என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AIIMS Hospital"

    • கடந்த 7 மாதங்களாக பெண் சுய நினைவு இல்லாமலேயே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தார்.
    • வயிற்றில் இருந்த குழந்தையும் நன்கு வளர்ச்சி அடைந்திருந்தது. அந்த குழந்தையை பெண் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த டிரைவர் ஒருவர் கடந்த மார்ச் மாதம் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களது வாகனம் மீது லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

    இதில் கணவர் காயமின்றி உயிர் தப்பிய நிலையில் அவரது மனைவிக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதனால் அவர் சுயநினைவு இழந்தார்.

    உடனடியாக அந்த பெண்ணை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பரிசோதனையில் அந்த பெண் 40 நாள் கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தது. ஹெல்மெட் அணியாததால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆழ்ந்த கோமா நிலைக்கு அவர் சென்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    அவருக்கு நினைவு திரும்புமா என்பதை உறுதியாக செல்ல இயலாது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அதே சமயத்தில் அந்த பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் தகவலையும் தெரிவித்தனர்.

    சுய நினைவு இல்லாமல் இருக்கும் அந்த பெண்ணின் வயிற்றில் இருக்கும் சிசுவை கலைக்க வேண்டுமானால் கோர்ட்டில் அனுமதி பெற வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த குழந்தையை வளர்க்க கணவர் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து சுய நினைவு இழந்த பெண் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தனி அறையில் பராமரிக்கப்பட்டு வந்தார்.

    கடந்த 7 மாதங்களாக அவர் சுய நினைவு இல்லாமலேயே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தார். அதே சமயத்தில் வயிற்றில் இருந்த குழந்தையும் நன்கு வளர்ச்சி அடைந்திருந்தது. அந்த குழந்தையை பெண் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. பெண் குழந்தையை பெற்ற அந்த பெண் சுய நினைவு இல்லாமலேயே அறுவை சிகிச்சை இன்றி இயல்பான முறையில் குழந்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    23 வயதாகும் அந்த பெண் சுய நினைவு இல்லாமல் இருக்கிறார். குழந்தை பெற்ற சமயத்தில் அவரது கண்கள் திறந்தன. ஆனால் அந்த பெண் பேசவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    • சீனாவை தொடர்ந்து சில நாடுகளில் பி.எப்-7 வைரஸ் பரவினாலும் இந்தியாவில் அதன் தாக்கம் சுத்தமாக இல்லை என்ற நிலைதான் தற்போது உள்ளது.
    • கடந்த வாரத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளில் 6 ஆயிரம் பேரிடம் சோதனை அடிப்படையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    சீனாவில் பரவி உள்ள பி.எப்-7 மற்றும் மூன்று வகை வைரஸ்கள் உலக நாடுகளையே அச்சுறுத்தும் வகையில் மாறி விட்டது.

    ஒமைக்ரானின் மரபணு மாற்றங்களான 4 வைரஸ்கள் ஒன்றிணைந்து சீனாவில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிகரித்த கொரோனா தாக்கம் தற்போது மெல்ல மெல்ல வெளிநாடுகளுக்கும் பரவி வருகிறது. சீனாவை மீண்டும் பயமுறுத்திய புதிய கொரோனா பரவல் 10 நாட்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டு தற்போது குறைய தொடங்கி இருக்கிறது.

    அதே சமயத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அந்த வைரஸ் தாக்கம் தற்போது சற்று அதிகரித்து உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் சர்வதேச அளவில் கொரோனா பரவல் மற்றும் உச்சம் தொட்டதை ஆய்வு செய்து உள்ள சர்வதேச நிபுணர்கள் புதிய கொரோனாவால் மிகப்பெரிய பாதிப்புகள் வர வாய்ப்பு இல்லை என்று உறுதிபட தெரிவித்து உள்ளனர்.

    இந்தியாவிலும் கடந்த கால கொரோனா புள்ளி விவரங்களின் அடிப்படையில் தற்போதைய பி.எப்-7 வைரஸ் தாக்கம் எப்படி இருக்கும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை மூத்த மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து தகவல்களை வெளியிட்டு உள்ளனர். அதன்படி அடுத்த மாதம் (ஜனவரி) இந்தியாவில் கொரோனா தாக்கம் சற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    அதே சமயத்தில் இந்த அதிகரிப்பு புதிய கொரோனா அலையாக மாற வாய்ப்பே இல்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் உறுதிபட தெரிவித்து உள்ளனர். இதற்கு முன்பு கொரோனா தாக்கம் வெளிநாடுகளில் அதிகரித்த போதெல்லாம் 30 முதல் 35 நாட்களுக்குள் அதன் பிரதிபலிப்பு இந்தியாவில் எதிரொலித்தபடி இருந்தது.

