search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coal"

    • அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.
    • ஏற்கனவே வெட்டி எடுக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    சிதம்பரம்:

    சிதம்பரத்தில் 22 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.

    கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. கடலூர், நெல்லிக்குப்பம், காட்டு மன்னார் கோவில், சேத்தியா தோப்பு, புவனகிரி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடலூர் மாவட்டத்தில் அதிக பட்சமாக சிதம்பரத்தில் 22 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.

    புவனகிரி, சேத்தியா தோப்பு, காட்டு மன்னர் கோவில் பகுதிகளில் 14 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது.

    நெய்வேலி என்.எல்.சி. நிறுவன சுரங்கங்களில் மழை காரணமாக தண்ணீர் தேங்கி நிற்பதால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மின் உற்பத்தியில் பாதிப்பு இல்லை. ஏற்கனவே வெட்டி எடுக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    பண்ருட்டி, தொரப்பாடி, புதுப்பேட்டை காடாம் புலியூர், அண்ணாகிராமம், முத்தாண்டிக்குப்பம், கண்டரக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

    பண்ருட்டியில் இன்று காலை 6 மணி வரை 60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக மழை பெய்து வருகிறது.

    2020-21 ஆம் நிதியாண்டில் 71.6 கோடி டன்னாக இருந்த அகில இந்திய அளவிலான நிலக்கரி உற்பத்தி, 2021-22 ஆம் நிதியாண்டில் 77.7 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
    புது டெல்லி:

    இந்தியாவில் உள்ள 173 அனல்மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு நிலக்கரிதான் ஆதாரமாக உள்ளது. 

    இந்த அனல்மின் நிலையங்களுக்காக நிலக்கரி சுரங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரி தவிர, வெளிநாடுகளில் இருந்தும் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் உள்நாட்டிலேயே நிலக்கரி உற்பத்தி அதிகரித்துள்ளதால் வெளிநாட்டு இறக்குமதி குறைந்துள்ளதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    இதுகுறித்து நிலக்கரி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,

    கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில் 24.8 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. இது 2020-21 ஆம் நிதியாண்டில் 21.5 கோடி டன்னாக குறைந்துள்ளது. 2021-22 ஆம் நிதியாண்டில், இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 20.9 கோடி டன்னாக மேலும் குறைந்துள்ளது. 

    அதே சமயம் இந்தியாவின் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி அதிகரித்துள்ளது. 2020-21 ஆம் நிதியாண்டில் 71.6 கோடி டன்னாக இருந்த அகில  இந்திய அளவிலான நிலக்கரி உற்பத்தி, 2021-22 ஆம் நிதியாண்டில் 77.7 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • விவசாய பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி விவசாய உற்பத்தியை பெருக்கியுள்ளனர்.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் உண்மையான டெல்டாகாரர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் எம்.பி.யும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ். விஜயன் நேற்று நிருபர்களு க்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தினமும் செய்திகளில் இடம் பெற வேண்டும் என்பதற்காக ஏதாவது சொல்லி வருகிறார்.

    டெல்டா பகுதியை சேர்ந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் 1½ லட்சம் விவசாய பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி விவசாய உற்பத்தியை பெருக்கியுள்ளனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் உண்மையான டெல்டாகாரர். டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் திட்டம் ரத்தான பெருமை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தான் உண்டு என்பதை விவசாயிகளும், நாட்டு மக்களும் அறிந்துள்ளனர்.

    விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிட்டு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செய்யாததை தமிழக அரசு செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது நகர்மன்ற தலைவர் மன்னை. சோழராஜன், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் கார்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன், நகர செயலாளர் வீரா. கணேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • நாளொன்றுக்கு 24 ஆயிரம் டன் நிலக்கரி எரியூட்டப்பட்டு 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • நிலக்கரி எரிப்பதால் 7 ஆயிரம் டன் வரை சாம்பல் வெளியேறுகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் அனல்மின் நிலையத்தில், 840 மற்றும் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 24 ஆயிரம் டன் நிலக்கரி எரியூட்டப்பட்டு 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    நிலக்கரி எரிப்பதால் 7 ஆயிரம் டன் வரை சாம்பல் வெளியேறுகிறது. இவை உலர் சாம்பலாகவும், ஈர சாம்பலாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் சாம்பல் சிமெண்ட் ஆலைகளுக்கும், செங்கல் உற்பத்திக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மேட்டூர் அனல்மின் நிலையத்தை நேற்று பார்வையிட்டார். அப்போது ஈர சாம்பல் விநியோகம் முன்னறிவிப்பின்றி திடீரென நிறுத்தப்பட்டது.

