என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Airport"

    • வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை.

    சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் மேத்யூ ஜாலி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

    வெளிநாட்டில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சூடான் நாட்டிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அவர் நூதன முறையில் பசை வடிவிலான தங்கத்தையும், தங்கக் கட்டியும் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அந்த பயணியிடம் இருந்து ரூ.82.41 லட்சம் மதிப்புள்ள 1.85 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட நபரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பயணி உடலில் மறைத்து எடுத்து வரப்பட்ட பசை வடிவ தங்கம் பறிமுதல்.
    • செல்பேசிகள் மற்றும் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன

    சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் மேத்யூ ஜாலி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் துபாயிலிருந்து சென்னை வந்த பயணி ஒருவரை சோதனை செய்தபோது, அவர் ரூ.17.15 லட்சம் மதிப்புள்ள 385 கிராம் தங்க கட்டியை உலோகத் தகடுகளில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. அவரது பைகளிலிருந்து 15 செல்பேசிகளும் 9000 சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 3.15 லட்சம் ஆகும்.

    இதே போல் அதே விமானத்தில் வந்த மற்றொரு பயணியை சோதனை செய்தபோது ரூ. 23.38 லட்சம் மதிப்புள்ள 525 கிராம் எடையுள்ள தங்கத்தை பசை வடிவில் அவரது உடலில் மறைத்து எடுத்து வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

    இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட இந்த இரு வேறு சோதனைகளில் மொத்தம் ரூ.40.53 லட்சம் மதிப்புள்ள 910 கிராம் தங்கம், 3.15 லட்சம் மதிப்புள்ள செல்பேசிகள் மற்றும் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாலங்கள் ‘மேக் இன் இந்தியா’ திட்டப்படி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
    • நீளமான இந்த இணைப்பு பாலம் பயன்பாட்டிற்கு வந்த பின் சென்னை விமான நிலையத்தில் விமானங்களில் ஏறி, இறங்கும் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மீனம்பாக்கம்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு கொண்டிருக்கும் பன்னாட்டு நவீன முனையத்தில் விமானங்களில் பயணிகள் ஏறி செல்லவும், இறங்குவதற்காகவும் 'பேசன்ஞ்சா் போா்டிங் பிரிட்ஜ்' என்ற 15 நிரந்தர இணைப்பு பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பேசஞ்சா் போா்டிங் பிரிட்ஜ் விமான நிலையத்தின் நுழைவு பகுதியிலிருந்து நேரடியாக விமானத்தின் வாசலுக்கு செல்லும் விதமாக அமைக்கப்படுகின்றன. இந்த 15 பாலங்களில் 7 பாலங்கள் 47 மீட்டா்கள் நீளமுடையவையாகவும், 7 பாலங்கள் 32 மீட்டரில் இருந்து 40 மீட்டா்கள் கொண்டதாகவும், மற்றொரு பாலம் 32 மீட்டா் நீளம் உடையதாகவும் அமைய உள்ளது. முதல் கட்டத்தில் 47 மீட்டா் நீளமுடைய 7 பாலங்கள் பயன்பாட்டுக்கு வரவிருக்கின்றன.

    மேலும், இந்த நவீன இணைப்பு பாலத்தில் நகரும் பாலங்கள் இரண்டு அமைகின்றன. அதில் அதிக நீளமுடைய 47 மீட்டா் கொண்ட 7 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அந்த 7 பாலங்களும் வரும் டிசம்பர் மாதம் பயணிகளின் பயன்பாட்டிற்கு வர உள்ளன.

    மற்ற 8 பாலங்கள் அடுத்த 2-வது கட்டத்தில் கட்டப்பட்டு செயல்பாட்டிற்கு வர இருக்கிறது. இந்த பாலங்கள் 'மேக் இன் இந்தியா' திட்டப்படி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இதை போன்ற நவீன பாலங்கள் இந்தியாவில் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்படுகின்றன. நீளமான இந்த இணைப்பு பாலம் பயன்பாட்டிற்கு வந்த பின் சென்னை விமான நிலையத்தில் விமானங்களில் ஏறி, இறங்கும் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சென்னையில் இருந்து அந்தமானுக்கு இயக்கப்படும் ஏழு விமான சேவைகளும் வருகிற 4-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • மீண்டும் 5-ந்தேதி முதல் அந்தமானுக்கு சென்னையில் இருந்து விமான சேவைகள் தொடங்குகிறது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு தினமும் 7 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வருகின்றன.

