என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amman"

    • எத்தனை பூஜைகள் செய்தாலும், பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாவிடில் அது பலனை தராது.
    • ஆடி, புரட்டாசி, தை மாத அமாவாசைகள் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

    மறைந்த முன்னோர்களுக்கு வருஷ திதி, தர்ப்பணங்கள் ஆகியவற்றை எவ்வாறு முறைப்படி செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள். இறந்தவர் தினம் தெரியவில்லை என்றால், மிருகசீரிடம் மற்றும் மக நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்யலாம். எத்தனை பூஜைகள் செய்தாலும், பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாவிடில் அது பலனை தராது.

    காரை இலை, உளுந்து, முப்பழம், காய், கிழங்கு, செந்நெல், வெல்லம், கோதுமை, நவதானியம், எள், பசும்பால், பாகற்காய், பலாக்காய், மாங்காய், மாதுளம் பழம், கறிவேப்பிலை, எலுமிச்சை, வாழைக்காய், இலந்தை, நெல்லி, திராட்சை, மிளகு, தேன், நெய், கண்டங்கத்திரி, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, சீரகம், ஏலம், அவரை, பிரண்டை, தூதுவளை, இஞ்சி, வாழைத்தண்டு, பசுந்தயிர், வள்ளிக்கிழங்கு போன்றவை சிராத்தப் பண்டங்களாகும்.

    வெற்றிலை அலங்காரம்!

    ஆடிப்பூரம் அம்மனுக்கு மட்டுமல்ல வீரபத்திரருக்கும் உண்டு. வீரபத்திரருக்குரிய அலங்காரங்களுள் ஒன்று வெற்றிலையைக் கொண்டு செய்யப்படுகிறது. அதாவது வெற்றிலையை அடுக்கடுக்காக தைத்து மாலை போல் சூட்டுவர். சில ஆலயங்களில் வெற்றிலைக்குள் பாக்கு வைத்து சுருட்டி, அந்தச் சுருளை மாலையாக்கி அணிவிப்பர்.

    பல தெய்வங்கள் வீராவேசம் கொண்ட போர் தெய்வங்களாக, வெற்றிக் கடவுளாகத் திகழ்ந்தாலும் வீரபத்திரருக்கு மட்டுமே வெற்றிலைப்படல் உற்சவம் உண்டு. ஆடிப்பூரமே அதற்குரிய விசேஷ நாள். அன்று, அனுமந்தபுரம் வீரபத்திரருக்கு 12,800 வெற்றிலைகளால் வெற்றிலைப்படல் அணிவித்து வழிபடுவது பாரம்பரிய பழக்கமாக உள்ளது.

    தினந்தோறும் அமாவாசை!

    மயிலாடுதுறைக்கு அருகில் சிதலப்பதியில் உள்ளது முக்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு அமாவாசை கோவில் என்று ஓர் ஆலயம் உள்ளது. இதில் மனிதமுக விநாயகர் அருள்கிறார். இக்கோவிலில் முக்தீஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்கிறார். இவரை சூரியன், சந்திரன் இருவரும் ஒரே நேரத்தில் வணங்கியுள்ளனர்.

    சூரியன், சந்திரன் இவ்விருவரும் சந்திக்கும் நாளே அமாவாசை. இங்கே இவர்கள் அருகருகே உள்ளதால், இக்கோவில் முன்பு ஓடும் அரசலாற்றில் தினமும் அமாவாசை தர்ப்பணம் செய்யலாம். இதை 'நித்ய அமாவாசை' என்பார்கள். இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் பார்க்கத்தேவையில்லை. எந்த நாளில் வேண்டுமானாலும் சிராத்தம், தர்ப்பணம் செய்யலாம். சூரிய, சந்திர தீர்த்தங்கள் பிராகாரத்தில் உள்ளது. இங்கு ஆடி, புரட்டாசி, தை மாத அமாவாசைகள் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு சிராத்தம் செய்வது, கயாவில் சிராத்தம் செய்ததற்கு ஒப்பாகும்.

    ஆடியில் அவதாரம்!

    * ஆடிப்பூரம், உமாதேவிக்கு விசேஷமான நாள். தேவியின் ருது சடங்கு நிகழ்ந்த தினம் என்று புராணம் சொல்வதால், அன்று சிவாலயங்களில் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். அன்று வளைகாப்பு நடத்துவார்கள்.

    * சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தார். ஆடி மாதத்தில் தான் சிவபெருமான், சுந்தரமூர்த்தி நாயனாரை மீண்டும் கயிலைக்கு அழைத்து வர வெள்ளை யானையை அனுப்பியதாக புராணம் கூறுகிறது.

