search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bharat Bandh"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போராட்ட களத்தில் இருந்த விவசாயிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
    • இதனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார்.

    புதுடெல்லி:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்டுள்ளனர்.

    விவசாயிகளை டெல்லிக்குள் நுழையாமல் இருப்பதை உறுதிசெய்ய தடுப்புகள் வைத்து போலீசார் மறித்துள்ளனர். போராட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே அரியானாவின் அம்பாலா மாவட்டம் சம்பு எல்லையில் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடுப்புகளை மீற முயன்றவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டன. இதனால் முன்னேற முடியாமல் கடந்த 3 நாளாக சம்பு எல்லையிலேயே விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில், போராட்டக் களத்தில் இருந்த கியான் சிங் (63) என்ற முதியவருக்கு இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் பஞ்சாப்பின் ராஜ்புராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன்பின், மேல் சிகிச்சைக்காக பாட்டியாலாவில் உள்ள ராஜீந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கியான் சிங்கை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி மாரடைப்பால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • ஜார்க்கண்ட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
    • பாட்னாவில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டனர்.

    அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்படும் மத்திய அரசின் கொள்கைக்கு எதிராக காங்கிரஸ் உள்பட பல அமைப்புகள் சார்பில் இன்று பாரத் பந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    பீகார், ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநிலங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதையொட்டி சம்பந்தப்பட்ட மாநிலங்களில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஜார்க்கண்ட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கஜார்க்கண்ட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுப்பட்டுள்ளது. மேலும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

    பள்ளி மாணவர்கள், குறிப்பாக பேருந்தில் பயணம் செய்பவர்கள், எந்த ஒரு பிரச்சனையையும் எதிர்கொள்வதை நாங்கள் விரும்பவில்லை என்று அம்மாநில பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சர்மா தெரிவித்துள்ளார். ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பாரத் பந்த்தையொட்டி அசாம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டனர். ஜெய்ப்பூரில் நேற்று மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 18 ஆம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கூடுதல் ஆணையர் அஜய்பால் லம்பா, தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் பாரத் பந்த் காரணமாக ஹவுரா ஸ்டேஷன், ஹவுரா பாலம், சந்த்ராகாச்சி சந்திப்பு, ஷாலிமார் ரயில் நிலையம் மற்றும் ஹவுரா உள்பட பல இடங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


    மதுரையில் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு நுழைய முயன்ற அரசு ஊழியர்கள் 800 பேரை போலீசார் கைது செய்தனர். #BharatBandh
    மதுரை:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது.

    தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கக்கூடாது என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் நேற்றும், இன்றும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

    இதில் வருமான வரித்துறை, தபால் துறை, தொலை தொடர்புத்துறை உள்ளிட்ட மத்திய அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்கள் பங்கேற்று உள்ளனர்.

    இதே போல் வங்கி, காப்பீடு நிறுவன ஊழியர்களும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் 2-வது நாளாக நடைபெற்ற வேலைநிறுத்தம் காரணமாக மத்திய அரசு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. வங்கிகள் செயல்படாததால் பொதுமக்களும், வியாபாரிகளும் சிரமம் அடைந்தனர்.

    பல ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

    மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை முன்பு இன்று காலை தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட தொழிற்சங்கங்ள் சார்பில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் 800-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

    அவர்கள் சாலையை மறித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். பின்னர் ரெயில் நிலையத்தை முற்றுகையிடுவதற்காக அவர்கள் பேரணியாக சென்றனர்.

    தொழிலாளர்களின் முற்றுகையையொட்டி மதுரை ரெயில் நிலைய கிழக்கு நுழைவுவாயில் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் தடுப்புகளும் அமைக்கப்பட்டு இருந்தன.

    பேரணியாக வந்தவர்களிடம் கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். இதையடுத்து போலீசார் தடுத்து நிறுத்தி பெண்கள் உள்பட 800-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    மதுரை கீழவெளி வீதியில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பெண்கள் உள்பட 50 பேர் கலந்து கொண்டனர்.

