search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Metro Train"

    • மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை புறநகர் பகுதிகளுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
    • மொத்தம் 20 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைய உள்ளன.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மெட்ரோ ரெயில்கள் விரைவான சேவைகளையும் வழங்கி வருகிறது.

    சென்னை விமான நிலையம் - விம்கோ நகர், சென்டிரல் - பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் மெட்ரோ ரெயில் சேவையை 3 லட்சம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். ஆரம்பம் முதலே மெட்ரோ ரெயில் சேவைக்கு பொதுமக்களிடம் வரவேற்பு இருந்தது.

    இதனால் 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பீட்டில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது. மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் இடையே 45.8 கிலோ மீட்டர் தொலைவுக்கும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பணிமனை வரையில் 26.1 கிலோ மீட்டர் தொலைவிற்கும், மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலும் 47 கிலோ மீட்டர் தொலைவில் என 3 வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் இடையே 3-வது வழித்தடத்தில் 19 உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் 28 சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பணிமனை வரையிலான 4-வது வழித்தடத்தில் 18 உயர்மட்ட நிலையங்களும், 9 சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்களும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில் 39 உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களும், 6 சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்களும் அமைய உள்ளன.

    இதற்கிடையே மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை புறநகர் பகுதிகளுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரையில் 21.76 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில் திட்டம் நீட்டிக்கப்பட்டது. இதேபோல, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பணிமனையுடன் முடியும் திட்டத்தில், பரந்தூர் (விமான நிலையம் அமையவுள்ளது) வரையில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை நீட்டிக்க ஆலோசிக்கப்பட்டது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

    இந்த சாத்தியக்கூறு அறிக்கையை தமிழக அரசு பரிசீலனை செய்து வழித்தடம் நீட்டிப்புக்கு ஒப்புதல் அளித்தது. தமிழக அரசின் ஒப்புதலை தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் மெட்ரோ ரெயில் நிறுவனம் இறங்கியது.

    பூந்தமல்லி-பரந்தூர் வரையில் பெரும்பாலும் உயர்மட்ட பாதைகளாக அமைக்கவே முடிவு செய்யப்பட்டு அதற்கான கள ஆய்வுகள் செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் மெட்ரோ ரெயில் நிறுவனம் சமர்பித்துள்ளது.

    சென்னை தலைமை செயலகத்தில் நேற்றுமுன்தினம் (11-ந்தேதி) சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக், தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் கோபாலிடம் திட்ட அறிக்கையை சமர்ப்பித்தார். தமிழக அரசிடம் வழங்கியுள்ள திட்ட அறிக்கையில், பூந்தமல்லியில் இருந்து செம்பரம்பாக்கம், தண்டலம், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் வழியாக பரந்தூர் விமான நிலையம் வரையில் வழித்தடம் அமைகிறது.

    இந்த வழித்தடத்தின் மொத்தம் நீளம் 52.94 கிலோ மீட்டர் ஆகும். மொத்தம் 20 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைய உள்ளன. திட்டத்தின் மொத்த செலவு ரூ.15 ஆயிரத்து 906 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில், பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரையில் ரூ.8 ஆயிரத்து 779 கோடி மதிப்பீட்டில் 14 நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

    2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளை வரும் 2028-ம் ஆண்டுக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளது.

    • டி.டி.கே.சாலையில் சேமியர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • சி.பி.ராமசாமி சாலையில் சி.வி.ராமன் சாலை சந்திப்பில் இருந்து ஆர்.ஏ. புரம் 2-வது பிரதான சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மெட்ரோ ரெயில் பணிகள் கவிஞர் பாரதிதாசன் சாலையில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக நாளை (சனிக்கிழமை) முதல் 11-ந்தேதி வரை ஒரு வார காலத்திற்கு கவிஞர் பாரதிதாசன் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்களை செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளன.

    டி.டி.கே.சாலையில் சேமியர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சி.பி.ராமசாமி சாலையில் சி.வி.ராமன் சாலை சந்திப்பில் இருந்து ஆர்.ஏ. புரம் 2-வது பிரதான சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அண்ணாசாலையில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை வழியாக டி.டி.கே. சாலைக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் மாற்று பாதையில் அனுப்ப உத்தேசிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மாநகர பஸ்கள் திருவள்ளூர் சாலை, எல்டாம்ஸ் சாலை வழியாகவும், இலகு ரக வாகனங்கள் சீதம்மாள் காலனி 1-வது பிரதான சாலை வழியாகவும் செல்லலாம்.