    * பட்டினத்தார், ஆடி மாத உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தார். புகழ்ச்சோழர், பெருமழைக்கதும்பர், சேரமான் பெருமான், கழறிற்றறிவார், கோட்புலியார் போன்ற நாயன்மார்களும் ஆடி மாதத்தில் அவதரித்தவர்கள்தாம்.

    • துர்கை என்றால் 'துக்கங்களையெல்லாம் போக்குபவள்' என்று பொருள்.
    • ராகுகால வேளையில், துர்கையை வணங்கச் சொல்கிறது சாஸ்திரம்.

    உலகுக்கே சக்தியாகத் திகழ்பவள் ஸ்ரீபார்வதி தேவி. சக்தி தெய்வங்களுக்கெல்லாம் தலைவி என்று உமையவளைப் புகழ்கிறது புராணம். மற்ற எல்லாப் பெண் தெய்வங்களும் பார்வதி தேவியின் அம்சம், வடிவம், அவதாரம் என்றே புராணங்கள் விவரிக்கின்றன.

    பார்வதிதேவியின் முக்கியமான வடிவங்களில் துர்காதேவியும் ஒருத்தி என்றும் பார்வதி தேவிக்கு இணையான சக்தியைக் கொண்டவள் என்றும் தேவி மகாத்மியம் விவரிக்கிறது. துர்கை என்றால் 'துக்கங்களையெல்லாம் போக்குபவள்' என்றும் 'எவராலும் வெல்லமுடியாதவள்' என்றும் பல அர்த்தங்கள் உள்ளன.

    சக்தி மிக்க தேவியரில் துர்கா தேவியும் துர்காதேவி வழிபாடும் மிக மிக உன்னதமானவை. எல்லா நாளிலும் எந்த நேரத்திலும் துர்கையை வணங்கலாம். எல்லா சிவாலயங்களிலும் கோஷ்டத்தில் துர்கைக்கு சிலை வடிக்கப்பட்டிருக்கும். எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம் என்றாலும் ராகுகால வேளையில் துர்கையை வழிபடுவது இன்னும் பலமும் பலனும் தரும்.

    துர்கை உக்கிர தெய்வம்தான். தீமைகளை அழிக்கவும் துர்குணங்களை நாசம் செய்யவும் துர்குணம் கொண்டவர்களை அழித்தொழிக்கவும் பிறப்பெடுத்தவள் துர்கை. அதனால்தான் ராகுகால வேளையில், துர்கையை வணங்கச் சொல்கிறது சாஸ்திரம்.

    செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் துர்கை விரத வழிபாட்டுக்கு உகந்தவை. இந்த நாட்களில் அம்மன் விரத வழிபாடும் அம்பிகை விரத வழிபாடுமே முக்கியத்துவம் கொண்டவைதான் என்றபோதும் விரதம் இருந்து துர்கையை இந்தநாட்களில் அவசியம் வழிபட்டு வந்தால், கருத்து வேற்றுமையால் பிரிந்த தம்பதிகூட இணைந்துவிடுவார்கள் என்பது ஐதீகம்.

    செவ்வாய்க்கிழமை ராகுகாலம் மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை. அதேபோல, வெள்ளிக்கிழமையில் ராகுகாலம் என்பது காலை 10.30 மணி முதல் 12 மணி வரை. இந்த நேரங்களில், அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று துர்காதேவிக்கு செந்நிற மலர்கள் சார்த்தி வழிபடலாம். எலுமிச்சையில் தீபமேற்றி நம் பிரார்த்தனைகளைத் தெரிவிக்கலாம். துர்கையின் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி, நம்முடைய கோரிக்கைகளை அவளிடம் சமர்ப்பிக்கலாம்.

    துர்கை காயத்ரி மந்திரம் :

    ஓம் காத்யாயனய வித்மஹே

    கன்யாகுமரி தீமஹி

    தந்நோ துர்கிப் ப்ரசோதயாத்

    எனும் மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வரலாம். அல்லது செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அவசியம் சொல்லி, துர்கையை தரிசிக்கலாம்.

    செவ்வாய், வெள்ளிக்கிழமை மட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமை ராகுகால வேளையான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான நேரத்தில், துர்கை சந்நிதிக்கு முன்னே அமர்ந்துகொண்டு, இந்த மந்திரத்தைச் சொல்லி, எலுமிச்சை தீபம் ஏற்றி வந்தால், நம் வாழ்வில் இதுவரை இருந்த துன்பங்கள் அனைத்தும் காணாமல் போகும். தடைகளையெல்லாம் தகர்த்தருளுவாள் தேவி. விரைவில் கல்யாண மாலை தோள் சேரும் என்பது ஐதீகம்.