    இதன் அடிப்படையில் பார்த்தால் அடுத்த மாதம் இந்தியாவில் பி.எப்-7 ரக வைரஸ் சற்று அதிகமாக மக்களிடையே பரவக்கூடும். அதனுடைய அறிகுறிகள் முன்பு போல மிக பயங்கரமாக இருக்காது. சாதாரண ஜலதோஷம் போலத்தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பி.எப்-7 உள்ளிட்ட தற்போது பரவிக் கொண்டிருக்கும் 4 விதமான வைரஸ்கள் ஒமைக்ரான் தொடக்க கால வைரஸ்கள் போல சக்தி வாய்ந்தவை அல்ல. தற்போதைய வைரஸ்கள் அனைத்தும் வீரியம் குறைந்தே பரவி வருகின்றன. எனவே இது புது கொரோனா அலையாக உருவெடுக்காது என்று மூத்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

    தற்போது கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டுள்ள சீனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கி விட்டது. வெளிநாட்டு பயணிகளுக்கு இருந்த கட்டுப்பாடுகளையும் விலக்கி இருக்கிறது. இதன் மூலம் கொரோனா தாக்கம் வீழ்ச்சி அடைந்து இருப்பதை சர்வதேச அளவில் சீனா உறுதிப்படுத்தி இருக்கிறது.

    சீனாவை தொடர்ந்து சில நாடுகளில் பி.எப்-7 வைரஸ் பரவினாலும் இந்தியாவில் அதன் தாக்கம் சுத்தமாக இல்லை என்ற நிலைதான் தற்போது உள்ளது. கடந்த வாரத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளில் 6 ஆயிரம் பேரிடம் சோதனை அடிப்படையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த 6 ஆயிரம் பேரில் 38 பேருக்கு மட்டும்தான் லேசான கொரோனா தாக்கம் இருந்தது. அந்த 38 பேருக்கும் பி.எப்-7 ரக வைரஸ் பாதிப்பு இல்லை என்பது ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் புதிய வைரஸ் பரவல் இல்லை என்பதும் நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.

    என்றாலும் வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா பரவுவதால் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். தற்போது அமெரிக்கா, ஜப்பான் நாடுகளில்தான் புதிய கொரோனா பாதிப்பு அதிகரித்தபடி உள்ளது. அடுத்த 30 நாட்களில் இந்தியர்கள் முன்னெச்சரிக்கையுடன் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்தால் இந்தியாவிற்குள் புதிய கொரோனா பரவலை முற்றிலுமாக தடுத்து நிறுத்த முடியும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    இந்தியாவில் தற்போது 3,468 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பி.எப்-7 ரக வைரஸ் பாதிப்பால் யாரும் தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை. எனவே புதிய அலை வர வாய்ப்பு இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    என்றாலும் நாடு முழுவதும் 20 ஆயிரம் மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய வகை கொரோனாவை எதிர்கொள்ள 1 லட்சத்து 70 ஆயிரம் டாக்டர்கள், 3 லட்சத்து 20 ஆயிரம் நர்சுகள், 1 லட்சத்து 60 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது.

    • எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காமல் பா.ஜனதா அரசு வஞ்சிக்கிறது என்று வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டி உள்ளார்.
    • நிதி ஒதுக்காமல் பா.ஜனதா அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரில் புறநகர் பேருந்து நிறுத்தத்தில் ரூ. 15 லட்சம் மதிப்பில் நிழற்குடை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜையை வெங்கடேசன் எம்.பி. தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-

    நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பலமுறை கேள்வி எழுப்பியும் மதுரையில் எய்ம்ஸ் அமைப்பது குறித்து மத்திய பா.ஜனதா அரசு உரிய பதில் அளிக்கவில்லை. தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு பைசா கூட மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மாவட்டத்திற்கு ஆண்டுக்கு மத்திய அரசு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு மத்திய அரசின் பங்கான ரூ. 250 கோடியை ஒதுக்கீடு செய்யாமல் 2026-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என கூறுவது வேடிக்கையாக உள்ளது. நிதி ஒதுக்காமல் பா.ஜனதா அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மேலூர் நகர் மன்ற தலைவர் முகமது யாசின், மேலூர் நகராட்சி ஆணையர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் இளஞ்செழியன், நகரமன்ற கவுன்சிலர்கள் அறிவழகன், பாண்டி, கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் கண்ணன், காய்கறி மார்க்கெட் சங்கத் தலைவர் மணவாளன் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

    • மூத்த நரம்பியல் நிபுணரான நாகராஜன், வி.என் நரம்பியல் ஆராய்ச்சி குழு தலைவராக இருந்தவர்.
    • நாகராஜன் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் நாகராஜன் வெங்கடராமன் சென்னையில் இன்று காலமானார். நாகராஜன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நள்ளிரவு 12.15 மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்தார். மூத்த நரம்பியல் நிபுணரான நாகராஜன், வி.என் நரம்பியல் ஆராய்ச்சி குழு தலைவராக இருந்தவர்.

