என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cheating case"

    • புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் விடுத்தது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் பதிவு செய்துள்ளார்.
    • ஸ்ரீதர் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் வாவு யூவியாஸ் பாக்மி (வயது 47).

    இவரது மூத்த மருமகன் ஜின்னா என்பவரின் செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் கடந்த அக்டோபர் மாதம் ஒரு செல்போன் எண்ணில் இருந்து பகுதி நேர வேலை சம்பந்தமாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

    இதனையடுத்து வாவு யூவியாஸ் பாக்மி அந்த மர்மநபரிடம் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு அதில் அவர் அனுப்பிய 'லிங்க்' மூலம் டெலிகிராம் குரூப்பில் இணைந்து, வேலை செய்வதற்கு அவர் அனுப்பிய மற்றொரு லிங்க் மூலம் பதிவும் செய்துள்ளார்.

    பின்னர் அந்த மர்மநபர் தூண்டுதலின்பேரில் வாவு யூவியாஸ் பாக்மி அதிக லாபம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் தனது மருமகன் ஜின்னாவின் வங்கி கணக்கில் இருந்து பல்வேறு வங்கி கணக்கிற்கு மொத்தம் ரூ. 11 லட்சத்து 72 ஆயிரம் பணத்தை செலுத்தி உள்ளார். அதன் பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த நவம்பர் 22-ந்தேதி அந்த மர்மநபர், ஜின்னாவின் வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனது பெயர் ஸ்ரீதர் என்றும் நான் தங்களுடைய பணத்தை எடுத்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்றும் கூறி கூகுல்பே மூலமாக ஜின்னாவின் வங்கி கணக்கிற்கு ரூ. 20 ஆயிரம் பணமும், அதனைத் தொடர்ந்து ரூ. 30 ஆயிரமும், அதற்கு மறுநாள் ரூ 9 ஆயிரமும் அனுப்பியுள்ளார்.

    இதனையடுத்து ஸ்ரீதர் ஜின்னாவின் செல்போன் எண் மூலம் வாவு யூவியாஸ் பாக்மியை தொடர்பு கொண்டு அவர்களுடைய குடும்ப விபரங்களை பற்றி கூறி, வாவு யூவியாஸ் பாக்மியின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து பல்வேறு இன்ஸ்டாகிராம் கணக்குகளில் பதிவு செய்துள்ளார். பின்னர் கடந்த டிசம்பர் 20-ந் தேதி முதல் வாட்ஸ்அப்பில் வாவு யூவியாஸ் பாக்மியின் குடும்பத்தினருக்கும் மற்றும் அவரது மூத்த மருமகன் ஜின்னாவின் குடும்பத்தினருக்கும் ஆபாச வார்த்தைகள் மற்றும் ஆபாச புகைப்படங்களை அனுப்பி ஸ்ரீதர் மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதனையடுத்து வாவு யூவியாஸ் பாக்மி தாங்கள் மோசடி செய்யப்பட்டது மற்றும் சமூக வலைதளத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் விடுத்தது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் பதிவு செய்துள்ளார்.

    அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி மதுரை வடக்கு தாலுகா தத்தனேரி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் (36) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    மதுரையில் ஏலச்சீட்டு நடத்துபவரிடம் ரூ. 12 1/2 லட்சம் மோசடி செய்த கணவன் - மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மதுரை:

    மதுரை செல்லூர் மீனாட்சிபுரத்தில் உள்ள நேதாஜி மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் மாயகுமார் (வயது 32). இவர் அருகில் உள்ள கண்மாய்க்கரை பகுதியில் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவரிடம் அதே பகுதியைச்சேர்ந்த பலர் ஏலச்சீட்டில் சேர்ந்து மாதந்தோறும் பணம் கட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் மாயக் குமார் செல்லூர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    அழகர்கோவில் மெயின் ரோட்டைச் சேர்ந்த சரவணக் குமார், அவரது மனைவி ஆகியோர் ஏலச்சீட்டில் சேர்ந்தனர். அவர்கள் பணம் கட்டுவதற்கு முதல் மாதத்திலேயே மொத்த ஏலச்சீட்டு தொகை ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றுக் கொண்டனர்.

    பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் பின்னர் சீட்டுப்பணத்தை செலுத்தவில்லை. பலமுறை பணம் கேட்டும் எந்த பதிலும் இல்லை. மேலும் பணத்தை தர முடியாது என மிரட்டல் விடுக்கின்றனர். எனவே உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகாரின் அடிப்படையில் சரவணக்குமார் மற்றும் அவரது மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருச்சி வங்கியில் கார் வாங்குவதற்காக போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.18 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    திருச்சி:

    திருச்சி தில்லைநகரில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மற்றொரு கிளையான இனாம் குளத்தூர் கிளையில் அக்பர் (வயது 55) மேலாளராக பணி புரிந்து வருகிறார்.

    அந்த வங்கியில் கார் வாங்குவதற்காக தனியார் நிறுவனம் பெயரில் ரூ.18 லட்சம் கடன் பெறப்பட்டுள்ளது. பின்னர் வங்கியில் காரின் ஆவணங்களை ஒப்படைக்கு மாறு கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் சமர்பித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என தெரிய வந்தது.

    இது குறித்து வங்கி மேலாளர் திருச்சி மாநகர துணை கமி‌ஷனரிடம் புகார் செய்தார். இது குறித்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த நாகராஜ் (53), விமல் மற்றும் அவரது மனைவி மஞ்சுளா ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் நாகராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மதுரையில் ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    மதுரை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள குலசேகரநல்லூரைச் சேர்ந்தவர் சேதுபதி (வயது44). இவர் மதுரை தல்லாகுளம் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    எனது மகன் வேலை தேடிக்கொண்டிருந்தபோது மதுரை காளவாசலைச் சேர்ந்த நண்பர் சல்மான் என்பவர் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு பணம் செலவாகும் எனவும் கூறினார்.

    இதை நம்பி சல்மான் கூறியபடி அருப்புக்கோட்டையை சேர்ந்த கணேசன், அவரது தாயார் மற்றும் குமார் ஆகியோரிடம் பல்வேறு தவணைகளில் ரூ.5 லட்சம் கொடுத்தேன். பணம் வாங்கி பின்பு அவர்கள் வேலையும் வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பித்தரவில்லை.

    எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த புகாரின் அடிப்படையில் தல்லாகுளம் போலீசார் சல்மான், கணேசன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருவள்ளூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 35 லட்சம் மோசடி செய்த கணவன் -மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் பூங்காநகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி சந்திரகுமாரி, மகள் குமுதவல்லி. இவர்கள் ஏல சீட்டு நடத்தி வந்தனர்.

    இவர்களிடம் அதே பகுதியை சேர்ந்த மணி என்பவர் மாத தவணை முறையில் பணம் கட்டி வந்தார். சீட்டு முடிந்த பின்பும் மணிக்கு பணத்தை அவர்கள் திரும்ப கொடுக்கவில்லை. பலமுறை கேட்டும் பயன் இல்லை.

    இதுகுறித்து மணி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி. சக்கரவர்த்தியிடம் புகார் கொடுத்தார். இந்த மனு மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர், மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அனுமந்தன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு ரூபாய் 34 லட்சத்து 33 ஆயிரம் கொடுக்காமல் மோசடி செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து குற்றப் பிரிவு போலீசார் சீட்டு பண மோசடி செய்த ரவிச்சந்திரன், சந்திரகுமாரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ரவிச்சந்திரன் மகள் குமுத வல்லியை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×