    • வாராஹி அம்மனை 16 முறை பிரதட்சணம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்று.
    • சமயபுரம் மாரியம்மனை வழிபட்டால் நாம் நினைத்த காரியம் வெற்றி அடையும்.

    * மதுரை மீனாட்சி அம்மனை விரதம் இருந்து வழிபட்டால் சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும். திருமணத்தடை உள்ளவர்களுக்கு, தடை நீங்கி நல்ல வரன் கிடைக்கும்.

    * காஞ்சி காமாட்சி அம்மனை விரதம் இருந்து வழிபட்டால் வீட்டில் தீராத கஷ்டங்கள் கூட விரைவாக ஒரு தீர்வுக்கு வந்துவிடும்.

    * இருக்கன்குடி மாரியம்மனை விரதம் இருந்து வழிபட்டால் உடல் உபாதைகள் தீரும். குறிப்பாக வயிற்று வலி, கை, கால் வலி, கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த அம்மனை வழிபடுவது மிகவும் சிறந்தது.

    * அமாவாசை, பவுர்ணமி தினங்களில் விரதம் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் புனிதநீரில் நீராடி பின்பு அம்மனை வழிபட்டால் நாம் நினைத்த காரியம் வெற்றி அடையும்.

    * வெக்காளி அம்மனை விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும். குழந்தை வரம் வேண்டி இந்த அம்மனை மனதார நினைத்து வேண்டிக்கொண்டால் நல்ல பலன் உண்டு.

    * வாராஹி அம்மனை விரதம் இருந்து பஞ்சமி திதியில் விரலி மஞ்சள் மாலை அணிவித்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். வாராஹி அம்மனை 16 முறை பிரதட்சணம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்று.

    • ஆனி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை மிகவும் விசேஷமாகும்.
    • எதிரிகள் தொல்லை விலகத் துர்க்கை அம்மன் ஆசி வழங்குவார்.

    தமிழ் மாதங்களைப் பொருத்தவரை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தெய்வங்களுக்குச் சிறப்புக்குரிய மாதங்களாகக் கருதப்படுகிறது. அதில் ஆனி மாதமும் மற்றும் ஆடி மாதமும் அம்மனுக்குரிய சிறப்பு மாதமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மாதங்களில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என ஆன்மீகம் கூறுகிறது.

    ஆனி மாதம் பிறந்து விட்டாலே அது அம்மனுக்கு உரிய மாதமாகக் கருதப்படுகிறது. ஆனி மாதம் என்பது வைணவம் மற்றும் சைவம் பாகுபாடுகள் இல்லாமல் எல்லா பெண் தெய்வங்களையும் கொண்டாடக் கூடிய சிறப்பு மாதமாகும். இந்த மாதத்தில் பராசக்தியாக விளங்கக்கூடிய அம்மனுக்கு விரதம் இருந்து வழிபட்டால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

    பராசக்தியை வழிபாடு செய்யும்பொழுது நம்மைச் சுற்றியுள்ள துர்தேவதைகள் விலகி விடுவார்கள் என ஆன்மீகம் கூறுகிறது. அதேபோல் நடராஜரை வணங்கக்கூடிய சிறப்பு மாதமாக இந்த ஆனி மாதம் கருதப்படுகிறது.

    இறைவனை வணங்குவதற்குத் தனிப்பட்ட ஸ்லோகங்கள் எதுவும் கிடையாது. மனதார நினைத்துக் கொண்டு மனதில் தோன்றக்கூடிய வேண்டுதல்களை வைத்து இறைவனை வழிபட்டாலே அனைத்தும் நிறைவேறும் எனக் கூறப்படுகிறது.

    ஆனி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை மிகவும் விசேஷமாகும். சாந்தமான தெய்வங்கள் முதல் உக்கிரமான தெய்வங்கள் வரை அனைத்து தெய்வங்களையும் விரதம் இருந்து வழிபடுவதற்கு உரியத் தினமாக இந்த செவ்வாய்க்கிழமை விளங்குகிறது.

    அதேசமயம் துர்க்கை அம்மனை வேண்டி செவ்வாய்க்கிழமை அன்று விரதம் இருந்து வழிபாடு செய்வது மிகவும் விசேஷமாகும். செவ்வாய்க்கிழமை என்று விரதம் இருந்து ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனை மனதார நினைத்து எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்று வழிபட்டால் துஷ்ட சக்திகள் இருந்து விடுபடலாம் என கூறப்படுகிறது.

