search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chennai salem 8 way road"

    8 வழிச்சாலை திட்டம் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை கண்டித்து, சேத்துப்பட்டு அடுத்த பெரணமல்லூர் அருகே விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேத்துப்பட்டு:

    சேலத்தில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது அவர் விவசாயிகளின் ஆதரவு பெற்று 8 வழிச்சாலை திட்டம் குறிப்பிட்ட தேதியில் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

    இதை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த நம்பேடு கிராமத்தில் சென்னை- சேலம் 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில் விவசாயிகள் கையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது 8 வழிச்சாலை திட்டம் தொடரும் என பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர்.

    விவசாயிகளின் இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னை- சேலம் 8 வழிச்சாலை வந்தே தீரும் என்று நிதின் கட்காரி பேசியது, யார் லாபம் அடைவதற்கு என்று நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். #KamalHassan #ChennaiSalem8wayroad

    நாகர்கோவில்:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன், நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    கனிம வளம், மண் வளம் என மக்களை சுரண்டிவிட்டு காசை எங்கு கொண்டு செல்கிறார்கள். நாளை நோய்வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில் கிடக்கும்போது பணம் பயன்படாது. அதனை கண்கூடாக பார்த்துவிட்டோம். நாளைய சமுதாயத்தை பற்றி எண்ணி பார்க்க வேண்டும்.

    ஒரு கலைஞனாக வாழ்ந்து விட்டேன். எஞ்சிய வாழ்வை தொண்டனாக உங்களோடு கழிக்க விரும்புகிறேன். மத்திய மந்திரி (நிதின்கட்காரி) பேசுகிறார் 8 வழிச்சாலை வந்தே தீரும், கோர்ட்டு உத்தரவிட்டாலும் வந்து விடும் என்கிறார். யாருக்காக இந்த சாலை, மக்களுக்காகத் தானே, மக்கள் வேண்டாம் என்று சொன்ன பிறகு யாரிடம் யாரை விலை பேசுகிறீர்கள். எங்களுக்கு அது தெரிய வேண்டும். ஒரு தனிப்பட்ட வியாபாரிக்கு வருமானம் வர வேண்டும் என்பதற்காக இவர்கள் இங்கு வரக்கூடாது.

    ஜாலியன் வாலாபாக் படுகொலை நடத்தியவர்கள், இங்கு ஆளவந்தவர்கள், தூத்துக்குடியில் நாம் நியமித்த அரசாங்கம் நம்மை நோக்கி சுட்டிருக்கிறது. இதற்கு காரணம் நாம் மெத்தனமாக இருந்தது, உரிமைகளை கேட்க மறந்தது.

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக நிகழ்ந்தது. ஜல்லிக்கட்டு போராட்டம். அப்படி போராட்டம் மீண்டும் வராமல் ஜனநாயக முறையில் வெல்ல வேண்டும். அவ்வாறு வெல்ல முடியாவிட்டால் மீண்டும் ஜல்லிக்கட்டு போல் ஒரு போராட்டம் வரும். நான் அந்த கூட்டத்தில் இருப்பேன். இங்கு டாஸ்மாக் மழையில் நனைந்து கொண்டு சிலர் நின்று கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு விடிந்தால் நான் பேசியது புரியும். டாஸ்மாக் வீரர்கள் மக்கள் நீதிமய்யத்தில் ஓரங்கட்டப்படுவார்கள்.

    எங்களுக்கு தொழிலுக்காக மக்கள் சாக வேண்டும் என்றால் அந்த தொழில் இங்கு தேவையில்லை. மேற்கு கடற்கரையில் கப்பல் கட்டும் பாதைகள் உள்ளதுபோல் கார் தொழிற்சாலைகள் வரலாம். வேலைகளை வழங்க முடியும். ஆலைகளை உருவாக்க முடியும்.


