search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Courtalam"

    • தண்ணீர் ஆர்ப்பரித்து வருவதால் தடை நீடிப்பு.
    • மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பரவலாக மழை.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, நேற்று குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், தற்போதும் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து வருவதால் 2-வது நாளாக இன்றும் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடையானது நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அருவிகளில் நீர்வரத்து சீரான பின்னர் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வழக்கம்போல் அனுமதி வழங்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குற்றால அருவிகளிலும் நேற்று மாலையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
    • பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்தது.

    தென்காசி:

    வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் நிலையில் தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை முதல் பரவலாக கனமழை பெய்தது. இதனால் முக்கிய நீரோடைகள், நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத் தொடங்கியது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தென்காசி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக கருதப்பட்டு வரும் குற்றால அருவிகளிலும் நேற்று மாலையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

    பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் நடைப் பகுதிகள் மற்றும் கார் பார்க்கிங் வரையில் தண்ணீர் வழிந்து ஓடியது.


    அதேபோன்று மெயின் அருவியிலும் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்தது. இதனால் கயிறுகளை கட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்ததால் அங்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு நேற்று மாலை முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் இன்று காலையில் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்து நீர்வரத்து சீரானது. இதைத்தொடர்ந்து ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று விடுமுறை தினம் என்பதால் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள், அய்யப்ப பக்தர்களும் குளித்து மகிழ்ந்தனர்.

    மெயின் அருவியில் மட்டும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அங்கு குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    • அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1½அடி உயர்ந்து 59 அடியை எட்டியது.
    • பாசனத்திற்காக வினாடிக்கு 1148 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் சில நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் 84 அடி கொள்ளவு கொண்ட ராமநதி அணை மற்றும் 85 அடி கொண்ட கடனா அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    நேற்றும் ராமநதி அணை பகுதியில் 15 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. இதனால் நீர்வரத்து அதிகரித்து அந்த அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1½அடி உயர்ந்து 59 அடியை எட்டியது. கடனா அணை நீர்பிடிப்பு பகுதியில் 20 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    அந்த அணையின் நீர்மட்டம் 42 அடியாக உள்ளது. கருப்பாநதி அணை பகுதியில் மழை எதுவும் பதிவாகவில்லை. அந்த அணையில் 48.23 அடி நீர் இருப்பு உள்ளது.

    மாவட்டத்தில் தென்காசி நகர் பகுதி மற்றும் அதனை ஒட்டி அமைந்துள்ள செங்கோட்டை, ஆய்க்குடி சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது.

    ஆய்குடியில் பிற்பகலில் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அங்கு 17 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் விட்டு விட்டு சாரல் அடித்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட வில்லை. இரவு முழுவதும் தொடர் நீர்வரத்தால் தடை நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை மழை குறைவால் நீர்வரத்தும் குறைய தொடங்கியது. இதனால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக கழுகுமலை, கடம்பூர், கயத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மணிக்கணக்கில் கனமழை கொட்டியது. விளாத்திகுளத்திலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பாய்ந்தோடியது.

    அந்த பகுதிகளில் உள்ள குளங்களுக்கும் நீர் வரத்து ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிகபட்சமாக கழுகுமலை, விளாத்திகுளம் மற்றும் கடம்பூரில் தலா 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியது.

    திருச்செந்தூர், காயல்பட்டினம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் சாலைகளில் ஊர்ந்தபடி சென்றன. திருச்செந்தூரில் 24 மில்லி மீட்டரும், காயல்பட்டினத்தில் 20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    கோவில்பட்டி, எட்டயபுரம், வைப்பாறு, சூரன்குடி, காடல்குடி, வேடநத்தம் பகுதிகளிலும் பெய்த மழையால் பூமி குளர்ச்சியானது. மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். ஓட்டப்பிடாரம், மணியாச்சி ஆகிய இடங்களில் லேசான சாரல் அடித்தது. மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்வதால், நெல், பயிறு வகைகள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் கன்னடியன் கால்வாய் பகுதியில் கனமழை கொட்டியது. அங்கு 29 மில்லிமீட்டர் மழை பெய்தது. கொடுமுடியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் 28 மில்லிமீட்டரும், நம்பியாறில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    களக்காடு தலையணை, மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. புறநகர் பகுதிகளில் மழை பெரிதாக பெய்யவில்லை. மாநகர் பகுதியில் மட்டும் சில மணி நேரம் விட்டு விட்டு மழை பெய்தது.