    டி.டி.கே. சாலையில் இருந்து ஆழ்வார்பேட்டை சிக்னலுக்கு செல்ல வேண்டிய மாநகர பஸ்கள் திருவள்ளூர் சாலை மற்றும் எல்டாம்ஸ் சாலை வழியாகவும், இலகு ரக வாகனங்கள் சீதம்மாள் காலனி 1-வது பிரதான சாலை (அல்லது) சி.வி.ராமன் சாலை வழியாக மாற்று பாதையில் செல்லலாம்.

    டி.டி.கே. சாலையில் உள்ள ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இருந்து வரும் மாநகர பஸ்கள் நேராக சி.பி.ராமசாமி சாலை வழியாக சேமியர்ஸ் சாலைக்கு செல்லாம்.

    லஸ் சர்ச் சாலை வழியாக ஆழ்வார்பேட்டை சிக்னலுக்கு செல்ல வேண்டிய மாநகர பஸ்கள் டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை மேம்பால சர்வீஸ் சாலை வழியாக செல்லலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் பஸ் நிலையத்தில் புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து உள்ளது.
    • பஸ் நிறுத்தும் இடங்கள், வர்த்தகப் பகுதி, அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் வாகனங்களுக்கான பார்க்கிங் வசதி ஆகியவை அடங்கிய மல்டி மாடல் பஸ் நிலையமாக கட்டப்பட உள்ளது.

    சென்னை:

    பாரிமுனை பஸ் நிலையத்தில் 21 மாடிகளுடன் நவீன பிரமாண்ட கட்டிடம் கட்ட சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

    சென்னையின் முக்கிய மாநகர பஸ் நிலையமாக பாரிமுனை பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பஸ் நிலையம், மெட்ரோ ரெயில் வசதிகள் உள்ளன.

    பாரிமுனை பஸ் நிலையத்தில் தினந்தோறும் 695 மாநகர பஸ்கள் வந்து செல்கின்றன.

    இந்த பஸ்கள் 70 வழித்தடங்களில் 3,872 முறை பயணித்து வருகின்றன. இங்கு இருந்து சென்னை மாநகரின் தெற்கு, மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இந்நிலையில் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் பஸ் நிலையத்தில் புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து உள்ளது. பஸ் நிறுத்தும் இடங்கள், வர்த்தகப் பகுதி, அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் வாகனங்களுக்கான பார்க்கிங் வசதி ஆகியவை அடங்கிய மல்டி மாடல் பஸ் நிலையமாக கட்டப்பட உள்ளது. இதற்காக 4.42 ஏக்கர் நிலத்தை மெட்ரோ ரெயில் நிர்வாகம் பயன்படுத்த உள்ளது. இதில் 21 மாடிகள் கொண்ட மிகப்பெரிய பிரமாண்ட கட்டிடம் கட்டப்பட உள்ளது. அதில் வணிக வளாகம், தனியார் வணிக அலுவலகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மெட்ரோ ரெயில் நிறுவனம் செய்து வருகிறது.

    • தியாகராய ரோடு முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் அந்த பகுதியில் வாகன நெரிசல் அதிகம் ஏற்படுவதாக குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் 2-வது திட்டப் பணிகள் 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரெயில் பணியால் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

    பொதுமக்கள் இடையூறு இல்லாமல் பணிகளை விரைவாக செய்ய மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

    தியாகராயநகர் பனகல் பூங்கா-நந்தனம் சிக்னல் இடையே மெட்ரோ ரெயில் பணிகள் தற்போது தொடங்கி உள்ளதால் அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் சனிக்கிழமை இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது.

    பொதுமக்கள் அதற்கேற்ப பழகிக்கொள்வதற்காக ஒரு வாரம் மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. சில சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு இருப்பதால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

    தண்டபாணி தெரு, நந்தனம்-பனகல் பூங்கா வரை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. தியாகராய நகர் வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியுடன் பள்ளிகளும் நிறைய உள்ளன. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் தடுமாறுகிறார்கள்.

    போக்குவரத்து மாற்றத்தால் வெங்கடநாராயணா ரோடு, தியாகராயரோடு, பிரகாசம் ரோடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த சாலையை கடக்க வழக்கமான நேரத்தைவிட கூடுதலாக 20 முதல் 30 நிமிடம் வரை ஆகிறது.