    எதிரிகள் தொல்லை விலகத் துர்க்கை அம்மன் ஆசி வழங்குவார் என பக்தர்கள் நம்புகின்றனர். இந்த ஆனி செவ்வாய் திருநாளில் பராசக்தியின் அவதாரமாக விளங்கக்கூடிய அனைத்து அம்மனையும் மனதார நினைத்து வழிபட்டு விரதம் இருந்தால் மங்கள காரியங்கள் உண்டாகும் எனும் கூறப்படுகிறது.

    அதேசமயம் கிராமத்தில் இருக்கக்கூடிய தெய்வங்களையும், எல்லையைக் காக்கக்கூடிய தெய்வங்களையும் வீட்டில் இருந்தபடியே வழிபட்டால் இன்னல்கள் விலகும் எனக் கூறப்படுகிறது.

    • ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும்.
    • இன்று பிறக்கும் ஆடிமாதம் அமாவாசையோடு பிறக்கிறது.

    12 மாதங்களில் ஆடி என்பது தெய்வீக மாதமாக கருதப்படுகிறது. தெய்வீக வழிபாடு செய்வதற்கு உகந்த மாதமாக ஆடி மாதம் இன்று வரை இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஆடியில் அம்மனை வேண்டி வழிபட்டு வந்தால் சகல, சவுபாக்கியங்களும் உண்டாகும் என்பது பக்தர்களுடைய தீவிர நம்பிக்கை. ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும்.

    அத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஆடி மாதத்தின் முதல் நாளான இன்று மாலை வீட்டில் எளிதாக அம்மனை வரவேற்பது எப்படி? இதனால் உண்டாகும் பலன்கள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    ஆடி மாதம் முதல் நாளான இன்று விரதம் இருந்து அம்மனை வீட்டிற்கு வரவழைத்து வழிபட்டு வந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. காலையிலேயே பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து வீடு தோறும் மாவிலை தோரணம் கட்டி, மஞ்சள் நீர் தெளித்து, புத்தாடை ஒன்றை அம்மனுக்கு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். மஞ்சள், சிவப்பு, பச்சை ஆகிய ஏதாவது ஒரு வர்ணங்களில் பட்டுடை ஒன்றை அம்மனுக்கு வைத்து வழிபடுவது விசேஷம்.

    லலிதா ஸஹஸ்ரநாமம் கட்டாயம் படியுங்கள். பின்னர் தூப, தீப ஆராதனை காண்பித்து அம்மனை இன்முகத்துடன் இல்லத்திற்கு வரவேற்று பூஜையை நிறைவு செய்யுங்கள்.

    நிவேதனமாக சர்க்கரைப் பொங்கல் அல்லது கற்கண்டு, உலர் திராட்சை போன்றவற்றை வைக்கலாம். கட்டாயம் மகாலட்சுமியை வரவேற்க பூஜை அறையில் உங்களிடம் இருக்கும் பணம் மற்றும் நாணயங்களை ஒரு தாம்பூல தட்டில் வைத்து அதில் கொஞ்சம் அட்சதை தூவி வையுங்கள். இவ்வாறு முறையாக அம்பாளை வீட்டிற்கு வரவேற்று வழிபட்டால் வருடமெல்லாம் அள்ள அள்ள குறையாத செல்வம் பெருகும். மேலும் இல்லத்தில் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் நிம்மதியும் இருக்கும்.

    இன்று முதல், இந்த மாதம் முடியும் வரை தினம்தோறும் உங்களுடைய இல்லங்களில் மாவிலை தோரணம் கட்டி, அம்மனுக்கு பூஜைகள் நடை பெற்றால் அடுத்த ஒரு வருடம் வரை உங்களுக்கு அம்மன் துணையாக நின்று காத்தருள்வாள் என்பது நம்பிக்கை.

    இம்மாதத்தில் உங்களால் முடிந்த அளவிற்கு இல்லாத, இயலாதவர்களுக்கு அன்னதானம் செய்வது, நீர் தானம், கேழ்வரகு கூழ் தானம் ஆகியவற்றை செய்யலாம்.

    இன்று பிறக்கும் ஆடிமாதம் அமாவாசையோடு பிறக்கிறது. அமாவாசை நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்.

    இந்த ஆண்டு ஆடி மாதம் 2 அமாவாசை வருகிறது. ஜூலை 17-ந் தேதி முதல் அமாவாசையும், ஆகஸ்டுமாதம் 16-ந் தேதி 2-வது அமாவாசையும் வருகிறது. இந்த இரு அமாவாசை நாட்களிலும் பித்ரு சர்பபணம் செய்ய வேண்டும். 2-வது அமாவாசை வரும் ஆகஸ்டு 16-ந் தேதி பித்ரு பூஜைகள் செய்வது கூடுதல் பலன்களைத் தரும்.