    மதுரை ரெயில் நிலையத்தின் மேற்கு நுழைவுவாயில் முன்பு இன்று எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  #BharatBandh
    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். #BharatBandh
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளர் தங்கமோகன், எல்.பி.எப். மாநில துணை செயலாளர் இளங்கோ, ஐ.என்.டி.யூ.சி. செயலாளர் முருகேசன், ஹெச்.எம்.எஸ் மாவட்ட செயலாளர் முத்துகருப்பன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணை தலைவர் ஸ்ரீகுமார் மற்றும் அந்தோணிமுத்து மற்றும் மகாராஜப்பிள்ளை, ஞானதாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் அனந்த கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

    இதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் சந்திரகலா தலைமை தாங்கினார். அங்கன்வாடி ஊழியர் சங்க தலைவி விஜயலெட்சுமி, பொதுச்செயலாளர் சரஸ்வதி, பொருளாளர் சரோஜினி, துணைச் செயலாளர் அமுதா, சி.ஐ.டி.யூ. மாவட்ட பொருளாளர் சித்ரா, துணைத்தலைவர்கள் சந்திரபோஸ், ஜாண் சவுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

    ராஜாக்கமங்கலத்தில் கட்டுமான சங்கம் மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமையிலும், கருங்கல்லில் ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் சோபன்ராஜ் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. முன்னாள் எம்.பி. பெல்லார்மின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    நித்திரவிளையில் சி.ஐ.டி.யூ. மாவட்ட குழு உறுப்பினர் வல்சலம் தலைமையிலும், கொல்லங்கோட்டில் விஜயாமோகன் தலைமையிலும், குழித்துறையில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் சிங்காரம் தலைமையிலும் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், எல்.பி.எப். மாவட்ட செயலாளர் ஞானதாஸ் கலந்து கொண்டு பேசினார்கள்.

    அருமனையில் சி.ஐ.டி.யூ. மாவட்ட குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் தலைமையிலும், குலசேகரத்தில் தோட்ட தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் வல்ச குமார் தலைமையிலும், வேர்கிளம்பியில் கட்டுமான சங்க துணை செயலாளர் சகாய ஆண்டனி தலைமையிலும், ஆரல்வாய்மொழியில் சக்திவேல் தலைமையிலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். #BharatBandh

    மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்த 48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்று ரெயில் மறியல் போன்ற ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட சுமார் 1500 பேர் கைது செய்யப்பட்டனர். #BharatBandh
    சென்னை:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு அலுவலகங்களை தனியார் மயம் ஆக்க கூடாது என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வற்புறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

    சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 12 மத்திய தொழிற்சங்கங்கள் மாநில அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் இந்த வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக நேற்று ஏராளமான அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

    இந்த ஊழியர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். 2-வது நாளாக இன்று இந்த தொழிற்சங்கங்கள் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.

    பெரம்பூரில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. காலை 11 மணியளவில் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் தலைமையில் தொழிற்சங்கத்தினர் பெரம்பூர் ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

    அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

    போலீசார் தடையை மீறி சில தொண்டர்கள் ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள்.

    அவர்களுடன் போலீஸ் இணை கமி‌ஷனர் விஜயகுமாரி பேச்சு வார்த்தை நடத்தினார். அதை தொடர்ந்து ரெயில் மறியல் நடந்தது.

    பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட தயாரான மின்சார ரெயில் முன்பு மகேந்திரன் தலைமையில் தொழிற்சங்கத்தினர் மறியல் செய்தனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

    இந்த மறியலில் ஈடுபட்ட மு.சம்பத், சிவகுமார், சுந்தர்ராஜன் உள்பட 750 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரையும் போலீஸ் வேனில் ஏற்றி தனியார் மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாநில தலைவர் ஆர்.சவுந்தரராஜன் தலைமையில் கிண்டியில் ரெயில் மறியலில் ஈடுபட ரேஸ்கோர்ஸ் அருகில் திரண்டனர். சுமார் 750 பேர் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை உள்ளே விடாமல் தடுக்க போலீசார் தடுப்பு வேலி வைத்து இருந்தனர். பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீசாரை மீறி மறியல் செய்ய உள்ளே நுழைய முயன்ற போது போலீசாரும் கம்யூனிஸ்டு தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதற்கிடையில் 50-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் மின்சார ரெயிலில் பயணம் செய்து மறியலில் ஈடுபட்டனர்.

    கடற்கரை-தாம்பரம், தாம்பரம்-கடற்கரை மார்க்கமாக சென்ற 4 மின்சார ரெயில்களை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். 10 நிமிடங்களுக்கு மேலாக மறியலில் ஈடுபட்ட தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். சவுந்தரராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. பீம்ராவ் உள்ளிட்ட 750 பேர் கைது செய்யப்பட்டு சமூதாய கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    போராட்டம் குறித்து, சி.ஐ.டி.யூ மாநில செயலாளர் ஆர்.சவுந்தரராஜன் கூறியதாவது:-

    அகில இந்திய அளவில் அனைத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு பிறகும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தவறினால் அடுத்த கட்டமாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தீவிர தொடர் போராட்டத்தை முன் எடுத்து செல்வோம்.

    தமிழகம் முழுவதும் அனைத்து தொழிற்சங்கத்தினரும் இன்று ரெயில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். வங்கி, எல்.ஐ.சி., தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

    மத்திய அரசின் அனைத்து துறைகளும் 2 நாட்களாக முடங்கியுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அண்ணாசாலையில் தொமு.ச., ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யூ. ஏ.ஐ.டி.சிடி.யூ, எம்.எல்.எச், ஆகிய தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென்று அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு கூறினார்கள். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருவள்ளூர் உழவர் சந்தை அருகே அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி. கங்காதரன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

    மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் விஜயன் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர்.

    இதையடுத்து போராட்டக்காரர்கள் மீஞ்சூர் நேரு சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பொன்னேரி - மீஞ்சூர், மீஞ்சூர் - திருவொற்றியூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். #BharatBandh

    நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின் இரண்டாவது நாளான இன்று பாராளுமன்றம் நோக்கி தொழிலாளர்களின் மிகப்பெரிய பேரணி நடைபெறுவதால் டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #BharatBandh #Rally
    புதுடெல்லி:

    குறைந்தபட்ச ஊதிய வரம்பை உயர்த்துவது, பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்கக்கூடாது, தொழிலாளர் சட்ட சீர்திருத்த முயற்சிகளை கைவிட வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு சார்பு தொழிற்சங்கங்களின் 2 நாள் வேலைநிறுத்தம் நேற்று தொடங்கியது.

    ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.யு.டி.யு.சி. ஆகிய தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், மத்திய-மாநில அரசுகளில் பணியாற்றும் ஊழியர்கள் இதில் பங்கேற்றனர். இன்று 2-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    வடமாநிலங்களில் நேற்று தொடங்கிய வேலைநிறுத்தத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும், கேரளா, மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களிலும் ஸ்டிரைக்குக்கு ஆதரவு இருந்தது.

    பல மாநிலங்களில் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் பணிக்கு வராததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வங்கி சேவைகளும் பாதிக்கப்பட்டன.

    அசாம், மேற்கு வங்காளம், பஞ்சாப், அரியானா, பீகார், கர்நாடகம், ராஜஸ்தான், கேரளாவில் பல இடங்களில் ரெயில் மறியல் நடந்தது. சத்தீஸ்கரில் வங்கி மற்றும் அஞ்சலகச் சேவைகள் பாதிக்கப்பட்டன. இன்சூரன்ஸ் நிறுவன பணியாளர்களும் பணிக்கு வரவில்லை.