    அணைகளை பொறுத்த வரை பிசான பருவ நெல் சாகுபடி பணிக்காக பிரதான அணையான பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    அந்த அணை நீர்மட்டம் நேற்று 93.50 அடியாக இருந்த நிலையில் தற்போது 92.80 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 400 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 1148 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

    • இன்று காலை தண்ணீர் வரத்து சீரானது.
    • சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று காலை 8 மணி முதல் அனுமதி

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று கொட்டித்தீர்த்த கன மழை யின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

    குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்று காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாது காப்பு கருதி அருவிகளில் நேற்று குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் இன்று காலை தண்ணீர் வரத்து சீரானது. இதைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று காலை 8 மணி முதல் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

    • இடி, மின்னலுடன் கனமழையாக கொட்டியது.
    • சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் காலை முதலே அதிகரித்து காணப்படுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த சில வாரங்ககளாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலையில் தென்காசி மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மாலையில் மேகக் கூட்டங்கள் திரண்டு இடி, மின்னலுடன் கனமழையாக கொட்டியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை தினம் என்பதாலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீர் நிலைகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் காலை முதலே அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.

    • சாரல் திருவிழா களைகட்டி உள்ளது.
    • குற்றாலத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இந்த ஆண்டிற்கான சாரல் திருவிழா கடந்த 16-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம்,புலி அருவி,சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் மிதமான அளவில் தண்ணீர் விழுந்து வரும் நிலையில், சாரல் திருவிழாவும் நடைபெறுவதால் விழா களைகட்டி உள்ளது.

    சாரல் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெற்று வருவதால் அதில் கலந்து கொள்வதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் குற்றாலத்தில் குவிந்து வருவதால் குற்றாலத்தில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே குற்றால அருவிகளில் குளிப்பதற்கு கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக ஐந்தருவி. மெயின் அருவி.

    பழைய குற்றால அருவிகளில் குளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    குற்றாலம் சாரல் திருவிழாவில் இன்று காலையில் பெண்களுக்கான கோலப் போட்டியும் ஆண்களுக்கான ஆணழகன் போட்டியும் நடை பெற்றது.

    மாலையில் கலை பண்பாட்டு துறையின் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதால் சுற்றுலா பயணிகள் பல்வேறு பகுதியில் இருந்தும் வந்து குற்றாலத்தில் குவிந்துள்ளனர்.

    சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை கருத்தில் கொண்டு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

    • வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு ‘அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
    • குற்றாலத்தில் குளு குளு சீசன் நிலவி வருகிறது.

    தென்காசி:

    தமிழகத்திற்கு இன்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு 'அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி களில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் சாரல் மழையினால் குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு சீரானதால் நேற்று சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    மாலையில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தாலும் அருவிகளில் நீர்வரத்து சற்று சீராக தொடங்கியதால் ஒவ்வொரு அருவிகளிலும் படிப்படியாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று காலையில் மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை விட்டு விட்டு பெய்தாலும் குற்றாலத்தில் குளு குளு சீசன் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் காலை முதலே ஆர்வமுடன் அருவிகளில் குளிக்க தொடங்கி உள்ளனர்.

    மேலும் அரசு சார்பில் நடத்தப்படும் சாரல் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அதிகாரிகளின் ஆய்வு கூட்டம் இன்று மாலையில் மாவட்ட கலெக்டரின் தலைமையில் நடைபெற உள்ளது.

    இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் சாரல் திருவிழா நடத் தப்படும் எனகூறப்படுகிறது. 

    • குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
    • போலீசாரால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி போலீசாரால் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    நேற்று முழுவதும் வெள்ளப்பெருக்கு நீடித்த நிலையில் இன்று காலையும் 3-வது நாளாக நீர்வரத்து சீராகாத நிலையில் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசாரால் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை தொடர்கிறது.

    நேற்று இரவில் பழைய குற்றாலம் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் அருவிக்கரைக்கு செல்லும் பகுதியில் அமைந்துள்ள கருப்பசாமி கோவில் பகுதியில் நின்றிருந்த 2 பனை மரங்கள் மற்றும் மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன.