    அந்தமான் சுற்றுலா தளமாக இருப்பதால் தினந்தோறும் பெருமளவு பயணிகள் சென்று வந்தனர். அது மட்டுமின்றி அந்தமானில் தமிழ்நாடு உட்பட தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் ஏராளமானவா்கள் வசிப்பதால், அந்தமான் விமானங்களில் எப்போதுமே பயணிகள் கூட்டம் நிறைந்து இருக்கும்.

    இந்தநிலையில் தற்போது அந்தமானில் மோசமான வானிலை நிலவுவதாலும், மேலும் அந்தமான் விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதாலும் சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் விமானங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    சென்னையில் இருந்து அந்தமானுக்கு இயக்கப்படும் ஏழு விமான சேவைகளும் வருகிற 4-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மீண்டும் 5-ந்தேதி முதல் அந்தமானுக்கு சென்னையில் இருந்து விமான சேவைகள் தொடங்குகிறது.

    இதையடுத்து அந்தமானுக்கு ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு தகவல் கொடுத்து, அவர்கள் டிக்கெட்டுகளை வேறு தேதிகளுக்கு மாற்றுதல், அல்லது முழு பணமும் திரும்ப கொடுத்தல் போன்ற முறைகளை, விமான நிறுவனங்கள் செய்து உள்ளன.

    இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, அந்தமானில் தற்போது மோசமான வானிலை நிலவிக் கொண்டிருப்பதால், இந்த நேரத்தில் சென்னையில் இருந்து, அந்தமான் செல்லும் விமானங்கள், அந்தமானில் தரையிறங்க முடியாமல் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வரும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் விமான நிறுவனத்துக்கு அதிகமான நஷ்டங்கள் ஏற்படுவதோடு, பயணிகளுக்கும் விமான நிறுவனங்களுக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே தான் இதுபோன்ற முடிவு எடுக்கப்பட்டது என்றனர்.

    • அந்தமான் விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகள் முடிவுற்ற நிலையில் விமான சேவையை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.
    • இன்று காலை முதல் சென்னையில் இருந்து அந்தமானுக்கு விமானம் புறப்பட்டு சென்றது.

    சென்னை:

    சென்னையில் இருந்து அந்தமானுக்கு தினமும் விமான சேவை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் விமான சேவை நிறுத்தப்பட்டது.

    அந்தமான் விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் அங்கு மோசமான வானிலை இருந்ததால் 4 நாட்களாக விமான சேவை நடைபெறவில்லை.

    இந்த நிலையில் அங்கு பராமரிப்பு பணிகள் முடிவுற்ற நிலையில் விமான சேவையை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று காலை முதல் சென்னையில் இருந்து அந்தமானுக்கு விமானம் புறப்பட்டு சென்றது.

    இதேபோல அந்தமானில் இருந்தும் சென்னைக்கு விமானங்கள் வரத் தொடங்கின. தினமும் 10 முதல் 14 விமானங்கள் அந்தமானுக்கு சென்று வருகின்றன.

    சுற்றுலா பயணிகள், அங்கு வசிப்பவர்கள், விமான சேவை நிறுத்தப்பட்டதால் மிகவும் கஷ்டப்பட்டனர். மீண்டும் சேவை தொடங்கியதை தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட பயணிகள் அந்தமானுக்கு பயணமானார்கள்.

    • பசை வடிவிலான தங்கத்தை அபுதாபி பயணி ஒருவர் உடலில் மறைத்து எடுத்து வந்துள்ளார்.
    • தங்கம் கடத்தல் குறித்து பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை.

    சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறை முதன்மை ஆணையர் மேத்யூ ஜாலி வெளியிட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அபுதாபியில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் சோதனை நடத்தப்பட்டது. அதில அந்த பயணி தனது உடலில் பசை வடிவிலான தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது.

    அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 1.15 கிலோ எடை கொண்ட 24 கேரட் தங்கம் 51 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கத்தை கடத்தி வந்த அந்த பயணி கைது செய்யப்பட்டார். இதுகுறித்த புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னைக்கு வரும் அனைத்தும் விமானங்களும் சரியான நேரத்தில் வந்து தரை இறங்குகின்றது.
    • பெருமளவு பயணிகள் தாமதமாக வருவதால் விமானங்களும் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.

    ஆலந்தூர்:

    சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழையால், சென்னை விமான நிலையத்திற்கு விமான பயணிகள், விமானங்களை இயக்கும் விமானிகள், விமான ஊழியர்கள் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் புறப்படுவதில் தாமதமாகி வருகின்றன.