    மணிப்பூர் பகுதியில் உள்ள அரசு நிலக்கரி சுரங்கம், கேவ்ரா, தீப்கா போன்ற இடங்களில் உள்ள சுரங்கங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. என்றாலும் இங்கு போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படவில்லை. பள்ளி-கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கின.

    கோவா மாநிலம் பனாஜியில் போக்குவரத்து, வங்கி, துறைமுக தொழிலாளர்கள் உள்பட 5,000 பேர் 3 கி.மீ. தொலைவுக்கு பேரணி நடத்தினர்.

    கர்நாடகத்தில் பெரும்பாலான அரசு பேருந்துகள் ஓடவில்லை. இதனால் தொலைதூரம் செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

    மராட்டியத்தில் மும்பை, தானே, நவிமும்பை ஆகிய இடங்களில் மின்வாரிய மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் 33,000 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாகவும் இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தொழிற்சங்கத்தினர் சாலைகளில் டயர்களை கொளுத்திப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    டெல்லியில் இன்று பாராளுமன்றம் நோக்கி தொழிலாளர்களின் மிகப்பெரிய பேரணி நடக்க உள்ளது. டெல்லி மண்டி அவுசில் இருந்து தொடங்கும் இந்த பேரணியில் அனைத்து தொழிற்சங்கங்கள், தொழிலாளர் நல அமைப்புகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    பேரணி பாராளுமன்றத்தை அடைந்ததும் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளதால் பாராளுமன்றத்தை சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் நேற்றும், இன்றும் அரசு பஸ்கள், ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்கள் வழக்கம் போல ஓடின. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை. தொலைதூரம் செல்லும் ரெயில்களும், புறநகர் ரெயில்களும் வழக்கம் போல் ஓடின.

    மத்திய அரசு அலுவலகங்கள் ஊழியர்கள் போராட்டம் காரணமாக வெறிச்சோடி காணப்பட்டன. பெரும்பாலான வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் உள்பட பல தபால் நிலையங்களில் ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டது.

    சென்னையில் வங்கி ஊழியர்கள் போராட்டம் காரணமாக பல ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் ஏ.டி.எம்.கள் மூடப்பட்டு இருந்தன. வங்கிகளில் காசோலை மூலமான பல கோடி பணப் பரிமாற்றங்களும் நடைபெறாமல் 2-வது நாளாக முடங்கியது.

    சென்னை எழிலகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஊழியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. #BharatBandh #Rally

    கேரளாவில் இன்று 2-வது நாளாக ரெயில்களை மறித்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள். அரசு பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. #BharatBandh
    திருவனந்தபுரம்:

    நாடு தழுவிய அளவில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. நேற்று காலை தொடங்கிய இந்த போராட்டம் இன்று இரவு வரை நீடிக்கிறது.

    கேரளாவிலும் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் தொழிற்சங்கத்தினர் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. பெரும்பாலான ஆட்டோ, டாக்சி, வேன்களும் ஓடவில்லை. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

    இதனால் ரெயில்களை பொதுமக்கள் நாடிச் சென்றனர். ஆனால் ரெயில்களையும் மறித்து போராட்டம் நடைபெற்றதால் ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது. பல ரெயில்கள் தாமதமாகவே புறப்பட்டுச் செல்ல முடிந்தது. இந்த போராட்டம் காரணமாக கேரள மாநிலமே ஸ்தம்பித்தது.

    இன்று 2-வது நாளாக கேரளாவில் ரெயில்களை மறித்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள். காலை 6 மணிக்கு திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடந்ததால் அந்த ரெயில் புறப்பட முடியாத சூழ்நிலை உருவானது. உடனடியாக ரெயில்வே போலீசார் அங்கு சென்று போராட்டம் நடத்தியவர்களை அப்புறப்படுத்தினார்கள். அதன்பிறகு தாமதமாக ரெயில் புறப்பட்டுச் சென்றது.

    இதேபோல கொச்சி, கொல்லத்திலும் ரெயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது.



