனத்தின் தலைவருமான ஶ்ரீ வேலையன் சுப்பையா ஆகியோர் முக்கிய விருந்தினராக பங்கேற்று பேசுகின்றனர்.
இதற்கு முந்தைய ஆண்டு இன்சைட் நிகழ்ச்சிகளில் ரத்தன் டாடா, இன்போசிஸ் நாராயண மூர்த்தி, பயோகான் கிரண் மசும்தார்ஷா, ஜி.எம். ராவ், கே.வி.காமத், அருந்ததி பட்டாச்சார்யா, ஓலா பவேஷ் அகர்வால் உள்ளிட்ட நாட்டின் பிரதான வணிகத்தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மொத்தம் 43,144 வீரர் வீராங்கணைகளும் பங்கேற்கின்றனர்.
- 10,311 பேர் கிராமங்களில் வசிக்கும் குடும்ப பெண்கள்.
ஈஷா சார்பில் நடைபெறும் 'பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவத்தை' முன்னிட்டு, மொத்தம் 55 லட்சம் மதிப்பிலான பரிசு தொகைகளுடன் கூடிய கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது.
விளையாட்டு போட்டிகள் மூலம் கிராமப்புற மக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக ஈஷா கிராமோத்சவ திருவிழாவை ஈஷா ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதில் கிராமங்களுக்கு இடையேயான வாலிபால், துரோபால் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் இந்தாண்டிற்கான போட்டிகள் 5 தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் ஒரு யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் நடைபெறுகிறது.
162 இடங்களில் நடைபெறும் முதற்கட்டப் போட்டிகளில் 5,000 அணிகளும் மொத்தம் 43,144 வீரர் வீராங்கணைகளும் பங்கேற்கின்றனர். இதில் 10,311 பேர் கிராமங்களில் வசிக்கும் குடும்ப பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை முதற்கட்ட கிளஸ்டர் அளவிலான வாலிபால் போட்டிகள் 70 இடங்களிலும், த்ரோபால் போட்டிகள் 24 இடங்களிலும் நடைபெற்றது.
இதில் 6,000 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 30,000 கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான அணிகள் பங்கேற்றன. வாலிபால் போட்டிகளில் 22,522 வீரர்களும், துரோபால் போட்டிகளில் 5,098 பெண்களும் போட்டிகளில் விளையாடினர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், சென்னை பூந்தமல்லியில் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, தென்காசியில் சட்டமன்ற உறுப்பினர் பழனி, திருத்தணியில் சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் ஆகியோர் நேரில் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
அதேபோன்று ஒசூரில் போட்டிகளை மாவட்ட வனத்துறை அதிகாரி கார்த்திகேயனி தொடக்கி வைத்தார்.
அதுமட்டுமின்றி மதுரை கள்ளந்தரி மற்றும் காரைக்குடி புதுவயல் பகுதிகளில் நடைபெற்ற போட்டிகளுக்கு பத்திர பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த போட்டிகள் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட கிளஸ்டர் அளவில் தேர்வான அணிகள் அடுத்து டிசம்பர் 1-ந் தேதி நடைபெறும் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளன.
இதைத்தொடர்ந்து தென்னிந்திய அளவிலான இறுதிப் போட்டிகள் கோவையில் ஆதியோகி முன்பு டிசம்பர் 28-ம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில், ஈஷா கிராமோத்சவ திருவிழா ஆண்டுதோறும் கிராமப்புற விளையாட்டுகள், கிராமிய கலைகள் மற்றும் உணவு முறைகளை கொண்டாடி புத்துயிர் அளிக்கும் விதமாகவும், உற்சாகமான கிராமிய வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையிலும் நடத்தப்படுகிறது.
- பிற்போக்கு சிந்தனைகள் வெளிவருவது மிகவும் துரதிஷ்டவசமானது.
- முதிர்ச்சியான அரசியல் போக்கு இல்லை.
கோவையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஈஷா குறித்து உண்மைக்கு புறம்பான அவதூறு கருத்துக்களை தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசனுக்கு ஈஷா அறக்கட்டளை கண்டனங்களை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
'பெண்களுக்கான அழகுல ஒண்ணு கூந்தல் அழகு' என்று முத்தரசன் கூறியிருக்கிறார். ஒரு கம்யூனிச சித்தாந்த அரசியல் தலைவரிடம் இருந்து இப்படியான பிற்போக்கு சிந்தனைகள் வெளிவருவது மிகவும் துரதிஷ்டவசமானது.