    சென்னையில் இருந்து பிராங்க்பர்ட் செல்லும் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம், பிரான்ஸ் செல்லும் ஏர் பிரான்ஸ் விமானம் மற்றும் துபாய் தோகா, சார்ஜா, கத்தார், இலங்கை, கோலாலம்பூர், சிங்கப்பூர் உள்பட 12 சர்வதேச விமானங்கள், மும்பை, டெல்லி, அந்தமான், கொல்கத்தா, விஜயவாடா, மதுரை, திருச்சி ஆகிய இடங்களுக்கு செல்லும் 16 உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 28 விமானங்கள் 30 நிமிடங்களில் இருந்து, ஒரு மணி நேரம் வரை புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

    ஆனால் சென்னைக்கு வரும் அனைத்தும் விமானங்களும் சரியான நேரத்தில் வந்து தரை இறங்குகின்றது.

    சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் தாமதத்திற்கு காரணம் விமானங்களை இயக்க வேண்டிய விமானிகள், விமான பணிப்பெண்கள் போன்ற ஊழியர்கள் அனைவரும் சென்னை நகரில் உள்ள ஹோட்டல்களில் இருந்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக அவர்கள் விமான நிலையத்துக்கு தாமதமாக வருகின்றனர். அதேபோல் விமான பயணிகள் வருகையிலும் தாமதம் ஏற்படுகின்றது. பெருமளவு பயணிகள் தாமதமாக வருவதால் விமானங்களும் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. மேலும் தொடர்ந்து மழை பெய்வதால் பயணிகளின் உடைமைகளை விமானத்தில் கொண்டு போய் ஏற்றுவது, பயணிகளுக்கு தேவையான உணவுகளைக் கொண்டு சென்று விமானங்களில் ஏற்றுவது, விமானங்கள் பராமரிப்பு போன்ற பணிகளிலும் தாமதம் ஏற்படுகிறது.

    • பாங்காங், துபாய், கொழும்பு பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
    • பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.1.45 கோடி

    சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறை முதன்மை ஆணையர் மேத்யூ ஜாலி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    உளவுத் தகவல் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது பாங்காக்கிலிருந்து வந்த வந்த பயணி ஒருவரிடம நடத்தப்பட்ட சோதனையில் அவர் மறைத்து வைத்திருந்த 474 கிராம் எடையுள்ள 9 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் துபாயிலிருந்து வந்த இந்திய ஆண் பயணிகள் நான்கு பேரிடம் சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது அவர்கள் நூதனமுறையில் மறைத்து எடுத்து வந்த 1370 கிராம் எடையுள்ள 9 தங்க பொட்டலங்கள், ஆடைகள் வைக்கும் பெட்டிகளில் மறைத்து எடுத்து வந்த 680 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் மற்றும் சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல் கொழும்பிலிருந்து வந்த பெண் பயணிகள் இருவரை சோதனை செய்த போது, அவர்களின் கைப்பைகளிலிருந்து வெள்ளி முலாம் பூசப்பட்ட 730 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இதன் மூலம் 8 பயணிகளிடம் இருந்து மொத்தமாக ரூ.1.45 கோடி மதிப்புள்ள 3.25 கிலோ கிராம் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.
    • தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மீனம்பாக்கம் :

    நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள், பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த நிலையில் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் விமான நிலைய ஆணையகம், தனியார் அமைப்புடன் இணைந்து பயணிகள் மற்றும் ஊழியர்களிடம் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்த வலியுறுத்தி பயணிகளுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன.

    • இதுவரை 2,800 உணவு பைகளை வரிசைப்படுத்தியதே உலக சாதனையாக உள்ளது.
    • உலக சாதனை நிகழ்த்தியதாக இதற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மீனம்பாக்கம் :

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், விமான நிலைய ஆணையத்துடன், மயிலாப்பூர் ரவுண்ட் டேபிள் இந்தியா, மயிலாப்பூர் லேடீஸ் சர்க்கிள் ஆகிய பெண்கள் தன்னார்வ அமைப்பு இணைந்து விழிப்புணர்வு வார விழாவை நடத்தி வருகிறது. இதுவரை 2,800 உணவு பைகளை வரிசைப்படுத்தியதே உலக சாதனையாக உள்ளது.

    அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக சென்னை விமான நிலையத்தில் 3,500 பைகளில் அரிசி, பருப்பு வகைகள், பிஸ்கெட் மற்றும் உப்பு போன்ற மளிகை பொருட்கள் வைக்கப்பட்டு, அந்த பைகள் நீண்ட வரிசையில் வைக்கப்பட்டன.