    சாம்பல் அதிக அளவில் காற்றில் கலந்து பறப்பதால் லாரிகள், அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. இதனால் மேட்டூர்-எடப்பாடி சாலையிலும், மேட்டூர்-சேலம் சாலையிலும் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு, லாரிகள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தன. ஈர சாம்பல் விநியோகம் நிறுத்தப்பட்டதால், அனல்மின் நிலையத்திற்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    • தொழிற்சாலையில் நிலக்கரி உபயோகத்திற்கு தடை விதிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
    • கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர்

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் காரை ஆர்.சுப்ரமணியன், பெரம்பலூர் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அதில், ஆலத்தூர் தாலுகா, விஜயகோபாலபுரத்தில் இயங்கும் தனியார் டயர் தொழிற்சாலையில் நிலக்கரி உபயோகத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். மேலும் ஆலையில் கரும்புகை வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். இவர் கடந்த வாரமும் இதே கோரிக்கை தொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது."

    • லாரியை ஓட்டி வந்த மதுராந்தகம் பெரிய தெருவை சேர்ந்த லாரி ஓட்டுநர் பிரிதிவிராஜ் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
    • காரைக்கால் துறைமுகத்திலிருந்து, டால்மியாபுரம் சிமெண்ட் தொழிற்சாலைக்கு, நிலக்கரி ஏற்றி வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள சிகார்பாளையம் சாலை வளைவில், காரைக்கால் துறைமுகத்திலிருந்து, டால்மியாபுரம் சிமெண்ட் தொழிற்சாலைக்கு, நிலக்கரி ஏற்றி வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.

    இதில் நிலக்கரி முற்றிலுமாக சாலையோரத்தில் கீழே கொட்டியது. லாரியை ஓட்டி வந்த மதுராந்தகம் பெரிய தெருவை சேர்ந்த லாரி ஓட்டுநர் பிரிதிவிராஜ் (வயது 25) லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். லாரி கட்டுப்பாட்டை இழந்து, ஒரு மின்கம்பியில் மோதி கவிழ்ந்ததில், உயிர் இழப்பு இல்லாமல் தப்பித்தது, அதிர்ஷ்டவசமாக நிகழ்வாகும். இவ்விபத்து குறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வெளிநாட்டில் இருந்து கூடுதல் விலைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யவில்லை என்று தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. #TamilNadu #Coal
    சென்னை:

    தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டெண்டர் இல்லாமல் தனியார் நிறுவனத்திடம் நிலக்கரியை ‘கோல் இந்தியா’ நிறுவன விலையான டன்னுக்கு ரூ.2 ஆயிரம் என்ற அளவில் இல்லாமல் 150 சதவீதம் அதிக விலை கொடுத்து, அதாவது ரூ.33 கோடி அதிகமாக தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வாங்குவதாக செய்தி வெளியாகி உள்ளது.

    ‘கோல் இந்தியா’ நிறுவனத்திடம் இருந்து வாங்கும் நிலக்கரிக்கும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிக்கும் இடையே தரத்தில் வேறுபாடு இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மொத்த கலோரி வெப்ப அளவு, ஈரப்பதம் அளவு, சாம்பல் அளவு போன்றவை ஆகும்.

    இந்திய நிலக்கரியில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் நிலக்கரியைவிட குறைந்த கலோரி வெப்பம், அதிக சாம்பல், குறைந்த ஈரப்பதம் இருக்கும். எனவே குறைந்த தரம் உள்ள நிலக்கரியுடன், உயர்ந்த தரம் உடைய நிலக்கரியை ஒப்பிட முடியாது. அதே வகையில் தான் அதற்கான விலையையும் ஒப்பிட வேண்டும்.

    இந்திய நிலக்கரி ஒரு டன் ரூ.2 ஆயிரம் என்பது இந்திய சுரங்கங்களில் இருந்து வாங்கும் விலை தான். அதன்பின் அதை ரெயில் மூலம் அருகில் உள்ள துறைமுகத்துக்கு கொண்டுசென்று கப்பல் மூலம் சென்னை துறைமுகத்துக்கு கொண்டுவந்து சேர்க்க ஒரு டன்னுக்கு கூடுதலாக ரூ.1,655 செலவாகிறது. எனவே இந்திய நிலக்கரி விலை ஒரு டன் ரூ.3,655 ஆகும்.

    இந்திய நிலக்கரி தரத்துக்கு இணையாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் நிலக்கரி விலை ஒரு டன் ரூ.3,150 தான். ஆக ஒரு டன்னுக்கு ரூ.505 குறைவாக இருக்கிறது. இந்த கணக்குபடி தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கும் 1 லட்சத்து 10 ஆயிரம் டன் நிலக்கரி மூலம் ரூ.33 கோடி நஷ்டம் என்ற குற்றச்சாட்டுக்கு மாறாக ரூ.5.56 கோடி மிச்சமாகிறது.