பெண்களின் அழகு கூந்தலில் இல்லை. குடும்பம், சமுதாயம், சித்தாந்தம், மதம் உள்ளிட்ட காரணிகளின் கட்டாயங்கள் ஏதும் இல்லாமல், அவர்களின் வாழ்க்கையை சுயமாக அவர்களின் விருப்பத்தின் பேரில் தேர்ந்தெடுப்பதில் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
உண்மை என்ன என்பதை நேரடியாகவோ அல்லது ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட தகவல்கள், அரசின் நேரடி கள ஆய்வு அறிக்கைகள் என பொதுவெளியில் எளிதில் கிடைக்கும் அரசு ஆவணங்களை கூட தேடி படிக்காமல், உண்மையை அறிந்து கொள்ளும் விருப்பமும் இல்லாமல், ஏதோவொரு கட்டாய நிர்பந்தத்தின் பேரில், யாரோ சிலர் எழுதிக் கொடுத்த அவதூறுகளை முத்தரசன் ஊடகங்களுக்கு முன் படித்து காட்டியது முதிர்ச்சியான அரசியல் போக்கு இல்லை. ஒரு தேசிய கட்சியின் மாநில செயலாளரே இப்படி செய்வது வருத்தத்திற்கு உரியது.
2022-ம் ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்ட வருவாய்த்துறை மற்றும் வனத்துறையின் கூட்டு ஆய்வு அறிக்கையில், "ஈஷா யோக மையத்தின் எல்லைகளை அளவீடு மேற்கொண்டதில் அவர்கள் காப்புக்காடு (வனப்பகுதி) பகுதியில் எந்தவிதமான ஆக்கிரமிப்போ, அத்துமீறல்களோ செய்யவில்லை என நில அளவையிலான அடிப்படையில் தெரிய வருகிறது" என்று கூறப்பட்டு உள்ளது.
பழங்குடியினருக்கு சொந்தமானது என்று கூறப்படும் 44.3 ஏக்கர் அளவிலான நிலங்கள் எதனையும் ஈஷா அறக்கட்டளை ஆக்கிரமிக்கவில்லை என்பதை வருவாய்த்துறை ஆவணங்களும், ஆர்.டி.ஐ. தகவல்களும் தெளிவாக கூறுகின்றன.
ஈஷாவில் பல்வேறு நிலைகளில் இருக்ககூடிய நூற்றுக்கணக்கான பெண்களிடம், காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஈஷா பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவே கூறியுள்ளனர். இதனை காவல்துறையும் அதன் அறிக்கையில் பதிவு செய்துள்ளது.
சமீபத்தில் உச்சநீதிமன்றம், இரு பெண் துறவிகள் குறித்த வழக்கில் இருவரும் அவர்களின் சுய விருப்பத்தின் பேரில் தான் ஈஷாவில் இருப்பதாக மிகத்தெளிவான தீர்ப்பினை அளித்துள்ளது. மேலும் ஒரு அமைப்பை இழிப்படுத்துவதற்காக மனுக்களை பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியது.
ஈஷாவின் நற்பணிகளால் தினமும் பல்லாயிரகணக்கான விளிம்பு நிலை மக்கள், பழங்குடியின மற்றும் பட்டியலின மக்கள் பயன்பெற்று வருகின்றனர். சாதி, மத, இன பேதங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் யாதும் இன்றி பல கோடி மக்களுக்கு இந்த மண்ணின் ஆன்மீகத்தை அதன் தூய வடிவில் ஈஷா அறக்கட்டளை வழங்கி வருகிறது.
ஆகவே உண்மைக்கு புறம்பான, பொய்யான அவதூறு கருத்துக்களை முத்தரசன் பரப்ப வேண்டாம் என ஈஷா அறக்கட்டளை கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சத்குருவுக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு.
- சத்குரு எனும் தனிநபரைக் குறி வைத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
சத்குருவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்ரை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
சத்குருவுக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இது மக்களின் பொது நலன் கருதி தாக்கல் செய்யப்பட்ட மனு இல்லை, சத்குரு எனும் தனிநபரைக் குறி வைத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. இந்த தீர்ப்பினை ஈஷா அறக்கட்டளை வரவேற்கிறது.
முன்னதாக இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், "கடந்த பல ஆண்டுகளாக சத்குரு அவர்கள் செய்து வரும் அனைத்து நல்ல பணிகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் சத்குருவை பத்ம விபூஷன் விருதிற்கு பரிந்துரைக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டு உள்ளதாகவும், சத்குருவுக்கு எதிராக எந்த எதிர்மறையான விஷயங்களும் இல்லை" என்றும் கூறினார்.
இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்த அமைப்பு, இதே போன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஈஷாவிற்கு எதிராக வேறொரு வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து இருந்தது. அந்த வழக்கை "உள்நோக்கத்துடன் தொடரப்பட்டு வழக்கு" எனக் கூறி அப்போது உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பது நினைவுக்கூறதக்கது.
ஈஷாவின் நற்பெயருக்கும், மக்கள் நலப் பணிகளுக்கும் இடையூறு மற்றும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் ஒரு குழுவாக சிலர் செயல்பட்டு, ஈஷா குறித்து அவதூறுகளை பரப்பியும், பொதுநல மனு என்ற பெயரில் வழக்குகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
அவ்வாறு அவதூறு குற்றச்சாட்டுகளோடு உள்நோக்கத்துடன் ஈஷாவுக்கு எதிராக தொடரப்பட்ட பல வழக்குகளை, உண்மையின் பக்கம் நின்று தள்ளுபடி செய்து நியாயமான தீர்ப்புகளை நீதிமன்றங்கள் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.