    இதில் சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார், ஆற்காடு நவாப் முகமது ஆசிப் அலி, மத்திய தொழிற்படை போலீஸ் டி.ஐ.ஜி. ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டனர். 3,500 உணவு பைகளை வரிசைப்படுத்தி உலக சாதனை நிகழ்த்தியதாக இதற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. உணவு பொருட்கள் அடங்கிய இந்த பைகளை, சென்னை முழுவதும் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக பெண்கள் தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • செல்போன் பேட்டரிக்குள் இருந்த தங்க தகடுகள் பறிமுதல்.
    • 2 நாட்களில் மொத்தம் ஒரு கிலோ 936 கிராம் தங்கம் பறிமுதல்.

    சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துபாயில் இருந்து வந்த சென்னையைச் சேர்ந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

    அதில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட 38 லேப் டாப்கள் இருந்தன. மேலும் ஒருவரிடம் இருந்த செல்போன் பேட்டரியை சந்தேகத்தின் பேரில் பிரித்து பார்த்த போது அதில் தங்க தகடுகள் இருந்தன. பின்னர் 3 பேரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர்கள் உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.59 லட்சத்து 44 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 200 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் சென்னை பன்னாட்டு விமான நிலைய ஆண்கள் கழிவறையில் உள்ள குப்பை தொட்டியில் சிறிய அளவிலான எலக்ட்ரிக் மோட்டாரில் இருந்த ரூ.16 லட்சத்து 91 ஆயிரம் மதிப்புள்ள 380 கிராம் தங்க துண்டுகளை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

    மேலும் விமான நிலைய பயணிகள் வருகை பகுதியில் கிடந்த அட்டைபெட்டியில் இருந்து ரூ.17 லட்சம் மதிப்புள்ள 356 கிராம் தங்கத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மூலம் கடந்த 2 நாட்களில் நடைபெற்ற சோதனையில் மொத்தம் ரூ.93 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 936 கிராம் தங்கம் மற்றும் 38 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேரை கைது செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • விமான நிலைய புதிய முனையத்தில் மத்திய மந்திரி வி.கே.சிங் ஆய்வு செய்தார்.
    • ரூ.2,467 கோடி மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டது.

    மீனம்பாக்கம் :

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்நாடு, பன்னாட்டு முனையங்களை இணைத்து புதிய நவீன முனையம் அமைக்கும் பணி 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிரதமா் மோடி, காணொலி காட்சி மூலம் இந்த பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    ரூ.2,467 கோடி மதிப்பீட்டில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 972 சதுர மீட்டா் பரப்பில் கட்ட திட்டமிடப்பட்டது. இந்த பணிகள் 2 கட்டங்களாக செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி முதல் கட்டபணியில் 6 அடுக்கு 'மல்டிலெவல் காா் பாா்க்கிங்', நவீன வசதிகளுடன் வருகை, புறப்பாடு முனையம் ஆகியவைகளும், பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனை, குடியுரிமை சோதனை, சுங்கச்சோதனை ஆகியவைகளுக்கான விசாலமான கூடங்கள், கூடுதல் கவுண்ட்டா்கள், வி.வி.ஐ.பி.களுக்காக ஓய்விடங்கள், பயணிகள் தங்கும் அறைகள் உள்ளிட்டவைகள் கட்டப்பட்டன.

    விமான நிலைய முதல் கட்ட பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. அடுத்த மாதம்(டிசம்பா்) இறுதிக்குள் நவீன வசதிகளுடன் கூடிய முதல் கட்ட புதிய முனையங்களை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதையடுத்து மத்திய விமான போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே.சிங், திறப்பு விழாவுக்கு தயாராகி கொண்டு இருக்கும் சென்னை விமான நிலைய புதிய நவீன முனையத்தை நேற்று ஆய்வு செய்தார்.

    அப்போது அதிகாரிகளிடம் சில விளக்கங்களை அவர் கேட்டறிந்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினாா்.

    அவருடன் விமான நிலைய இயக்குனர் சரத்குமார், மத்திய தொழிற்படை போலீஸ் டி.ஐ.ஜி. ஸ்ரீராம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    இந்த புதிய முனையத்தின் திறப்பு விழா அடுத்த மாதம் இறுதிக்குள் நடந்து பயன்பாட்டுக்கு வரும். அதன்பிறகு தற்போது பயன்பாட்டில் உள்ள பன்னாட்டு வருகை முனையம் கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கும். அதைதொடர்ந்து 2-ம் கட்ட கட்டுமான பணிகள் தொடங்கப்படும்.

    இதனால் சென்னை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை வரும் 2024-ம் ஆண்டு டிசம்பரில் 35 கோடியாக இருக்கும். தற்போது பயணிகள் எண்ணிக்கை 17 கோடியாக உள்ளது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×