    இன்று (ஆடி 1-ம்தேதி) வரும் அமாவாசை கடக ராசி புனர்பூச நட்சத்திரத்திலும் ஆடி 31-ம் தேதி ஆயில்யம் நட்சத்திரத்திலும் வருகிறது. ஆடி முதல் மார்கழி முடிய உள்ள காலத்தில் நம்முடைய முன்னோர்களான பித்ருக்கள் நம்மைப் பார்ப்பதற்காக இந்த உலகத்துக்கு வருகின்றனர். அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை. எனவே, அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போலவும், அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுப்பதுபோலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம்.

    முன்னோர்களுக்கு நாம் செய்யக் கூடியதான இந்த தர்ப்பண காரியங்களை நாம் சிரத்தையாகச் செய்தால், நமக்கு அனைத்து வளங்களும் கிடைக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

    அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து வரவேற்பதன் மூலம் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசி வழங்குவார்கள். ஆடி அமாவாசையான இன்று உணவின்றி தவிப்பவர்கள், ஏழைகள், பசியோடு இருப்பவர்களைத் தேடிச்சென்று தானம் கொடுங்கள். நம்முடைய வழிபாடும், தானமும் உள்ளன்போடு இருந்தால் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும்.

    • மலைமகளான பார்வதி தேவியை போற்றி இயற்றப்பட்ட துதி இது.
    • அம்மன் கோவிலுக்கு சென்று இந்த திதியை பாடி வழிபட வேண்டும்.

    அம்மனுக்கு உகந்த இந்த துதியை தினமும் காலையில் பாடி வந்தால் குடும்பத்தில் இருப்பவர்களிடம் ஏற்பட்டிருக்கும் கருத்துவேறுபாடுகள் மற்றும் மனக்கசப்புகள் நீங்கும்.

    அழகிய மதுரையில் மீனாட்சி

    அகிலம்போற்றும் அன்னை அரசாட்சி

    நான்மாடக் கூடலிலே அருளாட்சி

    தேன்மொழி தேவியின் தேனாட்சி

    சங்கம் முழங்கிடும் நகரிலே

    சங்கரி மீனாளின் கருணையிலே

    மீன்கொடி பறக்கும் மதுரையிலே

    வான்புகழ் கொண்டாள் தாயவளே

    அன்பர்கள் மனமெல்லாம் நிறைந்திருப்பாள்

    ஆதிசிவன் அருகில் அமர்ந்திருப்பாள்

    வைரமணி மகுடம் அணிந்திருப்பாள்

    கருணையுடன் நம்மை காத்து நிற்பாள்

    முத்து பவளம் மரகத மாணிக்கம்

    பொன் ஆபரணம் பூண்டாள்

    சக்தி மனோகரி சந்தர கலாதரி

    தென் மதுராபுரி ஆண்டாள்

    சித்திரை மாதம் தேவி மீனாட்சி

    சொக்க நாதரை மணந்தாள்

    பக்தர்கள் மனமும் பரவசம் பொங்கிட

    அற்புத லீலைகள் புரிந்தாள்

    மலைமகளான பார்வதி தேவியை போற்றி இயற்றப்பட்ட துதி இது. இந்த பாடலை அனைத்து நாட்களிலும் பாடி வழிபடலாம் என்றாலும் வெள்ளிக்கிழமைகளில் காலையில் குளித்து முடித்தவுடன், அருகிலிருக்கும் ஏதேனும் அம்மன் கோவிலுக்கு சென்று இந்த திதியை பாடி வழிபட வேண்டும். இதனால் குடும்பத்தில் இருப்பவர்களிடம் ஏற்பட்டிருக்கும் கருத்துவேறுபாடுகள் மற்றும் மனக்கசப்புகள் நீங்கும். அதிலும் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட அனைத்து விதமான பிரச்சனைகள் நீங்கும். பிரிந்திருந்த தம்பதிகளும் ஒன்று சேருவார்கள்.

    இந்த பாடலை தினமும் சொல்லி அம்மனை வழிபாடு செய்து வந்தால் அனைத்து பிரச்சனைகளும் படிப்படியாக தீரும்.

    • சிறப்பு அலங்காரங்கள் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடைபெறும்.
    • பல்வேறு வகையான பூக்களால் அம்மனுக்கு பூச்சொரிதல் நடத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகில் உள்ள கோவிலூர் நெல்லித்தோப்பு காத்தாயி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடைபெறும். அதன்படி நேற்று ஆடி மாதத்தின் முதல் செவ்வாய் கிழமையை முன்னிட்டு காத்தாயி அம்மனுக்கு பூச்சொரிதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதில் நூற்று க்கணக்கான பக்தர்கள் கொண்டு வந்த பல்வேறு வகையான பூக்களால் அம்மனுக்கு பூச்சொரிதல் நடத்தப்பட்டது. பின்னர் அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • அகத்தியருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.
    • ஆடிப்பூர விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.