    தியாகராய ரோடு முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாகனங்களை நிறுத்தவும், பொதுமக்களை ஏற்றி, இறக்கிவிட்டு செல்லவும் அங்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் அந்த பகுதியில் வாகன நெரிசல் அதிகம் ஏற்படுவதாக குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து மாற்றம் செய்த முறை சரியல்ல. போக்குவரத்து வல்லுனர்கள் மூலம் ஆய்வு செய்து மாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து போக்குவரத்து இணை கமிஷனர் ராஜேந்திரன் கூறுகையில், 'சோதனை அடிப்படையில் தான் தற்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் ஆலோசனைகள், கருத்துக்கள் ஆய்வு செய்து செய்யப்படும்.

    எழுத்து மூலமாகவோ, இ-மெயில் வழியாகவோ, சமூக வலைதளங்கள் வழியாகவோ கருத்துக்களை தெரிவிக்கலாம். எந்த பகுதியில் பாதிப்பு உள்ளது என்பதை ஆய்வு மாற்றம் செய்யலாம்' என்றார்.

    பனகல் பூங்காவில் விரைவில் சுரங்கப்பாதை தோண்டும் பணி தொடங்க இருப்பதால் பணிகள் தீவிரமாக நடைபெறும். அதனால் போக்குவரத்து மாற்றம் என்பது மெட்ரோ ரெயில் முக்கிய பணிகள் முடியும் வரை பின்பற்றப்படும். அதுவரையில் பொதுமக்களுக்கு சிரமங்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    • மெட்ரோ ரெயில் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி தலைமையில் இதற்கான குலுக்கல் நடந்தது.
    • தேர்வு செய்யப்பட்ட 30 பேருக்கும் விரைவில் பரிசு வழங்கப்படும்.

    சென்னை:

    மெட்ரோ ரெயிலில் கடந்த மாதம் அதிகம் பயணம் செய்த பயணிகளுக்கு குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது. மெட்ரோ ரெயில் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி தலைமையில் இதற்கான குலுக்கல் நடந்தது. ரூ.2000 மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது 30 நாட்கள் விருப்பம் போல் பயணம் செய்வதற்கான பயண அட்டையை வழங்கப்படும்.

    மாதம் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1500-ம் அதற்கு மேல் பணம் செலுத்திய 10 பேர், மெட்ரோ பயண அட்டை வாங்கி அதில் குறைந்தபட்ச தொகையான ரூ.500-க்கு டாப் அப் செய்த 10 பயணிகளுக்கு தலா ரூ.1450-க்கு இலவச டாப் அப் மற்றும் ரூ.2000 மதிப்புள்ள பரிசு கூப்பன் வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட 30 பேருக்கும் விரைவில் பரிசு வழங்கப்படும்.

    • சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அடுத்த மாதம் இறுதியில் தேசிய பொது பயண அட்டையை வழங்க இருக்கிறது.
    • மெட்ரோ ரெயில், மாநகர பஸ், புறநகர் ரெயிலில் ஒரே பயண அட்டையில் பயணம் செய்ய முடியும்.

    சென்னை:

    சென்னையில் பெருகி வரும் மக்கள் தொகைக்கும், நகர விரிவாக்கத்துக்கும் ஏற்ப போக்குவரத்து வசதிகள் திட்டமிடப்பட்டு வருகிறது.

    தற்போது சென்னையில் மாநகர பஸ், மெட்ரோ ரெயில், புறநகர் மின்சார ரெயில் சேவையை பொது மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்காக தனித்தனியாக பயணச் சீட்டு எடுத்து பயணம் செய்கிறார்கள்.

    இந்த நிலையில் மெட்ரோ ரெயில், மாநகர பஸ், புற நகர் மின்சார ரெயிலில் செல்பவர்கள் பொதுவான ஒரே பயண அட்டை மூலம் பயணம் செய்வதற்கான புதிய திட்டம் அடுத்த மாதம் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    இதுதொடர்பான சாத்தியக்கூறுகள் தொடர்பாக கடந்த வாரம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது புதிய பயண திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததாக தெரிகிறது.

    இதையடுத்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அடுத்த மாதம் இறுதியில் தேசிய பொது பயண அட்டையை வழங்க இருக்கிறது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறும்போது, 'சென்னை மெட்ரோ ரெயிலில் தேசிய பொது பயண அட்டை (என்.சி.எம்.சி) அடுத்த மாதம் இறுதியில் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் மெட்ரோ ரெயில், மாநகர பஸ், புறநகர் ரெயிலில் ஒரே பயண அட்டையில் பயணம் செய்ய முடியும். பார்க்கிங் கட்டணம், சுங்கச்சாவடி கட்டணமும்செலுத்தலாம்.