    தமிழக அரசின் ஆலோசனைக்கு பிறகு கனமழை, ஒடிசா, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள நிலக்கரி ஏற்றும் துறைமுகங்களில் புயல் பாதிப்பு, அனல் மின்நிலையங்களில் குறைவான நிலக்கரி இருப்பு, 3 தனியார் நிறுவனங்கள் விதித்த விலை ஆகியவைகளை கருத்தில்கொண்டு நிலக்கரி இறக்குமதி செய்ய ஒருநேர விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் நிலக்கரி விலை சர்வதேச நிலக்கரி விலையைவிட ரூ.76 லட்சம் குறைவாக இருக்கிறது.

    தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்துக்கு ஆண்டுக்கு 2 கோடியே 45 லட்சம் டன் நிலக்கரி தேவை. இந்திய நிலக்கரி சப்ளை ஒரு கோடியே 50 லட்சம் டன் அளவுக்கு தான் இருக்கிறது. எனவே நிலக்கரி பற்றாக்குறையை சமாளிக்க இறக்குமதி தான் செய்ய வேண்டும்.

    தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சமீபத்தில் 17.5 லட்சம் டன் நிலக்கரியை ‘இ-டெண்டர்’ வழியாக நாட்டிலேயே மிக குறைந்த விலைக்கு வாங்க முடிவு செய்துள்ளது. இப்போதுள்ள இறக்குமதி சந்தை விலையுடன் ஒப்பிடுகையில் ரூ.139 கோடி மிச்சப்படுத்தப்படுகிறது.

    இதுபோல அரசு பிறப்பித்துள்ள அரசாணை மூலம் அவசரத்துக்காக தனியார் நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி நிலக்கரி வாங்குவது 1.10 லட்சம் டன் தான். நமது மொத்த தேவையில் 0.45 சதவீதமான இது 2 நாள் தேவையை மட்டுமே பூர்த்தி செய்கிறது. எனவே தனியார் நிறுவனத்திடம் இருந்து ரூ.33 கோடி அதிகமாக விலை கொடுத்து நிலக்கரி வாங்கவில்லை. ரூ.5.56 கோடி குறைவான விலையில் தான் வாங்கப்பட்டு இருக்கிறது. நிலக்கரியால் மின் பற்றாக்குறை எதுவும் இல்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TamilNadu #Coal
    தமிழகத்துக்கு கூடுதல் நிலக்கரி பெறுவதற்காக அமைச்சர் தங்கமணி நேற்று டெல்லி புறப்பட்டார். இன்று மத்திய மந்திரிகளை சந்தித்து கோரிக்கை வைக்கிறார். #MinisterThangamani
    சென்னை:

    தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதாகவும், போதுமான அளவு நிலக்கரி கையிருப்பு இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்த நிலையில், கூடுதல் நிலக்கரி பெறுவதற்காக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று அவசரமாக டெல்லி புறப்பட்டார். அவருடன் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் விக்ரம் கபூரும் டெல்லி சென்றார்.

    அமைச்சர் தங்கமணி, இன்று மத்திய ரெயில்வே மற்றும் நிலக்கரித்துறை மந்திரி பியூஸ் கோயல் மற்றும் மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ராஜாங்க மந்திரி(தனி பொறுப்பு) ஆர்.கே.சிங் ஆகியோரை சந்திக்க இருக்கிறார். தனது டெல்லி பயணம் குறித்து அமைச்சர் தங்கமணி ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் தற்போது மின் பற்றாக்குறை மற்றும் நிலக்கரி பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 6 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது. அதே போன்று வடசென்னை அனல் மின்நிலையத்தில் 4 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது. மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று பெய்த மழையின் காரணமாக தமிழகத்தில் மின் தேவை குறைந்து உள்ளது. இதனால் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும், நிலக்கரி கையிருப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் விக்ரம் கபூருடன் டெல்லி செல்கிறேன்.

    இன்று மத்திய ரெயில்வே மற்றும் நிலக்கரித்துறை மந்திரி பியூஸ் கோயலை சந்திக்கிறேன். அவரிடம் கூடுதலான வேகன்களில் நிலக்கரி அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைக்க இருக்கிறேன். அதாவது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய பிறகு 10 வேகன்களில் வந்த நிலக்கரியானது தற்போது 13 வேகன்களில் வந்து கொண்டு இருக்கிறது. இந்த எண்ணிக்கையையும் அதிகரித்து 20 வேகன்கள் வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளேன். நிலக்கரி கையிருப்பு தற்போது நிறைய மாநிலங்களிலும் குறைவாகத்தான் இருக்கிறது.