    இன்றும் கேரள அரசு பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. அனைத்து பஸ்களும் பாதுகாப்பாக டெப்போக்களில் நிறுத்தப்பட்டு இருந்தது. மேலும் மாநிலம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் மட்டும் சபரிமலைக்கு சென்று வந்தன.

    திருவனந்தபுரத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்வதற்காக வந்த நோயாளிகள் பலர் பஸ், ஆட்டோக்கள் இயங்காததால் சிரமத்திற்கு ஆளானார்கள். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தங்களது ஜீப், வேன்களில் அவர்களை ஏற்றி ஆஸ்பத்திரிக்கு செல்ல உதவினார்கள்.

    வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.  #BharatBandh



    திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடின.
    திண்டுக்கல்:

    மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

    இன்றும் நாளையும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடியது. கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்பட்டது.

    மத்திய அரசு அலுவலகங்களான பி.எஸ்.என்.எல்., தபால்துறை, ரெயில்வே உள்ளிட்ட அலுவலகங்களில் குறைந்த அளவு ஊழியர்களே வந்திருந்தனர். வங்கிகள் செயல்படவில்லை.

    திண்டுக்கல் நகரில் 50-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இதில் பணிபுரியும் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் அந்த ஆலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் திண்டுக்கல்லில் முழு வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். அவர்கள் தெரிவிக்கையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்டோக்களுக்கு இலவச ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தப்படும் என்றார்.

    ஆனால் தற்போதைய தமிழக அரசு அதனை நடைமுறைப்படுத்தவில்லை. கடந்த பல ஆண்டுகளாக ஆட்டோ கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. இன்சூரன்ஸ் தொகை அதிக அளவு உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசலுக்கான மானியம் வழங்கவில்லை. இதனை கண்டித்து இன்றும் நாளையும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற உள்ளோம் என்றனர்.

    மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்றபோதும் ஒருசில அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் இல்லாமல் மக்கள் பணி பாதிக்கப்பட்டது.

    முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுவையில் பஸ்கள் ஓடவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. #BharatBandh
    புதுச்சேரி:

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு பாதகமாக சட்டங்களை திருத்தக்கூடாது.

    பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்றும்( செவ்வாய்க்கிழமை), நாளையும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., தொ.மு.ச., ஏ.ஐ.சி.சி.டி.யூ., எல்.எல்.எப். உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்கு பிற தொழிற்சங்கங்கள், அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, வணிகர்கள் சங்கம் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்தது.

    இந்த நிலையில் இன்று காலை முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. போராட்டத்தால் புதுவையில் பஸ்கள் ஓடவில்லை. தனியார் பஸ்கள் மட்டுமின்றி புதுவை அரசு போக்குவரத்துக்கழக பஸ்களும் ஓடவில்லை. தமிழகத்தில் இருந்து புதுவைக்கும், புதுவை வழியாக செல்லும் தமிழக அரசு பஸ்களும் குறைந்தளவில் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது.

    இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. வெளியூரில் பணி செய்யும் ஊழியர்கள் பஸ் நிலைய வாசலில் நூற்றுக்கணக்கில் பஸ்களுக்காக காத்திருந்தனர். தனியார் என்ஜினீயரிங், மருத்துவக்கல்லூரி மாணவர்களை அழைத்து செல்வதற்காக சில பஸ்கள் மட்டும் இயங்கின. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்ததால் ஆட்டோ, டெம்போக்களும் முழுமையாக இயங்கவில்லை.