    இதில் அருகில் இருந்த மின்கம்பங்கள் சேதம் அடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இன்று காலை மின்வாரிய ஊழியர்கள் வந்து துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.

    இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, சாரல் மழை சற்று குறைந்துள்ளதால் அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறைய தொடங்கி உள்ளது. அவ்வாறு குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    நாளை மொகரம் பண்டிகை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும் என எதிர்பார்த்த நிலையில் அருவிகளில் குளிக்க அனுமதியை எதிர்நோக்கி சுற்றுலாப் பயணிகள் காத்திருக்கின்றனர்.

    • குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • தென்காசி பகுதிகள் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று மாலையில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக மலை அடிவாரத்தில் உள்ள அருவிகளான குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இன்றும் காலை முதலே குற்றாலம் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வரும் நிலையில், அருவிகளில் மேலும் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் ஆற்றுப்படுகையின் ஓரமாக யாரும் இறங்க வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

    மழை குறைந்து அருவிகளில் தண்ணீர் வரத்து குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் பகுதி அருவிகளில் ஆனந்த குளிக்க முடியாததால் ஏமாற்றத்துடனே திரும்பி சென்றனர். இன்று காலை முதல் மழை நீடித்து வருவதால் தென்காசி பகுதிகள் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • மலைப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது.
    • குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    நெல்லை:

    நெல்லையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தற்போது மழை பெய்யவில்லை. எனினும் 2 நாட்களாக பெய்த மழையால் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகியவற்றின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 102.95 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து116.53 அடியாகவும் உள்ளது.

    மலைப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது. மாஞ்சோலை வனப்பகுதியில் சாரல் மழை பெய்த வண்ணனம் உள்ளது. இதனால் அங்குள்ள ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு எஸ்டேட்டுகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவுகிறது. காலையில் இருந்து வெயில் அடித்து வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இல்லாததால் குற்றாலத்தில் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. எனினும் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இன்று விடுமுறை தினத்தையொட்டி காலை முதலே மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    அணைகளை பொறுத்த வரை குண்டாறு அணை நீர்மட்டம் கடந்த ஒரு வாரமாக நிரம்பி வழிகிறது. கடனா அணை 60.30 அடியாகவும், ராமநதி அணை 76 அடியாகவும் உள்ளது. அடவிநயினார் கோவில் அணை நீர்மட்டம் இன்று 1 அடி உயர்ந்து 93.25 அடியாக உள்ளது. மாவட்டம் முழுவதும் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. விவசாயிகள் கார் பருவ சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
    • குற்றாலத்தில் குளு குளு சீசன் நிலவுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

    கேரளாவில் மழை தீவிரம் எடுத்துள்ள நிலையில் தென்காசியிலும் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் அங்கு குளு குளு சீசன் நிலவுகிறது.

    சாரல் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. தற்போது மெயின்அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரும் நிலையில் குளுமையான காற்றுடன் அவ்வப்போது சாரல் மழையும் விட்டுவிட்டு பெய்து வருகிறது.

    இதனால் குற்றாலத்தில் சீசன் களைகட்டி உள்ளது. இதனால் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாக கார்களிலும், வேன்களிலும் வந்தனர்.

    இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மேலும் அருவியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளதால் அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

    • குற்றாலம் அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • சுற்றுலாப் பயணிகள் சிறிது நேரம் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சுற்றுலா தலமான குற்றாலம் அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலையில் தென்காசி, செங்கோட்டை, புளியரை, மேலகரம், இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்து பெய்தது.

    மலைப்பகுதிகளிலும் மழை பெய்ததன் காரணமாக குற்றாலம் அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அபாய ஒலி எழுப்பப்பட்டு மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இன்று காலையில் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் சிறிது நேரம் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் தொடர்ந்து பெய்த சாரல் மழையால் அங்கு தண்ணீர் மேலும் அதிகரித்ததால் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் போலீசாரால் உடனடியாக அப்புறப்படுத்தப் பட்டனர்.

    மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சிற்றருவி மற்றும் புலியருவியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    பிரதான அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர். 

    ×