    டிசம்பர் இறுதியில் வழங்கப்படும் இந்த பொதுவான பயண அட்டை முதலில் புதிய பயணிகளுக்கு வழங்கப்படும். தற்போது உள்ள பயண அட்டையை பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

    தேசிய பொது பயண அட்டை தயாராக உள்ளது. வங்கிகளுடன் சில சிக்கல்கள் உள்ளன. அதை சரி செய்யும் பணி நடந்து வருகிறது' என்றனர்.

    • அதிகபட்சமாக கடந்த 7-ந் தேதி 2 லட்சத்து 47 ஆயிரத்து 352 பேர் பயணம் செய்தனர்.
    • பயண அட்டை பயன்படுத்துபவர் எண்ணிக்கை 3 லட்சத்து 96 ஆயிரத்து 240 ஆக அதிகரித்துள்ளது.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயிலில் ஒவ்வொரு மாதமும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் 62 லட்சத்து 71 ஆயிரத்து 730 பேர் பயணித்தனர். அதிகபட்சமாக கடந்த 7-ந் தேதி 2 லட்சத்து 47 ஆயிரத்து 352 பேர் பயணம் செய்தனர். அக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் அதிகமாக பயணம் செய்துள்ளனர்.

    பயண அட்டை பயன்படுத்துபவர் எண்ணிக்கை 3 லட்சத்து 96 ஆயிரத்து 240 ஆக அதிகரித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள தொலைத் தொடர்பு அடிப்படையிலான ரெயில் கட்டுப்பாட்டு அமைப்பு டிரைவர் இல்லாமல் தானாகவே ரெயில் இயங்குவதற்கு வழிவகுக்கிறது.
    • டிரைவர் இல்லா பயணிகள் ரெயிலை இயக்குவதற்கு, பல்வேறு பாதுகாப்பு அளவீடுகள் கையாளப்படும்.

    சென்னை:

    சென்னையில் ரூ.1,620 கோடி செலவில் டிரைவர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரெயில் இயக்குவதற்கான பணிகள் தொடங்க இருப்பதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள தொலைத் தொடர்பு அடிப்படையிலான ரெயில் கட்டுப்பாட்டு அமைப்பு டிரைவர் இல்லாமல் தானாகவே ரெயில் இயங்குவதற்கு வழிவகுக்கிறது. இந்தச் சிறப்பான கட்டமைப்புக்கு உயரிய பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவால் சான்றளிக்கப்பட இருப்பதாகவும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    டிரைவர் இல்லா பயணிகள் ரெயிலை இயக்குவதற்கு, பல்வேறு பாதுகாப்பு அளவீடுகள் கையாளப்படும். வெற்றிகரமான பரிசோதனைகளுக்கு பின்னர் ரெயில் கட்டுப்பாட்டு அமைப்பு, தள பரிசோதனை மற்றும் இதர அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்படும்.

    இவ்வாறு மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • மெட்ரோ ரெயில் சேவை 2 வழித்தடத்திலும் தடையில்லாமல் இயக்கப்பட்டன.
    • புயல், மழையின் தாக்கம் இரவில் அதிகமாக இருந்த போதிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் பயணத்தை தொடர்ந்தனர்.

    சென்னை:

    புயல் மழை காரணமாக சென்னையில் பஸ் போக்குவரத்து தடைப்பட்ட போதும் எக்ஸ்பிரஸ், மின்சார ரெயில் சேவை வழக்கம் போல் செயல்பட்டன.

    மெட்ரோ ரெயில் சேவையும் 2 வழித்தடத்திலும் தடை யில்லாமல் இயக்கப்பட்டன. புயல், மழையின் தாக்கம் இரவில் அதிகமாக இருந்த போதிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் பயணத்தை தொடர்ந்தனர்.

    • சென்னையில் உள்ள 41 மெட்ரோ ரெயில் நிலையங்களில் 4 குழுக்கள் ஆய்வு செய்து சேத மதிப்பீட்டை கணக்கிட்டது.
    • மெட்ரோ ரெயில் நிலைய மேற்கூரைகள், வழிகாட்டி பலகைகள் சேதம் மற்றும் குழாய் உடைப்பு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன.

    சென்னை:

    வங்க கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் நேற்று நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.

    மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மாநகர் முழுவதும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் 73 மரங்களும், வடக்கு மற்றும் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 24 மரங்களும் சாய்ந்து விழுந்தன. இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விழுந்த மரங்களை மாநகராட்சி ஊழியர்களும், போலீசாரும் ஒருங்கிணைந்து அகற்றினார்கள்.