    நகரின் பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சிறிய கடைகள் வரை அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் காலை நேரத்திலேயே சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட், நெல்லித்தோப்பு, முத்தியால்பேட்டை மார்க்கெட் வளாகத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    நகர பகுதி மட்டுமின்றி கிராமப்பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. சேதாரப்பட்டு, மேட்டுப்பாளையம், தட்டாஞ்சாவடி, திருபுவனை உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் தொழிற்சாலைகள் இயங்க வில்லை. புதுவையில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

    அரசு பள்ளிகள் இயங்கினாலும் மாணவர்களின் வருகை குறைவாக இருந்தது. மத்திய-மாநில அரசுகளின் அலுவலகங்கள் இயங்கினாலும் ஊழியர்களின் வருகை குறைவாக இருந்தது. ஒட்டுமொத்தமாக பந்த் போராட்டத்தால் புதுவையில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

    போராட்டத்தையொட்டி புதுவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர். பஸ் நிலையம், ரெயில்வே நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ரோந்து சென்றனர். #BharatBandh
    புதுவையில் தமிழக அரசு பஸ் மீது மர்ம கும்பல் கற்களை வீசிவிட்டு தப்பி ஓடினர். அதிர்ஷ்டவசமாக டிரைவர் மற்றும் பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை. #Bharatbandh
    புதுச்சேரி:

    முழு அடைப்பு போராட்டத்தையொட்டி புதுவையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் இயங்கவில்லை. ஒரு சில ஆட்டோக்கள் மட்டும் இயங்கின. அதே வேளையில் தமிழக அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.

    அதுபோல் இன்று காலை 7.30 மணியளவில் புதுவையில் இருந்து தமிழக அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறைக்கு புறப்பட்டு சென்றது.

    புதுவை- கடலூர் சாலையில் நைனார் மண்டபத்தில் சென்றபோது, ஒரு மர்ம கும்பல் அந்த பஸ் மீது சரமாரியாக கற்களை வீசி விட்டு தப்பி ஓடிவிட்டது.

    இதில், பஸ்சின் முன் பக்க கண்ணாடி சுக்கு நூறாக நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் மற்றும் பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை.

    இதையடுத்து அந்த பஸ் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. பயணிகள் வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பஸ் மீது கற்களை வீசிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  #Bharatbandh

    அகில இந்திய அளவில் நடைபெறும் 48 மணிநேர வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. #Bharatbandh #Centretradeunions
    சென்னை:

    மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் இன்று முதல் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

    இந்த போராட்டத்தில் அனைத்து அரசு ஊழியர்கள், போக்குவரத்து கழக தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.

    ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    இந்தியா முழுவதும் 15 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் 1½ லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 9 லட்சம் மாநில அரசு ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்க இருப்பதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்து இருந்தனர்.

    போக்குவரத்து தொழிலாளர்களும் இன்றைய போராட்டத்தில் பங்கெடுத்துள்ளதால் தமிழகத்தில் பஸ் போக்குவரத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் எழுந்தது.

    ஆனால் இன்று காலை அதுபோன்று எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த போராட்டத்துக்கு ஆட்டோ தொழிற்சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதனால் ஆட்டோக்களும் ஓடாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று காலையில் வழக்கம் போல பஸ்-ஆட்டோக்கள் ஓடின.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து எப்போதும் போல முழு அளவில் பஸ்கள் இயக்கப்பட்டன. அனைத்து வழித்தடங்களுக்கும் எந்தவித தடங்கலும் இன்றி பஸ்கள் இயக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 95 சதவீத பஸ்கள் ஓடின.

    இருப்பினும் முன்னெச்சரிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பஸ் நிலையங்கள், பஸ் டெப்போக்கள் முன்பு போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    பஸ் ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்து பல்லவன் இல்லம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சென்னையில் 33 பஸ் டெப்போக்கள் முன்பும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். கோயம்பேடு பஸ் நிலையத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    அகில இந்திய அளவில் நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    வங்கி ஊழியர்களும் இன்றைய போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் வங்கி பணிகள் பாதிக்கப்பட்டது. 50 ஆயிரத்துக்கும் அதிகமான காசோலைகள் தமிழக வங்கிகளில் முடங்கியுள்ளது.