    அகத்தியருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆடிப்பூர விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் 7-ம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் வேதநாயகி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.

    • கோவையே கோனியம்மன், கோனியம்மனே கோவை என்று அறிஞர்கள் போற்றுகின்றனர்.
    • கோவில் என்பது தலைவன் உறைவிடம் என்று பொருள்படும்.

    கிராம மக்களாகிய உழவர்கள், தம்மையும் தமது சொத்தாகிய கால்நடையையும் பாதிக்கும் நோய் நொடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், தமது பயிர் செழித்து விளைய வேண்டியும் தெய்வத்தை வழிபடுவார்கள். அவர்கள் வழிபடும் தெய்வம் பெரும்பாலும் கிராம தேவதையாக அமைந்து இருக்கும் அந்த கிராம தேவதை அக்கிராமத்தாரின் நல்வாழ்வினைப் பேணி அருள்வதாக விளங்கும். கிராம மக்களின் நல்வாழ்க்கை பல வகையிலும் சிறந்து விளங்குவதற்கு கிராம தேவதை வழிபாடே காரணமாகும்.

    அவ்வாறு கிராம தேவதையாக அமைந்து விளங்கும் தெய்வங்களுள் மாரியம்மன், காளியம்மன் குறிப்பிடத்தக்கவையாகும். அக்கிராம தேவதைகளுள் கோவையின் காவல் தெய்வமாக திகழ்கின்ற கோனியம்மனும் ஓர் ஒப்பற்ற தெய்வம் ஆகும். மாரியம்மனும், காளியம்மனும் பல கிராமங்களில் திருக்கோவில் கொண்டு விளங்கக் காணலாம். ஆனால் அன்னை கோனியம்மன் கோவையம்பதியில் மட்டுமே திருக்கோவில் கொண்டு எழுந்தருளி திருக்காட்சி அருளுகின்றாள்.

    தமிழகத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகவும், கொங்கு நாட்டின் பெருநகராகவும் விளங்குகின்ற கோவை மாநகரம், சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. அக்காட்டினிடையே இருளர் இன மக்கள் வாழ்ந்த ஒரு சிறு கிராமமும் இருந்தது.

    அக்கிராமத்தில் வாழ்ந்த இருளர் தலைவனாக கோவன் என்பவன் இருந்தான். அவன் பெயராலேயே அந்தக் கிராமம் கோவன் புதூர் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. பிறகு அது நாளடைவில் மருவி தற்போது கோயம்புத்தூர் என்று அழைக்கப்படுகிறது.

    இருளர் தலைவனாகிய கோவன், தன் கிராமத்தில் ஒரு சிறு கோவிலைக் கட்டி, அதில் ஒரு கல்லை நாட்டிக் கோனியம்மன் என்னும் பெயரால் வழிபட்டான். கிராமத்தவராகிய மற்றவர்களும் அத்தெய்வத்தை வழிபட்டு வந்தனர்.

    கல் வடிவில் விளங்கிய கோனியம்மனும் அவர்கள் வாழ்வினை வளமுறச் செய்தாள். அதோடு, அந்த கிராம தேவதையாக, அக்கிராமத்தின் காவல் தெய்வமாகத் திகழ்ந்தாள்.

    பல்லாண்டுகளுக்கு பின்னர் கோசர் மரபினர் கொங்கு நாட்டை ஆண்டனர். அக்கொங் கிளங்கோசர், ஒரு மண் கோட்டையையும், ஓர் ஊரையும் அமைத்தனர். அக்கோட்டையின் காவல் தெய்வமாகக் கோனியம்மனைக் கோவில் கட்டி எழுந்தருளச் செய்தனர். கோசரால் அமைக்கப் பெற்ற ஊர் ஒரு நகரமாகும். குக்கிராமமாக இருந்த ஊர் நகரமாக மாறியதற்கு அன்னை கோனியம்மனின் திருவருளே காரணமாகும். கிராமமாக இருந்த கோவன்புதூர், இன்று முக்கிய பெரிய நகரமாக விளங்க அருள் செய்து விளங்குபவள் கோனியம்மன்.

    கோவை நகர மக்களும், கோனியம்மனையே முக்கிய தெய்வமாகவும், தலைமைத் தெய்வமாகவும் கொண்டு போற்றி வழிபட்டு வருகின்றனர். எனவேதான் கோவையே கோனியம்மன், கோனியம்மனே கோவை என்று அறிஞர்கள் போற்றுகின்றனர்.