    மேலும் மத்திய மின் தொகுப்பில் இருந்து 6 ஆயிரத்து 152 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு தர வேண்டும். ஆனால், தற்போது 3 ஆயிரத்து 300 மெகாவாட் மின்சாரம் தான் தரப்படுகிறது. எனவே, எஞ்சிய 2 ஆயிரத்து 852 மெகாவாட் மின்சாரத்தையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்க இருக்கிறேன். இது தொடர்பாக மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை ராஜாங்க மந்திரி(தனி பொறுப்பு) ஆர்.கே.சிங்கையும் சந்தித்து பேச இருக்கிறேன்.

    தனியாரிடம் இருந்து 2 ஆயிரத்து 830 மெகாவாட் மின்சாரம் பெற வேண்டும். ஆனால், தற்போது 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தான் பெறப்படுகிறது. எனவே அதனையும் முழுமையாக பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம். எந்த விதத்திலும் தமிழகத்தில் மின்பாதிப்பு இல்லை, மின் வெட்டு இல்லை.

    அரசியலுக்காக தவறான செய்திகளை பரப்பி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த வேண்டாம் என அரசியல் தலைவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். தமிழகம் மின் மிகை மாநிலம் என்ற பெயரை அ.தி.மு.க. அரசு எப்போதும் நிலைநாட்டும். தற்போது 15 நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பு வைக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். அந்த வகையில் நிலக்கரி அனுப்ப வேண்டும் என்பதற்காக மத்திய மந்திரியிடம் கோரிக்கை வைப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MinisterThangamani

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு முழு மின் உற்பத்திக்கு தினசரி தேவைப்படும் 72 ஆயிரம் டன் நிலக்கரியை வழங்குமாறு மத்திய மந்திரி பியுஷ் கோயலிடம் அமைச்சர் பி.தங்கமணி கேட்டு கொண்டார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் மத்திய ரெயில், நிலக்கரி மற்றும் நிதித்துறை மந்திரி பியுஷ் கோயலை, தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர் சில கோரிக்கைகளை மத்திய மந்திரிடம் தெரிவித்தார்.

    இதுகுறித்து பின்னர் அமைச்சர் பி.தங்கமணி கூறியதாவது:-

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையங்களில் முழு மின் உற்பத்தி செய்வதற்கு தினசரி 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. இதனை முழுமையாக வழங்க வேண்டும். நிலக்கரி வழங்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தினமும் 16 சரக்கு ரெயில்கள் மூலம் நிலக்கரி வழங்க வேண்டிய நிலையில் தற்போது 13 சரக்கு ரெயில்கள் மூலம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக 7 சரக்கு ரெயில்களில் நிலக்கரி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    வடசென்னை அனல் மின்நிலையம் நிலை-2 (600 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகள்) மற்றும் மேட்டூர் நிலை-2 (600 மெகாவாட் திறன் கொண்ட 1 அலகு) ஆகிய மின்நிலையங்களில் முழு கொள்ளளவு மின்உற்பத்தி செய்வதற்கு உரிய நிலக்கரியை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இது தவிர கடந்த ஆண்டு மே 24-ந்தேதி அன்று மராட்டிய மாநிலம் நாக்பூரிலுள்ள பொதுத் துறையை சேர்ந்த ‘வெஸ்டர்ன்’ நிலக்கரி உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து நிலக்கரி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு 5 லட்சம் டன் நிலக்கரியை ரெயில் மூலமாக கொண்டு வருவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் மீண்டும் ஒடிசா மாநிலத்தில் உள்ள மகாநதி நிலக்கரி நிறுவனத்திற்கு மாறுதல் செய்து ஆணை வழங்க, மத்திய ரெயில் மற்றும் நிலக்கரிதுறை மந்திரி பியுஷ் கோயலுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மத்திய எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை மந்திரி ஆர்.கே.சிங்கை, அமைச்சர் பி.தங்கமணி சந்தித்து தமிழ்நாட்டிற்கு பல்வேறு மின்திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோரிக்கை விடுத்தார். பின்னர் இது பற்றி அமைச்சர் பி.தங்கமணி கூறுகையில், “காற்றாலை மின்சாரத்தை பிறமாநிலங்களுக்கு விற்பனை செய்ய பசுமை மின் வழித்தடம் அமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் கடல் காற்று மூலம் மின்உற்பத்தி செய்ய முன்வரும் காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு சலுகை வழங்க வேண்டும்.

    அதேபோல் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள 2-வது அணுமின் நிலையத்தையும், செய்யூர் அனல் மின்திட்டத்தையும் விரைந்து செயல்படுத்த வேண்டும்” என்றார்.

    அப்போது தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், முதன்மைச் செயலாளர் விக்ரம் கபூர் உடன் இருந்தார். 
    ×