    ஐ.பி.எல். போட்டியை தடுக்க சென்றவர்களிடம் நான் கூறினேன். சற்று தள்ளி செல்லுங்கள், 234 பேர் கோட்டையில் விளையாடுகிறார்கள். அவர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று கூறினேன். அதில் இப்போதும் நான் உறுதியாக உள்ளேன். அந்த விளையாட்டை நிறுத்த ஆரம்பம் ஏப்ரல் 18-ந் தேதி.

    இது ஒரு புரட்சியின் அமைதியான ஆரம்பம் தான். இனி செல்லும் தூரம் நிறைய இருக்கிறது. எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் இவ்வளவு சிறப்பான இடத்தை வேறு எங்கும் ஒதுக்கவில்லை. மேடை போட்ட பின்பு அதனை அகற்ற கூறுவார்கள். ஊருக்குள் வரக்கூடாது என்று ஊருக்கு வெளியே பேச சொல்வார்கள். வந்தால் பேசக்கூடாது என்பார்கள். இத்தனையும் கடந்து மக்கள் நீதி மய்யம் மக்களை சென்றடைந்துள்ளது.

    திறமையானவர்கள் பலர் காவல்துறையில் இருக்கிறார்கள். ஆனால் சிலரை ஏவல் துறையாக மாற்றி இருக்கிறது இந்த அரசு. எனவே இந்த அரசாங்கம் அகற்றப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நான் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு சரியாக செயல்படாவிட்டால் என்னை மாற்றி விடலாம் என்று வேட்பாளர் எழுதிக் கொடுத்த கடிதத்தை தொண்டர்கள் மத்தியில் நடிகர் கமல்ஹாசன் காண்பித்தார். #KamalHassan #ChennaiSalem8wayroad

    பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    பெரம்பலூர்:

    சென்னை-சேலம் இடையே அமைக்கப்பட உள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரையிலான நடைபயணத்தை தொடங்கிய கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலரை போலீசார் கைது செய்தனர். 

    இதனை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கட்சியின் பெரம்பலூர், ஆலத்தூர் வட்ட செயலாளர் எஸ்.பி.டி.ராஜா தலைமை தாங்கினார். கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனை கைது செய்த போலீசாரை கண்டித்தும், சென்னை-சேலம் இடையே அமைக்கப்பட உள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்தை தமிழக அரசு கைவிடக்கோரியும் பல்வேறு கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எழுப்பினர். 

    இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, அகஸ்டின் மற்றும் கணேசன், முத்துசாமி, கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    8-வழி பசுமை சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் ஒவ்வொரு பேருக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் உதவி தொகை வழங்க வேண்டும் என கலெக்டரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:-

    8-வழி பசுமை சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் ஒவ்வொரு பேருக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் உதவி தொகை வழங்க வேண்டும். தலைவாசல் பகுதியில் ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசிகள் மிகவும் மோசமாக உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் நிலைகளை தூர்வார வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டம் மூலம்  அனைத்து விவசாயிகளுக்கும் இன்சூரன்ஸ் தொகை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதற்கு கலெக்டர் ரோகிணி பதில் அளித்து பேசுகையில் ரேசன் அரிசி தரம் குறைவாக இருப்பது குறித்து வட்ட வழங்கல் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.
    சென்னை - சேலம் இடையே பசுமை வழிச்சாலையால் வீடு இழந்த 16 பேருக்கு வீட்டுமனை பட்டா மற்றும் பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார்.
    காஞ்சீபுரம்:

    சென்னை - சேலம் இடையே ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க திட்டமிட்டப்பட்டு உள்ளது. இந்த சாலை காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக சேலம் வரை 274 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இதற்காக 5 மாவட்டங்களிலும் நிலம் கையகப்படுத்தும் பணி விரைந்து நடந்து வருகிறது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8 வழி பசுமை வழிச்சாலைக் காக 59.100 கிலோ மீட் டர் நீளத்துக்கு சாலை அமைப் பதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான அளவீடு முடிவடைந்துள்ளது.