    10-க்கும் மேற்பட்ட இடங்களில் மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன. புயலின் தாக்கம் நள்ளிரவுக்கு மேல் தீவிரமானதை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் ரூ.3 கோடியே 45 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் உள்ள 41 மெட்ரோ ரெயில் நிலையங்களில் 4 குழுக்கள் ஆய்வு செய்து சேத மதிப்பீட்டை கணக்கிட்டுள்ளது. மெட்ரோ ரெயில் நிலைய மேற்கூரைகள், வழிகாட்டி பலகைகள் சேதம் மற்றும் குழாய் உடைப்பு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன.

    சீரமைக்கும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2ஆம் கட்ட பணிகளுக்காக காந்தி சிலையை இடமாற்றம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
    • பணிகள் நிறைவடைந்ததும் காந்தி சிலை மீண்டும் பழைய இடத்தில் வைக்கப்படும்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2ஆம் கட்ட பணிகளுக்காக காந்தி சிலையை இடமாற்றம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து, தமிழக அரசிடம் மெட்ரோ ரெயில் நிர்வாகம் அனுமதி கோரியிருந்தது.

    தமிழக அரசு இன்று ஒப்புதல் அளித்திருப்பதை அடுத்து, இந்த மாத இறுதிக்குள் காந்தி சிலையை இடமாற்றம் செய்ய மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது காந்தி சிலை அமைந்திருக்கும் பகுதியில் தான், இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் 90 சதவீத பணிகள் நடைபெறவிருக்கிறது.

    இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் காந்தி சிலை மீண்டும் பழைய இடத்தில் வைக்கப்படும். சிலை மீண்டும் பழைய இடத்துக்கு மாற்றப்படும் வரை காந்தி சிலையை மக்கள் பார்வையிடவோ, மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதோ இயலாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளுக்காக ராட்சத இயந்திரங்களை பயன்படுத்தும் போது சிலைக்கு ஏதேனும் சேதாரம் ஆகக் கூடாது என்பதற்காகவே காந்தி சிலை 15 மீட்டர் தொலைவுக்கு இடமாற்றம் செய்யப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    • மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது.
    • அடையாறு ஆற்றில் 40 மீட்டர் ஆழத்திற்கு துளைகள் அமைக்க மண் பரிசோதனை செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விமான நிலையம் - விம்கோ நகர், சென்ட்ரல்- பரங்கிமலை ஆகிய இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோமீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இதை தொடர்ந்து தற்போது ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி நடைபெறுகிறது.

    இந்த திட்டத்தில் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்ட ருக்கும், மாதவரம் முதல்- சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் வழித்தடம் அமைய உள்ளது.

    இதில் உயர்மட்ட பாதை, சுரங்க பாதையில் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. உயர்மட்ட பாதைக்காக தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் 48 ரெயில் நிலையங்கள் இடம் பெறுகின்றன.

    மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடத்தில் கிரீன்வேஸ் சாலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து அடையாறு சந்திப்பு மெட்ரோ ரெயில் நிலையம் செல்வதற்காக அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.

    கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையாறு ஆற்றை கடந்து அடையாறு டெப்போ நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணி அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி நடைபெற உள்ளது. அடையாறு ஆற்றின் கீழே அமைய இருக்கும் இந்த சுரங்கப்பாதை மக்களை வியக்க வைக்கும்படியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்காக ஆரம்பகட்ட பணிகள் நடந்தது முடிந்துள்ளன. அடையாறு ஆற்றில் 40 மீட்டர் ஆழத்திற்கு துளைகள் அமைக்க மண் பரிசோதனை செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளது.

    இதற்காக துளையிடும் ராட்சத எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது பருவமழை பெய்து வந்ததால் சுரங்கப்பாதை தோண்டுவதற்கான பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

    அடுத்த மாதம் பருவமழை முழுவதும் ஓய்ந்துவிடும் என்பதால் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை தோண்டப்படும்.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறும்போது, கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையாறு ஆற்றை கடந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணி அடுத்த மாதம் 15-ந் தேதி தொடங்கும். இது மாதவரம் பால்பண்ணையில் இருந்து சிறுசேரி சிப்காட் வரையிலான வழித்தடத்தின் ஒரு பகுதியாகும். சுரங்கப்பாதை தோண்டுவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் முடிந்து உள்ளன. சுரங்கப்பாதை அமைக்கும்போது பல பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும். அடையாறு மற்றும் திருவான்மியூரில் உள்ள நிலையங்கள், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை மற்றும் மந்தவெளி போன்ற இடங்களுக்கு முக்கியமான இணைப்பாக இருக்கும் என்றார்.

    ×