    கோவில் என்பது தலைவன் உறைவிடம் என்று பொருள்படும். உலகுக்கு எல்லாம், உயிர்களுக்கு எல்லாம் தலைவனாக உள்ள இறைவனின் உறைவிடம் கோவில். அந்த இறைவனுக்குக் கோன் என்ற பெயரும் உண்டு. தேவர் தலைவனாகிய இந்திரனுக்கு தேவர்கோன் என்ற பெயர் அமைந்தது போன்று தேவ தேவனாகிய, மகாதேவனாகிய இறைவனுக்கும் கோன் என்று அமைந்தது.

    கோன் என்ற சொல்லிற்கு அரசன் என்றும் பொருள் உண்டு. அரசன் என்றால், உலகின் காவலன், நாயகன், தலைவன் என்று அர்த்தமாகும்.

    கோன் என்பது அரசனைக் குறிப்பது போன்றே கோனி என்பது அரசியைக் குறிக்கும். அன்னை பராசக்தி உலகிற்கு அரசி. இறைவன் உலகிற்கு அரசனாக விளங்கும்போது, இறைவி உலகிற்கு அரசியாக விளங்க வேண்டியதுதானே முறை. எனவே, கோவையில் காட்சி தரும் கோனியம்மன் உலக அரசியாக, உலக அரசர்கள் எல்லாம் வழிபடும் உத்தம அரசியாக திகழ்கின்றாள்.

    அரசியானவள் நகரின் நடுநாயகமாக விளங்க வேண்டியதற்கேற்ப, கோனியம்மன் திருக்கோவில் கோவை மாநகரின் நடுநாயகமாக அமைந்து விளங்குகின்றது. தனக்கு மேல் ஓர் அரசியில்லாத தனிப் பேரரசியாக கோனியம்மன் திகழ்கிறாள்.

    அரசியிடம் விளங்க வேண்டிய அன்பு, அறிவு, கருணை ஆகியவற்றின் திருவுருவாகத் திருக்கோவிலுள் உயரிய பீடம் மீது எழுந்தருளி வீற்றிருக்கின்றாள். கருணைப் பெருக்கும், திருமுக மண்டலமும், அன்பு தவழும் புன்னகையும், அருள் சுரக்கும் நயனங்களும் கொண்ட அட்டபுயநாயகியாக வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றாள்.

    வலது திருக்காலை மடக்கி உயர்த்தி பீடத்தின் மீது வைத்தும், இடது திருக்காலால் அசுரன் ஒருவனை மிதித்தும் மங்கல நாயகியாக கோனியம்மன் பொலிவுறுகின்றாள். அரசர்க்கரசியாக, கோவைக்கு அரசியாக, காவல் தெய்வமாக, கண்கண்ட தெய்வமாக விளங்குகின்ற கோனியம்மன் திருக்கோவிலில் நவராத்திரி விழா சீரும் சிறப்புமாக நடைபெறும்.

    என்றாலும் இத்தலத்தில் மாசி மாதம் நடைபெறும் தேர்த்திருவிழாவாகிய பிரம்மோற்சவம் மிகவும் விசேஷமானதாகும். ஆண்டு தோறும் மாசி மாதம் வளர்பிறையில் அன்னையின் தேர்த் திருவிழா அருள் மணக்கும் வகையில் அழகாக நடைபெற்று வருகின்றது. அப்போது கோவையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து கோனியம்மனை தரிசித்து அருள் பெறுவார்கள்.

    • இன்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை.
    • பிரிந்த தம்பதியை ஒன்று சேர்த்து வைப்பாள்.

    ஆடி மாதம் என்பது சக்திக்கு உரிய வழிபாடு. இந்த மாதத்தில் உலகெங்கும் மகாசக்தியின் அளப்பரிய சக்தியானது வியாபித்திருக்கும். ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் மகத்துவம் நிறைந்த நாட்களாகும்.

    இன்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை. இன்று விரதம் இருந்து அம்மனை ஆராதிக்க வேண்டும். காலையில் ஆலயத்துக்கு சென்று ஐந்துமுக திரி வைத்து விளக்கு ஏற்றுங்கள். நெய்விளக்கேற்றுவது மிக, மிக நல்லது. அம்மனுக்கு வேண்டிக் கொண்டவர்கள் அல்லது நினைத்தது நடக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இன்று மாவிளக்கு போடுங்கள்.