    இந்த அளவீட்டின்படி 26 வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளன. இவற்றில் வளையக் காரணை கிராமத்தில் கையகப்படுத்தப்பட உள்ள 7 வீடுகளில் 6 வீடுகளுக்கு ஏற்கனவே வீட்டுமனை பட்டா மற்றும் பசுமை வீடுகள் கட்டித்தருவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் பசுமை வழிச்சாலைக்காக வீடுகளை இழந்த உத்திரமேரூர் வட்டம், வெங்காரம் கிராமத் தைச் சேர்ந்த 9 பேருக்கும், மானாம்பதி கிராமத்தை சேர்ந்த 7 பேருக்கும் என மொத்தம் 16 பேருக்கு வீட்டு மனை பட்டா மற்றும் பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார்.

    அப்போது கலெக்டர் பொன்னையா கூறும்போது, மீதமுள்ள 4 பேருக்கு அருகில் நிலம் இல்லாததால் நில எடுப்பு பிரிவின் மூலம் வேறு இடத்தல் நிலம் கையகப்படுத்தப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த 22 பேருக்கும் 3 மாதத்திற்குள் வீடு கட்டி முடிக்கப்பட்டு புதிய வீட்டில் குடியேறியபின் அவர்கள் வீடு கையகப்படுத்தப்படும்.

    உத்தேச மதிப்பீடு அடிப்படையில் தென்னை மரத்திற்கு ரூ. 40 ஆயிரம், மாமரத்திற்கு ரூ. 16 ஆயிரத்து 600, கொய்யா மரத்துக்கு ரூ. 10 ஆயிரத்து 20, தைல மரத்துக்கு ரூ. 2 ஆயிரத்து 500, தேக்கு மரம் வனத்துறை மூலம் அளவீடு செய்யப்பட்டு அவர்கள் மதிப்பீட்டின்படி இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நூர் முகம்மது, தேசிய நெடுஞ்சாலை மாவட்ட வருவாய் அலுவலர் நர்மதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், வருவாய் கோட்டாட்சியர் ராஜூ கலந்து கொண்டனர்.
    சேலம்-சென்னை 8 வழிசாலைக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார். #ernavoornarayanan #chennaisalem8wayroad

    திருப்பூர்:

    திருப்பூரில் சமத்துவ மக்கள் கழகத்தின் கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு பி.என். ரோட்டில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் பாண்டியன் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    திருப்பூரை பொறுத்தவரை சாயக்கழிவு நீர் பிரச்சினை தொடர்ந்து இருந்து வருகிறது. பெரிய நிறுவனங்கள் சாயக்கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றினாலும், பல சிறிய அளவிலான நிறுவனங்கள் தொடர்ந்து சுத்திகரிக்காமல் சாயக்கழிவுநீரை வெளியேற்றி வருகிறது. இதனால் சிறிய நிறுவனங்களில் இருந்து வெளியேறும் சாயக்கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றுவதற்கான திட்டத்தை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும்.

    மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி கொள்கையால் பல சிறு, குறு, நடுத்தர பனியன் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். இதன் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சேலம்-சென்னை 8 வழிசாலைக்காக பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே சேலம்-சென்னை நெடுஞ்சாலைகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீடு பலருக்கு இதுவரை வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் தற்போது விவசாய நிலங்கள் கையகப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இதற்கு பதிலாக தற்போது உபயோகப்படுத்தப்படும் நெடுஞ்சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கலாம். பெரும்பாலான பொதுமக்கள் ஆதரவு தருவதாக முதல்-அமைச்சர் கூறுவதை ஏற்றுக்கொள்ள இயலாது. மக்கள் போராட்டத்தை சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது.