    மதுரை புதிதாக அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நாகராஜனை கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நியமித்தது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை திருவான்மியூரில் வசித்து வந்த டாக்டர் நாகராஜனுக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது
    • டாக்டர் நாகராஜன் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதா கிருஷ்ணனின் மாமனார் ஆவார்.

    சென்னை:

    மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தலைவராக நியமிக்கப்பட்டிருந்த டாக்டர் நாகராஜன் மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார்.

    சென்னை திருவான்மியூரில் வசித்து வந்த டாக்டர் நாகராஜனுக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து போரூரில் உள்ள ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12 மணி அளவில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் நாகராஜனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எய்ம்ஸ் தலைவராக நியமிக்கப்பட்ட நாகராஜன், தேசிய நரம்பியல் அறிவியல் ஆராய்ச்சி குழு தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக கவுரவ பேராசிரியர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை நெறிமுறை குழு தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதா கிருஷ்ணனின் மாமனார் ஆவார்.

    மூத்த நரம்பியல் மருத்துவர் நாகராஜன் வெங்கட்ராமனின் மறைவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதா வது:-

    மூத்த நரம்பியல் மருத்துவர் நாகராஜன் வெங்கட்ராமன் மறைந்தார் என்ற செய்திகேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.

    தேசிய நரம்பியல் அறிவியல் ஆராய்ச்சிக் குழுத்தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு பேராசிரியர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் நெறிமுறைக் குழுத் தலைவர் உள்ளிட்ட பல உயர் பொறுப்புகளை வகித்து வந்த நாகராஜன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நாகராஜன் சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டிருந்தார்.

    அவரை இழந்து வாடும் மருமகன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட குடும்பத்தாருக்கும் மருத்துவத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி லோகோவில் தமிழிலும் பெயர் இருக்க வேண்டும்.
    • மத்திய அமைச்சருக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம் எழுதினார்.

    மதுரை

    விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் மத்திய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் அடையாள சின்னத்தில் (லோகோ) தமிழ் மொழியில் பெயர் சேர்க்கப்பட வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான முக்கிய கட்டத்தை எட்டியிருப்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

    இதுவரையில் பல்வேறு மட்டங்களில் நடைபெற்ற மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழு, நிறுவனக் குழு கூட்டங்களில் இந்த மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தியுள்ளனர்.

    மேலும் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டத்தில், மதுரை எய்ம்ஸ் நிறுவனத்துக்கான அடையாளச் சின்னத்தை (லோகோ) இறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் லோகோவில் தமிழ் மொழி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்பதை அக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, தமிழ் மொழியிலும் அடையாள சின்னம் உருவாக்கப்படுவதை தாங்கள் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உத்தரபிரதேசத்தின் சரோஜினி நாயுடு மருத்துவக்கல்லூரி பேராசிரியரான பிரசாந்த் லவானியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • நாகராஜனை கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நியமித்தது குறிப்பிடத்தக்கது.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக இருந்த நாகராஜன் வெங்கடராமன் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி மாரடைப்பால் காலமானார்.

    இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக டாக்டர் பிரசாந்த் லவானியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தின் சரோஜினி நாயுடு மருத்துவக்கல்லூரி பேராசிரியரான பிரசாந்த் லவானியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    மதுரையில் புதிதாக அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நாகராஜனை கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நியமித்தது குறிப்பிடத்தக்கது.

    • எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கும் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
    • கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஊழியர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதை தொடர்ந்து எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கும் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஊழியர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    • ஜி.எஸ்.டி.-ல் ஒவ்வொரு மாநிலமும் மத்திய அரசுக்கு நிதி கொடுத்துக் கொண்டு இருக்கிறது.
    • தமிழ்நாட்டுக்கு தான் மத்திய அரசு நிதி கொடுப்பதில்லை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் சென்னைக்கு புதிதாக கிடைத்த மெட்ரோ ரெயில், தமிழுக்கு செம்மொழி தகுதி, சேதுசமுத்திர திட்டம், ஒரகடத்தில் தேசிய மோட்டார் வாகன சோதனை ஆராய்ச்சி மையம், தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம், சேலத்தில் புதிய ரெயில்வே கோட்டம், சென்னை துறைமுகம், மதுரவாயல் பறக்கும் சாலை, நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், சென்னை அருகில் கடற்சார் தேசிய பல்கலைக்கழகம், திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம், கரூர், ஈரோடு, சேலம் ஆகிய 3 இடங்களில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் தொழில் நுட்ப ஜவுளி பூங்கா இதெல்லாம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் வந்தது.

    இதுபோல் பா.ஜனதா தமிழ்நாட்டுக்கு என்ன சிறப்புகள் கொண்டு வந்து இருக்கிறீர்கள்? என்பது தான் என்னுடைய கேள்வி. ஆகவே எந்த திட்டத்திற்கும் தொடர்ச்சியாக நிதி ஒதுக்கீடு செய்வதை நான் கேட்கவில்லை. அனைத்து மாநிலத்திற்கும் செய்யப்படும் பொதுவான இடத்தில் தமிழ்நாடு இணைக்கப்பட்டு இருப்பதை பற்றியும் நான் கேட்கவில்லை.

    இன்றைக்கு ஜி.எஸ்.டி.-ல் ஒவ்வொரு மாநிலமும் மத்திய அரசுக்கு நிதி கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அந்த ஜி.எஸ்.டி. நிதியில் தமிழ்நாட்டில் இருந்து தான் அதிகமாக கொடுத்து இருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டுக்கு தான் மத்திய அரசு நிதி கொடுப்பதில்லை. ரொம்ப குறைவாக கொடுத்துக் கொண்டு இருக்கிறது. மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் அதிகமாக கொடுக்கிறது. அதைத்தான் அடிப்படையாக வைத்து கேட்டேன்.

    அதுபோல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு ரூ.1200 கோடி மதிப்பில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன் அன்றைக்கு நிதி மந்திரியாக இருந்த அருண்ஜெட்லி இதை பாராளுமன்றத்தில் அறிவித்தார். இதையடுத்து பிரதமர் வந்து அடிக்கல் நாட்டினார்.

    அதன் பிறகு அமித் ஷா பலமுறை தமிழ்நாட்டிற்கு வந்து இருக்கிறார். அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி 50 சதவீதம் முடிந்து விட்டது என சொன்னார்கள் தவிர இதுவரைக்கும் எந்த பணியும் நடக்கவில்லை என்பது தான் எனது குற்றச்சாட்டு. அதை எல்லாம் மூடி மறைத்து பேசிவிட்டு அமித் ஷா சென்றுள்ளாரே தவிர நாங்கள் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் தரவில்லை.

    தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது எய்ம்ஸ் மருத்துவமனை அன்றைக்கு தேவையேபடவில்லை. ஏனென்றால் நம்முடைய மருத்துவ கட்டமைப்புகள் அதிகளவில் சிறப்பாக இருந்தது. இருந்தாலும் எய்ம்ஸ் திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு. அவர்கள் தான் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஆகவே இது பற்றி கேள்விகள் கேட்பது பொறுப்புள்ள மத்திய மந்திரி அமித் ஷாவுக்கு அழகல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீட் தேர்வை ஒழித்து கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.
    • நீட் தேர்வுக்கு இதுவரை 21 பேர் பலியாகி உள்ளனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூரில் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சரும், மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    திராவிட மாடல் தி.மு.க. அரசானது மக்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கடந்த மாதம் 20-ந்தேதி மதுரையில் ஒரு மாநாடு நடைபெற்றது. அது என்ன மாநாடு? என்று உங்களுக்கே தெரியும். இந்த மாநாட்டில் புளியோதரை நன்றாக இருந்ததா? பொங்கல் நன்றாக இருந்ததா? என்று மட்டும் தான் பேசப்பட்டது.

    ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் 32 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. ஆனால் நீட் தேர்வு ரத்து குறித்து தீர்மானம் எதுவும் ஏன் நிறைவேற்றவில்லை? ஆனால் அதே நாளில் தி.மு.க. சார்பில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களின் எதிர்காலம் நலன் கருதி நீட் தேர்வுக்கு எதிராக மாநில அளவில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    ஒரு மாநாடு எப்படி இருக்கக்கூடாது? என்பதற்கு எடுத்துக்காட்டாக மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாடு. ஒரு மாநாடு எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு எடுத்துக்காட்டாக சேலத்தில் வருகிற டிசம்பர் மாதம் 17-ந்தேதி நடைபெறும் தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு அமையும். இந்த மாநாட்டில் இளைஞரணியினர் உள்பட மூத்த முன்னோடிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு இளைஞரணி மாநாட்டை வாழ்த்த வேண்டும். அதற்கு அழைப்பு விடுக்கவும் நான் இங்கு வந்துள்ளேன்.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, மதுரைக்கு நாளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிறார். அவரிடம் நீங்கள் நீட் தேர்வை ஒழிப்பது தொடர்பான ரகசியம் என்ன? என்று கேளுங்கள் என கூறியுள்ளார். அவருக்கு நான் ஒரு சவால் விடுக்கிறேன். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கோரி ஒரு செங்கலை மட்டும் வைத்து சென்றீர்கள். அந்த செங்கலையும் நான் எடுத்துக்கொண்டு வந்து விட்டேன். நீங்கள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் ரகசியத்தை சொல்லுங்கள்.

    நீட் தேர்வை ஒழித்து கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக மாபெரும் கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்த இருக்கிறோம். இதில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கவும் திட்டமிட்டு இருக்கிறோம். நீட் தேர்வுக்கு இதுவரை 21 பேர் பலியாகி உள்ளனர்.

    அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி மக்களை ஏமாற்றும் கூட்டணி. சனாதனம் குறித்த எனது பேச்சை பா.ஜ.க.வினர் திரித்து பரப்பினர். சனாதனம் குறித்து அண்ணா கூறிய கருத்துக்களை அ.தி.மு.க.வினர் தைரியமாக மக்களிடம் சொல்வார்களா? அண்மையில் புதிய பாராளுமன்றம் திறப்பு விழா நடந்தது. இதில் தமிழகத்தில் இருந்து சாமியார்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். சாமியார்களுக்கும், பாராளுமன்றத்திற்கும் என்ன சம்பந்தம்? மக்கள் பிரதிநிதிகள் கொண்ட பாராளுமன்ற திறப்பு விழாவில் நாட்டின் முதல் குடிமகளாக உள்ள ஜனாதிபதி திரவுபதி முர்முவை கூட பா.ஜனதா அரசு அழைக்கவில்லை. காரணம் அவர் மலைவாழ் சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும், கணவரை இழந்தவர் என்பதாலும் அழைக்கவில்லை. இதுதான் பா.ஜனதாவின் சனாதன அரசு. நேற்று கூட புதிய பாராளுமன்ற விழாவில் குடியரசு தலைவரை அழைக்கவில்லை. ஆனால் அதற்கு சம்பந்தமில்லாமல் இந்தி நடிகைகளை அழைத்துள்ளார்கள்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும். முதலமைச்சர் செயல்படுத்தியுள்ள மகளிர் உரிமைத்தொகை திட்டம், மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம் போன்றவற்றை பொதுமக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளை தொடங்க வலியுறுத்தி திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் செங்கல் அனுப்பும் போராட்டம் நடந்தது.
    • போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் செங்கலை கையில் ஏந்தி பஸ் நிலையத்தில் ஊர்வலமாக சென்றனர்.

    திண்டுக்கல்:

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பல வருடங்கள் கடந்த நிலையில் இதுவரை கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. இதனை அடுத்து மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளை தொடங்க வலியுறுத்தி திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் செங்கல் அனுப்பும் போராட்டம் நடந்தது.

    மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் நடந்த இந்த நூதன போராட்டத்தில் கட்சியினர் செங்கலை கையில் ஏந்தி பஸ் நிலையத்தில் இருந்து மத்திய அரசை கண்டித்து ஊர்வலமாக சென்றனர்.

    காமராஜர் சிலை அருகே சென்றபோது ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தி னர். ஊர்வலம் செல்ல அனுமதியில்லை, கலைந்து செல்ல வலியுறுத்தியதை அடுத்து செங்கல் அனுப்பும் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவு பெறுகிறது.
    • இரண்டாவது செங்கல்லை எடுத்துவைக்க இன்று எந்த அமைச்சரையும் அனுப்பிவைக்காத மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

    சென்னை:

    மதுரை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவு பெறுகிறது.

    இரண்டாவது செங்கல்லை எடுத்துவைக்க இன்று எந்த அமைச்சரையும் அனுப்பிவைக்காத மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

    எங்கள் எய்ம்ஸ் எங்கே? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    இப்பதிவுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடிக்கு அடிக்கல் நாட்டிய செய்தி வெளியான நாளிதழ் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

    ×