    அம்பாளுக்கு மிகவும் பிடித்தது செந்நிற மலர்கள்தான். எனவே சிவப்பு நிறத்தில் மலர்களை வாங்கி சாத்துங்கள். குடும்பமாக எல்லோரும் அமர்ந்து, பூஜித்து வணங்குங்கள்.

    ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து அம்மன் வழிபாடு செய்து சுமங்கலிகளுக்கு புடவை, ஜாக்கெட் முதலான மங்களப் பொருட்களும் சேர்த்துக் கொடுப்பது நல்லது. கணவரின் ஆயுள் பெருகும். தடைப்பட்ட மங்கள சுபகாரியங்கள் அனைத்தும் தங்கு தடை இல்லாமல் விரைவில் கை கூடி வரும்.

    ஆடி மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கி நமஸ்கரிப்பதும் ஆசீர்வதிப்பதும் சிறப்பு வாய்ந்தது.

    வீட்டில் வறுமை நிலை மாறி, சகல செல்வங்களும் பெருகும். லலிதா சகஸ்ர நாம பாராயணம், கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். பால் பாயாசம், கேசரி, சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்து, அக்கம் பக்கத்து குழந்தைகளுக்கு வழங்குங்கள். இன்று முதல் வெள்ளிக்கிழமை இவற்றையெல்லாம் கடை பிடித்தால் ஆன்மிக ஞானம் அதிகரிக்கும்.

    ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையான இன்று மறக்காமல், அம்பாளை, அன்னையை, மகாசக்தியை, உலகாளும் நாயகியை ஆத்மார்த்தமாக வணங்குங்கள். இல்லத்திலும் உள்ளத்திலும் ஒளியேற்றுவாள். பிரிந்த தம்பதியை ஒன்று சேர்த்து வைப்பாள். இதுவரை வீட்டில் இல்லாமல் இருந்த ஒற்றுமையை பலப்படுத்திக் கொடுப்பாள்.

    • வேம்பும் எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்தமானவை.
    • தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம்.

    தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம். அம்மனுக்கு உரிய மாதமாக இது போற்றப்படுகிறது. பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    வருடத்தை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இதுவே தேவர்களின் பகல் காலமாகும். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவுக் காலமாகும். நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள்தான். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.

    மழைக்காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல்நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர். வேம்பும் எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்தமானவை. கூழும் விருப்பமானதே. இவை உடல்நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற்கும் உதவுபவை. இவற்றையே இம்மாதத்தில் அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்குத் தருகிறார்கள்.

    ஆடி மாதத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்கள் ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம், ஆடிப் பண்டிகைகளாகும்.

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். விழா நாட்களில் அம்மன் வீதி வலம் வருவது சிறப்பான ஒன்றாகும்.

    திருநின்றவூரில் உள்ள நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி முதல் நாள் சக்தி மாலை அணிந்து மஞ்சளாடை தரித்து பயபக்தியுடன் ஒரு மண்டலம் விரதமிருந்து வேண்டுதல் நிறைவேற்றுவார்கள். மேல்மருவத்தூர் அம்மன் ஆலயத்திலும் இதுபோல் செய்வார்கள். அவ்வாலயம் வரும் பெண்களை அங்குள்ளோர் சக்தி என்றுதான் அழைப்பார்கள்.

    • ஆடி முதல் வெள்ளிக்கிழமையன்று அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
    • அம்மனை வேண்டிக்கொண்டு உரலில் இடிக்கப்பட்ட மாவை குழந்தை இல்லாத பெண் பக்தர்கள் சாப்பிட்டனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த சு.பொலக்குணம் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் 19-ம் ஆண்டு ஆடிமாத திருவிழா நேற்று நடைபெற்றது.

    ஆடி முதல் வெள்ளிக்கிழமையன்று அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பின்னர் அம்மன் வீதியுலா, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.

    இதையடுத்து, சு.பொலக்குணம் கிராமத்தில் வசிக்கும் பக்தரின் மார்பு மீது உரல் வைத்து அரிசி, மஞ்சள் ஆகியவை கொட்டப்பட்டு உலக்கையால் மாவு இடிக்கப்பட்டது.

    உரலில் இடிக்கப்பட்ட மாவை உண்ணுபவர்களுக்கு திருமணம் கைகூடும், குழந்தை பேறு உண்டாகும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.

    இதனால், அம்மனை வேண்டிக்கொண்டு உரலில் இடிக்கப்பட்ட மாவை குழந்தை இல்லாத பெண் பக்தர்கள் சாப்பிட்டனர்.

    இதைத்தொடர்ந்து, கோவிலில் அம்மன் ஊஞ்சல் தாலாட்டும், ஆன்மிக சொற்பொழிவு மற்றும் நாடகமும் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

    ×