    தூத்துக்குடியிலும் இதே போன்று சாதாரணமாக தொடங்கிய போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்காததாலேயே இவ்வளவு பெரிய கலவரமும், உயிரிழப்பும் ஏற்பட காரணம் ஆனது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அ.தி.மு.க. தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைப்பது கடினம். தமிழகத்தில் பெயரளவில் மட்டுமே அமைச்சர்கள் உள்ளனர் என்றார்.

    திருப்பூர் வந்த சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணனுக்கு மாநில இளைஞர் அணி துணைசெயலாளர் கார்த்திகேயன், மாவட்ட செயலாளர் செல்வம், பேரவை மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கலைவாளன் மற்றும் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். #ernavoornarayanan #chennaisalem8wayroad

    விபத்துக்களை குறைக்கவும், விலைமதிக்க முடியாத உயிர்களை காப்பாற்றுவதற்காகவே 8 வழிச்சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது என்று முதல்வர் பழனிசாமி பேட்டியில் தெரிவித்துள்ளார். #edappadipalanisamy #chennaisalem8wayroad

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேள்வி: சேலம்-சென்னை 8 வழிச்சாலை கமி‌ஷனுக்காக அமைக்கப்படுகிறதாக கூறப்படுகிறதே?

    8 வழி சாலை பசுமை திட்டம் மத்திய அரசின் திட்டமாகும். தேசிய அளவில் இது மிகப்பெரிய திட்டம். நிலம் கையப்படுத்துவது மட்டுமே தமிழக அரசின் செயல் ஆகும். நிலம் வழங்குபவர்களுக்கு அதிக இழப்பீடு வழங்கப்படும். கடந்த 2000 முதல் 2006-ம் ஆண்டு வரை உளுந்தூர் பேட்டை-சேலம், சேலம் -கிருஷ்ணகிரி சாலைகள் விரிவுப்படுத்த நிலம் கையப்படுத்தப்பட்டது.

    தமிழகத்தின் வாகனத்தின் எண்ணிக்கை இன்றைய தினம் 2 கோடியே 57 லட்சம் ஆகும். இந்த திட்டம் நிறைவேற்றுவதற்கு குறைந்த பட்சம் 4, 5 ஆண்டு காலம் ஆகும். 5 ஆண்டுகள் ஆகும்போது கிட்டத்தட்ட இன்னும் 70 லட்சம் வாகனங்கள் அதிகரிக்கும். அப்போது 70 லட்சம் வாகனங்கள் அதிகரிக்கும். எனவே தான் இந்த சாலை தேவையானது.

    கடந்த சில ஆண்டுகளாகவே குறுகிய சாலைகளால் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விபத்துக்களை குறைக்கவும், விலைமதிக்க முடியாத உயிர்களை காப்பாற்றுவதற்காகவே இந்த 8 வழிச்சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது.

    40 ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடியில் எனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்கு மண் சாலை இருந்தது. தற்போது அந்த சாலை விரிவுப்படுத்தப்பட்டு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதைப்போல் சென்னை -திருவனந்தபுரம் சாலை, கோவை சாலை விரிவுபடுத்தப்பட்டு இருக்கின்றன.

    நமது பகுதி தொழில் வளர்ச்சி அடைந்த பகுதி. கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்லும். இதனால் சாலை விரிவாக்கம் அவசியமானது. குறிப்பாக ஒரு லாரி 1 லிட்டர் டீசலுக்கு 4 கிலோ மீட்டர் தூரம் தான் செல்லும்.

    15 லிட்டர் டீசலில் 60 கிலோ மீட்டர் தூரம் தான் செல்ல முடியும். டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தற்போது 60 கிலோ மீட்டர் தூரம் செல்வதற்கு 1300 ரூபாய் வரை செலவாகிறது. இன்னும் வரும் காலங்களில் டீசல் விலை மேலும் உயரும்.

    தொழில் வளர்ச்சி, கட்டமைப்பு வசதி அவசியமானது. அதற்கு 8 வழிச்சாலை தேவை. படித்து விட்டு ஏராளமானோர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. வேலை வாய்ப்பு பெருக்குவதற்கு உள்கட்டமைப்பு வசதி தேவை.