    இதனால் பணப்பரிவர்த்தனை முற்றிலுமாக முடங்கி காணப்பட்டது. இருப்பினும். ஏ.டி.எம். மையங்கள் வழக்கம்போல செயல்பட்டன.

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் சட்டங்களை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறைகளில் பங்கு விற்பனைகளை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

    இன்றும், நாளையும் நடைபெறும் இந்த போராட்டத்தால் அரசு அலுவலகங்களில் பணிகள் கடுமையாக பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தால் சென்னையில் மத்திய அரசு அலுவலகங்களில் பணிகள் முடங்கின. சாஸ்திரி பவன், ராஜாஜி பவன் போன்ற இடங்களில் செயல்படும் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 2 நாட்கள் விடுப்பு எடுத்துவிட்டு வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலக ஊழியர்கள் பணிக்கு வராததால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல ஏ.ஜி.ஆபீஸ், மத்திய கணக்கு தணிக்கை துறை அலுவலகம், சுங்க வரி மற்றும் கலால் வரி அலுவலகங்களிலும் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.

    மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வருமான வரித்துறை அலுவலகத்தில் மத்திய அரசு அதிகாரிகள் சம்மேளன பொதுச்செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

    மத்திய அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டதோடு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. #Bharatbandh #Centretradeunions
    நாடு தழுவிய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் நடத்திவரும் 48 மணி நேர வேலை நிறுத்தத்தால் வட மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சில இடங்களில் வன்முறையும் வெடித்தது. #Bharatbandh #Centretradeunions
    புதுடெல்லி:

    பொதுத்துறை மற்றும் அரசு நிறுவனங்களை தனியார் துறையிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம், குறைந்தபட்ச சம்பள விகிதத்தில் உயர்வு, தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் இடதுசாரி இயக்கங்களை சேர்ந்த தேசிய தொழிற்சங்கங்களான ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.யு.டி.யு.சி. ஆகியவை இன்றும் நாளையும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் (பாரத் பந்த்) ஈடுபடப்போவதாக அறிவித்தன.

    இந்த தொழிற்சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள் வங்கி ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள், ஆட்டோ, பஸ் மற்றும் வாகன தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது.

    இந்த தொழிற்சங்கங்களில் 20 கோடி தொழிலாளர்கள் இருப்பதாகவும் அவர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று காலை தொடங்கிய வேலைநிறுத்தத்தால் கேரளா, கர்நாடகம், மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் தொழிற்சங்கத்தினர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். பல இடங்ளில் பஸ் போக்குவரத்தும் முடங்கியது.



    கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் திரளான தொழிலாளர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் அம்மாநிலத்தின் முக்கிய நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

    மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா உள்பட பல நகரங்களில் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ரெயில்கள் தாமதமாக சென்றன. பயணிகள் கடும் பாதிப்பு அடைந்தனர். கொல்கத்தாவில் பல இடங்களில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    கொல்கத்தா அருகே பராசாட் என்ற இடத்தில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் அந்த பக்கமாக வந்த பள்ளிக்கூட பஸ் மீது கல்வீசி தாக்கி சேதப்படுத்தினார்கள். நல்லவேளையாக இதில் மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    ஜாதவ்பூர் என்ற இடத்தில் பஸ்கள் மீது கல்வீசப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதை தடுத்தபோது தொழிற்சங்கத்தினருக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

    அசன்சால் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட மா.கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது.

    இதேபோல் அசன்சால் ஹிண்ட் மோடார் உள்பட மேற்கு வங்காளத்தின் பல இடங்களில் பஸ்கள் உடைக்கப்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் விடுப்பு எடுத்து வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.

    ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். தீவைப்பு சம்பவங்களும் நடந்தன. இன்றைய வேலைநிறுத்தம் வடமாநிலங்களில் ஓரளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும். தமிழ்நாட்டில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

    பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. பஸ், ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்தும் இயல்பாக இயங்கி வருகிறது.  #Bharatbandh  #Centretradeunions
    ×