    நிலம் வழங்குபவர்களுக்கு மாற்று இடம், இழப்பீடு மற்றும் பசுமை வீடு வழங்கப்படும்.

    கேள்வி:சந்தை மதிப்பீடு படி இழப்பீடு வழங்கப்படுமா?

    நிலத்தின் வழிகாட்டி மதிப்பீடு படி இழப்பீடு வழங்கப்படும். வழிகாட்டி மதிப்பீட்டில் ஏற்கானவே இழப்பீடு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.4 கோடி முதல் 5 கோடி வரை இழப்பீடு வழங்கப்படும்.

    30 தென்னை மரத்திற்கு ரூ.12 லட்சம் வரை இழப்பீடு கிடைக்கும். ஆனால் ஒரு தென்னை மரத்தின் மூலம் ரூ.900 தான் மாதத்திற்கு வருமானம் கிடைக்கும்.

    கேள்வி: கஞ்சமலையில் உள்ள இரும்பு தாதுக்களை வெட்டி எடுத்துச் செல்லவே இந்த சாலை அமைக்கப்படுகிறதாக கூறப்படுகிறதே?

    கற்பனையான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. விமர்ச்சிப்பதற்கு என்றே இந்த திட்டத்தை சிலர் எதிர்த்து வருகிறார்கள். எத்தனை சாதனைகள் செய்தாலும் அதை மறைக்கப்படுகின்றன.

    2 ஆண்டுகளுக்கு முன்பு 2 கைகளையும் இழந்தவருக்கு இறந்தவரின் கைகளை எடுத்து பொருத்தி மருத்துவ துறையில் சாதனை படைத்து இருக்கிறார்கள். இது இந்தியாவிலேயே அரசு மருத்துவமனையில் தமிழகம் தான் முதல் முதலாக இந்த சாதனையை பெற்றுள்ளது. இதற்கு யாரும் நன்றி தெரிவிக்கவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் இதற்கு காரணம். 8 வழிச்சாலையை எதிர்க்க பல்வேறு சதிகள் நடக்கிறது.

    கேள்வி: 8 வழிச்சாலைக்கு நில அளவீடு பணிகளில் போலீசாரால் விவசாயிகள் மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறதே?

    அதிகாரிகள் நில அளவீடு பணியில் ஈடுபடும்போது அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் கடமை.

    அரசு அதிகாரிகளின் பாதுகாப்புக்காகவே போலீசார் அங்கு நிறுத்தப்பட்டு இருந்தனர். தமிழகம் முழுவதும் ரூ.75 ஆயிரம் கோடிக்கு சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் 40-க்கும் மேற்பட்ட முக்கிய சாலைகள் விரிவுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் புதிய தொழிற்சாலைகள் வர வாய்ப்பு உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகபட்சமாக 44.14 சதவீதம் பேர் உயர் கல்வி படிக்கிறார்கள்.

    30-6-1977-ல் எம்.ஜி.ஆர்.முதல்-அமைச்சராக பதிவி ஏற்றார். அன்று முதல் இன்று வரை பல்வேறு வளர்ச்சி பணிகளை அ.தி.மு.க. அரசு செய்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #edappadipalanisamy #chennaisalem8wayroad

    சேலம்- சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, தமிழக விவசாயிகள் சங்கம் சின்னத்துரை, ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகள் சங்கம் விஸ்வநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அயிலை சிவசூரியன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் அய்யாக்கண்ணு மற்றும் நிர்வாகிகள், சேலம் சென்னை 8 வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழக அரசு, 8 வழிச் சாலைக்காக பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை அழித்து, விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டுகிறது. ஏற்கனவே சேலம் சென்னைக்கு 3 வழிகள் உள்ள நிலையில் 8 வழிச்சாலை அவசியம் இல்லாதது. அப்படி, 8வழிச்சாலை அமைப்பதாக இருந்தால், இயற்கை வளங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் ஏற்கனவே உள்ள சாலையின் மீது பாலம் அமைத்து சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    தொடர்ந்து கூட்டம் தொடங்கியவுடன், ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் விஸ்வநாதன் தலைமை யிலான விவசாயிகள் கூட்ட அரங்கில் கலெக்டர் முன் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    அப்போது, காவிரியில் தண்ணீர் திறக்காததால், இந்த ஆண்டும் குறுவை சாகுபடி பாதித்துள்ளது. எனவே, விவசாயிகளுக்கு நிவாரணமாக, ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கோ‌ஷ மிட்டனர்.

    சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம் தொடர்பாக கோர்ட்டு மூலம் அனுமதி பெற்று விவசாயிகளை நேரில் சந்திப்பேன் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். #anbumani #chennaisalem8wayroad

    தருமபுரி:

    தருமபுரி தொகுதி எம்.பி.யும்., முன்னாள் மத்திய மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தருமபுரியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் எனக்கு அனுமதி அளித்தனர். ஆனால் எனது சொந்த தொகுதியான தருமபுரி மாவட்டத்தில் நான் கருத்து கேட்க அனுமதி மறுத்து உள்ளனர்.

    ஏற்கனவே அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் இல்லை. உள்ளாட்சி பிதிநிதிகளும் இல்லை.

    இந்த நிலையில் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதி என்ற முறையில் மக்களின் கருத்துக்களை கேட்பது எனது ஜனநாயக கடமை. அதை தடுப்பது மிகவும் தவறான செயலாகும்.

    இது தொடர்பாக பாராளு மன்ற சபாநாயகருக்கும், பாராளுமன்ற உரிமை குழுவிற்கும் கடிதம் அனுப்பி உள்ளேன். கோர்ட்டு மூலம் உரிய அனுமதி பெற்று தருமபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் சென்று கருத்து கேட்பேன்.

    மக்கள் கருத்தை கேட்டு 8 வழி சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தி.மு.க. கூறுகிறது. இந்த 8 வழி சாலை திட்டமே தேவையில்லாதது என்று நாங்கள் கூறுகிறோம். இந்த விவகாரத்தில் தி.மு.க. தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.


    தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் யார் அறிவாளி? என்ற வாதத்திற்கு என்னை அழைக்கிறார். அவர் அறிவாளிதான் ஏற்றுக் கொள்கிறேன்.

    நான் மருத்துவ படிப்பிற்கான சீட்டை மெரிட் அடிப்படையில் பெற்றேன். அவர் எம்.ஜி.ஆரிடம் பரிந்துரையை பெற்று அதன் மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்து டாக்டரானவர்.

    நான் மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக இருந்த போது தேசிய கிராமப்புற சுகாதார திட்டம் உள்பட பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சுகாதார திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்தேன்.

    கடந்த 4 ஆண்டு கால பாரதீய ஜனதா ஆட்சியில் தமிழகத்துக்கு ஒரு சுகாதார திட்டம் கூட கொண்டு வரப்படவில்லை. மத்திய அரசின் மூலம் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட ஒரு சுகாதார மேம்பாட்டு திட்டத்தையாவது தமிழிசை சவுந்தரராஜனால் சொல்ல முடியுமா?

    இவ்வாறு அவர் கூறினார். #anbumani #chennaisalem8wayroad

    சென்னை- சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளதால் இதற்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #chennaisalem8wayroad

    சென்னை:

    சென்னை- சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து விட்டது. எனவே, பசுமை வழிச்சாலைக்கு மரங்கள் மற்றும் நீர் நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 

    நிலம் கையகப்படுத்தற்கு முன் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். காடுகளை அழித்து தார் சாலை அமைத்தால் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் ஏற்படும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், சுப்பிரமணியம் ஆகியோர் இந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற ஜூலை 12-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். #chennaisalem8wayroad

    ×